பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    மாற்றம்உள*  ஆகிலும் சொல்லுவன்,*  மக்கள்- 
    தோற்றக் குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*

    ஆற்றங்கரை வாழ் மரம்போல்*  அஞ்சுகின்றேன்,* 
    நாற்றம் சுவை*  ஊறு ஒலிஆகிய நம்பீ!  (2)         


    சீற்றம்உள*  ஆகிலும் செப்புவன்,*  மக்கள்- 
    தோற்றக்குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*

    காற்றத்து இடைப்பட்ட*  கலவர் மனம்போல்,*
    ஆற்றத்துளங்கா நிற்பன்*  ஆழிவலவா!     


    தூங்குஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    வாங்காய்என்று சிந்தித்து*  நான்அதற்கு அஞ்சி,*

    பாம்போடு ஒருகூரையிலே*  பயின்றால்போல்,*
    தாங்காது உள்ளம் தள்ளும்*  என் தமரைக்கண்ணா!       


    உருஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
    திரிவாய்என்று சிந்தித்தி*  என்றுஅதற்கு அஞ்சி,*

    இருபாடு எரிகொள்ளியின்*  உள் எறும்பே போல்,* 
    உருகாநிற்கும்*  என்உள்ளம் ஊழி முதல்வா!


    கொள்ளக் குறையாத*  இடும்பைக் குழியில்,* 
    தள்ளிப் புகப்பெய்தி கொல்*  என்றுஅதற்கு அஞ்சி,*

    வெள்ளத்து இடைப்பட்ட*  நரிஇனம் போலே,*
    உள்ளம் துளங்கா நிற்பன்*  ஊழி முதல்வா!     


    படைநின்ற*  பைந்தாமரையோடு*  அணிநீலம்- 
    மடைநின்று அலரும்*  வயல்ஆலி மணாளா,*

    இடையன் எறிந்த மரமே*  ஒத்துஇராமே,* 
    அடைய அருளாய்*  எனக்கு உன்தன் அருளே. 


    வேம்பின்புழு*  வேம்புஅன்றி உண்ணாது,*  அடியேன்- 
    நான்பின்னும்*  உன்சேவடிஅன்றி நயவேன்,*

    தேம்பல் இளந்திங்கள்*  சிறைவிடுத்து,*  ஐவாய்ப்- 
    பாம்பின் அணைப்*  பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!  (2)


    அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
    துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*

    மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
    பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)


    நந்தா நரகத்து அழுந்தா வகை,*  நாளும்- 
    எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு*  இன்அருள் செய்வாய்,*

    சந்தோகா! தலைவனே!*  தாமரைக் கண்ணா,*
    அந்தோ! அடியேற்கு*  அருளாய் உன்அருளே  (2)


    குன்றம் எடுத்து*  ஆநிரை காத்தவன் தன்னை,* 
    மன்றில் புகழ்*  மங்கை மன் கலிகன்றி சொல்,*

    ஒன்று நின்ற ஒன்பதும்*  வல்லவர்-தம்மேல்,* 
    என்றும் வினைஆயின*  சாரகில்லாவே,    (2)