திரு வட்டாறு

தலபுராணம்: இத்தலம் சேரநாட்டு முறையில் கட்டப்பட்டு உள்ளது. கோவிலுக்குள் நுழையும் ஆடவர் அனைவரும் இறைவனுக்கு மரியாதை தரும் பொருட்டு தங்கள் சட்டைகளைக் கழற்றியே நுழைய வேண்டும். ஆதிசேடனைப் படுக்கையாகக் கொண்டு அறிதுயிலில் ஆழ்ந்துள்ள பெருமாளின் திருமேனி 22 அடி நீளம் உடையது. இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. கருவறையில் மூன்று நிலைவாயில்கள் உள்ளன. திருமுகம், திருக்கரம், திருப்பாதம் எனும் 3 பகுதிகளை ஒவ்வொரு நுழை வாயிலிலும் காணலாம். திருமுக நிலைவாயிலில் அறிதுயிலில் ஆழந்துள்ள முகத்தையும் நீட்டிய இடக்கையையும் ஆதிசேடனையும் கருடாழ்வாரையும் காணலாம். திருக்கர வாயிலில் சின்முத்திரை காட்டும் வலக்கரத்தையும் சங்கு சக்கரம் உள்ளிட்ட ‌ஐம்படையினையும் காணலாம். தரையில் தாயாருடன் கூடிய பெருமாளின் உலோகத் திருமேனியும் வைக்கப்பட்டுள்ளது. கடைசியாக திருப்பாத வாயிலில் திருப்பாதங்களையும் இருவர் பயந்து ஒளிந்திருக்கும் சிலைகளையும் காணலாம். திருமுகம், திருக்கரம், திருப்பாதம் இவ‌ற்றை இதே வரிசைக்கிரமத்தில் தரிசிப்பது இக்கோவிலின் மரபு ஆகும். இக்கோயிலின் பிரதான வாயில் மேற்க்கு நோக்கி அமைந்துள்ளது.

அமைவிடம்

முகவரி:- ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோவில்,
திருவட்டாறு,
கன்னியாகுமாரி (மாவட்டம் ) – 629 177. தொலைபேசி : +91- 94425 77047,

தாயார் : ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்
மூலவர் : ஆதி கேசவ பெருமாள்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கன்னியாகுமரி
கடவுளர்கள்: திரு வட்டாறு,ஸ்ரீ மரகத வல்லி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    3838.   
    அருள்பெறுவார் அடியார் தம்*  அடியனேற்கு*  ஆழியான்- 
    அருள்தருவான் அமைகின்றான்*  அதுநமது விதிவகையே*
    இருள்தருமா ஞாலத்துள்*  இனிப்பிறவி யான்வேண்டேன்* 
    மருள்ஒழி நீமடநெஞ்சே!*  வாட்டாற்றான் அடிவணங்கே.   (2)

        விளக்கம்  


    • நெஞ்சே! எம்பெருமான் இன்று நமக்குப் பேரருள் செய்யக் கோலா நின்றான் அதுவும் நாம் விதித்தபடியே செய்யவேணுமென்று நம்முடைய நியமனத்தை யெதிரிபாரா நின்றான்; அந்தோ! இஃது என்ன குணம்! இக்குணத்தையநுபவிக்க இந்நிலவுலகில் ஆளில்லாமையாலே நாம் திருநாட்டிலேபோய் மூதுவரோடு கூடியநுவிக்கலாமா? வருகிறாயா? என்று தம் திருவுள்ளத்தோடே உசாவுகிறார். இப்பாட்டுக்கு இரண்டாமடியே உயிர்நிலையானது. ஆழியான் அருள் தருவானமைகின்றான் - நெஞ்சே! கையுந் திருவாழியுமான ஸர்வேச்வரன் நம்மேல் முழுநோக்காக நோக்கிப் பரம க்ருபையைப் பண்ணுவானாகப் பார்க்கின்றான் திருவாழியை ஒரு கண்ணாலே பாரிப்பது, என்னை யொருகண்ணாலே பாரிப்பதாகா நின்றான்; திருவாழியை விட்டாலன்றோ ளும்மை நான் விடுவது என்னா நின்றான்; திருவாழியாழ்வான் முதலான நித்யஸூரிகள் பக்கலிலே பண்ணும் ப்ரேமத்தை யெல்லாம் என்னொருவன் திறத்து ஒரு மடைசெய்து பண்ணாநின்றான். இங்ஙனே செய்வது ஆர்பக்கலிலேயென்ன, அருள் பெறுவாரடியார்தம் அடியனேற்கு என்கிறார். எம்பெருமான் இப்படிப்பட்ட பேரருளைத் தம்பக்கலிலே செய்வதற்குக் காரணமுங்காட்டிக்கொண்டு சொல்லுகிறபடி. எம்பெருமான் பண்ணும் பேரருளுக்கு இலக்காயிருப்பார் சிலருண்டு; அவர்கள் நமக்கு ஸ்வாமிகள். அவர்கள் பக்கலிலே அவன் பண்ணின அருள் அவர்களவிலே பரியவஸியாமல் நம்வரையிலும் வெள்ளங் கோத்ததுகாண் என்கிறார். நாம் அவன் தன்னையே பற்றியிருந்து அவனையே பார்த்திருந்தோமாகில் இப்பேரருள் பெறமுடியாதுகாண்; அவனருளுக்கிலக்கான அடியர்களையே நாம் பற்றினோமானது பற்றியே இப்பேரருளுக்கு நாம் இலக்காக வேண்டிற்று என்கிறார். எட்டாம்பத்தில் *நெமாற்கடிமைப் பதிகம் பாடினதற்குப் பலன் இன்று பெற்றோம் என்கிறார் போலும். ‘அவனோ அருள்தருவானாயிருந்தான் ; நீரோ அருளைப்பெற அவகாசம் பார்த்திருந்தீர்; அது கிடைக்கிறபோது பெறவேண்டியது தானே, பெற்றுக்கொள்ளும்; இதற்கு தடையென்ன? என்றது நெஞ்சு; அதற்குமேல் கூறுகிறாராழ்வார் அது நமது விதிவகையே என்று. நெஞ்சே! அவன் வெறுமருளையே தருவானாயிருந்தால் அதை நான் பெற்றுவிடமாட்டோனோ? அவன் அருள் தருவதோடு நிற்க வில்லையே? *அஹம் ஸர்வம் காரிஷ்யாமி* என்று பார்த்துவந்த இளையபெருமாள் *க்ரியநாமிதி மாம் வத* என்று ஒரு நிர்ப்பந்தங்கொண்டாரன்றோ. ஏவிக் கொள்ள வேணும் என்றாரோ; அதுபோல இந்த ஸர்வேச்வரன் தானும் ‘ஆழ்வீர்என்னை ஏவி அடிமைகொள்வீர்என்னா நின்றானோ; என்னுடைய விதிநிஷேதங்களுக்குத் தான் கட்டுப்பட்டவனாய். இன்னதை இன்ன விதமாகச் செய்யுமாறு தன்னை நோக்கி விதிக்கவேணுமென்று வேண்டாநின்றானே; இப்படியுமொரு அநியாயமுண்டோ? என்கிறாராழ்வார் நெஞ்சை நோக்கி.


