திரு இந்தளூர்

திரு இந்தளூர் எம்பெருமானுக்கு சுகந்தன்-ன்னு பேரு! அதாச்சும் பரிமளம் வீசுபவன்! அழகிய தமிழில் மரு இனிய மைந்தன்! அவன் மேனியில் எப்போதும் ஒரு சுகந்தம், வாசனை வீசும்! அதான் பரிமள ரங்க நாதன்! மது-கைடப அசுரர்கள் அபகரிப்பால் பொலிவிழந்த வேதங்களுக்கு மீண்டும் நறுமணம் வீசச் செய்தவனும் கூட! கருவறையில், அரங்கன் தலை மாட்டில் காவிரி அன்னையும், கால் மாட்டில் கங்கை அன்னையும் பணிந்து உள்ளார்கள்! கங்கையிற் புனிதமாய காவிரி என்ற பட்டமும் கொடுத்து, தென்னகத்துக் காவிரிக்கும் சிறப்பு செய்தமையால் இந்தக் கோலம்!

அமைவிடம்

-ஸ்ரீ ரங்கப் பட்டினம் = ஆதி ரங்கன் = ரங்கநாத சுவாமி ... திருஇந்தளூர் ரங்க நாயகி - பரிமள ரங்கன்Telephone Numbers :0431 659 067,

தாயார் : ஸ்ரீ பரிமள ரங்க நாயகி
மூலவர் : பரிமள ரங்கநாதன்
உட்சவர்: --
மண்டலம் : சோழ நாடு
இடம் : மயிலாடுதுறை
கடவுளர்கள்: பரிமள ரங்கநாத பெருமாள் ,சந்திரசாபா விமோச்சனவல்லி


திவ்யதேச பாசுரங்கள்

  1328.   
  நும்மைத் தொழுதோம்*  நும்தம் பணிசெய்து இருக்கும் நும் அடியோம்* 
  இம்மைக்கு இன்பம் பெற்றோம்*  எந்தாய் இந்தளூரீரே* 
  எம்மைக் கடிதாக் கருமம் அருளி*  ஆவா! என்று இரங்கி* 
  நம்மை ஒருகால் காட்டி நடந்தால்*  நாங்கள் உய்யோமே?       

      விளக்கம்  


  • பெருவிடாய்ப்பட்டவன் ஒருகால் நாக்கு நனைக்கத் துளிதீர்த்தம் கிடைத்தால்போதும் என்பதுபோல இவ்வாழ்வார் திருவிந்தளூர்ப் பெருமானுடைய வடிவழகை ஒருகால் காணப்பெற்றால் போதுமென்கிறார். ஒருகால் கண்டமாத்திரத்தில் தமக்குப் பூரணத்ருப்தி பிறந்தவிடும் என்று பொருளான்று; கண்ணில் சிறிது காணப்பெறுவோமாகில் பிறகு வளைத்துக்கொள்ளலாம் என்ற கருத்தாம். ஈற்றடியில் நம்மை என்றது தேவரீரை என்ற பொருளில் வந்தது. “நம்ம வீட்டில் குழந்தைகள் க்ஷேமமா?” என்கிற உலகவழக்கம் நோக்குக. தன்மையில் முன்னிலையும் முன்னிலையில் தன்மையும் வியவஹாரிப்பதுண்டு. ஒருகால் நம்மைக்காட்டி என்னைக் காணும்படியாகச்செய்து (எனக்கு ஸேவை ஸாதித்து) என்று உரைக்கலாமாயினும் அது சுவைக்கேடு. ‘காட்டினால்’ என்னாமல் “காட்டி நடந்தால்” என்றதனால் புறப்பாடு ஸேவிக்கையிலே காதல் கொண்டவர்போலும்.


  1329.   
  சிந்தை தன்னுள் நீங்காது இருந்த திருவே!*  மருவினிய 
  மைந்தா*  அம் தண் ஆலி மாலே!*  சோலை மழ களிறே!*
  நந்தா விளக்கின் சுடரே!*  நறையூர் நின்ற நம்பீ*  என் 
  எந்தாய்! இந்தளூராய்!*  அடியேற்கு இறையும் இரங்காயே! நந்தா விளக்கின்

