திருவண் வண்டுர்

தலபுராணம்: திருவண்வண்டூர் (Thiruvanvandoor Mahavishnu Temple) என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ளது. திருவமுண்டூர் என்றும் வண்வண்டூர் என்றும் அழைக்கப்படுகிறது

அமைவிடம்

பெயர்: திருவண்வண்டூர் மகாவிஷ்ணு திருக்கோயில் அமைவிடம் ஊர்: திருவண்வண்டூர் மாவட்டம்: ஆலப்புழா மாநிலம்: கேரளம் நாடு: இந்தியா,

தாயார் : ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்
மூலவர் : பாம்பணை அப்பன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: பாம்பணை அப்பன்,ஸ்ரீ கமல வல்லி நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

  3343.   
  வைகல் பூங் கழிவாய்*  வந்து மேயும் குருகினங்காள்* 
  செய் கொள் செந்நெல் உயர்*  திருவண்வண்டூர் உறையும்* 
  கை கொள் சக்கரத்து*  என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
  கைகள் கூப்பி சொல்லீர்*  வினையாட்டியேன் காதன்மையே*. (2)   

      விளக்கம்  


  • வைகல் பூங்கழிவாய்) திருவண்வண்டூரிலே சென்று எம்பெருமானுக்கு என் அபிநிவேசத்தைத் தெரிவியுங்கோளென்று சில குருகுகளை நோக்கி இரக்கின்றாள் பராங்கு சநாயகிகாள்“ என்று விளிக்கின்றாள். கடலையடுத்த நீர்ப்பரப்புக்குக் கீழ் யென்று பெயர், பூங்கழியென்று – மநோஹரமாயிருக்குந்தன்மை சொல்லுகிறது. வாய் – ஏழனுருபு. கழியிலே யென்றபடி. வைகல் வந்து மேயும் – எப்போதும் நீங்கள் உங்களுடைய உண்வை மாத்திரமேயோ நோக்குவது பிறர்காரியமும் சிறிது செய்யவேண்டாவோ என்று காட்டுகிறபடி. எம்பெருமான் என் கைக்கு எட்டாதே போனானாகிலும் அவனைப் பெறுவிக்கும்வர் இதுவொரு சந்தோஷம் என்று காட்டுகிறபடியுமாம். குருகினங்காள் – “தூவிரிய மலருழக்கித் துணையோடும் பிரியாதே“ என்கிறாப்போலே நீங்கள் துணைபிரியாதே வாழ்கிற இவ்வாழ்ச்சி என் காரியம் செய்வதற்காகவே யென்றிருக்கிறேன் என்று தெரிவிக்கிறபடி.


  3344.   
  காதல் மென் பெடையோடு*  உடன் மேயும் கரு நாராய்* 
  வேத வேள்வி ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 
  நாதன் ஞாலம் எல்லாம் உண்ட*  நம் பெருமானைக் கண்டு* 
  பாதம் கைதொழுது பணியீர்*  அடியேன் திறமே*.

