பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    மன்னிலங்கு பாரதத்துத்*  தேரூர்ந்து,*  மாவலியைப்-
    பொன்னிலங்கு திண்விலங்கில் வைத்துப்*  பொருகடல்சூழ்*

    தென்னிலங்கை ஈடழித்த*  தேவர்க்கு இதுகாணீர்*
    என்னிலங்கு சங்கோடு*  எழில் தோற்றிருந்தேனே!. (2)


    இருந்தான் என்னுள்ளத்து*  இறைவன், கறைசேர்*
    பருந்தாள் களிற்றுக்கு*  அருள்செய்த, செங்கண்*

    பெருந்தோள் நெடுமாலைப்*  பேர்பாடி ஆட*
    வருந்தாது என் கொங்கை*  ஒளிமன்னும் அன்னே! 


    அன்னே! இவரை*  அறிவன், மறைநான்கும்*
    முன்னே உரைத்த*  முனிவர் இவர்வந்து*

    பொன்னேய் வளைகவர்ந்து*  போகார் மனம்புகுந்து*
    என்னே இவரெண்ணும்*  எண்ணம் அறியோமே! 


    அறியோமே என்று*  உரைக்கலாமே எமக்கு,*
    வெறியார் பொழில்சூழ்*  வியன்குடந்தை மேவி,*

    சிறியான் ஓர் பிள்ளையாய்*  மெள்ள நடந்திட்டு*
    உறியார் நறுவெண்ணெய்*  உண்டுகந்தார் தம்மையே?


    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுவார்க்கு,*
    தம்மையே ஒக்க*  அருள்செய்வர் ஆதலால்,*

    தம்மையே நாளும்*  வணங்கித் தொழுதிறைஞ்சி,*
    தம்மையே பற்றா*  மனத்தென்றும் வைத்தோமே. 


    வைத்தார் அடியார்*  மனத்தினில் வைத்து,*  இன்பம்-
    உற்றார் ஒளிவிசும்பி*  ஓரடிவைத்து,*  ஓரடிக்கும்-

    எய்த்தாது மண்ணென்று*  இமையோர் தொழுதிறைஞ்சி,*
    கைத்தாமரை குவிக்கும்*  கண்ணன் என் கண்ணனையே


    கண்ணன் மனத்துள்ளே*  நிற்கவும், கைவளைகள்*
    என்னோ கழன்ற?*  இவையென்ன மாயங்கள்?*

    பெண்ணானோம் பெண்மையோம் நிற்க,*  அவன்மேய,-
    அண்ணல் மலையும்*  அரங்கமும் பாடோமே.


    பாடோமே எந்தை பெருமானை? பாடிநின்று
    ஆடோமே*  ஆயிரம் பேரானை? பேர்நினைந்து

    சூடோமே*  சூடும் துழாயலங்கல்? சூடி,*  நாம்
    கூடோமே கூடக்*  குறிப்பாகில்? நன்னெஞ்சே!


    நன்னெஞ்சே! நம்பெருமான்*  நாளும் இனிதமரும்,*
    அன்னம்சேர் கானல்*  அணியாலி கைதொழுது,*

    முன்னம்சேர் வல்வினைகள் போக*  முகில்வண்ணன்,*
    பொன்னம்சேர் சேவடிமேல்*  போதணியப் பெற்றோமே! 


    பெற்றாரார்*  ஆயிரம் பேரானைப்,*  பேர்பாடப்-
    பெற்றான்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை,*

    கற்றார் ஓ! முற்றுலகு ஆள்வர்*  இவைகேட்கல்-
    உற்றார்க்கு,*  உறுதுயர் இல்லை உலகத்தே (2)