      விளக்கம்  


  • கீழ்ப்பாசுரம் மிக்க தீநஸ்வரத்தோடே பேசியிருக்கச் செய்தேயும் இந்த;ரெம்பிரான் திருவுள்ளமிரங்கக் கண்டிலர்; பிரானே! கடலிலே நீர் வற்றுவதுண்டோ? உன் திருவுள்ளத்திலும் இரக்கம் மாறுவதுண்டோ? இப்படியும் என்னைப் படுகொலையடிக்கலாமோ? பாவியேனுக்குச் சிறிதும் இரங்கியருள மாட்டாயோ? என்கிறார். சோலைமழகளிறே! – சோலைக்குள்ளே வளர்ந்தவொரு இளவானைக்கன்றுபோலே இனியனா யிருப்பவனே!. திருமாலிருஞ் சோலையில் திகழும் யானைக்குட்டியே! என்றுமுரைக்கலாம். நந்தாவிளக்கின் சுடரே! – விளக்கில் திரியும் எண்ணெயும் புகையுமான அழுக்கு இன்றியே புகர்தான் ஒருவடிவு கொண்டதோ என்னும்படியாக ஜ்ஞாநஸ்வரூபனாய்ப் பிரகாசிப்பவனே! என்கை. இறையும் இரங்காய் - சிறிதேனும் இரங்கவேணும் என்றும் பொருளாம்.


  1330.   
  பேசுகின்றது இதுவே*  வையம் ஈர் அடியால் அளந்த*    
  மூசி வண்டு முரலும்*  கண்ணி முடியீர்*
  உம்மைக் காணும் ஆசை என்னும் கடலில் வீழ்ந்து*  இங்கு அயர்த்தோம்*
  அயலாரும் ஏசுகின்றது இதுவே காணும்*  இந்தளூரீரே!

      விளக்கம்  


  • இந்தளூரெம்பிரானே ! உன்னை நான் ஸேவித்தாலும் ஸேவிக்கிறேன், இழந்தாலும் இழக்கிறேன்; இஃது ஒரு பெரிய விஷயமன்று; முக்கியமாக ஒன்று சொல்லுகிறேன் கேளாய்; நீ குணசாலியென்று பேர்படைப்பதற்குப் படாதபாடுகள் பட்டிருக்கிறாய்; மாவலியிடம் குறளுருவாய்ச்சென்று மூவடிமண் இரந்துபெற்று த்ரிவிக்ரமனாகி மூவுலகங்களையுமளந்து இத்தனைபாடுகள் பட்டுப் பெரியகுணம் ஸம்பாதித்தாய்; என்னொருவனை உபெக்ஷிப்பதனால் அக்குணத்தை இழக்கப்போகிறாய்; ஒருவரும் அபேக்ஷியாதிருக்கச்செய்தேயும் எல்லார் தலையிலும் திருவடியை வைத்தருளின நீ, பல்பன்னிரண்டுங் காட்டி யாசிக்கின்ற என்னுடைய விருப்பத்தை நிறைவேற்றாவிடில் குணக்கேடுவிளையாதோ? இதனை ஆராய்ந்தருள் என்கிறார். உம்மைக் காணுமாசை யென்னுங் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம் - ‘திருமங்கை மன்னன் திருவிந்தளூர்ப் பெருமானைக்காண ஆசைப்பட்டு அதுபெறாதே முடிந்தான்’ என்று நாற்சந்தியிலே வார்த்தை கிளம்பினால் இதனில் மிக்க அவத்யமுண்டோ? ‘அயலார் ஏசுகின்றதும் இதுவே, நான் பேசுகின்றதும் இதுவே, என்று முடிவையும் முதலையுங் கூட்டி யோஜித்துக்கொள்க. ‘ஒருவர் ஆசைப்பட்ட அழகையும் ஒருவர் அந்த ஆசைக்கு முகங்காட்டின அழகையும் என்ன சொல்லுவோம்!, ஸர்வரக்ஷகன் படி இப்படியன்றோ இருப்பது!’ என்று அயலார் ஏசுவார்கள்; அப்படிப்பட்ட ஏச்சுக்கு இடமாகும்படி நடந்துகொள்ளவேண்டாம் என்பதே அடியேன் சொல்லுவது.


  1331.   
  ஆசை வழுவாது ஏத்தும்*  எமக்கு இங்கு இழுக்காய்த்து* அடியோர்க்கு 
  தேசம் அறிய*  உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு*
  காசின் ஒளியில் திகழும் வண்ணம்*  காட்டீர் எம் பெருமான்* 
  வாசி வல்லீர்! இந்தளூரீர்!*  வாழ்ந்தே போம் நீரே!             

