திருமணிமாடக் கோயில்

பிராட்டி மார்களால் புகழ்பெற்ற ஸ்தலங்களில் இதுவும் ஒன்று (இலக்குமி) ஸ்ரீதேவியின் பெருமை திருவரங்கத்தில் என்றால் பூமாதேவியின் பெருமை திருவில்லிபுத்தூரில் என்றால் நீளாதேவியால் பெருமை பெற்றது இத்தலமாகும். பிராட்டிக்கு உண்டான நம்பிக்கை நாச்சியார் என்னும் திருநாமத்தாலே நாச்சியார்கோவில் என்றே பெயர் ஏற்பட்டது என்பர். ஸ்ரீவில்லிபுத்தூரை நாச்சியார் திருமாளிகை என்றும், இத்திரு நறையூரை நாச்சியார் கோவில் என்றும் அழைப்பர். முக்தி தரும் 12 ஸ்தலங்களுள் ஸ்ரீனிவாசம் என்னும் தலமும் இதுதான். திருமங்கையாழ்வார் தனது பாசுரத்தில் மன்னும் மணி மாடக் கோயில் என்று இத்தலத்தை புகழ்கிறார். அதாவது இத்தலம் மாடக்கோவில் அமைப்பில் உள்ளது. கோபுர வாயிலினின்று நோக்கினால் இப்பெருமான் ஒரு மாடத்தின் மேல் பொலிந்து நிற்பது போன்று தெரியும். இக்கருவறையின் அமைப்பும் அதில் பெருமாள் எழுந்தருளியிருக்கும் தோற்றமும் ஒரு சிறிய வடிவமைக்கப்பட்ட மலைமேல் எழுந்தருளியிருப்பது போல் திருமங்கைக்கு காட்சியானது

அமைவிடம்

ஸ்ரீ நாராயண பெருமாள் கோவில்,
சீர்காழி,
Mobile : 9443792396,
9940909725,

தாயார் : ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்
மூலவர் : ஸ்ரீ நாராயணன்
உட்சவர்: நாராயணன், அளத்தற்கரியான்
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: ஸ்ரீ நாராயணன் பெருமாள் ,ஸ்ரீ புண்டரீக வல்லி தாயார்


திவ்யதேச பாசுரங்கள்

  1218.   
  நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
  எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*
  எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
  மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)

      விளக்கம்  


  • நந்தா விளக்கே! ஒரு நாளும் அணையாத விளக்கே! என்கை; (நந்துதல்-அழிதல்) ஒளியினாலே விளங்கும் பொருள் விளக்கு எனப்படும்; அதுபோல எம்பெருமான் நித்யமாய் ஸ்வயம்ப்ரகாசமான ஜ்ஞாநத்தைக் குணமாகவுடையனாயும் அப்படிப்பட்டஞானமே ஸ்வரூபமாகவுள்ள வனுயுமிருப்பது பற்றி நந்தாவிளக்கு எனப்பட்டான். அளத்தற்கு அரியாய் - அளவிட முடியாதவனே! என்கை. உலகத்திலுள்ள பொருள்களை மூன்றுவகைகளாலே அளவிடுதலுண்டு; அதாவது-காலத்தைக் கொண்டும், சேதத்தைக் கொண்டும், வஸ்துவைக் கொண்டும் அளவிடுதல்; இஃது எம்பெருமானிடத்தில் செய்யவொண்ணாது; எம்பெருமான் ஸர்வகாலத்திலு முள்ளவனாதலால் காலபரிச் சேதமில்லாதவன். ஸர்வ வ்யாபியாயிருப்பதால் தேச பரிச் சேதமில்லாதவன். அவனோடொத்த வஸ்த இல்லாமையினால் வஸ்து பரிச்சேதமில்லாதவன். இதுவே திரவியவரிவெஉராஹிதவம்; (த்ரிவித பரிச்சேதராஹித்யம்) என்று ஸ்ரீபாஷ்யாதிகளிற் கூறப்படும். இதுபற்றியே எம்பெருமானுக்கு அநந்தன் என்று திருநாமமாயிற்று.