    3839.   
    வாட்டாற்றான் அடிவணங்கி*  மாஞாலப் பிறப்புஅறுப்பான்* 
    கேட்டாயே மடநெஞ்சே!*  கேசவன் எம் பெருமானைப்*
    பாட்டுஆய பலபாடி*  பழவினைகள் பற்றுஅறுத்து* 
    நாட்டாரோடு இயல்வுஒழிந்து*  நாரணனை நண்ணினமே.

        விளக்கம்  


    • ஆழியானருள் தருவானமைகின்றான்” என்று எம்பெருமான் அருள் செய்வதாகச் சொல்வதற்கு இங்கு விஷயமில்லையே; ‘பொய்ந்நின்றஞானமும் பொல்லாவொழுக்குமழுக்குடம்பு மந்நின்ற நீர்மையினி யாமுறாமையென்று அடிதொடங்கியே நீர் பிரார்த்தித்தவரன்றோ. பலகால் நிர்ப்பந்தித்துக் கேட்டதற்குப் பலன்பெற்றால் அது அருள் பெற்றதாகுமோ? என்று நெஞ்சுகேட்க அதற்கு விடையிறுக்கிறாராழ்வார் - அறிவிலியான நெஞ்சே! நாம் அபேஷித்தது எவ்வளவு? பெற்றது எவ்வளவு? என்று ஆராயமாட்டிற்றிலையே; இப்போது எவ்வளவு பெற்றோமோ அவ்வளவும் முன்பு அபேஷித்திருக்கிறோமாவென்று சிறிது விமர்சித்துப்பார். பொய்ந்நின்ற ஞானம் போகவேணும், பொல்லாவொழுக்கு கழியவேணும், அழுக்குடம்பு தொலையவேணும் என்று இவ்வளவே யன்றோ நாம் இரந்தது. அதாவது விரோதிகள் கழியவேணுமென்று இவ்வளவு மாத்திர மன்றோ நாம் வேண்டினது. நாம் பெற்றது இவ்வளவேயோ? பழைவினைகள் பற்றறுவதற்கு மேற்பட, பாட்டாயபலபாடப்பேற்றோம், நாட்டாரோடியல்வொழியப் பெற்றோம்; நாரணனை நண்ணப்பெற்றோம்; இவ்வளவும் அவனருள் பலித்தபடியன்றோ; இதை நன்கு உணர்ந்து பாராய் நெஞ்சே! என்று சொல்லும் முகத்தால் தாம்பெற்றபேற்றின் கனத்தைப் பாராட்டிக் கூறுகிறாராயிற்று. மாஞாலப்பிறப்பறுப்பான் வாட்டாற்றானடிவணங்கி - எம்பெருமானையடி வணங்கி நாம் பிரார்த்தித்தது மாஞாலப்பிறப்பறுப்பது மாத்திரமே; மற்றொன்றன்று. ஆயிரம் நாம்பெற்ற பேறுகாணாய். “கேட்டாயேநெஞ்சே” என்பது ஆனந்தமேலீட்டால் சொல்லுகிற வார்த்தை. கேட்டாயே யென்றது - நன்றாக ஆராய்ந்துபார் என்றபடி. நாம் பெற்றபேறு என்னவெனில், கேசவனெம்பெருமானைப் பாட்டாயபலபாடி - தன்னுடைய குழலழகைக் காட்டி நம்மையடிமைகொண்டான்; *பாலேய் தமிழாரிசைகாரர்பெறாப்பேறன்றோ? பச்சைப்பசும்பொய்கள் பேசி மானிடத்தைக் கவிபாடுவார் மலிந்தவுலகில் *என்னானையென்னப்ப னெம்பெருமானைக் கவிபாடப் பெற்றதும், அதுதானும் ஒருநூறு இருநூறன்றிக்கே ஆயிரமாகப் பாடப்பெற்றதும் நாம் வேண்டிப்பெற்றதோ? இதற்குமேலே, நாட்டாரோடியல்வொழிந்து - உண்டியே உடையே உகந்தோடுமிம்மண்டலத்தாரோடு ஸங்கம் ஒழியப்பெற்றபடி கண்டாயே;; “யானேயென்றனதே” என்று அஹங்காரமமகாரவச்யராயிருக்குமிந்த நாட்டாரோடு ஸங்க மறுகை ஸாமான்யமானதோ? இதற்கும்மேலே, நாரணனை நண்ணினமே - ஔபாதிகபந்துக்களைவிட்டு நிருபாதிகபந்துவான நாராயணனையே ஸகலவிதபந்துவுமாக நண்ணப்பெற்றோம். இவ்வளவும் நாம் இரந்து பெற்றதன்றிக்கே அவனருள் பலித்தபடிகாண் - என்றாராயிற்று.


    3840.   
    நண்ணினம் நாராயணனை*  நாமங்கள் பலசொல்லி* 
    மண்உலகில் வளம்மிக்க*  வாட்டாற்றான் வந்துஇன்று*
    விண்உலகம் தருவானாய்*  விரைகின்றான் விதிவகையே* 
    எண்ணின வாறுகா*  இக்கருமங்கள் என்நெஞ்சே!

