திரு வல்ல வாழ்

தலபுராணம்: திருவல்லவாழ் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும். நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது திருவல்லா, ஸ்ரீவல்லப ஷேத்ரம் எனவும் அழைக்கப்படுகின்றது.[1] கருடபுராணம், மத்ஸ்யபுராணம் போன்றவற்றில் இத்தலத்தைப் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன. இறைவர் கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் திருவாழ்மார்பன், ஸ்ரீவல்லபன், கோலப்பிரான் என அழைக்கப்படுகிறார்.இறைவி செல்வத் திருக்கொழுந்துநாச்சியார், வாத்சல்ய தேவி என அழைக்கப்படுகிறார். இத்தல தீர்த்தம் கண்டகர்ண தீர்த்தம், பம்பை தீர்த்தம் ஆகியனவாகும். இதன் விமானம் சதுரங்க கோல விமானம் எனும் அமைப்பைச் சேர்ந்தது.

அமைவிடம்

பெயர்: திருவல்லவாழ் (ஸ்ரீவல்லப கோயில்) ஊர்: திருவல்லா மாவட்டம்: பத்தனம்திட்டா மாநிலம்: கேரளம்,

தாயார் : ஸ்ரீ வாத்சல்ய தேவி
மூலவர் : ஸ்ரீ கோலப்பிரான்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: ஸ்ரீ கோலப்பிரான் பெருமாள்,ஸ்ரீ வாத்சல்ய தேவி


திவ்யதேச பாசுரங்கள்

    1808.   
    தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
    பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*
    அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
    மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)

        விளக்கம்  


    • நெஞ்சமே!, “சேலேய் கண்ணியரும் பெருஞ்செல்வமும் நான்மக்களும், மேலாத் தாய்தந்தையு மவரேயினி யாவாரே“ என்கிறபடியே நமக்கு எல்லாவுறவுமுறையும் திருமகள் கொழுநனே யென்று அத்யவஸாயங் கொண்டிருக்க ப்ராப்தமாயிருக்க, அதற்கு மாறாக “அன்னையத்த னென் புத்திரர் பூமி வாசவார் குழலாளென்று மயங்கி“ என்னுமாபோலே ஆபாஸ பந்துக்களிடத்தில் பற்று வைத்து இன்னமும் ஸம்ஸார பந்தத்திற்கே ஆட்பட்டிருக்கும் வாழ்வு போதும்போதுமென்று வெறுத்து ஈச்வரசேஷமான ஆத்மஸ்வரூபத்துக்கு ஒரு அவத்யமும் விளையாதே நோக்கிக் கொள்ள வேண்டில் திருவல்லவாழ்ப்பதியை வாயாற் சொல்லவாகிலும் இசைந்திடுவாயாக -என்கிறார். “பந்தமார் வாழ்க்கையைப் பழியெனக் கருதினாயே வல்லவாழ் சொல்லுமா மருவு“ -“ஸம்ஸார வாழ்க்கையில் பற்றுள்ளவர்கள் பகவத் விஷயத்தைப் பற்றுவதானது செருப்பு வைத்துத் திருவடிதொழுவதை யொக்குமாதலால், ஸம்ஸார வாழ்க்கையில் வெறுப்பு உண்டானால் பகவத் விஷயத்தைப் பற்றப்பார் என்கிறது. ஸம்ஸார வாழ்க்கையில் வெறுப்பு உண்டாயிற்றில்லையாகில் இன்னமும் அந்த வன்சேற்றிலேயே அழுந்திக்கிட என்னத் திருவுள்ளம் போலும்.


    1809.   
    மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
    அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*
    துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
    மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  


    • “மின்னும் ஆவல்லியும்“ என்று பிரித்தார் அரும்பதவுரைகாரர், அதுவேண்டா, “மாவல்லியும்“ என்றே பிரிக்க. அஞ்சினாயேல் -“பாம்போடொரு கூரையிலே பயின்றாற்போல்“ என்னுமாபோலே இவர்களோடே கூடி நாம் எங்ஙனே வாழ்வது! என்று பயமுண்டாகில் என்றபடி. துன்னமாமணிமுடிப் பஞ்சவர்க்கு -கண்ணபிரான் துரியோதனாதியர் பக்கல் தூது செல்லுங்காலத்தில் பாண்டவர்கள் முடியிழந்து கிடந்தாலும் அவர்களே முடிபுனைந்து அரசாட்சிபுரிய உரிய யார் என்னும் பகவதபிப்பிராயத்தால இங்ஙனமருளிச் செய்யப்பட்ட தென்க.


