பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    நிலைஇடம் எங்கும் இன்றி நெடுவெள்ளம் உம்பர்*   வளநாடு மூட இமையோர்* 
    தலைஇட மற்றுஎமக்குஓர் சரண்இல்லை என்ன*   அரண்ஆவன் என்னும் அருளால்* 

    அலைகடல் நீர்குழம்ப அகடுஆட ஓடி*   அகல் வான்உரிஞ்ச,*  முதுகில்- 
    மலைகளை மீது கொண்டு வரும்மீனை மாலை*   மறவாது இறைஞ்சு என் மனனே!   (2)


    செருமிகு வாள்எயிற்ற அரவுஒன்று சுற்றி*   திசைமண்ணும் விண்ணும் உடனே* 
    வெருவர வெள்ளை வெள்ளம் முழுதும் குழம்ப*   இமையோர்கள் நின்று கடைய,*

    பருவரை ஒன்று நின்று முதுகில் பரந்து*   சுழலக் கிடந்து துயிலும்,* 
    அருவரை அன்ன தன்மை அடல்ஆமைஆன*   திருமால் நமக்கு ஓர் அரணே. 


    தீதுஅறு திங்கள் பொங்கு சுடர்உம்பர் உம்பர்*  உலகுஏழினோடும் உடனே,* 
    மாதிரம் மண்சுமந்த வடகுன்றும் நின்ற*  மலைஆறும் ஏழு கடலும்*

    பாதமர் சூழ்குளம்பின் அகமண்ட லத்தின்*  ஒருபால் ஒடுங்க வளர்சேர்,* 
    ஆதிமுன் ஏனம்ஆகி அரண்ஆய மூர்த்தி*  அதுநம்மை ஆளும் அரசே. 


    தளைஅவிழ் கோதை மாலை இருபால் தயங்க*   எரிகான்றுஇரண்டு தறுகண்,* 
    அளவுஎழ வெம்மை மிக்க அரிஆகி அன்று*   பரியோன் சினங்கள் அவிழ,*

    வளை உகிர்ஆளி மொய்ம்பின் மறவோனதுஆகம்*   மதியாது சென்று ஓர்உகிரால்* 
    பிளவுஎழ விட்ட குட்டம் அதுவையம்மூடு*   பெருநீரில் மும்மை பெரிதே.


    வெந்திறல் வாணன் வேள்வி இடம்எய்தி*  அங்குஓர் குறள்ஆகி மெய்ம்மை உணர* 
    செந்தொழில் வேத நாவின் முனிஆகி வையம்*   அடிமூன்று இரந்து பெறினும்,*

    மந்தர மீது போகி மதிநின்று இறைஞ்ச*   மலரோன் வணங்க வளர்சேர்,* 
    அந்தரம் ஏழினூடு செலஉய்த்த பாதம்*  அது நம்மை ஆளும் அரசே.


    இருநில மன்னர் தம்மை இருநாலும் எட்டும்*   ஒருநாலும் ஒன்றும் உடனே,* 
    செருநுதலூடு போகி அவர்ஆவி மங்க*   மழுவாளில் வென்ற திறலோன்,*

    பெருநில மங்கை மன்னர் மலர்மங்கை நாதர்*   புலமங்கை கேள்வர் புகழ்சேர்,* 
    பெருநிலம் உண்டு உமிழ்ந்த பெருவாயர்ஆகி*  யவர் நம்மை ஆள்வர் பெரிதே.


    இலைமலி பள்ளி எய்தி இதுமாயம் என்ன*  இனம்ஆய மான்பின் எழில்சேர்* 
    அலைமலி வேல் கணாளை அகல்விப்பதற்கு*   ஓர்உருஆய மானை அமையா,*

    கொலைமலி எய்துவித்த கொடியோன் இலங்கை*   பொடிஆக வென்றி அமருள்,* 
    சிலைமலி செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*   திருமால் நமக்குஓர் அரணே. 


    முன் உலகங்கள் ஏழும் இருள்மண்டி உண்ண*  முதலோடு வீடும் அறியாது,* 
    என் இது வந்தது? என்ன இமையோர் திசைப்ப*  எழில் வேதம் இன்றி மறைய,*

    பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  இருள் தீர்ந்து இவ் வையம் மகிழ,* 
    அன்னம்-அது ஆய் இருந்து அங்கு அறநூல் உரைத்த*  அது நம்மை ஆளும் அரசே.


    துணைநிலை மற்றுஎமக்குஓர் உளது என்றுஇராது*  தொழுமின்கள் தொண்டர்! தொலைய* 
    உணமுலை முன்கொடுத்த உரவோளது ஆவி*   உகஉண்டு வெண்ணெய் மருவி,*

    பணைமுலை ஆயர் மாதர் உரலோடு கட்ட*  அதனோடும் ஓடி அடல்சேர்,* 
    இணை மருதுஇற்று வீழ நடைகற்ற தெற்றல்*   வினைப் பற்றுஅறுக்கும் விதியே.


    கொலைகெழு செம்முகத்த களிறுஒன்று கொன்று*  கொடியோன் இலங்கை பொடியா* 
    சிலைகெழு செஞ்சரங்கள் செலஉய்த்த நங்கள்*  திருமாலை, வேலை புடைசூழ்*

    கலிகெழு மாட வீதி வயல்மங்கை மன்னு*  கலிகன்றி சொன்ன பனுவல்,* 
    ஒலிகெழு பாடல் பாடி உழல்கின்ற தொண்டர்*  அவர்ஆள்வர் உம்பர் உலகே.  (2)