        விளக்கம்  


    • “இன்று விண்ணுலகம் விதிவகையே தருவானாய் விரைகின்றான்” என்று மூன்றாமடியை அந்வயித்துக் கொள்வது (இன்று) நேற்றுவரை எதிரிபார்த்ததன்று இது; இன்று இங்ஙனே விடியக்கண்டதித்தனை. ‘விண்ணுலகில் வாழ்ச்சிதருவானாய்’ என்னாமல் “விண்ணுலகம் தருவானாய்’ என்றதை நோக்கி நம்பிள்ளையருளிச் செய்வது பாரீர்; “அங்கே ஒரு குடியிருப்பு மாத்ரமே கொடுத்து விடுவானாயிருக்கிறிலன்; *வானவர்நாடு* *ஆண்மின்கள் வானகம்*; என்கிற பொதுவையறுத்து நமக்கே தருவானாக த்வாரியா நின்றான்” என்று (விரைகின்றான்) எம்பெருமான் தான் மூட்டை கட்டிக்கொண்டு முன்னேபோவது, பின்னே ஆழ்வார் புறப்பட்டு வராமை கண்டு திரும்பிவந்து ‘ஆழ்வீர்வாரும் வாரும்’ என்று சொல்லிப்பதறா நின்றானாம். இன்று இப்படிப் பதறுகிறவன். ‘தாவிவையங்கொண்ட தடந்தாமரைகட்கே கூவிக்கொள்ளுங்கால மின்னங்குறுகாதோ” என்று கதறினபோது எங்கே யுறங்கினானென்று கேட்கவேண்டா? ஒரு காரியத்திற்காக வைத்திருந்தான்;; அக்காரியம் முடியுமளவானவாறே விரைகின்றானென்பது யுக்தமேயன்றோ. (காரியமாவது - * தொண்டர்க் கமுதுண்ணச் சொன் மாலைகள் சொல்லுவிக்கை.) விரைகின்றானென்கைக்கு விஷயமுண்டோ? ஸர்வசக்தனான தனக்கு ஆழ்வாரைக் கொண்டுபோக ருசியிருந்தாகில் கொண்டுபோகத் தடையென்ன? தடுப்பாரொருவரு மில்லையே, ‘விரைகின்றான்’ என்கையாலே ஏதோ தடையிருப்பது போலவன்றோ தெரிகிறது; அது என்ன தடை? என்று கேட்க நேரும். கேண்மின்; தன்னிஷ்டப்படி ஆழ்வாரைக் கொண்டுபோவதில் அவருக்கு ஈஷத்தும் ருசியில்லை; ‘இப்படிசெய், இப்படிசெய்’ என்று ஆழ்வார் விதிக்க, அதன்படி நடந்து கொண்டால்தான் தனக்கு ஸ்வரூபஸித்தியென்று அவன் நினைத்திருக்கையாலே அந்த நியமனம் பெறுவதற்காகவே அவன் விரைகின்றானென்றுணர்க அதற்காகவே முதற்பாட்டிற்போல இப்பாட்டிலும் “விதிவகையே” என்றது. விரைகின்றானென்றதில் ஒரு சிறந்த சாஸ்த்ரார்த்தம் தொனிக்கும்; உலகில், உடைமையைப் பெறுவது உயைவனுக்கே பணி. உடைமை தவறிவிட்டால் அது கரையமாட்டாது, அதைத் தேடிப்பெற்றுப் பூண்டுகளிக்கவேணுமென்று உடையவன்தான் விரைவது இயல்பு, அதுபோல, சேதநலாபம் ஈச்வரனுக்கே யாகையாலே அவன் விரைவதுதான் ப்ராப்தம் ஸபலமாகக் கூடியதும் அதுதான் - என்பது சாஸ்த்ரார்த்தம். எண்ணினவாறாகா - *பொய்ந்நின்ற ஞானமும் இந்நின்ற நீர்மை யினியாமுறாமை* என்று இவ்வளவேயன்றோ நாமெண்ணினது. அவன் இங்ஙனே விரைய வேணுமென்றாவது, விரையப்போகிறானென்றாவது எண்ணினோமோ? (இக்கருமங்கள்) எம்பெருமான் விஷயமான காரியமெல்லாம் இப்படியே யென்றவாறு. நாம் எண்ணினவளவுக்குப் பதின்மடங்காகக் காரியம் பலிப்பது பகவத்விஷயத்திலே யென்க. லௌகிகாரிலே சிலரை நோக்கி “என்காரியத்திற்கு நீயே கடவை” என்கிறோம்; அவர்களும் அப்படியேயென்று தலை துலுக்குவதுண்டு; ஆயிரம் எண்ணினத்தில் நூற்றிலொருபங்கும் பலிக்கக் காணமாட்டோம்; சிறிது பலித்தாலும் அதற்கும் நம்முடைய முயற்சியே ஊடுருவச் செல்லும். இதற்கு மாறாயிருக்கும் பகவத்விஷயம். இப்படிப்பட்ட கனத்தபேறுபெறுகைக்கு அடி நீயேயென்று நெஞ்சைக் கொண்டாடிச் செல்லுகிறார் என்னெஞ்சே யென்று, என் என்பதைப் பிரித்து என்னே! யென்கிற பொருளிற்கொண்டு, வியந்து சொல்லுகிறவாறாகவும் கொள்ளலாம்.


    3841.   
    என்நெஞ்சத்து உள்இருந்து இங்கு*  இரும்தமிழ்நூல்இவைமொழிந்து* 
    வல்நெஞ்சத்து இரணியனை*  மார்வு இடந்த வாட்டாற்றான்*
    மன்னஞ்ச பாரதத்துப்*  பாண்டவர்க்காப் படை தொட்டான்* 
    நல்நெஞ்சே! நம்பெருமான்*  நமக்கு அருள்தான் செய்வானே.

