திருக்காட்கரை

தலபுராணம்: திருக்காட்கரை காட்கரையப்பன் கோயில் கேரள மாநிலம் எர்ணாகுளம்(கொச்சின்) மாவட்டத்தில் திருக்காட்கரை(ஆங்கிலம்:Thrikkakara) என்கிற ஊரில் அமைந்துள்ள ஒரு வைணவக்கோயில். இது வைணவர்களுக்கு முக்கியமான வைணவத்திருத்தலங்களான 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். கடவுள் மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களில் ஒன்றான வாமன அவதாரமான வாமனமூர்த்திக்கு அமைந்துள்ள மிகச்சில கோயில்களில் இதுவும் ஒன்றாகும். கோயில் வட்டவடிவ கேரள பாணியில் அமைந்துள்ளது. கோயில் பரசுராமரால் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. தல வரலாறு: அரக்க மன்னனான மகாபலி சக்கரவர்த்தியை மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்து நிலத்தில் அழுத்தி அழித்த இடம் இந்த தலம் ஆகும்.

அமைவிடம்

பெயர்: காட்கரையப்பன் கோயில்,
வாமனமூர்த்தி கோயில் அமைவிடம் நாடு: இந்தியா மாநிலம்: கேரளா மாவட்டம்: எர்ணாகுளம் அமைவு: திருக்காட்கரை,

தாயார் : ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி
மூலவர் : காட்கரையப்பன்
உட்சவர்: --
மண்டலம் : மலை நாடு
இடம் : கோட்டயம்
கடவுளர்கள்: வாமனா,ஸ்ரீ பெருஞ்செல்வ நாயகி


திவ்யதேச பாசுரங்கள்

  3615.   
  'இதுவோ பொருத்தம்? மின்ஆழிப்  படையாய்!* ஏறும் இரும்சிறைப்புள்* 
  அதுவே கொடியா உயர்த்தானே!'*  என்றுஎன்று ஏங்கி அழுதக்கால்*
  எதுவேயாகக் கருதுங்கொல்*  இம்மாஞாலம் பொறைதீர்ப்பான்* 
  மதுவார் சோலை*  உத்தர  மதுரைப் பிறந்த மாயனே?  

      விளக்கம்  


  • உரை:1

   ஆண்டாள் சொன்னதையே தான் இவரும் சொல்கிறார். மதுவார் சோலை உத்தர மதுரைப் பிறந்த மாயனே. தேன் சிந்தும் சோலைகள் நிறைந்த வடமதுரையில் பிறந்த மாயனே. 'ஆகா! சோலை என்று எவ்வளவு அழகாகச் சொல்லிவிட்டார்?! இவரும் தென் தமிழகத்தைச் சேர்ந்தவர் தான். தாமிரபரணிக் கரையில் இருக்கும் திருக்குருகூராம் ஆழ்வார் திருநகரியில் பிறந்து வாழ்ந்தவர் தான். இவருக்கும் தமிழக மதுரை வடக்கில் இருப்பது தான். அதனால் தான் உத்தர மதுரை என்றார். அது மட்டும் இல்லாமல் கோதை 'மாயனை' என்று தொடங்கியது போல் இவரும் 'மாயனே' என்கிறார். எல்லாவற்றிற்கும் மேலாக திருமாலிருஞ்சோலை தான் உத்தர மதுரை என்பதைக் காட்ட மதுவார் சோலை என்றும் சொல்லியிருக்கிறார். இவ்வளவு தெளிவாக ஆழ்வாரின் திருவுள்ளம் தெரியும் போது நேர்மையாக அதனை ஏற்றுக் கொள்ள வேண்டியது தானே. நேர்மையை உள்ளத்தே கொள்வோம்' என்று சொல்லத் தோன்றுகிறதல்லவா. ஐயோ பாவம். 'பிறந்த' என்ற சொல்லை இட்டுக் கெடுத்தாரே. திருமாலிருஞ்சோலையில் மாயன் பிறந்ததாக எந்த புராணமும் சொல்லவில்லையே. தமிழக மதுரையில் பிறந்ததாகவும் சொல்லவில்லையே. அப்படியென்றால் ஆழ்வார் திருவுள்ளம் உண்மையில் வடக்கே யமுனைக்கரையில் இருக்கும் மதுரையில் பிறந்தவன் தான் மாயன் என்பதைச் சொல்வதாகத் தானே தெரிகிறது. அந்த உத்தர மதுரையைத் தானே மதுவார் சோலை உடைய மதுரை என்கிறார். இந்தப் பாசுரமும் 'வடமதுரை மைந்தன்' என்றால் 'உத்தர மதுரையில் பிறந்தவன்' என்ற பொருளைத் தான் சொல்கிறது.

