திரு செம்பொன்செய் கோயில்

ராவணவதத்திற்குப் பிறகு, ராமன் இந்த ஸ்தலத்தில் த்ருடநேத்ரர் என்ற முனிவர் ஆச்ரமத்தில் தங்கி அவர் சொல்லியபடி தங்கத்தில் பசு செய்து அதில் நான்கு நாட்கள் தங்கி ஒரு பிராம்ஹணனுக்கு தானம் செய்து, அதைக் கொண்டு அந்த பிராம்ஹணன் இந்தக் கோயிலைக் கட்டியபடியால், செம்பொன் செய்கோயில் என்ற பெயர் ஏற்பட்டது. சிவபெருமான் ப்ரஹ்ம ஹத்யா தோஷத்திலிருந்து விடுபட "ஏகாதச ருத்ர" அச்வமேதத்தை செய்து பூர்ணஹ§தி ஸமயத்தில் பகவான் ஸ்ரீபூநீளை ப்ரஹ்மாதிதேவர்களுடன் சங்கரனுக்கு ஸேவை ஸாதித்த போது, ருத்ரன் பிரார்த்தனைப்படி விஷ்ணு பதினோரு ரூபத்துடன் ருத்திரனுடன் நித்யவாஸம் செய்துகொண்டு பக்தர்களின் அபீஷ்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார் என்பது வரலாறு. இதை முன்னிட்டு தை மாதம் அமாவாசை கழிந்த மறுநாள் ராத்திரி 11 திவ்ய தேச எம்பெருமான்களும் திருமணிக்கூடத்திலிருந்து தொடங்கி 11 கருடவாஹனங்களில் எழுந்தருளி (பிரதக்ஷிமாய் ஆழ்வார் மங்களாசாஸனம் பெற்று) திருநாங்கூரில் 11 கருடசேவை உத்ஸவம் மிக சிறப்பாக வருடா வருடம் நடைபெற்று வருகிறது. திருநாங்கூர் 11 திவ்ய தேசங்களும் ருத்திரன் பூஜிப்பதற்காக ஏற்பட்டவை. காஞ்சிபுரத்தில் காச்யபன் என்ற அந்தணனின் மூத்த மகன் முகுந்தன், தன் தகப்பனார் வறுமையைப் போக்க இந்த ஸ்தலத்திற்கு வந்து பெருமாள் உபதேசித்த அஷ்டாக்ஷரத்தை மூன்று நாளில் முப்பத்தி இரண்டாயிரம் தடவை ஜபம் செய்து பெருமாளின் திருவருளால் செல்வம் பெற்றான்.

அமைவிடம்

திரு செம்பொன்செய் கோயில்,
சீர்காழி,
Mobile : 9443792396,
9940909725,

தாயார் : ஸ்ரீ அல்லிமாமலர் நாச்சியார்
மூலவர் : ஸ்ரீ பேரருளாளன்
உட்சவர்: ஹேமரங்கர் (செம்பொன்னரங்க
மண்டலம் : சோழ நாடு
இடம் : சீர்காழி
கடவுளர்கள்: ஸ்ரீ பேரருளாளன் பெருமாள் ,அல்லிமாமலர்


திவ்யதேச பாசுரங்கள்

  1268.   
  பேர் அணிந்து உலகத்தவர் தொழுது ஏத்தும்*  பேர் அருளாளன் எம் பிரானை*
  வார் அணி முலையாள் மலர்மகளோடு*  மண்மகளும் உடன் நிற்ப* 
  சீர் அணி மாட நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  கார் அணி மேகம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.    

      விளக்கம்  


  • பிராட்டிக்கு ‘வாரணிமுலையாள்’ என்று இட்ட விசேஷணம் அவளுடைய நித்யயௌவனத்தைக் காட்டுதற்கென்க. நாங்கைநன்னடுவுள் - ‘செம்பொன்செய்கோயில்’ என்னுந் திருப்பதி திருநாங்கூரில் நட்டநடுவில் உள்ளது; இவ்வாழ்வார்தாமும் இத்திருப்பதியின் மங்களாசரஸநபரமான இத்திருமொழியைத் திருநாங்கூர்ப்பதிகங்கள் பதினொன்றின் நன்னடுவே அமைத்தருளின அழகும் ஆராயத்தக்கது. “நந்தாவிளக்கே” என்று தொடங்கி “கவளயானை கொம்பொசித்த” என்ற திருமொழியளவாகப் பதினொரு திருமொழிகள் திருநாங்கூர்த் திருப்பதிகளைக் கவிபாடுவன; அவற்றுள் கீழே ஐந்து திருமொழிகள் சென்றன; மேலே ஐந்து திருமொழிகளுள்ளன; இத்திருமொழி நன்னடுவே உள்ளது எனக்காண்க.