      விளக்கம்  


  • இந்தளூரீரே! ஊலகமறிய உமக்கே அநந்யார்ஹராயிருக்கிற எங்களுக்குப் பொன்னொளியிற் காட்டிலும் மிகவிளங்காநின்றுள்ள வடிவழகைக் காட்டமாட்டேனென்கிறீரே; ‘பக்தாநாம்த்வம் ப்ரகாசஸே’ என்கிறபடியே எங்களுக்கென்றே கொண்டிருக்கிற திருமேனியை எமக்குக் காட்டாதேயிருப்பது என்னோ? (வாசிவல்லீர்) ‘மிகச்சிறந்த நமது திருமேனியை நித்யஸூரிகள் போல்வார் காணவேணு மத்தனையல்லது அற்பனான இவன் காணலாகாது’ என்று நீர் நினைக்கின்றீர்போலும், ஸர்வஸாதாரணமான திருமேனியை இன்னார்க்குத்தான் காட்டலாம், இன்னார்க்குக் காட்டலாகாது என்று ஒருவாசி யிட்டுக்கொள்ளலாமோ? (இந்தளூரீர்!) நித்யஸூரிகளுக்குக் காட்சிதரும் வடிவை நித்யஸம்ஸாரிகளுக்கும் ஸர்வஸ்வதானம் பண்ணுகைக்காகவன்றோ திருவிந்தளுரிலேவந்து நிற்கிறது. வாசியற முகங்கொடுக்க வந்து நிற்கிறவிடத்திலே வாசிவைக்கின்றீரே. (வாழ்ந்தே போம் நீரே.) உம்முடைய உடம்பு உம்மை ஆசைப்பட்டவர்களுக்காக ஏற்பட்டது என்று நினைத்திருந்தோம்; அப்படியன்றாகில், உம்முடம்பை நீரே கண்டுகொண்டு நீரே தொட்டுக்கொண்டு நீரே மோந்துகொண்டு நீரே கட்டிக்கொண்டு நீரே வாழ்ந்துபோம். “காசினொளியிற்றிகழும் வண்ணம்” என்றவிடத்து “சுட்டுரைத்த நன்பொன் உன்திருமேனியொளி யொவ்வாது” என்ற (3-1-2) திருவாய்மொழி அநுஸந்திக்கத்தக்கது.


  1332.   
  தீ எம் பெருமான் நீர் எம் பெருமான்*  திசையும் இரு நிலனும்* 
  ஆய் எம் பெருமான் ஆகி நின்றால்*  அடியோம் காணோமால்*
  தாய் எம் பெருமான்*  தந்தை தந்தை ஆவீர்*  அடியோமுக் 
  கே எம் பெருமான் அல்லீரோ நீர்*  இந்தளூரீரே!

      விளக்கம்  


  • “நீர்வானம் மண்ணொரிகாலாய்நின்ற நெடுமால்” என்றும் “குன்றமும் வானும் மண்ணுங் குளிர்புனல் திங்களோடு நின்றவெஞ்சுடரும் அல்லா நிலைகளுமாயவெந்தை” என்றும் நாம் கண்ணால் காண்கிற பொருள்களெல்லாம் எம்பெருமான் வடிவேயென்று இவர் துணிந்திருப்பவராதலால், ‘இத்துணிவு இல்லாதவரன்றோ வருந்தவேண்டும்; இத்துணிவுடையார்க்கு எம்பெருமானுடைய ஸாக்ஷாத்காரம் எப்போதும் குறையற்றிரக்கின்றதன்றோ; ஆகையாலே இவர் வீணாக வருந்துகின்றார்’ என்று திருவிந்தள்ளூர்ப்பெருமான் திருவுள்ளம் பற்றி யிப்பதாகக்கொண்டு, பிரானே! நி எல்லாப்பொருளுமாக நிற்கின்றாய் என்கிற சாஸ்த்ரார்த்தம் அடியோமுக்குத் தெரியாமையில்லை; “சங்கும் சக்கரமும் சிரித்தமுகமும் தொங்கும் பதக்கங்களும்;” என்றாற்போலே அஸாதாரண திவ்யமங்கள விக்ரஹ வேஷத்தைக் கண்டகளிக்க ஆவல்கொண்டிருக்கிற அடியோமுக்கு ஜகத் ஸ்வரூபனாயிருக்குமிப்பு என்ன பயனளிக்கும்? தீ நீர் முதலானவையெல்லாம் உன்வடிவே என்று அநுஸந்தித்துக்கொள்வதில் யாதொரு ஆக்ஷேபமுமில்லை. அப்படி அநுஸந்திப்பதனால் அவற்றில் உனது அஸாதாரணத் திருமேனியைக் காண்போமோ. யாம்; காணமாட்டோம்; நாங்கள் கண்டுகளிப்பதற்கன்றோ நீ திருவிந்தளூரிலே வந்து நிற்கிறது என்கிறார்.