    1810.   
    பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
    பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*
    நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
    மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  



    1811.   
    பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
    எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*
    விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
    வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 

        விளக்கம்  


    • O Heart! If you decide on escaping from the fixation of embracing the tight breasts of sweet-tongued beautiful dames, and seek the elevation of spirit, then learn to speak of the glory of Tiruvallaval, abode of the ocean hued Lord, who gives in Venkatam the joy that he gives to the celestials in Vaikunta


    1812.   
    மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
    துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*
    நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
    மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  


    • வாரணம் தற்சம வடசொல். துஞ்சினார் -துஞ்சுதலாவது உறங்குதல், நீண்ட வுறக்கமாகிற மரணத்தைச் சொல்லுகிறது, உபசார வழக்கு (சொல்லைத் துயரெனக் கருதினாயேல்) “வாழந்தார்கள் வாழ்ந்தே நிற்பரென்பதில்லை“ யென்கிற ஐச்வர்யத்தின் நிலைநில்லாமையை யறிந்து இப்படிப்பட்ட துக்கரூபமான ஐச்வர்யத்தில் நமக்கு வேண்டாவென்று எண்ணினாயாகில் என்றவாறு அங்கை -அகங்கை.


    1813.   
    உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
    அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*
    திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
    மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  


    • நெஞ்சே! இந்த சரீரத்தின் ஹேயத்தன்மை உனக்குத் தெரியாமையில்லையே, “தீண்டா வழும்புஞ் செந்நீரும் சீயும் நரம்பும் செறிதசையும், வேண்டா நாற்றமிகு முடல்“ என்றன்றோ இவ்வுடலின் நிலைமையிருப்பது, இத்தகையதான சரீரத்தினுள்ளே பஞ்சேந்திரியங்களாகிற வன்குறும்பர் புகுந்து நின்று எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு எனக்கு வேண்டிய விஷயத்தைக் காட்டு“ என்று அருவித் தின்றிடுவதற்கு அஞ்சி உய்யும் வகை யென்னென்று நாடினாயாகில் நான்கு வேதங்களையுமதிகரித்து அவற்றின் அங்கங்களையும் பயின்று பஞ்சாக்நிஹோத்ரிகளாய் பஞ்சயஜ்ஞ பராயணர்களாயிருக்கும் வைதிகர்கள் வாழுமிடமான திருவல்லவாழலே பொருந்தப்பார் என்கிறது.


    1814.   
    நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
    பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*
    தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
    மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  



    1815.   
    மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
    அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
    சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
    வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  



    1816.   
    வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
    கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*
    தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
    வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!

        விளக்கம்  


    • கீழ் எட்டு பாசுரங்களிலும் அருளிச்செய்தபடியே ஆபாஸ பந்துக்கள் உற்ற துணையல்லர் என்கிற வுணர்ச்சியும், விஷயபோகங்கள் நமக்கு ஸ்வரூப ப்ராப்தமன்று என்கிற வுணர்ச்சியும், இஹலோகத்துச் செல்வம் நிலைநிற்ப தன்று என்கிற வுணர்ச்சியும், இவ்வுடல் துச்சம் என்னுமுணர்ச்சியும் உண்டாகப் பெற்றாலும் கண்டவிடமெங்கும் பரவிக்கிடக்கிற வேதபாஹ்யமதங்களிலே அந்வயிக்கப்பெறாமையாகிற பாக்கியமுண்டாவது அருமையாதலால் அதனை இப்பாசுரத்தில் ப்ரஸ்தாவிக்கிறார். வெள்ளியார் என்பதற்கு இரண்டுவகையாகப் பொருள்கூறுவர், வெள்ளியென்று சுக்ரனுக்குப் பேராகையாலே அவனைச் செல்லலாம், லோகாயத மதத்திற்கு அவன் ப்ரவர்த்தகனென்க. இனி, வெள்ளிமலையாகிய கைலாஸகிரியை இருப்பிடமாகவுடைய பசுபதியைச் சொல்லவுமாம், பாசுபதமதத்திற்கு அவன் பிரவர்த்தகனாதல் அறிக. (பிண்டியார்) பிண்டியென்று அசோக மரத்திற்குப் பெயர், அதனை இருப்பிடமாகவுடைய அருகதெய்வம் ஜைநர்களுடையது. (ஜைநமதத்தினரான பவணந்தி முனிவர் இயற்றிய நன்னூலின் தொடக்கத்தில் உள்ள கடவுள் வணக்கத்தில் “பூமலியசோகின் புனை நிழலமர்ந்த“ என்றது காண்க.) (போதியார்) போதியென்று அரசமரத்திற்குப் பெயர், அதனை இருப்பிடமாகவுடையது புத்த தேவதை, (புத்த தேவனைப் போதிவேந்தனென வழங்குதல் காண்க.) ஆகவே போதியாரென்றது பௌத்தரைச் சொன்னபடி. ஆகவிப்படிப்பட்ட பாஹ்ய மதஸ்தர்களின் கொள்கைகள் நமக்கு உபாதய மல்லென்று துணிந்து வைதிக ஸம்ப்ரதாய நிஷ்டையுடையையாகில் நெஞ்சமே! ஸ்வருப ஜ்ஞாநிகளால் ஸேவிக்கப்படுபவரும், ப்ரயோஜநாந்தரபரர்க்குங்கூட உடம்பு நோவக் கடல்கடைந்து அமுதமளித்தவருமான பெருமாள் நித்யவாஸம் பண்ணுமிடமான திருவல்லவாழிலே பொருந்தப்பார் என்றாராயிற்று. தெள்ளியார் என்றது தெளிவுள்ளவர்கள் என்றபடி. தெளிவாவது -;உபாய உபேயங்களிரண்டும் எம்பெருமானே; என்ற அத்யவஸாயம், அஃது உடையவர்கள் “கலக்கமில்லா நற்றவ முனிவர் கரைகண்டோரு, துளக்கமில்லாவானவர்“ என்கிறபடியே ஆத்மஸ்வரூபம் கைவந்திருக்கும் ஸநகாதி மஹர்ஷிகளும் முக்தரும் நித்யஸூரிகளும். முநீர் - தொகுத்தல்.