  1269.   
  பிறப்பொடு மூப்பு ஒன்று இல்லவன் தன்னை*  பேதியா இன்ப வெள்ளத்தை* 
  இறப்பு எதிர் காலம் கழிவும் ஆனானை*  ஏழ் இசையின் சுவைதன்னை* 
  சிறப்பு உடை மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  மறைப் பெரும் பொருளை வானவர்கோனை*  கண்டு நான் வாழ்ந்தொழிந்தேனே.

      விளக்கம்  


  • பேதியாவின்ப வெள்ளத்தை – ஆநந்த முடைமை ஜீவாத்மாவுக்கு மிருந்தாலும் பிரகிருதி ஸம்பந்தத்தாலே அதற்குக் குறைவு உண்டாகிறது; இப்படியல்லாமல் எம்பெருமானுடைய ஆநந்தமயத்வம் ஒரு உபாதியினாலும் பேதப்படாதிருக்குமென்க. பேதியா – பேதியாத; விகாரமடையாத. இன்பவெள்ளத்தை – இன்பவெள்ளமே ஸ்வரூபமாயுள்ளவனை. எம்பெருமான் இன்னகாலத்திலுள்ளான், இன்ன காலத்திலில்லை என்னவொண்ணாதபடி எக்காலத்தும் உள்ளமைபற்றி ‘இறப்பெதிர் காலக் கழிவுமானானை’ என்றது. ‘கழிவும்’ என்றது – கழிந்துகொண்டே செல்லுகிற நிகழ்காலத்தைச் சொன்னபடி. ஏழிசையன் சுவை தன்னை - ஸப்தஸ்வரங்களிலுமுண்டான ரஸமே ஒருவடிவு கொண்டாற்போல் பரமபோக்யனானவனை.


  1270.   
  திட விசும்பு எரி நீர் திங்களும் சுடரும்*  செழு நிலத்து உயிர்களும் மற்றும்* 
  படர் பொருள்களும் ஆய் நின்றவன் தன்னை*  பங்கயத்து அயன் அவன் அனைய*
  திட மொழி மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  கடல் நிற வண்ணன் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.

      விளக்கம்  


  • திடப்பொருள்கள், ஆகாயம், காற்று, நீர், நிலம் இவையெல்லாவற்றிலும் படர்ந்த பொருள் ஆனவன் அவைகளில் உடலுக்குள் உயிர்போல மறைந்து உள்ளேயும் வெளியேயும் வியாபித்தவன். வேதத்தில் உள்ளவன். இவைகளையெல்லாம் உண்டவனும் இவனே. நம்மாழ்வாரின் கடவுள் தத்துவத்தின் அடிப்படையான விசிஷ்டாத்வைதக் கருத்துக்களின் அடிப்படையும் ஆனது இப்பாடல். பிரபஞ்சத்தில் உள்ள அத்தனை பொருள்களிலும் சாரமாக விரவியிருப்பவன் கடவுள் என்கிற தத்துவத்தை விஞ்ஞானத்தால் கூட இந்த நாட்களில் மறுக்க முடிவதில்லை.


  1271.   
  வசை அறு குறள் ஆய் மாவலி வேள்வி*  மண் அளவிட்டவன் தன்னை* 
  அசைவு அறும் அமரர் அடி இணை வணங்க*  அலை கடல் துயின்ற அம்மானை* 
  திசைமுகன் அனையோர் நாங்கை நல் நடுவுள்* செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  உயர் மணி மகுடம் சூடி நின்றானை*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.  

      விளக்கம்    1272.   
  'தீமனத்து அரக்கர் திறலழித்தவனே!' என்று சென்று அடைந்தவர் தமக்குத்* 
  தாய்மனத்து இரங்கி அருளினைக் கொடுக்கும்*  தயரதன் மதலையை சயமே*
  தேமலர்ப் பொழில் சூழ் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  காமனைப் பயந்தான் தன்னை நான் அடியேன்*  கண்டுகொண்டு உய்ந்தொழிந்தேனே.

      விளக்கம்  


  • சயமெ – ‘ஸ்வயம்’ என்ற வடசொல்லும் சயமெனத் திரியும், ‘ஜயம்’ என்ற வடசொல்லும் சயமெனத் திரியும்; சயம் மே - ஸ்வயமாகவே வந்து மேவியிருக்கப் பெற்ற தலம். (அன்றியே) ‘ஜய விஜயீ பவ’ என்று பல்லாண்டுபாடும்படியான ஜயசப்தங்கள் மேவப்பெற்ற என்னவுமாம். இனி, என்னும் வடசொல் ஸமூஹமென்னும் பொருள் கொண்டதாதலால் அதுவே இங்குச் சயமெனத் திரிந்ததாகக்கொண்டு ‘ஸமூஹமான தேமலர்ப் பொழிலையுடைய’ என்று முரைப்பர். வாமனைப் பயந்தான்றன்னை – கண்ணபிரான் ருக்மிணிப்பிராட்டியிடத்தில் மந்மதனுடைய அம்சமான ப்ரத்யும்நனைப்பெற்ற வரலாறு அறிக


  1273.   
  மல்லை மா முந்நீர் அதர்பட*  மலையால் அணைசெய்து மகிழ்ந்தவன் தன்னை* 
  கல்லின்மீது இயன்ற கடி மதிள் இலங்கை கலங்க*  ஓர் வாளி தொட்டானை* 
  செல்வ நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  அல்லி மா மலராள் தன்னொடும் அடியேன்*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே.