   உரை:2

   ஒருவர் தப்பாமல் எல்லாருடைய ஆர்த்திகளையும் போக்கி ரக்ஷித்தருளுகைக்காக வடமதுரையிலே வந்து திருவ்வதாரம் பண்ணியருளின ஆச்சர்ய குணசாலியான கண்ணபிரான், தன்னைக் காணவாசைப்பட்டு நோவுபடுகிற வென்திறத்திலே என்ன செய்வதாக நினைத்திருக்கிறானோ வென்று தம்முடைய ஸ்ருதயத்துக்குள்ளே தாம் சிந்திக்கிறபடியை வெளியிடுவது இப்பாட்டு. கீழ்ப்பாட்டில் பஞ்சபாண்டவர்களுக்கு உதவினபடியைச் சொல்லிக் கூப்பிட்டார், அவர்களுக்கு உதவினபடி கிடக்கட்டும், திருவாழியாழ்வான் பெரிய திருவடி முதலானாரோடு கலந்து பழகுகிற பொருத்தமும் இவ்வளவேயோ என்கிறார் என்னவுமாம். இதுவோ பொருத்தம் – இப்படி கூப்பிடச் செய்தேயும் வரக் காணாமையாலே கண்ணாஞ் சுழலையிட்டு மீண்டும் “இதுவோ பொருத்தம்“ என்கிறார். மின்னாழிப்படையாய்! மேகத்திலே மின்னல் மின்னினாப்போலே மின்னாநின்ற திருவாழிப்படையை யுடையவனே யென்றது – அத்திருவாழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்கும்படி. அத் திருவாய் மொழியாழ்வானோடு பொருந்தி வர்த்திப்பதும் என்னோடு பொருந்தியிருக்குமளவோயோ? என்கிறாராகவுமாம். ஏறுமிருஞ் சிறைப்புள்ளதுவே கொடியாவுமர்த்தானே! – நீ வந்து சேர நினைத்தால் அருமையுண்டோ? ஒரு நொடிப்பொழுதில் கொண்டு சேர்க்கவல்ல பரிகரமில்லையோ என்றவாறு. * தாஸஸ் ஸகா வாஹநமாஸநம் த்வஜோ யஸ் தே விதாநம் வ்யஜநம் * என்று ஸ்தோத்ராத்னத்தி லருளிச் செய்தபடியே பெரிய திருவடிபக்கலில் வல வகையடிமைகளையுங் கொள்வதாகச் சொல்லப்படுவதும் இப்படிதானோ? என்னோடு எவ்வளவு பொருத்தமோ அவ்வளவு பொருத்தந்தானோ அவனோடும்? என்று கேட்கிறபடியாகவுமாம். என்றென்றேங்கி யழுதக்கால் எதுவேயாகக் கருதுங்கொல் – இப்படிச் சொல்லிச் சொல்லிப் பொருமியழுதால் இக்கூப்பீட்டுக்கு முகங்காட்ட நினைக்கிறானோ? இப்படியே கூப்பிட்டுக் கொண்டு கிடக்கட்டு மென்றிருக்கிறானோ? (இம்மாஞாலம் இத்யாதி) மண்ணின் பாரம் நீக்குதல் என்றொரு வியாஜமிட்டு இங்கேவந்து பிறந்து ஸாதுபரித்ராணம் பண்ணிப் போருகிறவன் நம்கூப்பீட்டுக்கு என்ன நினைத்திருக்கிறானோ வென்கிறார். மாயனே! என்றவிடத்து ஏகாரம் விளியுருபன்று, ஈற்றகை.


  3728.   
  உருகுமால் நெஞ்சம்*  உயிரின் பரமன்றி* 
  பெருகுமால் வேட்கையும்*  என்செய்கேன் தொண்டனேன்*
  தெருவுஎல்லாம் காவிகமழ்*  திருக்காட்கரை*  
  மருவிய மாயன்தன்*  மாயம் நினைதொறே.   (2)

      விளக்கம்  


  • பரிமாற்றங்களை நினைக்கும் போதெல்லாம் நெஞ்சு நீர்ப்பண்டமாகின்றதே யென்கிறார். நெஞ்சம் உருகுமால்=அநுபவத் திற்கு முதன்மையான சருவி நெஞ்சன்றோ: அதுவாயிற்று சிதிலமாகின்றது. அநுபவிக்கைக்கும் அநுபவித்துக் களிக்கைக்கும் முந்துறுமுன்னம் நெஞ்சுவேணுமே; அது சிதில்மா யொழிந்தால் என்ன வுண்டு? பெருக்காற்றிலே நீஞ்சப் புகுந்தவனுக்கு முதலடியிலேயே தெப்பம் ஒழுகத் தொடங்கினால் என்செய்வது? ப்ரதாநோபசுரணமான நெஞ்சு அழிகின்றதே வேட்கையும் உயிரின் பரமன்றிப் பெருகுமால்–ஆத்மாவால் தாங்க வொண்ணாதபடி அபிநிவேசம் பெருகுகின்றதே. ஆற்றுப் பெருக்குப்போலே மேன்மேலும் பெருகி வருகின்ற காதல் அணுபரிமாணமான ஆத்ம வஸ்துவின் அளவதன்றே! அடிதோறும் ஆல்! அல்! என்று விஷாதஸீசனம். என் செய்கேன் தோண்டனேன்! = நெஞ்சு உருகாதபடி செய்யவும் வேட்கை பெருகாதபடி செய்யவும் ஒரு பாயமறி கின்றிலேன். அவனுடைய திருக்குணங்களைத் தவித்தாலன்றோ இவை செய்யலாவது. நெஞ்சு உருகைக்கும் வேட்கை பெருகுகைக்கும் ஹேது சொல்லுகிறது மேல் தெருவெல்லாங் காவிகமழென்று தொடங்கி, குறுந்தெருவோடு நெடுந் தெருவோடு வாசியற எங்கும் நெங்கழுநீரின் நறுமணம் கமழப்பெற்றது திருக்காட்கரை வெளியே இப்பரிமளமானால் உள்ளே *ஸர்வகந்தா* என்னும்படியானவனுடைய பரிமளம் ஸாசாமகோசரம். அவனோ மாயன்–ஸெளந்தர்யம் ஸெளசீல்யம் முதலிய குணங்களினால் பிறரைப் பிச்சேற்றவல்லவன். அப்படிப் பட்டவனுடைய மாயம்–கிட்டடினபோது தாழநின்று பரிமாறின சீல குணம்; அதனை நிதொறும் உருகுமால் நெஞ்சம்–என்று முதலடியோடே அந்வயிப்பது.