    1817.   
    மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
    சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*
    கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
    இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)

        விளக்கம்  


    • வேதம் வல்ல அந்தணர்கள் ஒரு குறையுமின்றி * நித்யஸ்ரீர்நித்ய மங்களமாக வாழுமிடமான திருவல்லவாழென்னும் மலைநாட்டுத் திருப்பதியில் எழுந்தருளியிருக்கு மெம்பெருமான் விஷயமாகத் திருமங்யாழ்வார்ருளிச் செய்த இத்திருமொழியை ஓதி உணருமவர்கள் இவ்விபூதியிலுள்ளவரையில் தாங்களே தலைவராயிருந்து, இவ்வுடல் நீத்தபின் நித்யவிபூதியிலே புக்கு நித்யாநந்தம் பெறுவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டினாராயிற்று. வலார் - வல்லார். இலார் - இல்லார்.


    2775.   
    அன்னம் துயிலும் அணிநீர் வயல்ஆலி,*
    என்னுடைய இன்அமுதை எவ்வுள் பெருமலையை,* (2)
    கன்னி மதிள்சூழ் கணமங்கைக் கற்பகத்தை,*
    மின்னை இருசுடரை வெள்ளறையுள் கல்லறைமேல்-
    பொன்னை மரகதத்தை புட்குழி எம் போர்ஏற்றை,*
    மன்னும் அரங்கத்து எம் மாமணியை,* (2) -வல்லவாழ்ப்- 

        விளக்கம்  


    • கண மங்கை – கண்ணமங்கை யென்பதன் தொகுத்தல் மின்னை இருசுடரை –மின்னல்போலவும் சந்திர ஸூரியர்கள் போலவும் பளபளவென்று விளங்குபவன் என்று பெரியவாச்சான்பிள்ளை திருவுள்ளம் மின் என்று மின்னற் கொடிபோன்ற பெரிய பிராட்டியாரைச் சொல்லிற்றாய், இருசுடர் என்று ஸூர்ய சந்திரர்களுக்கொப்பான திருவாழி திருச்சங்குகளைச் சொல்லிற்றாய் இம்மூவரின் சேரத்தியைச் சொல்லுகிறதாக அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவுள்ளம் “அங்கு நிற்கிறபடி யெங்ஙனே யென்னில், பெரிய பிராட்டியாரோடும் இரண்டருகுஞ் சேர்ந்த ஆழ்வார்களோடுமாயிற்று நிற்பது“ என்ற ஸ்ரீஸூக்தி காண்க. வெள்ளறை – வெண்மையான பாறைகளாலியன்ற மலை, (அறை –பாறை) இது வடமொழியில் ச்வேதாத்ரி எனப்படும். புட்குழி – புள் ஜடாயுவென்னும் பெரியவுடையார் அவரைக் குழியிலிட்டு ஸம்ஸ்பரித்தவிடமென்று சொல்லுதல பற்றிப் புட்குழி யென்று திருநாம்மாயிற்றென்பர், போரேறு – ஸமரபுங்கவன் என்று வடமொழித் திருநாமம் ஸமர – யுத்தத்தில் புங்கவ – காலை போலச் செருக்கி யுத்தம் நடத்துபவர். அரங்கம் – எம்பெருமான் ரதியை அடைந்த இடம், ரதியானது ஆசைப்பெருக்கம். அதனை யடைந்து (ஆசையுடன்) வாழுமிடம், ஸ்ரீவைகுண்டம் திருப்பாற்கடல் ஸூர்யமண்டலம் யோகிகளுடைய உள்ளக்கமலம் என்னும் இவையனைத்திலும் இனிய தென்று திருமால் திருவுள்ளமுவந்து எழுந்தருளியிருக்குமிடமான தென்பதுபற்றி ‘ரங்கம்‘ என்று அவ்விமாநத்திற்குப் பெயர். அதுவே லக்ஷணையால் திவ்ய தேசத்திற்குத் திருநாமமாயிற்று. தானியாகுபெயர். இனி, ரங்கமென்று கூத்தாடு மிடத்துக்கும் பெயராதலால், திரு அரங்கம் –பெரிய பிராட்டியார் ஆநந்தமுள்ளடங்காமல் நிருந்தஞ் செய்யுமிடம் என்றும் மற்றும் பலவகையாகவங் கொள்ளலாம்.


