பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


    சந்த மலர்க்குழல் தாழ*  தான் உகந்துஓடி தனியே-
    வந்து,*  என் முலைத் தடம்தன்னை வாங்கி*  நின் வாயில் மடுத்து,*

    நந்தன் பெறப்பெற்ற நம்பீ!*  நான் உகந்துஉண்ணும் அமுதே,* 
    எந்தை பெருமானே! உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே (2)


    வங்க மறிகடல் வண்ணா!*  மாமுகிலே ஒக்கும் நம்பீ* 
    செங்கண் நெடிய திருவே*  செங்கமலம் புரை வாயா,*

    கொங்கை சுரந்திட உன்னைக்*  கூவியும் காணாது இருந்தேன்* 
    எங்குஇருந்து ஆயர்களோடும்*  என் விளையாடுகின்றாயே


    திருவில் பொலிந்த எழில்ஆர்*  ஆயர்தம் பிள்ளைகளோடு* 
    தெருவில் திளைக்கின்ற நம்பீ*  செய்கின்ற தீமைகள் கண்டிட்டு,*

    உருகிஎன் கொங்கையின் தீம்பால்*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற,* 
    மருவிக் குடங்கால் இருந்து*  வாய்முலை உண்ண நீ வாராய்    


    மக்கள் பெறுதவம் போலும்*  வையத்து வாழும் மடவார்* 
    மக்கள் பிறர்கண்ணுக்கு ஒக்கும்*  முதல்வா மதக்களிறுஅன்னாய்*

    செக்கர் இளம்பிறை தன்னை வாங்கி*  நின் கையில் தருவன்* 
    ஒக்கலை மேல்இருந்து*  அம்மம் உகந்து இனிது உண்ண நீ வாராய்


    மைத்த கருங்குஞ்சி மைந்தா!*  மாமருதுஊடு நடந்தாய்,* 
    வித்தகனே விரையாதே*  வெண்ணெய் விழுங்கும் விகிர்தா,*

    இத்தனை போதுஅன்றி என்தன்*  கொங்கை சுரந்து இருக்ககில்லா,* 
    உத்தமனே! அம்மம் உண்ணாய்*  உலகுஅளந்தாய் அம்மம் உண்ணாய்       


    பிள்ளைகள் செய்வன செய்யாய்*  பேசின் பெரிதும் வலியை* 
    கள்ளம் மனத்தில் உடையை*  காணவே தீமைகள் செய்தி*

    உள்ளம் உருகி என் கொங்கை*  ஓட்டந்து பாய்ந்திடுகின்ற* 
    பள்ளிக் குறிப்புச் செய்யாதே*  பால்அமுது உண்ணநீ வாராய்   


    தன்மகன்ஆக வன் பேய்ச்சி*  தான்முலை உண்ணக் கொடுக்க* 
    வன்மகன்ஆய் அவள் ஆவிவாங்கி*  முலைஉண்ட நம்பீ*

    நன்மகள் ஆய்மகளோடு*  நானில மங்கை மணாளா* 
    என்மகனே! அம்மம் உண்ணாய்*  என் அம்மம் சேமம் உண்ணாயே 


    உந்தம் அடிகள் முனிவர்*  உன்னைநான் என்கையில் கோலால்* 
    நொந்திட மோதவும் கில்லேன்*  நுங்கள்தம் ஆ-நிரை எல்லாம்*

    வந்து புகுதரும் போது*  வானிடைத் தெய்வங்கள் காண* 
    அந்திஅம் போது அங்கு நில்லேல்*  ஆழிஅம் கையனே! வாராய்


    பெற்றத் தலைவன் எம்கோமான்*  பேர்அருளாளன் மதலாய்,* 
    சுற்றக் குழாத்து இளங்கோவே!*  தோன்றிய தொல்புகழாளா,*

    கற்றுஇனம் தோறும் மறித்து*  கானம் திரிந்த களிறே* 
    எற்றுக்குஎன் அம்மம் உண்ணாதே*  எம்பெருமான் இருந்தாயே 


    இம்மை இடர்கெட வேண்டி*  ஏந்துஎழில் தோள்கலி அன்றி* 
    செம்மைப் பனுவல்நூல் கொண்டு*  செங்கண் நெடியவன் தன்னை*