  1219.   
  முதலைத் தனி மா முரண் தீர அன்று*  முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய* 
  விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி*  வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*
  பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்*  பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்* 
  மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

      விளக்கம்  


  • விதலைத் தலைச் சென்று - ‘விதலை’ என்று நடுக்கத்துக்குப் பெயர்; ‘நாம் கஷ்டப்பட்டுப் பறித்த பூ எம்பெருமானுடைய அர்ச்சனைக்கு உதவாமற் போகிறதோ!” என்று அஞ்சி நடுங்கியிருந்தகாலத்தில் என்கை. வடமொழியில், ‘வி’ என்னுஞ் சொல் பக்ஷி யென்னும் பொருளது; பக்ஷிகளில் தலைவனை கருடனை ‘விதலை’ என்கிறது; விதலைத்தலை- கருடன்மேலே என்னவுமாம். (விண்ணைவு மித்யாதி) நகரச்சிறப்புக் கூறப்படுகின்றது; திருநாங்கூரில் மாடமாளிகைகள் விண்ணுலகளவும் ஓங்கியிருக்கின்றன: அவற்றில் புறாக்கள் உல்லாஸமாகக் கலந்திருக்கின்றன- என்கிறது. பதலையாவது - நுனியில் ஸ்தாபிக்கப்படும் கும்பங்கள். ‘கபோதம்” என்றவடசொல் மாடப் புறாவுக்கு வாசகமாயினும், அப்புறாக்கள் தங்கி வாழுமிடமாகிய ஸ்ந்நிவேசத்தையும் தமிழில் கபோதமென்றும் கபோதையென்றும் கபோதியென்றும் வ்யவஹரிப்பதுண்டு. கட்டிடத்தின் ஓர்பகுதி. “மதவலத்தலை-பிள்ளைத் தூண்களின்தலையிலே” என்பது வியாக்கியானம் அது தான் கொடுங்கை என்னலாம்.


  1220.   
  கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*  அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்* 
  இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*  அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*
  அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*  அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி* 
  மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

      விளக்கம்  


  • ஸ்ரீகஜேந்திராழ்வானுடைய துயரைத் தீர்த்தது மாத்திரம் கீழ்ப்பாட்டிற் சொல்லிற்று; அவ்வளவில் ஆழ்வார்த்ருப்திபெறுவரோ; எம்பெருமான் ஆச்ரிவிரோதிகளைக் களைந்தொழித்தால் அந்த ஸந்தோஷத்திற்குப் போக்குவீடாகப் பிராட்டி பஹுமானம் பண்ணுவதொன்றுண்டு; அதாவது திருமுலைத்தடங்களாலே அணையவமுக்கிக் கட்டுதல். ஸ்ரீராமபிரான் கரதூஷணாதிகளைக் கொன்றெழித்து மீண்டபோது இப்படிப்பட்ட வெகுமதியைப் பிராட்டிசெய்தமை ஸ்ரீராமயணத்தில் விளங்குமே: “தம்ஸ்ரீ த்ருஷ்டுவா சத்ருஹந்தாரம் மஹர்ஷீணாம் ஸுகாவஹம்-பபூவ ஹ்ருஷ்டா வைதேஹீ பர்த்தாரம் பரிஷஸ்வஜே“ என்னா நின்றது. அப்படியே, ஸ்ரீகஜேந்திர விரோதியான முதலையைத்துணித்துச் சென்றபின்பு பிராட்டி செய்த ஸத்காரத்தை ரிஷிகள் சொல்லா தொழிந்தாலும் அக்குறைதீர ஆழ்வார் தாமருளிச்செய்னிறார்- “கொடுமா முதலைக்கு இடர் செய்து புண்டரிகத் தவளின்ப மன்போடணைந்திட்ட வம்மான்” என்கிறார். கொலைப்புண்தலைக்குன்றம்= ‘குன்றம்’ என்றது உவமவாகு பெயரால் யானையை உணர்த்தும்; யானைக்குக் கொலைத் தொழில் நிகழ்த்துவதும், மாவட்டியின் குத்தலினால் புண் ஆறாத தலையையுடைத்தாயிருத்தலும் சாதியியல்பென்று கொண்டு இவ்விசேஷணங்களிடப்பட்டன.