        விளக்கம்  


    • என்னெஞ்சத்துள்ளிருந்து - நெடுங்காலம் ஸம்ஸாரத்திலே விஷயாந்தரங்களிலே மண்டிக் கிழந்தமையாகிற தண்மைதோற்ற என்னேஞ்சு என்கிறார் ஆழ்வார்; ஆழ்வாருடைய மமகாரத்திற்கு இலக்கான வஸ்துவே நமக்கு உத்தேச்ய மென்றிருக்கும் எம்பெருமான் இவர் என்னெஞ்சு என்றதுவே ஹெதுவாக மேல்விழுந்து உள்ளே புகுந்தான்; மறுபடியும் வெளியே வந்தால் மீண்டும் உள்ளேபுக வழி கிடைப்பது அர்தாகுமோ வென்கிற அச்சத்தினால் அங்கேயே ஸ்தாவரப்ரதிஷ்டையாயிருந்தான்; அப்படியிருந்து செய்வதென்? என்னில், இங்கு இருந்தமிழ் நூலினை மொழிந்து இப்படிப்பட்ட திருவாய்மொழியை யருளிச்செய்தானாயிற்று, “தொண்டர்க்கமுதுண்ணச் சொன்மாலைகள் சொன்னேன்” என்கிறார் ஒருகால்; மற்றொருகால் இத்தமிழ் நூலை அவன்மொழிந்தானாகச் சொல்லுகிறார்; உண்மைதானிருந்தபடி யென்னென்னில்; இரண்டும் உண்மையே. வடமொழி வேதத்தைபற்றிச் சொல்லுமிடத்து *அநாதி நிதநா ஹ்யேஷா வாகுத்ஸ்ருஷ்டா ஸ்வயம்புவா* என்றது. ‘அநாதிநிதநா’ என்று சொல்லி வைத்து ஸ்வயம்புவா உத்ஸ்ருஷ்டா வாக் என்றதில்லையோ? அதுபோலவே இங்குங் கொள்க. இப்படி திருவாய்மொழியைப் பேசி வெளியிடுவித்துக்கொண்ட குணம் பரத்வமன்று ஸௌலம்யமே யென்று காட்டிக்கொண்டு மேல் அருளிச்செய்கிறார் வன்னெஞ்சத்திரணியனை மார்விடந்த - இங்கு இரணியன் மார்விடந்ததைச் சொல்லுவதில் நோக்கில்லை; சிறுக்குனுக்கு உதவினபடியைச் சொல்லுவதே விவஷிதம். சிறுக்குன் நினைத்தபடி செய்தவன் நான் சொன்னபடி செய்யானோ என்கைக்காக இது சொல்லிற்று. மன் அஞ்ச - *மலைபுரை தோள் மன்னவரும் மாரதரும் மற்றும் பலர்குலைய நூற்றுவரும் பட்டழிய என்றபடி. பாண்டவர்க்காய்ப் படை தொட்டது - ஆயுதமெடேனென்று சொல்லிவைத்து ஆயுதமெடுத்தது. பெரியாழ்வார் திருமொழியில் *மன்னர் மறுக மைத்துனர்மார்க்கொரு தோரின்மேல் முன்னங்கு நின்று மோழை யெழுவித்தவன் மலை* என்று ஒரு கதை யருளிச்செய்திருப்பதுண்டு; அதையும் இங்கு நம்பிள்ளை யெடுத்துக்காட்டியருளினர். அர்ஜுனனுடைய தேர்க்குதிரைகள் இளைத்தபோது, கடினமானவிடங்களிலும் நீர் நரம்பு அறியுமவனாகையாலே வாருணாஸ்த்ரத்தைவிட்டு அங்கே நீரை யுண்டாக்கிக் குதிரைகளை விட்டு நீரூட்டிப் புரட்டி யெழுப்பிக் கொண்டுபோனானென்பது கதை. இதைக் கண்ட எதிரரசர்கள் ‘இவனுடைய ஆச்ர்த பஷபாத மிப்படியிருக்கையாலே நாம் இவர்களை வெல்லுகை கூடுமோ!’ என்று குடல்மறுகினராகையாலே இங்கு மன்னஞ்ச என்றது.


    3842.   
    வான்ஏற வழிதந்த*  வாட்டாற்றான் பணிவகையே* 
    நான்ஏறப் பெறுகின்றேன்*  நரகத்தை நகுநெஞ்சே*
    தேன்ஏறு மலர்த்துளவம்*  திகழ்பாதன்*  செழும்பறவை- 
    தான்ஏறித் திரிவான*  தாள்இணை என்தலைமேலே 

        விளக்கம்  


    • அர்ச்சிராதி மார்க்கத்தாலே போகப் பெறுகை தமக்கு ஸமீபித்து விட்டதென்பதை மிகுந்த களிப்புடன் கூறுகிறார். திருவாட்டாற்றெம் பெருமாளுக்கு “வானேற வழிதந்த” என்றே நிருபகம்போல அருளிச்செய்கிறார் காண்மின், வானேறு வதற்கான வழி - அர்ச்சிராதி மார்க்கம். *முத்தோர்ச்சிரி திநபூர்வபஷ ஷடுதங்மாஸே த்யாதியாக நடாதூரம்மாளருளிச்செய்தது காண்க. *நடைபெறவங்கிப் பகலொளி நாளுத்தராயணமாண்டு* இத்யாதியானவொரு பாசுரமுங்காண்க. வானேறும் வழியைத் தரவிருக்கிறானேயல்லது தந்துவிட வில்லை; ஆயிரம் தந்த வென்று இறந்தகாலமாகக் கூறினது அதற்கு றம்பற்றியென்க. பணிவகையே நானேறப் பெறுகின்றேன் - அவன் கீதையிலே *மோஷயிஷ்யாமி மாசுச* என்று பண்டே சொல்லிவைத்திட்டானே; அப்பேறுதன்னை விரைவில் நான் பெறவிருக்கின்றேனென்று திருவுள்ளத்தைக் குறித்துக் கூறினாராழ்வார்; அதற்கு நானென்ன செய்யவேண்டுமேன்று திருவுள்ளம் கேட்க நரகத்தை நகு நெஞ்சே! என்கிறார். நெடுநாளாக நம்மை ஸம்ஸாரியாக்கி யெளிவரவுபடுத்தின ஸம்ஸாரத்தைப் புரிந்து பார்த்துச் சிரி; உன்னை அடியறுத்தோமே யென்று சொல்லிச் சிரி என்கிறார். பிள்ளையழகிய மணவாளப் பெருமாளரையர் ஒரு வியாதி விசேஷத்தாலே மிகவும் நோவுபட்டிருந்தார் ; அவர்க்கு ஸ்ரீ ரங்கநாதன் பரமபத மருளத் திருவுள்ளம்பற்றித் திருமாலை திருப்பாரிவட்டம் முதலான வாரிசைகளை வரவிட்டருளினவளவிலே “நானேறப்பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே” என்று இப்பாசுரத்தைச் சொல்லி நோயைப்பார்த்துச் சிரித்தாராம். “நரகத்தைநகு” என்ற இவ்விடத்திற்கு நரகலோகத்தைப்பார்த்துச் சிரியென்று சிலர்பொருள் கூறுவர்; அதுவேண்டர் ஸம்ஸாரத்திற்கே நரகமென்று பெயராதலால் ஸம்ஸார பூமி யென்கிற பொருளே இங்குக் கொள்ளத் தகும். பேறு கைப்புகுந்தாலன்றோ நரகத்தைச் சிரிக்கலாம்; அது கைபுகுந்து விட்டதோ வென்ன் அதில் ஸந்தேஹமென்? என்கிறார் பின்னடிகளால். எம்பெருமான் தாளிலணிந்த துளபமாலையுடன் பெரிய திருவடியின்மேலேறி வந்து நின்று ஸேவை ஸாதிக்கின்றானே, இனி நான் வானேறுவதில் ஐயமுண்டோ என்பது பின்னடிகளின் பரமதாற்பாரியம். தேனேறு மலர்த்துளவந் திகழ்பாதன் - *தேனே மலருந் திருபாதம்* என்றபடி எம்பெருமானுடைய திருவடிகளில் தேன் வெள்ளமிடுமே; *விஷ்ணோ: பதே பரமெ மத்வ உத்ஸ.* என்று வேதமும் ஓதிற்றே; அந்தத் தேனும் திருத்துழாயில் ஏறித் தேனேறு மலர்த்துளவமாயிற்றென்க. செழும் பறவை தானேறி - *பறவையேறு பரம்புருடா! நீயென்னைக் கைக்கொண்டபின்* என்கிறபடியே ஆழ்வாரைக் கைக்கொள்கைக்கு செழும்பறவை மீதேறி வந்தானாயிற்று திரிவான - திரிவானுடைய் அ-ஆறாம் வேற்றுமையுருபு; பெரிய திருமொழியில் (8.7.10) *கலியன தமிழிவை* என்ற பிரயோகமுங்காண்க. தாளிணை என்தலை மேலே - பெரிய திருவடியின் தோளிலேயிருந்த திருவடிகள் தம் தலை மேலேயேறப்பெற்ற அதிசயம் என்னே! என்று வியக்கிறார்.