  3729.   
  நினைதொறும் சொல்லும்தொறும்*  நெஞ்சு இடிந்துஉகும்* 
  வினைகொள்சீர் பாடிலும்*  வேம்எனதுஆர்உயிர்*
  சுனைகொள் பூஞ்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பா* 
  நினைகிலேன் நான்உனக்கு*  ஆட்செய்யும் நீர்மையே.   

      விளக்கம்  


  • திருக்காட்கரை யெம்பெருமானை நோக்கி 'உன்னோடு நான் கலந்து பரிமாறின பரிமாற்றத்தை நினைக்க சக்தனாகின்றிலேன்! ' என்கிறார். நினைதொறும் நெஞ்சு இடிந்து உகும் = குண சேஷ்டிதங்களை நினைப்பதாகத் தொடங்கினால் அந்நினைவு மாறாதே செல்ல முடியாதபடி. பலஹானி மிகும். ஆனாலும் மறக்கமாட்டார்; மறுபடியும் நினைக்கத் தொடங்குவர். அந்த நினைவும் நெடுகச் சென்று தலைக்கட்டாது. இப்படி எத்தனை காலம் நினைக்கப் புக்கது! எத்தனை காலம் மீண்டது! இது தோன் நினைதொறும் என்கிறார். (சொல்லுந்தொறும்) நெஞ்சால் நினைக்கவே முடியாத விஷயம் வாயாற் சொல்லவொண்ணா தென்பது சொல்லவேணுமோ? மநஸ் ஸஹகாரமின்றிக்கே யிருந்தாலும் அஹருதயமாகவே சொல்லிக் கொண்டிருப்பரே ஆழ்வார். (இவர் பேசுகிறாரல்லர்; இவருடைய வாக்கும் பேசிக் கொண்டே யிருக்குமென்க). அப்படி பேசும்போது அப்பேச்சு செவி வழியாலே உள்ளே புகுந்து ஊற்றிருந்து குணாதிக விஷயமாகையாலே நெஞ்சையழிக்கும்; நெஞ்சு இடிந்து உகும்–நெஞ்சகட்டுக் குலைந்து நீராகா நின்றது. இங்கே ஊடு–நெருக்காற்றின் கரையிடிந்து பின் நீராய்க் கரைந்து போமாபோலே ஓரவயவியாகக்காண வொண்ணாதபடி உக்குப் போகா நின்றது. வினைகொள் சீர்பாடிலும் வேம் எனதாருயிர்='விணைகொள்' என்பதற்கு இரண்டு படியாகப் பொருள் கொள்வர்; வினையென்று தீவினைகளைச் சொல்லிற்றாகக் கொண்டு பாபமான கல்யாண குணமென்பது ஒருபொருள். வினையென்று பொதுவாகக் காரியத்தைச் சொல்லுகிற சொல்லாகையாலே எம்பெருமானுடைய சேஷ்டிதத்தைச் சொல்லுவதாக இங்குக் கொள்ளலாம். குண ஸாமந்யபரமான சீர் என்னுஞ்சொல் இங்கு சீல குணத்தைச் சொல்லுகிறது. சேஷ்டிதத்தைக் கொண்ட சீல குணமாவது–தாழ நின்று பரிமாறிக் காட்டின சீல குணம் என்பது மற்றொரு பொருள். அதைப் பாடினாலும் எனதாருயிர் வேம்–அதாஹயுமென்று கீதையில் சொல்லப்பட்ட அத்ம வஸ்துவும் தஹிக்கப்பட்டதாகிறது. எல்லாவற்றுக்கும் குளிர்ச்சியைப் பண்ணக் கடலதான பனி தாமரையை மாத்திர கருகப்பண்ணு மாபோலே ஸகலர்க்கும் ஆர்த்தி ஹரமான குணங்கள் எனக்கு ஆர்த்தியை விளைவிக்கின்றன என்றாராயிற்று. ஆகவே நினைகிலேன் நானுனக்காட் செய்யும் நீர்மை–நீ என்னிடம் தாழ நின்று ஆட்செய்து காட்டின சீல குணத்தை நெஞ்சாலும் நினைக்கமாட்டுகின்றிலேன் என்றபடி. நீயெனக்காட் செய்யும் நீர்மை யென்ன வேண்டு மிடத்து 'நானுனக்காட் செய்யும் நீர்மையென்றது எம்பெருமானுடைய உக்தியின் அநுகாரமிருக்கிறபடி. எம்பெருமானே ! நீ என்னிடம் தாழ நின்று 'நான் உமக்கு ஆட்செய்கிறேன்காணும்' என்று சொல்லுகிறாயே! இந்தச் சொல்லும் மருமத்தைப் பிளக்கின்றதே ! என்றாராயிற்று.


  3730.   
  நீர்மையால் நெஞ்சம்*  வஞ்சித்துப் புகுந்து*  என்னை 
  ஈர்மைசெய்து*  என்உயிர்ஆய் என்உயிர் உண்டான்* 
  சீர்மல்குசோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
  கார்முகில் வண்ணன்தன்*  கள்வம் அறிகிலேன்.