  1221.   
  சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று*  திசை நான்கும் நான்கும் இரிய*  செருவில் 
  கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய*  கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*
  முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*  ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்* 
  மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

      விளக்கம்  


  • உத்தர ஸ்ரீராமாயணத்தை அடியொற்றி முன்னடிகள் கூறப்பட்டன. மாலி சுமாலி முதலிய ராக்ஷஸர்களைத் திருமால் வெல்லும்போது பெரிய திருவடியின்மீதேறியிருந்து வென்றமை. ப்ரஸிதம். அப்போது திரண்டுவந்த ராக்ஷஸர்களில் பலர் மூலைக்கு ஒருவராய்ச் சிதறி ஓடிச்சென்றதும் பலர் போர்க்களத்திலகப்பட்டு மாண்டொழிந்ததும் அறிக. கருடனுக்கு வடமொழியில் ஸுபர்ண என்று பெயர், அது உவணமெனத் திரியும். கறையார் நெடுவேலரக்கர் – வேற்படையை எப்போதும் கொலைத் தொழிலிலேயெ செலுத்திக்கொண்டிருப்பதனால் கறைகழுவ அவகாசமே யில்லாமல் (உதீரக்) கறை நிரம்பியிருக்குமென்க. திருநாங்கூர் வைதிகப்ராஹ்மணர் நிறைந்த வூரென்கிறது பின்னடிகளில் முத்தீ –கார்ஹபத்யம், அஹவநீயம், தக்ஷிணாக்நி என்பவை த்ரேதாக்நிகளெனப்படும். “ஐவேள்வி ஆறங்கர் ஏழினிசையோர்“ இதன் விவரணங்கள் (3-4-1) “ஒரு குறளாய்“ என்ற பாசுரத்தினுரையிற் காணத்தக்கன புகழெய்து – பரமவைதிகர்ள் வாழுமிடமென்று புகழ்பெற்றநாங்கூர்.


  1222.   
  இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*  இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து* 
  தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து*  தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*
  குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே*  குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு* 
  மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!

      விளக்கம்  


  • தடங்தாமரைப் பொய்கை புக்கான் ஸ்ரீ இதை இரண்டு வகையான நிர்வஹிப்பர்காளிய அன்றியே; ஆய்ச்சிகளோட ஜலக்ரிடை பண்ணுவதற்காகப் பொய்கையிலே புகுந்கபடியைச் சொல்லிற்றாகவுமாம். இப்படிப்பட்ட எம்பெருமான் எழுந்தருளியிருக்குமிடமான திருநாங்கூரில் மணி மாடக்கோயில் வணங்கென்மனனே!


  1223.   
  பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்*  பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*  அவள்தன் 
  உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*  உடனே சுவைத்தான் இடம்*
  ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி*  கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து* 
  மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!

      விளக்கம்  


  • ‘பகுவாய்’ என்ற விசேஷணம் பேய்ச்சிகள் ராகூஷஸத் தன்மைக்கு உரியதாம் கழுது – பேய் (ஓங்கு பைந்தாள் இத்யாதி) வயல்களில் இளைய எருமைகள் கரும்புகளின் தலையாடியை மேய்ந்து, தன்னளவல்லாதபடி மிகவும் தின்கையாலே நகர்ந்து செல்லமாட்டாமல் அவ்விடந் தன்னிலே இடம் வலங்கொண்டு வடாயாறி, பிறகு மெல்ல நடந்து சென்று செங்கழுநீர்க்; குட்டையிலே முழுகி, சேற்றிலே கொம்புகளைக் குத்தி மண்ணுருண்டையைப் பெயர்த்திதெடுத்துத் தாங்கிக் கொண்டு கிளம்பி, பின்னை அடித்துஏறவிடவும் முடியாத அவ்விடத்திலேயே கிடக்கும்படியைக் கூறினவாறு. இப்பாசுரத்தைப் பிள்ளைவிழுப் பரையரும் ஆப்பானுங்கூடி அநுசந்தித்துப் பொருள் நோக்குங் கால்-மூன்றாமடியில் ஒருமுறை ‘வைகி’ என்று வந்திருக்கிறது; நான்காமடியிலும் ‘வைகு’ என்று வந்திருக்கிறது; ஆவ்ருத்திக்குப் பொருளென்? என்று ஸந்தேஹித்து பட்டரைப் பணிந்து கேட்க; “அவ்விடத்து எருமைகளின் ஸௌகுமார்யம் விளக்கப்பட்டதாகிறது; முரட்டெருமைகளா யிருந்தால் பதறிப்பதறி நடக்கும்; ஸூகுமாரமான எருமைகளாகையாலே வைகி வைகிக் கிடக்கிறபடி” என்றருளிச் செய்தாராம். வைகுதல் விளம்பித்தல்.