    3321.   
    மான் ஏய் நோக்கு நல்லீர்!*  வைகலும் வினையேன் மெலிய* 
    வான் ஆர் வண் கமுகும்*  மது மல்லிகை கமழும்*
    தேன் ஆர் சோலைகள் சூழ்*  திருவல்லவாழ் உறையும்- 
    கோனாரை*  அடியேன் அடிகூடுவது என்றுகொலோ?* (2)   

        விளக்கம்  


    • (மானேய் நோக்கு.) அழகிய நோக்குடைய தோழிகளே! பிரிந்து வருந்துவதற்கே ஹேதுவான மஹாபாபத்தைப் பண்ணின நான் நாடோறும் வ்யஸாங்களால் மெலிவதற்காகவே நித்யவஸந்தமான சிறந்த பொழில்களால் சூழப்பட்ட திருவல்லவாழிலே நித்யவாஸம் பண்ணாநின்ற ஸ்வாமியின் திருவடிகளிலே சேரப்பெறுவது என்றைக்கோ வென்கிறாள். தலைவியின் அவஸதாவிசேஷத்தைத் தோழிகள் கூர்க்கப் பார்த்துக் கொண்டிருந்ததனால் ‘மானேய் நோக்கு நல்வீர்! என்று விளிக்கப்பட்டார்கள். மெலிய என்கிற வினையெச்சம் ஒரு வினையிலே அந்வயிக்க வேண்டும்; வானார் என்ற விடத்து ‘ஆர்’ என்ற வினையிலே அந்வயிக்கவுமாம், முந்தின பக்ஷத்தில், நான் மெலிவதற்காகவே நமூகுகள் ஆகாசத்தளவம் ஓங்கியிருக்கின்றன வென்கிறாளென்க. பிந்தின பக்ஷத்தில், நான் மெலிவதற்காகவே அவன் திருவல்லவாழிலே உறைகின்றளென்கிறாளென்க.


    3322.   
    என்று கொல்? தோழிமீர்காள்*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பொன்திகழ் புன்னை மகிழ்*  புது மாதவி மீது அணவி* 
    தென்றல் மணம் கமழும்*  திருவல்லவாழ் நகருள்- 
    நின்ற பிரான்*  அடிநீறு அடியோம் கொண்டு சூடுவதே?*    

        விளக்கம்  


    • (என்று கொல். தோழிகாள்! என்ப்ரக்ருதியை அறிந்திருக்கிற நீங்கள் எனக்கு ப்ரியமானவற்றைச் சொல்லி என்னைத் தேற்ற வேண்டியது ப்ராப்தமாயிருக்க, என்னைக் கண்டிப்பதிலே ஒருப்பட்டிருப்பதனால் உங்கட்கு என்ன பயனுண்டாகும். உங்கள் வழியிலே நான் மீளப்போகிறேனென்று எண்ணமோ; அது ஒருநாளுமில்லை.திருவல்லவாழ்நகர் சோலைகளிலிருந்து வீசுகின்ற நறுமணம் மிக்க தென்றலானது என்னை அவ்வழியே இழுக்க நான் உங்கள் வழியே வருவதற்கு ப்ரஸந்தியுண்டோ; அத்தலத்துப் பெருமானுடைய பாதாரவிந்த ரேணுவைச் சிரமீது அணியப்பெறவேணுமென்றன்றோ எனக்கு ஆவலிருப்பது; அது பற்றி ஏதேனும் சொல்லவல்லிகோலாகில்- சொல்லுங்கோள்; வீணாக என்னை நலிவது வேண்டா என்றாளாயிற்று.