    அம்மம் உண்என்று உரைக்கின்ற*  பாடல் இவை ஐந்தும் ஐந்தும்*
    மெய்ம்மை மனத்து வைத்துஏத்த*  விண்ணவர் ஆகலும்ஆமே   (2)


    சார்வே தவநெறிக்குத்*  தாமோதரன் தாள்கள்* 
    கார்மேக வண்ணன்*  கமல நயனத்தன்*

    நீர்வானம் மண்எரி கால்ஆய்*  நின்ற நேமியான்* 
    பேர் வானவர்கள்*  பிதற்றும் பெருமையனே.   (2)


    பெருமையனே வானத்து இமையோர்க்கும்*  காண்டற்கு- 
    அருமையனே*  ஆகத்தணை யாதார்க்கு*  என்றும்-

    திருமெய் உறைகின்ற*  செங்கண்மால்*  நாளும்- 
    இருமை வினைகடிந்து*  இங்கு என்னைஆள்கின்றானே.


    ஆள்கின்றான் ஆழியான்*  ஆரால் குறைவுஉடையம்?* 
    மீள்கின்றதுஇல்லை*  பிறவித் துயர்கடிந்தோம்*

    வாள்கெண்டை ஒண்கண்*  மடப்பின்னை தன்கேள்வன்* 
    தாள்கண்டு கொண்டு*  என் தலைமேல் புனைந்தேனே. 


    தலைமேல் புனைந்தேன்*  சரணங்கள்*  ஆலின்- 
    இலைமேல் துயின்றான்*  இமையோர் வணங்க*

    மலைமேல்தான் நின்று*  என்மனத்துள் இருந்தானை* 
    நிலைபேர்க்கல்ஆகாமை*  நிச்சித்துஇருந்தேனே.


    நிச்சித்துஇருந்தேன்*  என்நெஞ்சம் கழியாமை* 
    கைச்சக்கரத்துஅண்ணல்*  கள்வம் பெரிதுஉடையன்*

    மெச்சப்படான் பிறர்க்கு*  மெய்போலும் பொய்வல்லன்* 
    நச்சப்படும் நமக்கு*  நாகத்து அணையானே.  


    நாகத்து அணையானை*  நாள்தோறும் ஞானத்தால்* 
    ஆகத்தணைப் பார்க்கு*  அருள்செய்யும் அம்மானை*

    மாகத்து இளமதியம்*  சேரும் சடையானைப்* 
    பாகத்து வைத்தான் தன்*  பாதம் பணிந்தேனே.


    பணிநெஞ்சே! நாளும்*  பரம பரம்பரனை* 
    பிணிஒன்றும் சாரா*  பிறவி கெடுத்துஆளும்*

    மணிநின்ற சோதி*  மதுசூதன் என்அம்மான்* 
    அணிநின்ற செம்பொன்*  அடல்ஆழி யானே. 


    ஆழியான் ஆழி*  அமரர்க்கும் அப்பாலான்* 
    ஊழியான் ஊழி படைத்தான்*  நிரைமேய்த்தான்*

    பாழிஅம் தோளால்*  வரைஎடுத்தான் பாதங்கள்* 
    வாழி என்நெஞ்சே!*  மறவாது வாழ்கண்டாய்.


    கண்டேன் கமல மலர்ப்பாதம்*  காண்டலுமே* 
    விண்டே ஒழிந்த*  வினையாயின எல்லாம்*

    தொண்டேசெய்து என்றும்*  தொழுது வழியொழுக* 
    பண்டே பரமன் பணித்த*  பணிவகையே.  


    வகையால் மனம்ஒன்றி*  மாதவனை*  நாளும்- 
    புகையால் விளக்கால்*  புதுமலரால் நீரால்*

    திசைதோறு அமரர்கள்*  சென்று இறைஞ்ச நின்ற* 
    தகையான் சரணம்*  தமர்கட்குஓர் பற்றே.


    பற்றுஎன்று பற்றி*  பரம பரம்பரனை* 
    மல் திண்தோள் மாலை*  வழுதி வளநாடன்*

    சொல் தொடைஅந்தாதி*  ஓர்ஆயிரத்துள் இப்பத்தும்* 
    கற்றார்க்கு ஓர்பற்றாகும்*  கண்ணன் கழல்இணையே.   (2)