      விளக்கம்  


  • (காதல் மென்பெடை) ஆர்த்தர்களுக்கு ஆர்த்தியைப் பரிஹரித்து ரக்ஷணம்டி செய்வதிலேயே தீக்ஷை கொண்டிருக்கின்ற எம்பெருமான் திருவண்வண்டூரிலே வேதவாலியையும் வேளவியொலியையும் காதாரக்கேட்டுக்கொண்டு தன்னுடைய ஆர்த்தரக்ஷ தீக்ஷையையும் மறந்து அங்கே தங்கிக்கிடக்கிறான், அவனுடைய பதாரவிந்தங்களிலே சென்று அஞஜலிபண்ணி நின்று என் விஷயமாகச் சில வார்த்தைகள் சொல்லவேணுமென்று நாரையை இரக்கிறார். கருநாராய்! – நாரைக்கு வெண்மை நிறம் ப்ரஸித்தமாயிருக்க “கருநாராய்“ என்றது எங்ஙனே? என்று சங்கிக்கவேண்டா. உடம்பிலே வைவர்ணிய முண்டானால் “உடம்பு வெளுத்துப்போயிற்று“ என்று சொல்லுவதுண்டு, அப்படிப்பட்ட வெண்மையின்றிக்கே மேனி புகர் பெற்றிருக்கிறபடி, பிரிந்தவன்வடிவுக்கு ஸ்மாரகமாயிருக்கிறபடி என்பது இருபத்தினாலாயிரம். “கூடத்திரிகையாலே நரைதிரை நீங்கி வடிவுபுகர்த்தபடி பிரியாதார்க்கு உடம்பு வெளுக்காதாகாதே, தான் உடம்பு வெளுத்துக்கிடக்கிறாளிறு என்பது ஈடு முப்பதாயிரம். “காதல் மென்பெடையோடுடன் மேயும்“ என்றதனால் ஸ்வாபதேசத்தில் ஆழ்வான் ஆனந்தாழ்வான் போன்ற கருஹஸ்தாசரமிகளின் பெருமை தெரிவிக்கப்படுகிறது. அன்றியே, சிஷ்யர்களோடு கூடி பகவத் குணாநுபவம் பண்ணுகின்ற ஆசார்யர்களைச் சொல்லிற்றாகவுமாம்.


  3345.   
  திறங்கள் ஆகி எங்கும்*  செய்கள் ஊடு உழல் புள்ளினங்காள்* 
  சிறந்த செல்வம் மல்கு*  திருவண்வண்டூர் உறையும்* 
  கறங்கு சக்கரக் கைக்*  கனிவாய்ப் பெருமானைக் கண்டு* 
  இறங்கி நீர் தொழுது பணியீர்*  அடியேன் இடரே*

      விளக்கம்  


  • (திறங்களாகி) பக்ஷிகள் கூட்டங்கூட்டமாக உலாவுவது வழக்கம். அங்ஙனே கூட்டமாக அவை இருப்பது தன் காரியம் செய்த்தற்காகவேயென்று பராங்குச நாயகியின் கருத்துப்போலும். அவை செய்களூடு உழல்வது தங்கட்கு இரை தேடுகைக்காகவாகி வாகக் கருதி, பறவைகளா! செய்களூடு எதற்காக உழல்கின்றிர்கள்? எனக்காக நீங்கள் தேடும் எம்பெருமான் திருவண்வண்டூரிலன்றோ உறைகின்றான் என்கிறாள். “அவன் உன்னைமறந்து அங்கே உறைவதற்கு யாதுகாரணம்? என்று பறவைகட்கு நினைவாக, சிறந்த செல்வம்மல்கு திருவண்வண்டூர்“ என்கிறார். அத்தலத்துள்ள செல்வச்சிறப்பானது அவனை அங்கே கால்தாழப்பண்ணிற்று என்றவாறு. (கறங்கு சக்கரமித்யாதி.) விரோதிகளை நிரஸிக்கவேண்டின விரைவாலே சுழன்று வாராநின்றுள்ள திருவாழியைத் திருக்கையிலே உடையவனாய், புன்முறுவல்தோன்ற நின்ற அதாத்தையுடையவனான எம்பெருமானைக்கண்டு தாழவிழிந்து வணங்கி என்னுடைய விரஹ வேதனையைத் தெரிவியுங்கள்.


  3346.   
  இடர் இல் போகம் மூழ்கி*  இணைந்து ஆடும் மட அன்னங்காள்!* 
  விடல் இல் வேத ஒலி முழங்கும்*  தண் திருவண்வண்டூர்* 
  கடலின் மேனிப்பிரான்*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
  உடலம் நைந்து ஒருத்தி*  உருகும் என்று உணர்த்துமினே*