    3323.   
    சூடு மலர்க்குழலீர்!*  துயராட்டியேன் மெலிய* 
    பாடும் நல் வேத ஒலி*  பரவைத் திரை போல் முழங்க* 
    மாடு உயர்ந்து ஓமப் புகை கமழும்*  தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  கழல் காண்டும்கொல் நிச்சலுமே?*      

        விளக்கம்  


    • (குடுமலர்க்குழலீர்.) “எம்மை நீர் நலிந்தென் செய்திரோ” என்னும் வாக்கியம் கீழ்ப்பாட்டிலும் மேற்பாட்டிலும் இருப்பதனாலே இப்பாட்டிலும் அது அநுஷங்கம் செய்துகொள்ள (கூட்டிக்கொள்ள) உரியது. தோழிகாள்! நீங்கள் உங்களுக்கு அபிமதமானதைச் சூடிக்கொண்டு வாழ்வதுபோல யானும் எனக்கு அபிமதமானதைச் சூடிக்கொண்டு வாழ நினைத்தால் இதில் என்ன பிசகு? இதற்காக என்னை நீங்கள் கண்டிப்பது ஏன்? என்ன, அதற்குத் தோழிகள் ‘உனக்கென்று ஒரு தனிவழியுண்டோ? எங்கள் வழியிலேதான் நீ வந்து தீரவேண்டும் என்ன; அதற்குத்தலைவி சொல்லுகிறாள்; திருவல்லவாழ்நகரிலே பரமவைதிகர்கள் கானம் செய்கிற ஸாமவேதத்தின் ஒலியும் அங்குற்ற ஹோமதூமங்களின் பரிமளமும் என்னை அவ்வழியே இழுப்பது கண்டிகோளே; அத்தகலத்துப் பெருமானுடைய திருவடிகளையே அநவரதமும் கண்டுகொண்டிருக்க வேணுமென்னுங் காதலையுடைய எனக்கு அந்தக் காதல் நிறைவேற வழி சொள்ளவல்லிகோளாகில் சொல்லுங்கோள் என்றாளாயிற்று.


    3324.   
    நிச்சலும் தோழிமீர்காள்!*  எம்மை நீர் நலிந்து என் செய்தீரோ?* 
    பச்சிலை நீள் கமுகும்*  பலவும் தெங்கும் வாழைகளும்* 
    மச்சு அணி மாடங்கள் மீது அணவும்*  தண் திருவல்லவாழ்* 
    நச்சு அரவின் அணைமேல்*  நம்பிரானது நல் நலமே*.             

        விளக்கம்  


    • (நீச்சலும்.) தோழிகளே! என்னுடைய நற்சீவன் என் அதீனமாக இருந்தாலன்றோ நீங்கள் கண்டித்துச் சொல்லும் வார்த்தைகளுக்கு நான் செவி சொடுக்க முடியும்; அங்ஙனல்ல காண்மின், பார்க்கப் பார்க்கக் கண்ணும் நெஞ்சும் பிணிப்புண்ணும்படியான பாக்கு மரங்களும் பலா மரங்களும் முதலியவை மச்சணி மாடங்களளவும் ஓங்கி விளங்கப்பெற்ற திருவல்லவாழிகே எழுந்தருளியுள்ள அனந்தநராயிக்கன்றோ என்னுயிர் அதீனமாயற்றது; இனி உங்கள் பேச்சு விலைச்செய்து மளவன்றே என்றாளாயிற்று. உய்ந்தபிள்ளை யென்கிற அரையர் இசையாடும்போது “பச்சிலை நின்கமுகம், பச்சிலை நீள் பலவும், பச்சிலை நீள் தெங்கும், பச்சிலை நீள் வாழைகளும்” என்று கூட்டிக் கூட்டிப் பாடுவராம். திருவல்லவாழில் எம்பெருமான் நின்ற திருக்கோலமேயன்றி சயனத்திற்குக் கோலமன்று; * திருவல்லவாழ்நகருள் நின்றபிரான்* என்று கீழே இரண்டாம் பாட்டிலு மருளிச்செய்துள்ளது. இப்பாட்டில் “திருவல்லவாழ் நச்சரவினணை மேல் நம்பிரான்” என்று சயனத்திருக்கோலமாகக் கூறுகின்றாரென்று நினைக்க வேண்டா; நச்சரவினணை மேல் நம்பிரானென்ற அத்தலாத்து ஸ்திதியைச் சொன்னபடியன்று; எம்பெருமானுடைய பொதுவிசேஷண மிருக்கிறபடி ‘அத்தியூரான்... அணிமணியின் துத்திசேர் நாகத்தின்மேல் துயில்வான்* என்ற விடம்போல.