  1224.   
  தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்* 
  இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*  
  மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*  
  முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    

      விளக்கம்  


  • தளைக் கட்டவிழ் தாமரை = ‘தளைத்தாமரை, கட்டவிழ் தாமரை’ என்று இரண்டு படியாக யோஜிப்பது. தளையாவது கட்டு; நெகிழாமல் முகுளமாகவே யிருக்கிற தாமரைகளும், கட்டவிழ்ந்து மலர்ந்துள்ள தாமரைகளும் தங்கியிருக்கிற பொய்கை என்றவாறு. விடம் கால் = ‘கால்’ என்பது வினைப்பகுதி. (‘காற்று’ என்னுஞ் சொல் இப்பகுதி யடியாகவே பிறந்தது,) காலுதல்-வீகதல். காலரவம்-வினைத்தொகை. அதனுச்சிதன் மேலடிவைத்த = “அடிச்சி யோந்தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணாவுன் கோலப்பாதம்” 3694. என்று அன்பர் சென்னிக் கணியாகத் திருவடிகளை வைத்திடாயென்று எத்தனையேனும் வேண்டியனாலும் கிடைக்கமாட்டாத திருவடிகள் பாபியான காளியன் தலையிலே வைக்கப்பட்டனவே! என்ற பரிதாபம் தோற்றம். ஆழ்வானும் ஸூந்தரபாஹூ ஸ்தவத்திலே ‘ஐயோ! நான் காளியம் தலையாகப் பிறவாதொழிந்தேனே!’ என்று ஒரு ச்லோகத்தால் கதறுகின்றார் -“ இத்தாதி.


  1225.   
  துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*  துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
  முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*  விளைவித்த அம்மான் இடம்*
  வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று*  மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்* 
  வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  

      விளக்கம்  


  • “துளையார் கருமென் குழலாய்ச்சியர்” என்ற தொடர்க்கு மூன்று வகையாகப் பொருள் கொள்ளலாம்; துளைகள் நிறைந்த கரிய மெல்லிய புல்லாங்குழல் போல் இனிய குரலுடைய ஆய்ச்சியர் என்பது ஒருவகை; (நீரிற்படிந்து) துளைதற்கு நிறைந்துள்ள கரிய மெல்லிய கூந்தலையுடைய ஆயச்சியர் என்பது மற்றொருவகை. துளைகள் பொருந்திய கரிய மெல்லிய குழலின் பெயரையும் (அதன் அடைமொழிகளையும்) தங்கள் கூந்தலையுடைய ஆய்ச்சியர் என்பது இன்னொருவகை. இவற்றுள், முதற்பொருளில் ‘குழல்’ என்னுஞ் சொல் உபமானத் தளவிலே நில்லாமல் உபமேயமான குரலையும் உணர்த்தினது ஆகுபெயரால். இரண்டாம் பொருளில் துளை என்னும் வினைப்பகுதியே தொழிற் பெயர்ப் பொருள் தந்தது; முதனிலைத் தொழிற்பெயர். மூன்றாம் பொருளிற் சில விஷயங்கள் குறிக் கொள்ள வேண்டியவை யுண்டு; கேண்மின்; தமிழில் ஒரு பதத்திற்கு இரண்டு பொருள் இருந்தால் ஒரு பொருளுக்கு இசையும் அடைமொழிகளை மற்றொரு பொருளுக்கும் உபயோகிப்பதுண்டு; (உதாரணம்.) ‘வஞ்சி’ என்னுஞ் சொல் வஞ்சிமரத்ததையும் சேரன் ராஜதானியாகிற வஞ்சி மாநகரத்தையும் பொருளாகவுடையது. வஞ்சிமரத்தைக் கூற வேண்டுங்கால் உபயோகப்படுத்தக்கூடிய இலை, காய், கொடி முதலிய அடைமொழிகள் வஞ்சிமாநகரைக் கூறுங்கால் உபயோகப் படடாவாயினும் கவிகள் பிரயோகத்தில் உபயோகிப்பதுண்டு; “நெட்டிலை வஞ்சிக்கோ’ என்றவிடத்தும், “புல்லிலைவஞ்சிப் புறமதி லலைக்கும் கல்லென் பொருநை” என்றவிடத்தும் வருக்ஷவிசேஷப் பொருட்கு உரிய ‘நெட்டிலை’ ‘புல்லிலை’ என்னும் அடைமொழிகளை அம்மரப் பெயர்கொண்ட வஞ்சி மாநகர்க்கும் ஏற்றியுள்ளமை காண்க. ‘நாகம்’ என்னுஞ்சொல் புன்னை மரத்திற்கும் பாம்புக்கும் பெயர்; பரிபாடலில் நாகமென்று சொல்லையிட்டுப் புன்னைமரத்தை வருணிக்குங்கால் பாம்புக்கு உரிய அடைமொழிகளைப் புன்னைக்கு இட்டனர். “ஒளிதிகழ் உத்தி உருக்கெழுநாகம்” (பரிபாடல் 12.) என்றது காண்க. இங்ஙனே பல உண்டு. அப்படியே இங்கும் புல்லாங்குழலுக்கு இணங்கக்கூடிய அடைமொழிகள் அதன் பெயர்பூண்ட கூந்தலுக்கு ஏற்றப்பட்டன வென்க. பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில்- “துளையாரென்று துளைமிக்கிருக்கை; அதாவது சுருண்டு கருத்த ம்ருதுவான் குழலையுடையராய்” என்றருளிச் செய்திருக்கக் காண்கிறோம். கூந்தல் சுருண்டிருக்கும் நிலைமையில் துளைகள் தென்படுதல்பற்றி இங்ஙனே உரைத்தருளினர்போலும்.