      விளக்கம்  


  • (இடலில்போகம்) ஒரு நொடிப்பொழுதும் பிரியாமே இடைவீடின்றிக் கலந்து வாழ்கின்ற அன்னப்பறவைகளை நோக்கி, திருவண்வண்டூரிலே நிரந்தரமாக நடைடிபறும் வேதவொலியைத் திருச்செவி சார்த்திக்கொண்டு அங்கே கால்தாழ்ந்து வர்த்திக்கிற கடல்வண்ணனான பெருமானைக்கொண்டு என்பேரைச்சொல்லாதே ஒருத் உடல்நைந்து உருகுகின்றாளென்று சொல்லுங்கோளென்கிறாள். ••• என்னும் வடசொல் போகமெனத்திரிந்த்து. போகத்திற்கு இடராவது இடையிடையில் விச்சேதப்ரஸக்தியாம். அஃதில்லாத போகத்தில் மூழ்கியென்றது. ஸ்வாபதேசத்தில் இடைவிடாத பகவதனுபவத்திலே அவகாஹித்திருக்கிறபடியைச் சொன்னவாறு. போகத்தில் வழுவாத புதுவையர்கோன் என்றாற்போல். இணைந்து ஆடும் –“குரு சிஷ்யக்ரந்த விரோதங்களைப் பரமதாதிகளாலே பரிஹரியாமல் செஞ்சொல் செந்தமிழ் இன்கவி பரவியழைக்குமென்று அந்யோந்யம் கொண்டாடிப் பேசிற்றே பேசும் ஏக்கண்டர்“ எறு ஆசாரிய ஹ்ருதயத்திலருளிச்செய்தபடியே ஆசாரியர்களுக்குண்டான வேதகோஷமே உங்களுக்கு வழிகாட்டுமென்றவாறு.


  3347.   
  உணர்த்தல் ஊடல் உணர்ந்து*  உடன் மேயும் மட அன்னங்காள்* 
  திணர்த்த வண்டல்கள்மேல்*  சங்கு சேரும் திருவண்வண்டூர்* 
  புணர்த்த பூந் தண் துழாய்முடி*  நம் பெருமானைக் கண்டு* 
  புணர்த்த கையினராய்*  அடியேனுக்கும் போற்றுமினே*  

      விளக்கம்  


  • (உணர்த்தனுடலுணர்ந்து) இப்பாட்டில் ப்ரகாரத்தான் மூன்று வகைப்பட்டாயிற்றிருப்பது, அவையாவன ஊடலுணர்தல் புணர்தலிவை மூன்றும், காமத்தாற்பெற்றபயன் என்று மூன்றையும் கூடினால் அஹேதுகமாக விளைவதொன்று. அதுதான் ‘என்னையொழிக்குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், உன் உடம்பு பூநாறிற்று‘ என்னையொழிக்குளித்தாய், என்னையொழியப் பூவைப்பார்த்தாய், குளித்தேன் என்கையும் உனக்கு ஆம் என்று பார்த்தேன் என்கையும் “உன்வரவுக்கு ஒப்பித்தேன்“ என்றாற்போலே சொல்லுமிவை. இவையிரண்டின் அனந்தரத்தே வருவது கல்வி“ என்றருளிச்செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்ரீஸூக்தியில் உதாஹரிக்கப்பட்டுள்ள தமிழ்ச்செய்யுள் திருவள்ளுவர் குறள். அது “ஊடலுணர்தல் புணர்தலிவை மகிழ்தல் கூடியார்பெற்றபயன்“ என்னும் பாடமாகவே குறளிற் காண்கிறது. (புணர்ச்சி மகிழ்தல் என்ற அதிகாரத்தில் ஒன்பதாவது குறள் இது.) உணர்தல் என்பதற்கு – தலைமகன் தன்னுடைய தவறில்லாமையைச் சொல்லி நாயகியினுடைய ஊடலை நீக்குதல்“ என்று பொருளுரைக்கப்பட்டிருக்கின்றது. உணர்த்ல், உணர்தல் இவையிரண்டும் இங்குப் பரியாயமேயென்க.