    3325.   
    நல் நலத் தோழிமீர்காள்!*  நல்ல அந்தணர் வேள்விப் புகை* 
    மைந் நலம் கொண்டு உயர் விண் மறைக்கும்*  தண் திருவல்லவாழ்* 
    கன்னல் அம் கட்டி தன்னை*  கனியை இன் அமுதம் தன்னை* 
    என் நலம் கொள் சுடரை*  என்றுகொல் கண்கள் காண்பதுவே?*   

        விளக்கம்  


    • (நன்னலத் தோழியீர்காள்.) தோழிகளே! உங்கள் குணங்கண்டன்றோ நான் உங்களோடு பழகியிருப்பது; நீங்கள் நன்னல தோழிகளல்வீரோ? தாய்மார் போலவே நீங்களும் எனக்குப் பகையாளிகளாக இருந்திகோலாகில் உங்களுக்குத் தோழிமாரென்னும் பெயர் அடுக்குமோ? திருவல்லவாழில் நல்லவந்தணர்கள் பகவத்ஸமாராதனமாக அனுஷ்ட்டிக்கும் வேள்விகளில் தோன்றும் புகையானது ஆகாசப்பரப்பெங்கும் பரவியிருந்து என்னை யீர்க்கின்றது; இது ஒருபுறமிருக்க, அத்தலத்தெம்பெருமானடைய அளவுகடந்த யோக்யதையோ என்னை ஆத்மாபஹாரம் பண்ணாநின்றது; அந்தத் திருமூர்த்தியைக் கண்ணால் காணப்பெற்றால் போதுமென்றிருக்கிற வெனக்கு அது என்னைக்குக் கைகூடும்? சொல்லுங்கோளென்கிறாள்


    3326.   
    காண்பது எஞ்ஞான்றுகொலோ?*  வினையேன் கனிவாய் மடவீர்* 
    பாண் குரல் வண்டினொடு*  பசுந் தென்றலும் ஆகி எங்கும்* 
    சேண் சினை ஓங்கு மரச்*  செழுங் கானல் திருவல்லவாழ்* 
    மாண் குறள் கோலப் பிரான்*  மலர்த் தாமரைப் பாதங்களே?*

        விளக்கம்  


    • (காண்பது.) தோழிகளே! நமது வாய் இருக்கும்படியைப் பாருங்கள். என் வாய் வெளுத்து உலர்ந்துகிடக்க, உங்கள் வாய் தாம்பூலமருந்தில் செவ்விபெற்றிருத்தல் தகுதியோ வென்கிற க்ஷேபம் கனிவாய் மடவீர்! என்கிற விளியில் தோன்றும். அன்றைக்கே ஏகம்துக்கம் ஸுகஞ்ச நௌ* என்கிற கணக்கிலே அவர்களுள் தன்னைப்போலேயிருக்கையாலே, நீங்களும் கனிவாய் மடவாராக இருந்தவர்களன்றோ! அங்ஙனே நான் மறுபடியும் காண்பது எப்போதோ வென்கிறோளென்னவுமாம். இக்கருத்தில், முன்னிருந்த தன்மையை விட்டுக் கனிவாய்மடலீரென்பது விளித்ததாகக் கொள்க. நல்லமிடற்றோரையையுடைய வண்டுகளும் இளந்தென்றலும் பொருந்திய சோலைகளால் சூழப்பட்ட திருவாழ்ப்பதியிலே வாமனாவதாக ஸௌந்தர்யத்தை நினைப்பூட்டிக்கொண்டு ஸேவைதந்தருளாநின்ற எம்பெருமானுடைய திருவடித்தாமரைகளை நான் காண்பது என்றைக்கு? நீங்கள் விரைவாகக் கூட்டி வைக்க வேணுமென்றபடி.