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டின் ஈற்றடிக்கு வியாக்கியானமாயிருக்கிறது இப்பாட்டெல்லாம். அடிமை கொளுவதாக ஒரு வியாஜமிட்டு உள்ளே புகுந்து தன் படிகளைக் காட்டி ஸர்வஸ்வாப ஹாரம் பண்ணின வாற்றை அந்தோ! நினைக்க மாட்டிற்றிலேனென்கிறார். " வஞ்சித்து நெஞ்சம் புகுந்து என்னை நீர்மையால் ஈர்மை செய்து" என்று அந்வயித்துப் பொருள் கொள்வது சுவைமிக்கது. வஞ்சித்து நெஞ்சம் புகுகையாவது–தான் சேஷியும் நான் சேஷனுமான முறை தவறாது பரிமாறுவதாகவே சொல்லி நெஞ்சை இசையப் பண்ணிப் புருகை முறை கேடாகப் பரிமாறப் போகிறேனென்று முன்னமே சொன்னால் இவர்தான் இசைய மாட்டாரென்று எண்ணி முறை கெடாது பரிமாறுவதாகப் பொய் சொல்லி உள்ளே புகுந்தானாயிற்று. புகுந்தபின் நிர்மையைக் காட்டத் தொடங்கினான். அதாவது, தான் தாழ நின்று பரிமாறத் தொடங்கினானென்கை. அதனால் நெஞ்சை யீடுபடுத்தினானாயிற்று. ஈர்மை செய்து என்றது ஈருந்தன்மைகளைச் செய்து என்றபடி; இருபிளவாக்கி, ஈடுபடுத்தியென்க. நீராம்படி பண்ணி யென்பது பரமதாற்பரியம். என்னுயிராயென்னுயிருண்டான்–எனக்குத் தாரகரைப் போலே புகுந்து என்னையழித்தாரென்கை. எனக்குத் தன்னாலல்லது செல்லாதபடி பண்ணி என்னைப் புஜிப்பதுஞ் செய்தான் என்றுமாம். இப்படிச் செய்தவன் யாவனென்ன; சீர்மல்கு சோலைத் தென்காட்கரையென்னப்பன் கார்முகில் வண்ணன்=என்னோடு கலந்து என்னுடைய நீர்மையையும் கொள்ளை கொண்டதனால் கடலைக் கழுத்தளவாகப் பருகின காளமேகம்போலே புகர்படைத்து விளங்குகின்ற திருக்காட்கரையப்பன். அவனுடைய கள்வமறிகிலேன்= ஸர்வஸ்மாத்மரனானவன் இங்ஙனே தாழநின்று பரிமாறுகை அஸம்பாவிதம்; நான் மருண்டு பேசுகிறேனோ! என்கிறார்.


  3731.   
  அறிகிலேன் தன்னுள்*  அனைத்துஉலகும் நிற்க* 
  நெறிமையால் தானும்*  அவற்றுள் நிற்கும் பிரான்*
  வெறிகமழ்சோலைத்*  தென்காட்கரை என்அப்பன்* 
  சிறியவென்னாயிருண்ட திருஅருளே.

      விளக்கம்  


  • தான் சேஷியாயும் ஜகத்தெல்லாம் சேஷபூதமாயும் முறைதப்பாமல் எல்லாரோடுங் கலக்கிறவன் நீசனேன் நிறையொன்றுமிலேனென்ன நின்ற அதிக்ஷுத்ரனான என் பக்கவிலே காட்டும் வியோமோஹம் இன்னதென்று என்னால் சொல்ல முடிகிறதில்லையே யென்று தடுமாறுகிறார். "சிறிய வென்னாயிருண்ட திருவருளை அறிகிலேன்" என்று அந்வயித்துப் பொருள் அந்வயிப்பது மொருபுடையுண்டு; "உகப்பாலே செய்தானோ? இவ்வஸ்துவை யழிக்கைக்குச் செய்தானோ? அறிகிறிலேன்" என்பர் நம்பிள்ளை. இப்படி விலைமுற்றைத் தனியே அந்வயித்து விட்டால் "சிறிய வென்னாயிருண்ட திருவருளே" என்றதற்கு வினை முற்று ஏது? என்னில் ; வினைமுற்று வேண்டாவே ; திருவருளே ! என்று ஈடுபாடாக முடிகிறபடி. தன்னுள் அனைத்துலகும் நிற்க தானும் நெறியாமையால் அவற்றுள் நிற்கும் பிரான்=உலகங்களெல்லாம் தன்னுடைய ஸங்கல்பத்தைப் பற்றிக்கிடக்க, தான் அவற்றினுள்ளேதன் சேஷித்வமுறை தப்பாதபடி நிற்குமவன். இப்படிப்பட்டவன் வெறிகமழ் சோலைத் தென்காட்கரை யென்னப்பனாயிருந்து கொண்டு சிறியேனான என்றுடைய நசீவளைக் கபளீகரித்த விரமோஹம் என்னே!


  3732.   
  திருவருள் செய்பவன்போல*  என்னுள்புகுந்து* 
  உருவமும் ஆருயிரும்*  உடனே உண்டான்*
  திருவளர்சோலைத்*  தென்காட்கரைஎன்அப்பன்* 
  கருவளர்மேனி*  என்கண்ணன் கள்வங்களே.

      விளக்கம்  


  • எம்பெருமான் என்னை யடிமை கொள்வான்போலே புகுந்து என் சரீரத்தையும் ஆத்மாவையும் ஒக்க புஜியா நின்றானே! இது என்ன வியாமோஹம்! என்று விபக்கிறார். திருவருள் செய்பவன்போல என்னுள் புகுந்து–அடிமை கொள்ளுகையையே திருவருள் செய்கையாக ஆழ்வார் திருவுள்ளம் பற்றியிருப்பது. என்னிடத்தில் கைங்கர்ய வ்ருத்தி கொள்ளுகையாகிற திருவருளைச் செய்பவன்போல உள்ளே புகுந்து அருளைத்தான் செய்கை யன்றிக்கே தான் பெற்றானாயிரா நின்றான். *வழுவிலாவடிமை செய்ய வேண்டும் நாம் * என்று நான் பார்த்தவத்தனை;அவன் இங்ஙனே பாரித்துப் பேறு தலைக்கட்டப் பெற்றான். அதாவதென்னென்னில் ; [உருவமும் ஆருயிரும் உடனே யுண்டான்] திருவிருத்த முதற் பாட்டிலே அழுக்குடம்பு " என்று தாம் வெறுத்ததை அவன் விரும்பப் புகுந்தான். இங்கே நம்பிள்ளை வீடு வியக்கத் தக்கது; – "அவனங்கீகாரத்துக்கு முன்பு இவர் தேஹத்தையே விரும்பிப் போந்தார்; அவன் இவரை யங்கீகரித்த பின்பு இவர் தன் தேஹத்தை வெறுக்க அவன் இவருடைய தேஹத்தை விரும்பபப் புக்கான் ; இவர்க்கு அவனோட்டை ஸஹவுஸம் ஸ்வரூப ஜ்ஞானத்துக்கு உடலாய்த்து ; அவனுக் கு இவரோட்டை ஸஹவாஸம் தேஹாத்மாபிமாநத்துக்கு உடாய்து " என்று. ஆருயிரும் உடனே யுண்டானென்கையாலே–தேஹமென்று ஹேயதாபுத்தியும் ஆத்மாவென்று உபாதேயதாபுத்தியு மில்லாமல் இரண்டிலும் தூல்யமான ப்ரதிபத்யையே கொண்டான்பது விளங்கும்