    3843.   
    தலைமேல தாள்இணைகள்*  தாமரைக்கண் என்அம்மான்* 
    நிலைபேரான் எனநெஞ்சத்து*  எப்பொழுதும் எம்பெருமான்*
    மலைமாடத்து அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் மதம்மிக்க* 
    கொலையானை மருப்புஒசித்தான்*  குரைகழல்கள் குறுகினமே. 

        விளக்கம்  


    • தாம்பெற்ற பேறுகளை ஒன்றிரண்டு மூன்றென்று எண்ணுகிறார். திருவடிகளை என் தலைமேலே வைத்தருளினான், அழகிய திருக்கண்களாலே என்னைக் குளிர நோக்கியருளா தின்றான்; ஒருகாலும் என்னெஞ்சில் நின்றும் நிலை பேரான் - இவையன்றோ நான்பெற்ற பேறுகளென்கிறார் தாளிணைகள் தலைமேல - *நீயொருநாள் படிக்களவாக நிமிர்த்த நின்பாத பங்கயமே தலைக்கணியாய்* என்று நான் பிரார்த்தித்தபடியே அழகிய திருவடிகாளலே என் தலையை அலங்காரித்தருளினான். தாமரைக்கண்ணென்னம்மான் - இஃது எழுவாய்போலே யிருந்தாலும், என்முன்னே நின்று தாமரைக் கண்களாலே குளிர நோக்கினானென்எங் கருத்துப்பட நின்றது. என் நெஞ்சத்து நிலைபேரான் - நெஞ்சைவிட்டுப் பேராதே நின்றாயிற்று இதெல்லாம் செய்தாகிறது. தலைமேலே நிற்கிறானென்பதும், முன்னே நின்று திருக்கண்களால் நோக்குகிறானென்பதும், நெஞ்சினுள்ளே பேராமல் நிறிகிறானென்பதும் பொருந்துமோ? ஏக காலத்திலேயா இவையெல்லாம் செய்கிறான்? என்று சங்கிப்பார்க்கு நம்பிள்ளை யருளிச்செய்வது காண்மின்; - “ஸௌபாரி ஐம்பது வடிவு கொண்டாப்போலே எம்பெருமான் ஆழ்வாரையநுபவிக்க அநேக விக்ரஹம் கொள்ளாநின்றான் - என்று. உபநிஷத்தில் பரியங்க வித்தையயிற் சொல்லுகிறபடியே முக்தாத்மா திருவனந்தாழ்வான்மேலே அடியிட்டு ஏறப்பெறுவதொரு பேறு உண்டு, அதை நினைத்தருளிச் செய்கிறார் - “மலைமாடத் தரவணைமேல் வாட்டாற்றான்” என்று. மலைகளைப் புடைபடத் துளைந்து நெருங்க வைத்தாற்போலே யிருக்கிற மாடங்களை யுடைத்தான திருவாட்டாற்றிலே திருவனந்தாழ்வான்மேலே திருக்கண் வளர்ந்தருள்பவன். அநுபவ விரோதிகள் பலவுண்டே, அவை என்னாயிற்றென்ன குவலயாபீட மதயானை பட்டது பட்டதாக வருளிச்செய்கிறார் ஈற்றடியில். மதம்மிக்க கொலை யானை மருப்பொசுத்ததைக் கூறும் முகத்தால் தம்முடைய விரோதிகளாகிற மதயானையை முடித்தமை கூறினாராயிற்று


    3844.   
    குரைகழல்கள் குறுகினம்*  நம் கோவிந்தன் குடிகொண்டான்* 
    திரைகுழுவு கடல்புடைசூழ்*  தென்நாட்டுத் திலதமன்ன*
    வரைகுழுவு மணிமாட*  வாட்டாற்றான் மலர்அடிமேல்* 
    விரைகுழுவு நறும்துளவம்*  மெய்ந்நின்று கமழுமே.