    3327.   
    பாதங்கள்மேல் அணி*  பூந்தொழக் கூடுங்கொல்? பாவைநல்லீர்* 
    ஓத நெடுந் தடத்துள்*  உயர் தாமரை செங்கழுநீர்*
    மாதர்கள் வாள் முகமும்*  கண்ணும் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நாதன் இஞ் ஞாலம் உண்ட*  நம் பிரான் தன்னை நாள்தொறுமே?*

        விளக்கம்  


    • (பாதங்கள் மேலணி.) இப்பாட்டில் பாவைநல்லீர்! என்று தோழிகளை உகந்து விளித்திருக்கின்றன; ஆறாயிரப்படி யருளிச்செயல். ‘தன் மநோரதத்தை நிஷேதியாமையாலே தோழிமாரை உகந்து ஸம்போதிக்கிறாள்” என்று ஈட்டு ஸூக்தி- “இவளை கிஷேதிக்கு க்ஷமைகளன்றிக்கே ஸ்திமிதைகளா யிருந்தபடி; எழுதின பாவைபோலேயிருந்தார்கள்” என்று கடல் போலே பெருத்திருந்துள்ள பொய்கைகளிலே வளர்ந்த தாமரைப்பூக்களும் சென்கழுநீர்ப் பூக்களும் ஸ்த்ரீகளுடைய அழகிய முகங்களோடும் கண்களோடும் ஒக்கும்படியாகவுள்ள திருவள்ளவாழ்நகருக்கு நாயகனாய் ஸமயசேஷங்களிலே ஸகல ஜகத்துக்கும் ரக்ஷகனானவனுயைட திருவடிகளிலே சாத்தின புஷ்பத்தையாகிலும் ஸேவிக்கப்பெறுவோமோ வென்கிறாள்.


    3328.   
    நாள்தொறும் வீடு இன்றியே*  தொழக் கூடுங்கொல் நல் நுதலீர்* 
    ஆடு உறு தீங் கரும்பும்*  விளை செந்நெலும் ஆகி எங்கும்*
    மாடு உறு பூந் தடம் சேர்*  வயல் சூழ் தண் திருவல்லவாழ்* 
    நீடு உறைகின்ற பிரான்*  நிலம் தாவிய நீள் கழலே?*    

        விளக்கம்  


    • (நாடொறும் வீடின்றியே.) இப்பாட்டில் கண்ணுதல் என்கிறவிளியின் கருத்தாவது- திருவள்ளவாழ் நாதனுக்கு நீங்கள் புருஷகாரம் பண்ணி அவன் இங்கே யெழுந்தருளினால் அவன் திருவடிகளிலே தெண்டனிட்டு அதனால் நெற்றிக்கு அலங்காரமாகப்பெறும் ஸ்ரீபாத ரேணுவையுடையீர்களாக உங்களைக் காண்பேனோ? என்பதாம். ஈட்டு ஸ்ரீஸூந்திய” அவன் வந்த வுபகாரத்துக்கு அவன் திருவடிகளிலே விழுந்து ப்ரணமபாம்ஸுக பரார்த்ய ஸலாடைகளாக உங்களைக் காணவல்லேனோ” என்பதாம். எப்போதும் பக்கபலமாய் அருகிலேயிருக்கிற பூத்த பொய்கைகளோடு சேர்ந்த வயல்சூழ்ந்த ச்ரமஹரமான திருவல்லவாழிலே அநுக்ரஹசீலனாய்க் கொண்டு நித்யவாஸம் பண்ணுகிற எம்பெருமானுடைய ஸெளசீல்யமே வடிவெடுத்த திருவடிகளை இடைவிடாதே தொழும்படியான பாக்கியம் நேருமோவென்கிறான்.


    3329.   
    கழல் வளை பூரிப்ப யாம் கண்டு*  கைதொழக் கூடுங்கொலோ* 
    குழல் என்ன யாழும் என்ன*  குளிர் சோலையுள் தேன் அருந்தி*
    மழலை வரி வண்டுகள் இசை பாடும்*  திருவல்லவாழ்* 
    சுழலின் மலி சக்கரப் பெருமானது*  தொல் அருளே?*  

        விளக்கம்  


    • (சுழல்வளை) குளிர்ந்த சோலைகளிலே தேனைப்பருகி, ‘இது வேணுகாலமோ? அல்லது வீனா கானமோ? என்று சந்தேகிக்குமாறு வண்டுகள் இசைபாடுமிடமான திருநல்வாழிலே கையும் திருவாழியுமாகக் காட்சி தாரா நின்றுள்ள எம்பெருமானை அவன்றன்னுடைய திருவருளாலே யாம் கண்டு கை தொழ நேருமோ? என்கிறாள். பிரிவாற்றாமையால் கைவலை சுழலுமென்றும் கலவியின்பத்தால் மேனி தடித்து வளை பூரிக்குமென்றும் அநுபவமாதலால் “சுழல்வளை பூரிப்ப” எனப்பட்டது. பாட்டு முடிவிலுள்ள சுருள் என்பதை எழுவாயாகவைத்து, அருளானது யாம் கைதொழும்படியாக, கூடுங்கொலோ என்னவுமாம்.