  3733.   
  என்கண்ணன் கள்வம்*  எனக்குச் செம்மாய்நிற்கும்* 
  அம்கண்ணன் உண்ட*  என்ஆர்உயிர்க்கோதுஇது*
  புன்கண்மை எய்தி*  புலம்பி இராப்பகல்* 
  என்கண்ணன் என்று*  அவன்காட்கரைஏத்துமே 

      விளக்கம்  


  • ஒருவனைக் கள்ளனென்றறிந்தால் அவனுடைய ஸஹவாஸத்தை விட்டுவிலகுதல் போல, எம்பெருமானுடைய வஞ்சகங்களை யறிந்த நீர் அவனைவிட்டு அகல வேண்டாவோ னென்ன என் செய்வேன்? அவனைக் கண்டவாறே அவனது வஞ்சனைகளை மெய்யென்று கொள்ளும்படி நேர்ந்து விடுகிறதே யென்கிறார். என் கண்ணன் கள்வம் எனக்குச் செம்மாய் நிற்கும்–என்னோடு கலக்கிறபோது எனக்கே அற்றுத் தீர்ந்தவனாகக் காணப்படுகின்ற அவனுடைய வஞ்சனங்களானவை எனக்கு ருஜீவாயே தோற்றுநின்றன. ஒருநாள் அவன் களவிலே யகப்பட்டால் பின்னை மீளமாட்டேன்; அவன் முகத்திலே விழித்தவாறே அவன் செய்யுமவையெல்லாம் மெய்யாகவே தோற்று மெனக்கு. "எனக்குச் செம்மாய் நிற்குமேன்றத்தை எனக்குச் சேமமாயிருக்கு மென்று ஒரு தமிழன் நிர்வஹித்தான்" என்பது ஈடு. கீழ்ப்பாட்டின் முடிவு 'நங்கண்ணன் கள்வங்களே' என்றிருக்கையாலே இப்பாட்டின் தொடக்கமும் அந்தாதித் தொடைக்குச் சேர அப்படியே யிருக்க வேண்டாவோ வென்று சங்கித்து அதனால் குறையொன்றுமில்லை : பொருளிசை யந்தாதியியிருக்கும்–என்று ஒரு ஸமாதான மருளிச் செய்து, இரண்டிடங்களிலும் ஒரே பாடமாகவுமாம் என்றுமருளிச் செய்வர் நம்பிள்ளை. என் ஆருயிர் அங்கண்ணனுண்ட கோது–இந்த என் ஆத்மாவானது வ்யாமோஹத்தினெல்லையிலே நின்ற அவனால் புஜிக்கப்பட்டு நிஸ்ஸாரமாயிற்று என்றபடி. அங்கண்ணன் என்றதற்கு அதிசபலன் என்று பொருள். "அதிப்ரவணரை அங்கண்ணர் என்னக் கடவதிறே" என்றபர் நம்பிள்ளை. இப்படி என்னாருயிர் கோதாய்ப்போனாலும் "உள்ளம் புகுந்து என்னை கைவித்து நாளுமுயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்" என்று ஆண்டாளருளிச் செய்த கணக்கிலே பன்னையும் உயிர்க்குச் சிறிது ஸாரங்கொடுத்துப் பரிமாறத் தொடங்கவே, புன்கண்மையெய்தி–தைந்யத்தை யடைந்ததாயிற்று இவ்வாத்மா. அதனாலே, என் கண்ணனென்று இராப்பகல் புலம்பி அவன் காட்கரை யேத்தும்–முன்பு எனக்கு விதேயனாயிருத்வனென்று சொல்லி இரவும் பகலும் கூப்பிட்டு அவனுறையுமிடமான திருக்காட்கரைத் திருப்பதியைக் கொண்டாடா நின்றது. பசித்தவன் பழங்கணக்குப் பார்க்கிற ரீதிபோலும்.


  3734.   
  காட்கரைஏத்தும்*  அதனுள் கண்ணாஎன்னும்* 
  வேட்கை நோய்கூர*  நினைந்து கரைந்துகும்*
  ஆட்கொள் வான்ஒத்து*  என்னுயிருண்ட மாயனால்* 
  கோள்குறைபட்டது*  என்னாருயிர் கோள்உண்டே.