  3348.   
  போற்றி யான் இரந்தேன்*  புன்னைமேல் உறை பூங் குயில்காள்* 
  சேற்றில் வாளை துள்ளும்*  திருவண்வண்டூர் உறையும்* 
  ஆற்றல் ஆழி அங்கை*  அமரர் பெருமானைக் கண்டு* 
  மாற்றம் கொண்டருளீர்*  மையல் தீர்வது ஒருவண்ணமே*

      விளக்கம்  


  • (போற்றியானிரந்தேன்) சில குயில்களைக்குறித்து, திருவண்வண்டூரிலே சென்று எம் பெருமானைக்கண்டு எனக்குள்ள நிலைமை அறிவித்து அத்தலையில் நின்றும் ஒரு வார்த்தை என்பதை “போற்றியாம் வந்தோம்“ என்றவிடத்திற்போல வினையெச்சமாகக் கொண்டால் ‘மங்களாசாஸனம் பண்ணி‘ என்று பொருளாய், மேலே இரந்தேனென்பதில் அந்வயிக்கிறது. அங்ஙன்னறிக்கே * அன்றிவ்வுலகமளந்தாபடி போற்றி * என்றவிடத்திற்போலே கொண்டால் ‘மங்களமுண்டாகுக‘ என்று பொருள்பட்டுத் தனியேநிற்கும். வடமொழியில் ‘ஸவஸ்தி‘ என்று முதலிட்டுப்பேச ஆரம்பிப்பது போலாமிது. யான் இரந்தேன் – தூது போகவேணுமென்று இரப்பவன் அவனென்று ஸ்ரீராமயணாதிகளில் ப்ரஸித்தமாயிருக்க, இப்போது நான் இரக்கும்படியாவதே! என்கிற அவஸாதம் தோன்றும். புன்னைமேலுறை பூங்குயில்காள்! –“வளர்த்ததனால் பயன் பெற்றேன்“ என்னும்படியாக ஆசிரியர் பக்கலிலேயே வளருமவர்கள் (ஸ்வாபதேசத்தில்) குயிலாகச் சொல்லப்படுபவர்கள். –வநப்ரிய பரப்ருக கோகில் பிக * என்கிற அமரகோசத்தின்படி குயில்களுக்கு வடமொழியில் பரப்ருத மென்றுபெயர், காக்கையின் கூட்டிலே கொண்டுவிடப்பெற்று அவற்றால் போஷிக்கப்பட்டு வளரும் குருகுலவாஸிகளைச் சொல்லிற்றாகிறது.


  3349.   
  ஒருவண்ணம் சென்று புக்கு*  எனக்கு ஒன்று உரை ஒண் கிளியே* 
  செரு ஒண் பூம் பொழில் சூழ்*  செக்கர் வேலைத் திருவண்வண்டூர்* 
  கரு வண்ணம் செய்யவாய்*  செய்ய கண் செய்ய கை செய்யகால்* 
  செரு ஒண் சக்கரம் சங்கு*  அடையாளம் திருந்தக் கண்டே*.  

      விளக்கம்  


  • (ஒரு வண்ணம்) ஒருகிளியை விளித்து அவனுடைய அடையாளங்களைச் சொல்லி இவ்வடையாளப்படியே அவனை அழகிதாகக் கண்டு எனக்காக அவனுக்கொரு வார்த்தை அறிவியுங்கோளென்கிறாள். ஒரு வண்ணம் சென்றுபுக்கு – இங்கே ஈட்டு ஸ்ரீஸூக்தி –“இதுக்கு இரண்டுபடியாக அருளிச் செய்வர், இத்தலையில் தனிமை நினையாதே போய் நிற்கையாலே போர முதலிகளாயிருப்பர், மேன்மேலனப் பிரம்புகள் விழும், அத்தைப் பொறுத்துப் போய்ப் புகுங்கோள் அன்றியே, வழி நெஞ்சையபஹரிக்கும் போக்யதையையுடைத்து, அதில் கால்தாழாதே வருந்தி ஒருபடி சென்றுபுக்கு.“ என்பதாம். எம்பெருமான் ஸௌசீல்யமே வடிவெடுத்தவனாயினும் பரத்வம் பாரட்டி நிற்பது முண்டாகையாலே அதற்கேற்ப அருகே அணுகவொண்ணாதபடி நேரவுங்கூடும், அப்படி நேர்ந்தாலும் அதை ஒருவாறு ஸஹித்துக்கொண்டு உள்ளே புகுங்கோள் என்பது முற்பொருள். மலைநாடாகையாலே வழியெல்லாம் பூவியில் பொழிலும் தடமுமாயிருக்கும், அவற்றிலே கண் செலுத்தினால் ஆங்காங்கு லயிக்கவேண்டிற்றாகுமேயல்லது எம்பெருமானிடம் சென்று சேரமுடியாது, ஆகவே வழியில் கண் செலுத்தாதே ஒருவாறு வழியைக் கடந்து போங்கள் என்பது இரண்டாவது பொருள்.


