திரு வேளுக்கை

திருமால் நரசிம்ம அவதாரம் எடுத்தபோது அஸ்திசைலம் என்னும் குகையிலிருந்து புறப்பட்டு இரண்யனது மாளிகையின் தூணிலிருந்து வெளிப்பட்டபோது வேறொரு நரசிம்ம வடிவங்கொண்டு தம்மைத் தாக்க வந்த அசுரர்களை விரட்டிக் கொண்டே செல்ல இவ்விடத்திற்கு வந்த சேர்ந்தார். இதனால் பயந்த அசுரக் கூட்டங்கள் கண்காணா இடத்திற்கு ஓடி ஒளிந்து கொண்டதால், இனி அசுரர்கள் வந்தாலும் அவர்களை எதிர்ப்பதற்கு இவ்விடமே பொருத்தமானது என்றெண்ணி, இவ்விடத்தின் எழிலில் பற்றுக் கொண்டு இங்கேயே இருக்க ஆசைப்பட்டார். இவ்விடத்திலேயே யோக நரசிம்மராகி அமர்ந்து விட்டார்.புராண வரலாற்றின்படி பிருகு மஹரிசிக்கு கனக விமானத்தின் கீழ் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் காட்சி கொடுத்ததாக நம்பிக்கை. தற்போது நரசிம்மனாக யோக முத்திரையுடன் மேற்கு நோக்கி அமர்ந்த திருக்கோலத்தில் காட்சி தருகிறார்

அமைவிடம்

ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி) சிங்கப்பெருமாள் சன்னிதி தெரு,
எண்ணைக்காரன்,
காஞ்சிபுரம்(மாவட்டம்),
தமிழ் நாடு - 631501 ,

தாயார் : ஸ்ரீ வேளுக்கை வல்லி (அம்ருதவல்லி
மூலவர் : அழகியசிங்கர் (ந்ருசிம்ஹர், ஸ்ரீ முகுந்த நாயகன்)
உட்சவர்: --
மண்டலம் : தொண்டை நாடு
இடம் : காஞ்சிபுரம்
கடவுளர்கள்: அழகியசிங்கர் ,ஸ்ரீ வேளுக்கை வல்லி


திவ்யதேச பாசுரங்கள்

  2315.   
  அன்று இவ்உலகம்*  அளந்த அசைவேகொல்,*
  நின்றுஇருந்து வேளுக்கை நீள்நகர்வாய்,* - அன்று
  கிடந்தானை*  கேடுஇல்சீரானை,*  முன் கஞ்சைக்
  கடந்தானை*  நெஞ்சமே! காண்.   

      விளக்கம்  


  • திருக்கச்சிமாநகரில் திருவேளுக்கைப்பதியில் இருப்பதும் திருவெஃகாவில் கிடப்பதுமாக எம்பெருமான் ஸேவை ஸாதிப்பது முன்பு உலகளந்த ஆயாஸம் தீருவதற்கோ என்னவோ என்கிறார். “நின்றிருந்து வேளுக்கை நீணகர்வாய்“ என்றதில் நின்று என்பதை முதலடியில்கூட்டி உரைக்கப்பட்டது. நீணகர் என்றது திருவெஃகாவை என்று பூருவர்களின் வியாக்கியானம். அசவு – சிரமம், ‘அயர்வு‘ என்பதன் விகாரம். “கொடியார்மாடக் கோளூரகத்தும் புளிங்குடியும், மடியாதின்றே நீதுயில் மேவி மகிழ்ந்ததுதான், அடியாரல்லல் தவிர்த்தவசவோ? அன்றேலிப்படிதான் நீண்டு தாவியவசவோ பணியாயே“ என்ற திருவாய்மொழிப் பாசுரத்தோடு ஒருபுடை ஒக்கும் இப்பாசுரம்.