      விளக்கம்  


  • என்னை யடிமை கொள்வாரைப்போலே வந்து புகுந்து என்னுயிரை மானப்புஜித்து, பின்னையும் புஜியாதான் போலே கிடந்து படாநின்றானென்கிறார். காட்கரையேத்தும்–அவனைக் காட்டிலும் அவனிருக்குமூரிலே ஆசை மிகுந்த அவ்வூரையே யேத்தா நின்றது என்னாருயிர். ஊருக்கு அவனாலே யேற்றமாய், அவனுக்கு ஊராலே யேற்றமா யிருக்கையாலே ஊரையுஞ் சொல்லி அவனையுஞ் சொல்ல வேண்டி யிருத்தலால் அதனுள் கண்ணாவென்னும்–திருக்காட்கரைப் பெருமானே! என்று அவ்வூரின் ஸம்பந்தத்தை விட்டு அவனையுமேத்தாநின்றது. பரமபதநாதனென்றால் ஏற்றமில்லையே; அவ்விடத்திலும் இவ்விடத்தில் வாஸத்தாலே ஏற்றம் பெறுவோமென்று வந்து இங்கே நின்று ஏற்றம் பெற்றனனாதலால். வேட்கை நோய் கூர நினைந்து உகும். அவ்வூரையும் அவ்வூர்ப் பெருமானையும், நினைத்த மாத்திரத்திலேயே காதல் நோய் அதிகரிக்கும்; அதனால் த்ரவீபாவமும் சைதில்யமும்ம விளையும். இப்படியெல்லாமாகைக்கு அடியேதென்னில்; பின்னடிகளால் அது சொல்லுகிறது. "கீழ் திருவருள் என்று மறைத்துச் சொன்னதை வெளியிடுகிறார்" என்பர் நம்பிள்ளை. அடிமை கொள்வாரைப் போலே புகுந்து என்னை சூன்யமாக்கின ஆச்சர்ய பூதனாலே என்னாருயிர் கோளுண்டே கோள் குறைபட்டது–என்னாத்மா நிசேஷமாக புஜிக்கப்படா நிற்கச் செய்தேயும் இத்தலையிலே சிறிது சேஷித்தது. இங்ஙனே சொல்லுகைக்குக் கருத்தென்? என்னில் ; இன்னமுமிருந்து கிலேசப்படக் காண்கையாலே சிறிது சேஷமிருந்தாக வேண்டுமே; அது கொண்டு சொல்லுகிறது.


  3735.   
  கோள்உண்டான் அன்றிவந்து*  என்உயிர் தான்உண்டான்* 
  நாளும்நாள்வந்து*  என்னை முற்றவும் தான்உண்டான்*
  காளநீர்மேகத்*  தென்காட்கரை என்அப்பற்கு* 
  ஆள்அன்றேபட்டது*  என்ஆர்உயிர் பட்டதே. 

      விளக்கம்  


  • "எப்பொழுதும் நாள் திங்களாண்டுழி யூழிதொறும் அப்பொழுதைக்கப் பொழுதென்னாராவமுதமே" என்னும்படி, நித்யா பூர்வமாயிருக்கிறாப்போலே எம்பபெருமான்றனக்கும் ஆழ்வாருடைய அநுபவம் நித்யாபூர்மாயிருக்கும்படி சொல்லுகிறது இப்பாட்டில். நாள்தோறும் என்னை புஜியாநின்றாலும் பெறாப் பேறு பெற்றாப்போலே வந்து புஜியாநின்ற இப்பெருமானுடைய குணத்தை என்னென்பேன்! என்கிறார். முதலடிக்கு மூன்று வகையாகப் பொருளருளிச் செய்வர்; [கோளுண்டானன்றி வந்து என்னுயிர் தானுண்டான்] (1) என்னிடத்தில் ஓர் உபகாரமுங் கொள்ளாமலே நிர்ஹேதுமாக என் ஆத்ம வஸ்துவை யநுபவித்தான். (2) இதற்கு முன்பு இப்படிப்பட்டதொரு சரக்குக் கொண்டறியாதவன்போல் என் பக்கலிலே அபிநிவேகங் கொண்டான் (3) என்னாலே தான் கொள்ளப்படா திருக்க, தான் என்னைக் கைக் கொண்டான். இம்மூன்றும் ஒன்றுக் கொன்று வாசியின்றியே மிகச் சிறக்கும். இவற்றுள் முதற்பொருளும் மூன்றாம் பொருளும் தாற்பரியத்தில் விசேஷ பேதமின்றி யிருந்தாலும் சப்தார்த்தம் கொள்ளும் வகையில் வாசி பெற்றிருக்கும். நாளுநாள் வந்து=ஒருநாள் புஜித்து 'இது நாம் புஜித்ததேயன்றோ' என்று பழமை தோன்றி அருசியோடிருப்பானல்லன். "அவனுடைய அப்பொழுதைக்கப்பொழுதென்னாராவமுதமிருக்கும்படி" என்பர் ; நம்பிள்ளை. என்னை முற்றவுந் தானுண்டான்=என்னை என்பது அஹமர்த்தமான ஆத்மவஸ்துவைத்தானே; அது அணுபரிமாண மாயன்றோ விருப்பது; முற்றவும் என்று சொல்லுவதற்கு விஷயமில்லையே யென்று சங்கித்துக் கொண்டு நம்பிள்ளையருளிச் செய்வது காணீர்– "அணுபரிமாணமான இவ்வஸ்துவை விபுவான தான் விளாக்குலை கொண்டு அநுபவித்தானென்கிற விது தனக்கு ஏற்ற மாம்படி கௌரவியா நின்றான்" என்று. இந் ஸ்ரீஸூக்திகளின் வரமதாற்பரிம் யாதெனில்; ஆழ்வாருடைய ஆத்மவஸ்து அணுவாயிருந்தாலுங்கூட அளவு கடந்த பாரிப்புக் கொண்ட ஸர்வேச்வரன் அநுபவிக்குமிடத்து இவ்வணுவஸ்துவையும் பெரியதாக்கிக் கொண்டு அநுபவிப்பதாக ஆழ்வாருடைய திருவுள்ளம் என்பதாம். இதற்கு ஒருதாஹரணம் காட்டலாம்; கண்ணபிரான் விதுரர் திரு மாளிக் கெழுந்தருளின போது விதுரர் கண்ணனுக்கு அன்ன மிட்டரென்பதைச் சொன்ன முனிவர் "விதுர: அந்நமுபாஹரத்" என்றார் ; அந்த அன்னத்தைக் கண்ணனமுது செய்ததைச் சொல்லுமிடத்து அந்த முனிவர்தானே "விதுராந்நாநி புபுஜே சசீநி குணவந்தி ச" என்றார். விதுரரிட்ட அன்னத்தை ஏகவசனத்தாலே சொல்லி, கண்ண அமுது செய்த அந்த அன்னத்தையே பஹீவாசகத்தாலே நிர்தேசித்திருப்பதில் ஒரு விசேஷார்த்தம் தோன்றுமே; அதுவே யீண்டு நினைக்கத்தக்கது. இப்படி யென்னை யநுபவிப்பவனான திருக்காட்கரையப்பனுக்கு, ஆளன்றே பட்டது என்னாருயிர் பட்டதே–அடிமை புக்கதாக நினைத்திருப்தத்தனையே; ஆத்மா படும்பாடு வாசாமகோசரம் என்றபடி. எம்பெருமானோடு எதிரம்பு கோப்பவர்கள் உடம்மையிழப்பதோ, புண்பட்டதுக்கு மருந்து வைத்து ஆற்றுவதோ இத்தனையே செய்வது; உயிர் நோவுபடுவதென்பது அவர்களுக்கில்லை; இது ஆழ்வார்க்கே. அம்பு படுத்தும் பாட்டுக்கும் திருக்குணம் படுத்தும் பாட்டுக்கும் நெடுவாசியுண்டே.