  3350.   
  திருந்தக் கண்டு எனக்கு ஒன்று உரையாய்*  ஒண் சிறு பூவாய்* 
  செருந்தி ஞாழல் மகிழ்*  புன்னை சூழ் தண் திருவண்வண்டூர்*
  பெரும் தண் தாமரைக்கண்*  பெரு நீள் முடி நால் தடந்தோள்* 
  கருந் திண் மா முகில் போல்*  திருமேனி அடிகளையே*  

      விளக்கம்  


  • (திருந்தக்கண்டு) திருவண்வண்டூரிலே சென்று அங்குறையும் எம்பெருமானுடைய திவ்யாவயவ் ஸௌந்தர்யத்தை நன்றாகக் கண்டு மீண்டுவந்து எனக்கொன்று சொல்லவேணுமென்று பூவைப் பறவையைக்குறித்துச் சொல்லுகிறாள். காண்பது இரண்டு விதம், தன் மணத்துக்கு மாத்திரம் தெரிந்தாம்படி காண்கை ஒன்று, பிறர்க்கும் விசதமாகச் சொல்லலாம்படி காண்கை மற்றொன்று. இங்கே திருந்தக் கண்டு என்ற – ஏதோ சாதாரணமாகக் கண்டு விடுகையன்றிக்கே எனக்கு விசதமாகச் சொல்லலாம்படி காணவேணுமென்றவாறு. எதைக் காண்பது? என்ன, திருக்கண் திருவபிஷேகம் திருத்தோள்கள் திருமேனி ஆகிய இவற்றைக் கண்டு அவற்றிலுள்ள அதிசயங்களை வந்து சொல்லவேணுமென்கிறாள். தூதர் செய்யவேண்டிய காரியங்களில் இதுவும் ஒன்றேயாம், இதனாலும் தலைவிக்குக் தரிப்பு உண்டாகுமென்க. அடிகள் என்று ஸ்வாமிக்கு வாசகம்.


  3351.   
  அடிகள் கைதொழுது*  அலர்மேல் அசையும் அன்னங்காள்* 
  விடிவை சங்கு ஒலிக்கும்*  திருவண்வண்டூர் உறையும்* 
  கடிய மாயன் தன்னை*  கண்ணனை நெடுமாலைக் கண்டு* 
  கொடிய வல்வினையேன்*  திறம் கூறுமின் வேறுகொண்டே*

      விளக்கம்  


  • (அடிகள் கைதொழுது) சில அன்னப்பறவைகளை நோக்கி ‘திருவண்வண்டூரெம் பெருமானிடத்துச்சென்று ஏகாந்தமாக என் விஷயம் விஜ்ஞாபிக்கவேணும்‘ என்று இரக்கிறாள். ‘திருவடிகளைச் சிக்கனப்பிடித்துக் கொண்டு‘ என்று சொல்லவேண்டிய ஸ்தானத்திலே அடிகள் கைதொழுது என்கிறாள். இது உபசாரோக்தி. “அநதிக்ரமணீயம் ஹி சரணக்ரஹணம்“. “என்றபடி திருவடிகளைப்பிடித்துக் கொண்டால் மறுக்கப்போகாதாகையாலே அந்த உபாயத்தை உபதேசித்தபடி. கடியமாயன் – ஆச்ரிதவிரோதிகளை அழியச் செய்யுமிடத்தில் கண்பாரத ஆச்சரியச் செயல் செய்பவன். கண்ணன் – ஆச்ரிதர்க்குதான் கையாளாக நின்று தன்னைக்கொடுக்குமவன். நெடுமால் – இத்தனையும் செய்தும் “அந்தோ! ஒன்றும் செய்யப்பெற்றிலோமே! என்று குறைபடும்படியான வியாமோஹமுடையவன்,