  1333.   
  சொல்லாது ஒழியகில்லேன்*  அறிந்த சொல்லில்*  நும் அடியார் 
  எல்லாரோடும் ஒக்க*  எண்ணியிருந்தீர் அடியேனை*
  நல்லார் அறிவீர் தீயார் அறிவீர்*  நமக்கு இவ் உலகத்தில்* 
  எல்லாம் அறிவீர் ஈதே அறியீர்*  இந்தளூரீரே!

      விளக்கம்  


  • மீண்டு மீண்டும் நிர்ப்பந்திக்கின்றீரே; ஆழ்வீர்! இஃது உமக்குத்தகாது என்று எம்பெருமான் திருவுள்ளமாக, அதற்கு ஆழ்வார் விண்ணப்பஞ் செய்கிறார். இந்தளூரீர்! அடியேன் விண்ணப்பஞ் செய்ய நினைத்த விஷயத்தைக் கூசாமல் விண்ணப்பஞ் செய்துவிடுகிறேன்; சேஷபூதன் சேஷியை நிர்ப்பந்திக்கலாகாது என்று முறையறிந்து இருக்கமாட்டுகின்றிலேன்; ஸர்வஜ்ஞரான உமக்கும் தெரியாத விஷயம் ஒன்றுண்டு என்று அடியேன் நினைத்திருக்கிறேன். உமக்குப் பல்லாயிரம் பேர்கள் அடியாருண்டு. ‘மற்ற அடியார்களெல்லாரையும்போலே இக்கலியனும் ஓரடியான்’ என்று நீர் நினைத்திருக்கின்றீரத்தனையல்லாது எனக்குள்ள வாசியைச் சிறிதும் அறிகின்றிவீர். “ஊர்த்வம் மாஸாந்நஜீவிஷ்யே” (ஒரு மாதம் வரையில் உயிர்தரித்திருப்பேன்) என்று சொன்ன அசோகவனிகைப் பிராட்டியையும் என்னையும் ஒருதட்டாக நினைத்திருக்கிறீரே யொழிய ‘ஒரு நொடிப்பொழுதும் நம்முடைய பிரிவைப் பொறுக்கமாட்டாத ஸுகுமார ஸ்வபாலன் இவன்’ என்று என்னுடைய வாசியை அறிந்திலீர் என்கிறார்.


  1334.   
  மாட்டீர் ஆனீர் பணி நீர் கொள்ள*  எம்மைப் பணி அறியா* 
  வீட்டீர் இதனை வேறே சொன்னோம்*  இந்தளூரீரே*
  காட்டீர் ஆனீர்*  நும்தம் அடிக்கள் காட்டில்*  உமக்கு இந்த 
  நாட்டே வந்து தொண்டர் ஆன*  நாங்கள் உய்யோமே.  

      விளக்கம்  


  • கீழ்ப்பாட்டில் எம்பெருமானடைய ஸர்வஜ்ஞத்வத்திற்குக் குறைகூறினார்; அவனுடைய ஸர்வசக்தித்வத்திற்கும் குறைகூறுகின்றாரிப்பாட்டில். (நீர் பணிகொள்ளமாட்டீரானீர்) பெருமாளே! நீர் ஸர்வசக்தராயிருந்து வைத்தும் என்னிடத்திலிருந்து ஒரு கைங்கரியங்கொள்ள சக்தியற்றவரானீர். இந்த நீசனால் என்ன கைங்கரியம் பண்ணமுடியும் என்று நினைத்து உபேக்ஷிக்கின்றீரேயன்றி, நிறையொன்றுமிலாத நீசனேனையும் கைங்கரியங்களுக்கு ஆளாம்படி மண்கட்டியாகப் படைத்துவைத்தாலும் ஒருவாறு ஆறியிருக்கலாம். சேதநகோடியிலே படைத்துவைத்தீர்; சேஷத்வமே ஸ்வரூபமென்று உணர்த்திவைத்தீர்; கைங்கரியம் செய்யாவிடில் சேஷத்வம் நிறம்பெறத என்றும் உணர்த்திவைத்தீர். இவ்வளவு அறிவைப் பிறப்பித்துவைத்து ஒன்றுக்கு முதவாதபடி தள்ளிவைத்திருக்கிறீர். கைங்கரியங்கொள்ளவிடினும் திருவடியையாவது ஸேவை ஸாதிப்பிக்கலாமே; அந்த பாக்கியமும் பெற்றிலேன்; திருவாயையுங் காட்டாதொழிந்தீர். பிறர்க்கென்றே ஏற்பட்டிருக்கிற திருவடிகளையும் உமக்காகக் கொண்டிருக்கிறீர்போலும். இக்கொள்கையைத் தவிர்ந்து திருவடிகளை ஸேவை ஸாதிப்பித்தீராகில் இந்த ஸம்ஸார மண்டலத்திலேயே அடியேன் உஜ்ஜீவித்துப் போகமாட்டேனே? என்கிறார்.