        விளக்கம்  


    • எட்டாம்பத்தில் குட்டநாட்டுத் திருப்புலியூரெம்பெருமானுடைய திருவருள் தமக்குப் பலித்தபடியைத் தோழிபேச்சாலே வெளியிடுமளவில் *அன்றி மற்றொருபாயமென்? இவளந்தண்டுழாய் கமழ்தல் * என்ற திருத்துழாய்ப் பரிமளம் திருமேனியிலே கமழ்வதையிட்டு நிரூபித்தாராழ்வார்; இப்போது திருவாட்டாற்றெம்பெருமானுடைய திருவருள் பலித்தபடியையும் அந்த நிரூபகத்தையிட்டே தம் வாயாலே பேசுகிறார். “குரைகழல்கள் குறுகினமே” யென்றார் கீழ்ப்பாட்டில்; அது மெய்யேயென்கைக்காக மீண்டுமிப் பாட்டில் குரைகழல்கள் குறுகினமென்கிறார்; அதை மூதலிக்கிறார் வாட்டாற்றான் மலரடிமேல் விரை குழுவு நறுந்துளவம் மெய்ந்நின்று கமழுமே யென்பதனால். “கோவிந்தன் நம் குடிகொண்டான்” என்றும் “நம் கோவிந்தன் குடிகொண்டான்” என்றும் அந்வயிக்கலாம். பசுக்களோடுங் கலந்து பாரிமாறிக் கோவிந்தனென்று பெயர்படைத்த பெருமான் *அரவத்தமளியினோடு மழகிய பாற்கடலோடும் அரவிந்தப்பாவையுந்தானு மகம்படி வந்து புகுந்து* என்றாப்போலே பாரிஜனபாரிவார ஸமேதனாய் வந்து, திருவாய்ப்பாடியில் பஞ்ச லஷங்குடியோடுங்கூட வந்து என்னெஞ்சிலே குடிகொண்டபடி பார்ரென்கிறார். அதற்கு அடையாளங்கூறுவது மேலெல்லாம். (திரை குழுவு கடல்புடைசூழ் இத்யாதி) திரைமிக்கிருந்துள்ள கடலாலே சுற்றுஞ் சூழப்ட்டிருப்பதாய் தென்னாட்டுக்குத் திலகம்போலெயாய் மலைகளை நெருங்க வைத்தாற்போலே மணிமயமான மாடங்கள் நெருங்கியிருப்பதான திருவாட்டாற்றை யிருப்பிடமாகவுடைய ஸர்வேச்வரனது திருவடித் தாமரைகளின்மீது சாத்தியிருந்த பரிமளப்ரசுரமான திருத்துழாயானது என்னுடம்பிலே நிலைநின்று நாறாநின்றது. என் வார்த்தையிலே ஸந்தேஹமுண்டாகில் என்னுடம்பை மோந்து பார்க்க மாட்டீர்களோ


    3845.   
    மெய்ந்நின்று கமழ்துளவ*  விரைஏறு திருமுடியன்* 
    கைந்நின்ற சக்கரத்தன்*  கருதும்இடம் பொருதுபுனல்*
    மைந்நின்ற வரைபோலும்*  திருஉருவ வாட்டாற்றாற்கு* 
    எந்நன்றி செய்தேனா*  என்நெஞ்சில் திகழ்வதுவே? 

        விளக்கம்  


    • தாம்பெற்ற பேற்றின் கனத்தை யாராய்ந்தார்; அந்தோ! இப்படிப் பட்ட விஷயீகாரம் என் திறத்தேயுண்டாகுமாறு நான் என்ன ஸுக்ருதம் செய்தேன்! ஒன்றும் செய்திலேன்! அப்படியிருக்கவும் இது என்ன விலக்ஷண விஷயீகாரம்! என்று நெஞ்சு குழைகிறார். மெய்ந்நின்றுகமழ் துளபவிரையேறு திருமுடியன் - இங்கு மெய் என்று ஆழ்வாருடைய திருமேனியைச் சொல்லிற்றாகவுமாம், எம்பெருமானுடைய திருமேனியைச் சொல்லிற்றாகவுமாம். என்னுடை வுடம்பிலே வியாபித்துக் கமழும்படியான திருத்துழாய் மாலையத் தன் திருமுடியிலே யுடையவன் என்றாவது, தன்னுடைய திருமேனியிலே நின்று கமழா நின்றுள்ள திருத்துழாயில் பரிமளமானது கொழித்து எறடா நின்றுள்ள திருமுடியையுடையவன் என்றாவது பொருள் கொள்ளலாம். இங்கு ஈட்டு ஸ்ரீஸுக்தி - “கடலில் நீர் ஸஹ்யத்திலேறக் கொழித்தாற்போலே காணும் திருமேனியில் திருத்துழாயின் பரிமளமானது மெய்யெல்லாங்கொண்டு தலைக்குமேலே போனபடி.” கருதுமிடம் பொருது கைந்நின்ற சக்கரத்தன் - எம்பெருமாளுக்கு ஆச்ர்த விரோதி நிரஸநம் செய்யவேண்டி வருமே; அதற்காக அங்கங்கே தான் புறப்பட்டெழுந்தருளவேணு மென்கிற நிர்ப்பந்தமில்லை; இன்னவிடத்திலே இன்னகாரியமாகவேணுமென்று திருவுள்ளத்தில் நினைப்பிட்ட மாத்திரத்திலே திருவாழியாழ்வான் சென்று ஒரு நொடிப்பொழுதில் காரியந் தலைகட்டி அடுத்த க்ஷணத்திலே மீண்டு வந்து திருக்கையிலே நிற்பானாம். ஆழ்வான் அதிமாநு ஸ்தவத்தில் “அக்ஷேஷு ஸக்தமதிநா ச நிராதரேண வாராணஸீ ஹரபுரி பவதா விதக்தா” என்றருளிச்செய்த சுலோகம் இங்கு நினைக்கத்தக்கது. புனல் மைந்நின்றவரை போலுந் திருவுருவன் - புனல் போலவும் மைபோலவும் நின்றவரை போலவு மிருக்கின்ற வடிவையுடையவன், ஆக மூன்றடிகளாலும் தெரிவிக்கப்பட்டதாவது என்னென்னில்; தன்னுடைய திருத்துழாய் நறுமணம் என்னளவிலே வீசும்படி செய்தும் கையுந் திருவாழியுமான அழகைக் காட்டியும், பச்சைமாமலைபோல் மேனியை முற்றூட்டாக வநுபவிக்கக் கொடுத்தும் இப்படியன்றோ என்னிடத்தில் விலக்ஷணமான விஷயீகாரம் காட்டினதென்றதாயிற்று. இதற்குத் தம் பக்கலிலே ஒரு கைம்முதலில்லாமையை ஈற்றடியினால் பேசுகிறார் எந்நன்றி செய்தேனா என்னெஞ்சில் திழ்வதுவேயென்று. “செய்தநன்றி தேடிக் காணாதே கெடுத்தாய் தந்தாயென்ற அத்வேஷாபிமுக்க்யங்களும் ஸத்கர்மத்தலல்ல.” (108) என்ற ஆசாரிய ஹ்ருதய சூர்ணை இங்கு அநுஸந்தேயம். (எந்நன்றி செய்தேனா) நன்மையென்று போரிடலாவதொரு தீமைதான் நான் செய்தோனோ? அதுவுமில்லையே; என்னுடைய எந்த காரியத்தை அவன் நன்மையாகத் திருவுள்ளம் பற்றினானோ தெரியவில்லையே யென்று தடுமாறுகின்றார். இங்கே யீடு; - “பெரியவுடையாரைப்போலே தடையோடே முடிந்தேனோ? திருவடியைப்போலே *த்ருஷ்டாஸுதா* என்று வந்தேனோ? அன்றியே தன்னுடைய ஆஜ்ஞாநுவர்த்தனம் பண்ணினேனாம்படி விஹித கர்மங்களை யநுஷ்டித்தேனோ? என்ன நன்மைசெய்தேனாக என்னெஞ்சிலே புகுந்து பெறாப்பேறு பெற்றாப்போலே விளங்கா நின்றான்!”