      விளக்கம்  


  • கடல் ரத்னங்களுக்குப் பிறப்பிடமாதலால் ‘மல்லைமா முந்நீர்’ எனப்பட்டது. த்ரி கூடமென்னும் மலையின் சிகரத்திலே இலங்கைமாநகர் இயற்றப்பட்டதாதலால் ‘கல்லின் மீதியன்ற’ எனப்பட்டது. கல் - மலைக்கு ஆகுபெயர். கடி – அரண்.


  1274.   
  வெம் சினக் களிறும் வில்லொடு மல்லும்*  வெகுண்டு இறுத்து அடர்த்தவன் தன்னை* 
  கஞ்சனைக் காய்ந்த காளை அம்மானை*  கரு முகில் திரு நிறத்தவனை*
  செஞ்சொல் நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  அஞ்சனக் குன்றம் நின்றது ஒப்பானை*  கண்டுகொண்டு அல்லல் தீர்ந்தேனே. 

      விளக்கம்  


  • முதலடியில், வெகுண்டு, இறுத்து, அடர்ந்து என்பவை முறைமுறையே களிற்றிலும் வில்லிலும் மல்லிலும் இயையக் கடவன: களிற்றை வெகுண்டவன், வில்லை இறுத்தவன், மல்லை அடர்த்தவன் என்க. இம்மூன்று காரியங்களும் கம்ஸவதத்திற்கு முந்துற முன்னம் நடந்தவை.


  1275.   
  அன்றிய வாணன் ஆயிரம்*  தோளும் துணிய அன்று ஆழி தொட்டானை* 
  மின் திகழ் குடுமி வேங்கட மலைமேல்*  மேவிய வேத நல் விளக்கை*
  தென் திசைத் திலதம் அனையவர் நாங்கைச்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  மன்றுஅது பொலிய மகிழ்ந்து நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.

      விளக்கம்  


  • மன்றதுபொலிய – பலர்திரட்சியாகக் கூடுமிடத்திற்கு ‘மன்று’ என்று பெயர்; ‘நாங்கை நாலாயிரம்’ என்ற பழமொழியின்படி நாலாயிரம் ஸ்ரீவைஷ்ணவர்கள் வாழ்ந்தவிடமாயிருந்தது பற்றி “மன்றதுபொலிய” என்கிறார் என்னலாம்: (அது-முதல்வேற்றுமைச்சொல்லுருபு.)


  1276.   
  'களங்கனி வண்ணா! கண்ணனே! என்தன்*  கார் முகிலே! என நினைந்திட்டு* 
  உளம் கனிந்திருக்கும் அடியவர் தங்கள்*  உள்ளத்துள் ஊறிய தேனை*
  தெளிந்த நான்மறையோர் நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  வளம் கொள் பேர் இன்பம் மன்னி நின்றானை*  வணங்கி நான் வாழ்ந்தொழிந்தேனே.

      விளக்கம்  


  • தெளிந்த நான்மறையோர் – ஒருஸமயத்தில் ஸர்வேச்வரன் ரக்ஷகனென்றிருப்பது, மற்றொரு ஸமயத்திலே மற்றொன்று ரக்ஷகமென்றிருப்பது, ஆக விப்படி மாறிமாறிக் கலங்கு கையின்றியே, எக்காலத்திலும் எவிவிடத்திலும் எவ்வவஸ்தையிலும் எம்பெருமானே ரக்ஷகன் என்னும் தெளிவுடையார் வாழுந்திருநாங்கூர் என்க. இப்படிப்பட்ட தெளிவுடையார்க்குக் காட்சி கொடுத்துக்கொண்டு நிற்கப்பெற்றோமே யென்னும் மகிழ்ச்சி வடிவிலே தோன்ற நின்றமயால் “வளங்கொள் போரின்பம் மன்னிநின்றானை” என்றார்.


  1277.   
  தேன் அமர் சோலை நாங்கை நல் நடுவுள்*  செம்பொன்செய்கோயிலினுள்ளே* 
  வானவர் கோனைக் கண்டமை சொல்லும்*  மங்கையார் வாள் கலிகன்றி* 
  ஊனம் இல் பாடல் ஒன்பதோடு ஒன்றும்*  ஒழிவு இன்றிக் கற்றுவல்லார்கள்* 
  மான வெண் குடைக்கீழ் வையகம் ஆண்டு*  வானவர் ஆகுவர் மகிழ்ந்தே.

      விளக்கம்