  3352.   
  வேறுகொண்டு உம்மை யான் இரந்தேன்*  வெறி வண்டினங்காள்* 
  தேறு நீர்ப் பம்பை*  வடபாலைத் திருவண்வண்டூர்* 
  மாறு இல் போர் அரக்கன்*  மதிள் நீறு எழச் செற்று உகந்த* 
  ஏறு சேவகனார்க்கு*  என்னையும் உளள் என்மின்களே*  

      விளக்கம்  


  • (வேறுகொண்டும்மை) சிலவண்டுகளைக் குறித்துக் கூறுகின்றாள். “எமது தலைவர் பெண்பிறந்தார் காரியமெல்லாம் செய்து தலைக்கட்டி விட்டோமென்றிரப்பர், அப்படியன்றிக்கே, ரக்ஷ்யவர்க்கத்திலே நானு மொருத்தி யிருக்கின்றதாகச் சொல்லுங்கோள்“ என்கிறாள். கீழே பலபறவைகளையும் நோக்கித் தூதுபோம்படி நான் இரந்ததுண்டாகிலும் இப்போது, வண்டுகளான உங்களை இரப்பது ஸாமான்யமானதன்று! தனிப்பட்ட ப்ரதி பத்தியோடே உங்களை இரக்கிறேனென்பாள் “வேறு கொண்டும்மையானிரந்தேன்“ என்கிறாள். “திக்குக்கள்தோறும் முதலிகளைப் போகவிடாநிற்கச் செய்தே திருவடிகையிலே திருவாழிமோதிரம் கொடுத்துவிட்டாப்போலே காணும்“ என்பது ஈடு. (விசேஷேணது ஸுக்ரீவோ ஹநூமத்யர்த்தமுக்தவாந், ஸ ஹி தஸ்மிந் ஹரிச்ரேஷ்டே நிச்சிதார்த்தோர்த்தஸாத நே) என்ற வால்மீகிவசனமும். இப்பாசுரத்தில் “அரக்கன் மதிள் நீறெழச் செற்றகந்த ஏறு சேவகனார்க்கு“ என்றதை அடியொற்றிய இத்திருவாய்மொழி விபவத்தில் விட்ட தூது என்று ஆசாரியர்கள் நிர்வஹித்தருள்வது. என்னையுமுள்ளென்மின்கள் – இன்னமும் பிழைத்திருக்கிறெனெறு சொல்லுங்கோல் என்றும் பொரள் கொள்ளலாமாயினும் அப்பொருளில் சுவையில்லையென்பது பெரானார் திருவுள்ளம்


  3353.   
  மின் கொள் சேர் புரிநூல் குறள் ஆய்*  அகல் ஞாலம் கொண்ட* 
  வன் கள்வன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன* 
  பண் கொள் ஆயிரத்துள் இவை பத்தும்*  திருவண்வண்டூர்க்கு* 
  இன்கொள் பாடல் வல்லார்*  மதனர் மின்னிடை யவர்க்கே* (2)

      விளக்கம்  


  • (மின்கொள் சேர்) இத்திருவாய்மொழி கற்பார் எம்பெருமானுக்கும் அவனடியார்கட்கும். விரும்பத்தக்கவராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறது. “மதனர்மின்னிடையவர்க்கு“ என்றதில் இங்ஙனே பல்ச்ருதி காண்கிறதோ வென்னில், அது உபமான மாத்திரத்தைச் சொன்னபடி. காமினிகளுக்குக் காமுகர் எப்படி விரும்பத்தக்கவர்களோ அப்படி என்றவாறு. திருநாட்டிலுள்ள திவ்யாப்ஸரஸ்ஸுக்களை மின்னிடையவர் என்றதாகக் கொள்ளவுமாம். “நிதியும் நற்சுண்ணமும் நிறைகுட விளக்கமும் மதிமுகமடைந்தையர் ஏந்தினர்வந்தே“ என்கிற உபசாரங்கள் செய்யப்பெறுவார் என்கை. “இன் கொள்பாடவல்லார்“ என்ற பாடம் மறுக்கத்தக்கது.