    3846.   
    திகழ்கின்ற திருமார்பில்*  திருமங்கை தன்னோடும்* 
    திகழ்கின்ற திருமாலார்*  சேர்விடம்தண் வாட்டாறு*
    புகழ்நின்ற புள்ஊர்தி*  போர்அரக்கர் குலம்கெடுத்தான்* 
    இகழ்வுஇன்றி என்நெஞ்சத்து*  எப்பொழுதும் பிரியானே. 

        விளக்கம்  


    • இகழுகைக்கு வேண்டுவனவுண்டான வென்னிடத்தில் சிறிது மிகழ்வின்றியே எப்பொழுதும் பிரியாதே யிராநின்றானே! இது என்ன வியாமோஹமென்று தம்மிலே தாம் வியக்கிறார். தனக்கு திவ்யமஹிக்ஷியோ ஸர்வலேகேச்வாரியான பெரிய பிராட்டியர்; தான் உறையுமிடமோ திருநாட்டிற் காட்டிலும் வீறுபெற்ற திருவாட்டாறு: தனக்கு திவ்யவாஹனமும் அடியாருடைய விரோதிகளைத் தொலைக்கும் பாரிகரமும் பெரிய திருவடி; இப்படிப்பட்ட பெருமைகளைப் பெற்றுவைத்து, என்னுடைய தாழ்வுகளைப்பார்த்து என்னையிகழாதே ஒரு நொடிப்பொழுது என்னைப் பிரிந்தால் தாரிக்கமாட்டாதானாய்க் கொண்டு என்னெஞ்சினுள்ளே புகுந்திருந்தருளினான்! இது என்ன வியாமோஹம்! என்கிறார். திகழ்கின்ற திருமார்வில் - திருமார்புக்கு ஓர் ஆபரணமிட்டு அதனால் விளக்கம் பெறுவிக்கவேணுமோ? வெறும் புறத்திலேயே ஆலத்திவழிக்க வேண்டும்படியன்றோ விளங்கா நிற்பது; அதற்மேலே பெரிய பிராட்டியாரும் சேர்ந்ததனாலுண்டான வழகு பேச்சுக்கு நிலமாமோ? உலகில் பலரையும் ஸ்ரீமான்களென்று சொல்லுவதுண்டு; அது உபசார வழக்கேயன்றி வேறில்லை; திருமங்கை தன்னோடும் திகழ் கையாலே உள்ளபடி ஸ்ரீமானாயிருப்பவன் எம்பெருமானொருவனே. அப்படிப்பட்டவன் திருவாட்டாற்றில் வாஸம் பெற்றது பெருமைக்குமேல் பெருமையாயிற்று. *வேதாத்மா விஹகேச்வர:* என்னப்பட்ட பெரிய திருவடியை வாஹனமாகக் கொள்ளப் பெற்றது இன்னமும் பெருமையாயிற்று இப்படி பெருமைக்கெல்லாம் எல்லையான பெருமை பெற்றவன் இகழ்வின்றி யென்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே - *மாறிமாறிப்; பல பிறப்பும் பிறந்த நித்ய ஸம்ஸாரி யிவனென்று தண்மைபாராதே ஒரு ஷணமும் விட்டுப் பிரியாதே யிருக்கிற இவ்விருப்புக்கு அடியான வியாமோஹமென்கொல்! என்கிறார்.


    3847.   
    பிரியாதுஆட் செய்என்று*  பிறப்புஅறுத்து ஆள் அறக்கொண்டான்* 
    அரியாகி இரணியனை*  ஆகம்கீண்டான் அன்று*
    பெரியார்க்கு ஆட்பட்டக்கால்*  பெறாதபயன் பெறுமாறு* 
    வரிவாள் வாய்அரவுஅணைமேல்*  வாட்டாற்றான் காட்டினனே.

