பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
    பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*

    பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
    காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)


    நீள்வான் குறள்உருஆய்*  நின்றுஇரந்து மாவலிமண்,* 
    தாளால் அளவிட்ட*  தக்கணைக்கு மிக்கானை,*

    தோளாத மாமணியை*  தொண்டர்க்கு இனியானை,*
    கேளாச் செவிகள்*  செவிஅல்ல கேட்டாமே.


    தூயானை*  தூய மறையானை,*  தென்ஆலி 
    மேயானை*  மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட 

    வாயானை*  மாலை வணங்கி*  அவன்பெருமை 
    பேசாதார்*  பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.


    கூடா இரணியனைக்*  கூர்உகிரால் மார்வுஇடந்த,* 
    ஓடா அடல்அரியை*  உம்பரார் கோமானை,*

    தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,*  ஆர்வத்தால்- 
    பாடாதார் பாட்டுஎன்றும்*  பாட்டுஅல்ல கேட்டாமே.


    மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
    கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*

    மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
    கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.


    கள்ஆர் துழாயும்*  கணவலரும் கூவிளையும்,* 
    முள்ஆர் முளரியும்*  ஆம்பலும்முன் கண்டக்கால்,*

    புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்*  புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
    உள்ளாதார் உள்ளத்தை*  உள்ளமாக் கொள்ளோமே.


    கனைஆர் கடலும்*  கருவிளையும் காயாவும்* 
    அனையானை,*  அன்பினால் ஆர்வத்தால்,*  என்றும்-

    சுனைஆர் மலர்இட்டு*  தொண்டராய் நின்று,* 
    நினையாதார் நெஞ்சுஎன்றும்*  நெஞ்சுஅல்ல கண்டாமே.


    வெறிஆர் கருங்கூந்தல்*  ஆய்ச்சியர் வைத்த* 
    உறிஆர் நறுவெண்ணெய்*  தான்உகந்து உண்ட

    சிறியானை*  செங்கண்*  நெடியானை சிந்தித்து- 
    அறியாதார்*  என்றும் அறியாதார் கண்டாமே.


    தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
    தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*

    ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
    மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)


    மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
    கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*

    கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
    ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)