  1226.   
  விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*  விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்* 
  படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று*  இமையோர் பரவும் இடம்*
  பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப*  தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்* 
  மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!

      விளக்கம்    1227.   
  வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
  என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*
  கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
  விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)

      விளக்கம்  


  • இஹலோக புருஷார்த்தங்களை பலனுகக் கூறுதலில் ஆழ்வார்க்கு ஊற்றமில்லை யாயினும், மருந்துதின்னப் பின்வாங்கும் பயல்களை வெல்லக்கட்டியைக் காட்டி ருசிப்பிப்பதுபோல, இஹலோக புருஷார்த்த ஸாதனங்களிலேயே ஊற்றமடைய பிராகிருதர்களையும் இழுத்துப் பிடிக்க வேண்டி இங்ஙனே யருளிச் செய்கிறாரெனக் கொள்க. அடிவரவு :- நந்தா முதலை கொலை சிறை இழை பண் துளை விடை வண்டார்சலம்.


  1850.   
  வேலை ஆல்இலைப்*  பள்ளி விரும்பிய*
  பாலை ஆர்அமுதத்தினை*  பைந்துழாய்*
  மாலை ஆலியில்*  கண்டு மகிழ்ந்து போய்* 
  ஞாலம் உன்னியைக் காண்டும்*  நாங்கூரிலே

      விளக்கம்  


  • பிரளயப் பெருங்கடலில் உலகமனைத்தையும் உட்கொண்டு ஆலந்தளிரில் திருக்கண் துயில்கொண்ட பெருமானைத் திருவாலியிலே கண்டோம், இனித் திருநாங்கூரிலே சென்று காணக் கடவோமென்கிறார். வேலை –‘வேலா’ என்னும் வடசொல் விகாரம், கடற்கரையை உணர்த்தும் இச்சொல் இலக்கணையால் கடலை உணர்த்துகின்றது. ஞாலமுன்னி - இதற்கு இரண்டுவகையாகப் பொருள் கொள்ளலாம். உலகத்தைச் சிந்திப்பவன், உலகத்தால் சிந்திக்கப்படுபவன் என்று. உலகத்தைச் சிந்திப்பவன் என்றது -உலகத்துக்கு ரக்ஷணம் செய்யும்படிகளையே சிந்தித் திருப்பவன் என்றபடி.