    3330.   
    தொல் அருள் நல் வினையால்*  சொலக் கூடுங்கொல் தோழிமீர்காள்* 
    தொல் அருள் மண்ணும் விண்ணும்*  தொழ நின்ற திருநகரம்* 
    நல் அருள் ஆயிரவர்*  நலன் ஏந்தும் திருவல்லவாழ்* 
    நல் அருள் நம் பெருமான்*  நாராயணன் நாமங்களே?*   

        விளக்கம்  


    • (தொல்லருள்.) பரவ்யூஹ் விபவ அந்தர்யாமி அர்ச்சாவதாரங்களென்ற ஐந்தினுள் அர்ச்சாவதாரமே அருள்மிக்க இடமென்பது ப்ரஸித்தம். பரவ்வூஹங்கள் தேசவிபரகர்ஷத்தாலே உபயோகமற்றவை; அந்தர்யாமித்வம் அதிகாரியருமையாலே பயனற்றது. அர்ச்சாவதாரம் அப்படியன்றிக்கே “பின்னானார் வணங்குமிடமாய் அருளே வடிவெடுத்ததாகவும் “தொல்லருள் மண்ணும் விண்ணும் தொழநின்ற திருநகரம்” என்றார். உபயவிபூதியிலுள்ளாரும் தொல்லருளை அநுபவிக்குமிடம் என்றபடி. இவ்விசேஷணம் இங்குத் திருவல்லவாழ்க்கு இடப்பட்டிருந்தாலும் அர்ச்சாவதார ஸரமாநியத்திலே அந்வயிக்கக்கூடிய விசேஷணம் இது. அன்றியே, மண்ணிலீது போலுநகரில்லையென வானவர்கள் தாம் மலர்கள் தூய் நண்ணியுறைகின்ற நகர் சந்திபுரவிண்ணகரம் என்னுமாபோலே இவ்விடத்திற்கென்று விசேஷித்துக்கொண்டாடும் அருளைச் சொன்னதாகவும். நல்லகுளாயிரவர் நலனேந்தும் = எம்பெருமானைக் காட்டிலும் அருள்மிக்கவரான ஆயிர மந்தணாளர்கள் மங்களாசாஸநம் பண்ணிக்கொண்டு வாழுமிடமென்கை. இப்படிப்பட்ட திருவல்லவாழிலே நல்ல அருளையுடையனாய் நமக்கு ஸ்வாமியாயிருக்குமவனுடைய திருநாமங்களையாவது, தோழிகளே! அவனுடைய கருணையாகிற ஸுக்ருதவிசேஷத்தாலே நாம் சொல்லி வாழக்கூடுமோ வென்றாளாயிற்று. நல னேத்தும் என்கிற பாடமுமுண்டென்பர்.


    3331.   
    நாமங்கள் ஆயிரம் உடைய*  நம் பெருமான் அடிமேல்* 
    சேமம் கொள் தென் குருகூர்ச்*  சடகோபன் தெரிந்து உரைத்த* 
    நாமங்கள் ஆயிரத்துள்*  இவை பத்தும் திருவல்லவாழ்* 
    சேமம் கொள் தென் நகர்மேல்*  செப்புவார் சிறந்தார் பிறந்தே*    

        விளக்கம்  


    • (நாமங்களாயிரம்.) இத்திருவாய்மொழியை ஓதவல்லவர்கள் ஸம்ஸாரிகளாயிருக்கச் செய்தேயும் மற்றையோர்களிற் நாட்டில் சிறப்புப் பெற்றாராவர் என்று பயனுரைத்துத் தலைக்கட்டுகிறார். திருக்கல்யாண குணங்களுக்கும் திவ்ய சரித்திரங்களுக்கும் வாசகமான ஆயிரம் திருநாமங்களையுடைய ஸர்வேச்வரன் திருடிகளிலேயே தம்முடைய க்ஷேமபாரங்களை யெல்லாம் வைத்தவரான ஆழ்வார் அருளிச்செய்ததாய், அந்தஸஹஸ்ரநாமம் போலவே பகவத்குண விபூதிகளை ஒழுங்குபடத் தெரிவிக்குமதான இவ்வாயிரத்தினுள் இவை பத்தையும் திருவல்ல வாழ் விஷயமாகச் சொல்லவல்லவர்கள் சரீரஸம்பந்தத்தோதே யிருந்து வைத்தும் பகவதநுபவமாகிய சிறப்பையுடையவர் என்றதாயிற்று. சேமம்- ஷேம மென்ற வடசொல் விகாரம்