பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    மான்அமரும் மென்நோக்கி*  வைதேவிஇன் துணையா,* 
    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்தான் காண்ஏடீ*

    கான்அமரும் கல்அதர்போய்*  காடுஉறைந்த பொன்அடிக்கள்,* 
    வானவர்-தம் சென்னி*  மலர்கண்டாய் சாழலே  (2)


    தந்தை தளைகழலத்*  தோன்றிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் காண்ஏடீ,*

    நந்தன் குலமதலையாய்*  வளர்ந்தான் நான்முகற்குத்* 
    தந்தைகாண் எந்தை*  பெருமான் காண் சாழலே.


    ஆழ்கடல்சூழ் வையகத்தார்*  ஏசப்போய்,*  ஆய்ப்பாடித்- 
    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்டான் காண்ஏடீ,*

    தாழ்குழலார் வைத்த*  தயிர்உண்ட பொன்வயிறு,*  இவ்- 
    ஏழ்உலகும் உண்டும்*  இடம்உடைத்தால் சாழலே.


    அறியாதார்க்கு*  ஆன்ஆயன் ஆகிப்போய்,*  ஆய்ப்பாடி- 
    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்தான் காண்ஏடீ*

    உறிஆர் நறுவெண்ணெய்*  உண்டுஉகந்த பொன்வயிற்றுக்கு,* 
    எறிநீர் உலகுஅனைத்தும்*  எய்தாதால் சாழலே


    வண்ணக் கருங்குழல்*  ஆய்ச்சியால் மொத்துண்டு,* 
    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் காண்ஏடீ,*

    கண்ணிக் குறுங்கயிற்றால்*  கட்டுண்டான் ஆகிலும்,* 
    எண்ணற்கு அரியன்*  இமையோர்க்கும் சாழலே.     


    கன்றப் பறைகறங்க*  கண்டவர்தம் கண்களிப்ப,* 
    மன்றில் மரக்கால்*  கூத்துஆடினான் காண் ஏடீ,*

    மன்றில் மரக்கால்*  கூத்து ஆடினான் ஆகிலும்,* 
    என்றும் அரியன்*  இமையோர்க்கும் சாழலே.  


    கோதைவேல் ஐவர்க்குஆய்*  மண்அகலம் கூறுஇடுவான்,* 
    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் காண்ஏடீ,*

    தூதன்ஆய் மன்னவனால்*  சொல்லுண்டான் ஆகிலும்,* 
    ஓதநீர் வையகம்*  முன்உண்டு உமிழ்ந்தான் சாழலே. 


    பார்மன்னர் மங்கப்*  படைதொட்டு வெம்சமத்துத்,* 
    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் காண்ஏடீ,*

    தேர்மன்னற்குஆய்*  அன்று தேர்ஊர்ந்தான் ஆகிலும்,* 
    தார்மன்னர் தங்கள்*  தலைமேலான் சாழலே. 


    கண்டார் இரங்க*  கழியக் குறள்உருஆய்,* 
    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் காண்ஏடீ,*

    வண்தாரான் வேள்வியில்*  மண்இரந்தான் ஆகிலும்* 
    விண்டுஏழ் உலகுக்கும்*  மிக்கான் காண் சாழலே


    கள்ளத்தால் மாவலியை*  மூவடி மண் கொண்டு அளந்தான்,* 
    வெள்ளத்தான் வேங்கடத்தான்*  என்பரால் காண்ஏடீ,*

    வெள்ளத்தான்*  வேங்கடத்தானேலும்,*  கலிகன்றி- 
    உள்ளத்தின் உள்ளே*  உளன் கண்டாய் சாழலே.  (2)