  3736.   
  ஆருயிர் பட்டது*  எனதுஉயிர் பட்டது* 
  பேர்இதழ்த் தாமரைக்கண்*  கனிவாயதுஓர்*
  கார்எழில் மேகத்*  தென்காட்கரை கோயில்கொள், 
  சீர்எழில் நால்தடம்தோள்*  தெய்வ வாரிக்கே.

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் "ஆளன்றே பட்டது என்னாருயில் பட்டது" என்றார் ; எம்பெருமானுடைய திருக்குணங்களில் ஊடுபட்டவர்களான எல்லார்க்குமே இது ஸஹஜந்தானே ; உமக்கு மாத்திரம் அஸாதாரணமோ ! என்று சில் கேட்பதாகக் கொண்டு நான் பட்டது யாரும் பட்டிலரென்கிறாரிப்பாட்டில். எனுயிர் பட்டது ஆருயிர் பட்டது?=நான் பட்ட பாட்டை நித்யஸுரிகளிலேதான் பட்டாருண்டோ? குணுநுபவனே யாத்ரையான நித்யஸுரிகளும் இப்பாடு பட்டிலரே. "இங்கு எனதுயிர் பட்டது அங்கு ஆருயிர் பட்டது" என்று எம்பெருமானாரருளிச் செய்வாராம். ஆழ்வாருடைய உயிர்அழிந்தற்கு ஹேதுக்களைச் சொல்லுகிறது மேல்; [பேரிதழ்த் தாமரைக்கண் கணிவாயதோர்] திருக்கண்களும் திருவதரமும் படுத்தினபாடு [காரெழில்மேகத் தென்காட்கரை கோயில் கொள்] வடிவுபடுத்தின பாடும் கோயில் படுத்தின பாடும் [சீரெழில் நாற்றடந்தோள்] கற்பகக் காவன நற்பல தோள்கள் படுத்தின பாடு. தெய்வவாரி–எம்பெருமானுக்கு ஆழ்வாரிட்ட திருநாமங்களுள் இதுவுமொன்று; வாரி யென்னும் வட சொல் ஜலத்தைச் சொல்லுமதானாலும் ஜலநிதியான கடலைக் குறிக்குமிங்கு. தைவங்கள் படுங் கடல்; தைவங்களுக்கு உத்பாதகன்றபடி. "தெய்வவாரிக்கு எனதுயிர் பட்டது ஆருயிர் பட்டது" என்று அந்வயம்.


  3737.   
  வாரிக்கொண்டு*  உன்னைவிழுங்குவன் காணில்' என்று* 
  ஆர்வுஉற்ற என்னை ஒழிய*  என்னில் முன்னம்
  பாரித்துத்*  தான்என்னை*  முற்றப் பருகினான்* 
  கார்ஒக்கும்*  காட்கரைஅப்பன் கடியனே.  