        விளக்கம்  


    • பெரியார்க்கு ஆட்பட்டக்கால் பெறாதபயன் பெறலாகும்’ என்றொரு பழமொழி யுண்டாம்; அதனைத் திருவாட்டாற்றெம்பெருமான் அநுஷ்டாந பரியவஸாயி யாக்கினானென்று ஆனந்தம் பொங்கி யருளிச் செய்கிறார். இப்போது தாம்பெற்ற பெறாதபயன் எது வென்னில்; இனியொரு நாளும் பிரியாதேயிருந்து அடிமை செய்யுமாறு சோதிவாய் திறந்து அருளிச்செய்த தொன்று; இனிமேல் பிறப்பு நேராதபடி வேரோடறுத்த தொன்று; அடிமை செய்யென்று சொல்லி விட்டவளவேயன்றிக்கே கைங்காரியங் கொண்ட தொன்று - ஆகிய இவை பெற்ற பேறுகள். இவை எம்பெருமானுடைய நிர்ஹேதுகக்ருபையாலன்றி மற்றொன்றால் பெறமுடியாதவை யாதலால் பெறாதபய னென்றது. இரண்டாமடிக்கு அவதாரிகை யிடுகிறார் நம்பிள்ளை - “இதுக்கு முன்பே தமக்குப் பண்ணிற்றோருபகாரத்தைச் சொல்லுகிறார்” என்று. அரியாகி இரணியனை ஆகங்கீண்டதும் தமக்குப்பண்ணின உபகாரமென்றிருக்கிறாராம் ஆழ்வார். தாம் அநுபவிக்கைக்காகவே அவதாரங்கள் அமைந்த வென்று கருத்து. இரண்டாமடியின் முடிவில் அன்று என்றிருப்பதனால், அன்று அவ்வுபகாரம் செய்தான். இன்று இவ்வுபகாரம் செய்தானென்று சொல்லுவதாக தேறுகிறதன்றோ; அன்று மின்றும் தமக்கே செய்ததாகத் தேறினாராயிற்று. பெரியார்க்காட்பட்டாக்கால் பெறாதபயன் பெறலாமென்று எங்கே சொல்லியிருக்கிற தென்னில்; ஸ்ரீ விஷ்ணு தர்மத்தில் ஷத்ரபந்துவின் உபாக்யானத்தில் - *மஹாத்மநாம் ஸம்ச்ரயமப்யுபேதோ தைவாவஸீதத்யதிதுர்க்கதோபி* என்றுள்ளது அதிதுர்க்கதோபி - மிகவும் வறியனாயிருந்தாலும், மஹாத்மநாம ஸம்ச்ரயம் அப்யுபேதா:- பெரியார்க்கு ஆட்பட்டானாகில், நைவ-அவஸீததி - மேன்மையையடைவனே யல்லது கீழ்மையை யடையமாட்டா னென்றபடி. இப்பாசுரத்தைத் திருவுள்ளத்திற் கொண்டு தேசிகன் பாதுகாஸஹஸ்ரத்தில் பணித்ததொரு ச்லோகமும் நினைவுக்கு வருகின்றது - *அதாரிக்ருதோபி மஹதா தமேவ ஸேவேத ஸாதரம் பூஷ்ணு, அலபதஸமயே ராஜ்யம் பாதாக்ராந்தாபி பாதுகா சௌரே!* என்று. “மஹா புருஷ ஸமாச்ரயணம் பண்ணினால் பின்னை அவர்கள், கொள்ளுகிறவன் சிறுமைபார்த்தல் கொடுக்கிற பொருளின் பெருமைபார்த்தல் செய்யாதே கொடுப்பார்களென்று இங்ஙனே நாட்டிலே யொன்றுண்டு; அத்தை என்பக்கலிலே காட்டினான்; ப்ரஹ்லாதாதிகளைக் கொண்டு திருவாய் மொழிபாடுவித்துக் கொண்டானோ?” என்பது ஈடு.


    3848.   
    காட்டித்தன் கனைகழல்கள்*  கடுநரகம் புகல்ஒழித்த* 
    வாட்டாற்று எம்பெருமானை*  வளங்குருகூர்ச் சடகோபன்*
    பாட்டாய தமிழ்மாலை*  ஆயிரத்துள் இப்பத்தும்- 
    கேட்டு ஆரார் வானவர்கள்*  செவிக்குஇனிய செஞ்சொல்லே.   (2)

        விளக்கம்  


    • இத்திருவாய்மொழி கற்றார்க்குப் பயனுரைக்குமதான இப்பாட்டில் ஆயிரத்துளிப்பத்துங் கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கினிய செஞ்சொல்லே” என்கிறார்; இது பயனுரைத்ததாக எங்ஙனே யாகுமென்று சிலர்சங்கிப்பர்கள்; கேண்மின்; நித்யஸூரிகள் இப்பாசுரங்களைக் கேட்பது எவ்விதமாக? என்று பார்க்க வேணும். இங்கிருந்து போரும் முக்தர்கள் சொல்ல, அவர்களது வாய்வழியே கேட்கவேணும். ஆகவே இப்பதிகம் வல்லார் நித்யஸூரிகளைக் கேட்பிக்க வல்லவராவர் என்று பயனுரைத்ததாகவே ஆயிற்று. தன் கனை கழல்கள் காட்டி - திருவடியைச் சொன்னது திருமேனிக்கும் உபலஷணமாகும். தன் ஸ்வரூபரூப குணவிபூதிகளை ப்ரகாசிப்பிக்கிற திவ்யமங்கள விக்ரஹத்தைக் காட்டி யென்றபடி. கடுநரகம் புகலொழித்த - *பொய்ந் நின்ற ஞானமும்…. இந்நின்ற நீர்மையினியா முறாமை* என்று முதலில் அபேஷித்தபடியே செய்து தலைக்கட்டினபடி. ஆழ்வார் இந்த ஷேம ஸமாசாரத்தைத் திருவாட்டாற்றெம்பெருமான் முகமாகப் பெற்றதனால் “கடுநரகம் புகலொழித்த வாட்டாற்றெம்பெருமானை” என்கிறார். செவிக்கினிய செஞ்சொல் இப்பத்துங்கேட்டு வானவர்கள் ஆரார் - தொண்டரடிப் பொடியாழ்வார் திருமாலையைப் பாடிவிட்டு முடிவில் “இளைய புன் கவிதைக் என்றார்; இவர் அங்ஙனே பேசாமல் ‘செவிக்கினிய செஞ்சொல்’ என்கிறார், தம்மையும் உளுக்கினபடி. “என்னவிலின்கவி’ என்றாரே கீழும். நித்யஸூரிகள் இப்பதிகத்தை முக்தர் சொல்லக் கேளா நின்றால் ‘இன்னம் சொல், இன்னம் சொல்’ என்பர்களே யல்லது கேட்டவளவால் திருப்தி பெறார்களாம். இங்கிருந்து அங்குச் சென்றவர்களை (முக்தர்களை) நோக்கி நித்யஸூரிகள் ‘நிலவுலகத்திலிருந்து வருகிறீர்களே, அங்கு ஏதாவது விசேஷ முண்டாகில் சொல்லுங்கள்’ என்று கேட்பார்களாம்; ‘திருக்குருகூர்லே ஆழ்வாரென்றொருவர் அவதாரித்துத் தொண்டர்க்கு முதுண்ணச் சொல்மாலைகள் சொன்னார்; அவற்றைக் கற்ற பெருமையாலே இங்கு வந்தோம்; இதுவே விசேஷம்’ என்பர்களாமிவர்கள். அப்படியாகில் அத்திருவாய்மொழி யாயிரத்திலே ஒரு பதிகம் வேறொன்று தோன்றாமல் இப்பதிகந் தன்னையெடுத்துப் பாடுவர்களாம் முக்தர்கள். அப்போது அவர் படும்பாட்டைப் பார்க்க வேணும் என்று ஆழ்வார் உட்கண்ணாலே யறிந்து கூறுகிறபடி.