      விளக்கம்  


  • திருவாய்மொழி யாயிரத்தினுள்ளும் இப்பாட்டு உயிரானதென்னலாம். ஈச்வர லாபம் சேதநர்களுக்குப் புருஷார்த்தமா? சேதநலாபம் ஈச்வரனுக்குப் புருஷாத்தமா? என்றொரு விசாரம் ஸம்ப்ரதாய ரஸிகர்கள் செய்வதுண்டு; சேதநலாபந்தான் ஈச்வரனுக்குப் புருஷார்த்தம் என்பதே ஸித்தாந்தம். எம்பெருமான் ஸ்ருஷ்டியவதாரதிமுகத்தாலே க்ருஷி பண்ணுவதெல்லாம் ஒரு சேதகன் நமக்குக் கிடைப்பனாலென்கிற நப்பாசையினாலன்றோ. கீதையிலே *ஸ மஹாத்மா ஸீதுர்லப * என்று கண்ணீர் பெருக நின்று சொல்லுகிற வார்த்தையன்றோ. *வாஸீதேவஸ் ஸர்வ மென்றிருக்கிற மஹாத்மா எனக்குக் கிடைக்க வில்லையே ! என்றன்றோ சொல்லுகிறான். பாடுப்டடத் தேடிப்பாத்தும் கிடையாமையாலே வருந்திச் சொல்லுகிற வார்த்தை இது என்று நன்கு தெரிகிறதன்றோ. எம்பெருமானார் ஸ்ரீபாஷ்யத்தில் *அநாவ்ருத்தி ஸீத்ர பாஷ்யத்தில் (அதாவது ஸ்ரீபாஷ்த்தின் முடிவில்) *நச பரமபுருஷஸ் ஸத்யஸங்கல்ப அத்யர்த்தப்ரியம் ஜ்ஞாநிநம் லப்த்வா சதாசித் ஆவர்த்தயிஷ்யதி * என்பதில் "ஜ்ஞாநிநம் லப்த்வா " என்கிற அற்புதமான ஸ்ரீஸூக்தியினால் இப்பரமாத்தத்தை ப்ரகாசிப் பித்தருளினார். இப்பரமாத்தந்தன்னை ஆழ்வார் ஸ்வாநுபவ முகத்தாலே இப்பாட்டில்தெளியவைத் தருளுகிறார். இப்பாட்டில் "என்னில் முன்னம் பாரித்துத் தானென்னை முற்றப் பருகினான் " என்றது ஸத்ஸம்ப்ரதாய ரஸிகர்களின் நெஞ்சை யுருக்கும் வார்த்தை. 'உன்னைக்காணில் வாரிக் கொண்டு விழுங்குவேன் ' என்று தாம் ஆசைப்பட்டிருந்தாகவும், தமக்கு முன்னே நெடுநாளாக எம்பெருமான் தம் விஷயத்தில் இங்ஙனே பாரித்திருந்து தன்னுடைய மனோரதமே தலைக்கட்டப் பெற்றான். என்றருளிச் செய்தவிதனால் ஸ்வகத ஸ்வீகாரத்திலுங்காட்டில் பரகத ஸ்வீகாரமே வலிதென்றும், அதுதான் முற்பட்டதாயிருந்து கார்யகரமாகின்ற தேன்றும் சொவிற்றாயிற்று. கீழ்ப்பாட்டுக்களில் "என்னுயிருண்ட மாயன் " என்றும், "என்னுயிர்தானுண்டான் "என்றும், "என்னைமுற்றவுந் தானுண்டான் " என்றும் எம்பெருமான் உண்டபடியைச் சொன்னார்; உண்டவனுக்குத் தண்ணீரும் அபேக்ஷிதமாயிருக்குமே ; தண்ணீர் குடித்தபடி சொல்லிற்று இப்பாட்டில் தானென்னை முற்றப் பருகினான் என்று இவருடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் அவன் அவனுடைய உண்ணுஞ்சோறு பருகுநீர் இவர்.


  3738.   
  கடியனாய்க் கஞ்சனைக்*  கொன்றபிரான் தன்னை* 
  கொடிமதிள் தென்குருகூர்ச்*  சடகோபன்சொல்*
  வடிவுஅமைஆயிரத்து*  இப்பத்தினால் சன்மம்- 
  முடிவுஎய்தி*  நாசம்கண்டீர்கள் எம்கானலே   (2)

      விளக்கம்  


  • இந்தத் திருவாய்மொழி கற்றார்க்குப் பிறவி முடிந்து அதுக்கடியான ஸம்ஸாரமும் நசிக்குமென்று பயனுரைத்துத் தலைகாட்டுகிறார். கீழ்ப்பாட்டின் முடிவில் "காட்கரை யப்பன் கடியனே" என்றார்; இப்பாட்டின் தொடக்கத்தில் "கடியனாய்" என்கிறார்; சொல் ஒன்றாயிருந்தாலும் பொருள் வேறுபட்டிருக்கும். "காட்கரையப்பன் கடியன்" என்ற விடம்–தம்மை யநுபவிப்பதில் விரைவு கொண்டவன் என்றபடி. "காற்றிற் கடியனாய்" என்றதுபோல. இங்கே, கடியனாய்க் கஞ்சனைக் கொன்ற பிரானென்றது–கோபத்தை யேறிட்டுக் கொண்டவனாய்க் கம்ஸனை முடித்வனென்றபடி. கஞ்சனைக் கொன்ற பிரானென்றவுடனே "கொடிமதின் தென்குருகூர் " என்கையாலே இந்த ஸமபிவ்யாஹாரத்திற்குச் சேர நம்பிள்ளை யருளிச் செய்வது பாரீர்– "கம்ஸ விஜயத்துக் கொடி கட்டிற்று திநகரியிலேயாய்த்து ஸ்வாமி விஜயத்துக்கு உரியவடியாரிருந்தவிடத்தேயிறே கொடி கட்டுவது " என்று. வடிவு அமை ஆயிரம்=எம்பெருமானுடைய ஸ்வரூபரூபகுண விபூதிகள் யாவும் அழகாக அமையப் பெற்றவாயிரம் என்றபடி. அதில், இப்பத்தினால் சன்மம் முடிவெய்தி=கீதை யில் ஜந்ம கர்மச மே திவ்யம் ஏவம் யோ வேத்தி தத்வத, த்யக்த்வா தேஹம் புநர்ஜன்ம நைதி மாமேதி ஸோர்ஜீ என்று தன்னுடைய அவதார சேஷ்டிகதங்களை யநுஸந்திப்பார்க்குச் சொன்ன பலனைப்பெற்று. எங்கானல் நாசங்கணடீர்கள். கானலாவது ம்ருகத்ருஷ்ணிகை ஒன்றுமின்றிக்கே வீணாசையைப் பிறப்பிக்குமது கானலெனப்படும். அப்படிப்பட்டதான இந்த ஸம்ஸாரத்திற்குக் கானலெனும் பெயர் மிகப் பொருந்தும்.