  1335.   
  முன்னை வண்ணம் பாலின் வண்ணம்*  முழுதும் நிலைநின்ற* 
  பின்னை வண்ணம் கொண்டல் வண்ணம்*  வண்ணம் எண்ணுங்கால்* 
  பொன்னின் வண்ணம் மணியின் வண்ணம்*  புரையும் திருமேனி* 
  இன்ன வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே!

      விளக்கம்  


  • உரை:1

   எம்பெருமான் ஒவ்வொரு யுகத்திலும் நிறத்தைக்கொள்வன்; கிருத யுகத்திலுள்ளவர்கள் ஸத்வகுணம் நிறைந்தவர்களாய் சுத்தமான நிறத்தை உகக்குமவர்களாகையாலே அவர்கட்காகப் பால்போன்ற நிறத்தைக்கொள்வன்; த்ரேதாயுகத்திலே சிவந்த நிறத்தைக்கொள்வன்; த்வாபரயுகத்தில் பசுமை நிறத்தைக் கொள்வான்; கலியுத்தில் எந்த நிறங்கொண்டாலும் ஈடுபடுவா ரில்லாமையாலே இயற்கையான நீலநிறத்தைக்கொன்வன். இந்தளூரீர்! ஊமக்குப் பல நிறங்கள் உள்ளனவாக சாஸ்த்ரங்களில் விளங்காநின்றது; இங்கு அர்ச்சையாக எழுந்தருளியிருக்கு மிருப்பிலே எந்தநிறம் கொண்டிருக்கிறீர் என்பதை அடியேன் அறியவேண்டாவோ? “இதோபாராய், இதுவே என்வண்ணம்” என்று சொல்லி வடிவைக் காட்டியருளீர் என்கிறார்.

   உரை:2

   மூங்கிற்குடி என்ற குலத்தில் உதித்தவராகிய அமுதனாரின் அழகான திருவடித் தாமரைகள் இரண்டையும் என்னுடைய தலைக்கு அலங்காரமாகச் சேர்த்துக் கொண்டேன். இதன் மூலம் எனது பாவகர்மங்கள் அனைத்தும் அகன்று போகும்படி ஆனது. இவ்விதம் பாவங்கள் நீங்கிய பின்னர், யமபுரியில் உள்ள யமதூதர்களிடம், எனது கர்ம அனுபவம் காரணமாக நான் அகப்படுவேனா? (மாட்டேன்).


  1336.   
  எந்தை தந்தை தம்மான் என்று என்று*  எமர் ஏழ் அளவும்* 
  வந்து நின்ற தொண்டரோர்க்கே*  வாசி வல்லீரால்*
  சிந்தை-தன்னுள் முந்தி நிற்றிர்*  சிறிதும் திருமேனி* 
  இந்த வண்ணம் என்று காட்டீர்*  இந்தளூரீரே.     

      விளக்கம்    1337.   
  ஏர் ஆர் பொழில் சூழ்*  இந்தளூரில் எந்தை பெருமானைக்* 
  கார் ஆர் புறவின் மங்கை வேந்தன்*  கலியன் ஒலிசெய்த*
  சீர் ஆர் இன் சொல் மாலை*  கற்றுத் திரிவார் உலகத்தில்* 
  ஆர் ஆர் அவரே*  அமரர்க்கு என்றும் அமரர் ஆவாரே (2)

      விளக்கம்  


  • “இராமானுசனை… மேவும் நல்லோர் எக்குற்றவாளர் எது பிறப்பு ஏதியல்வாக நின்றோர், அக்குற்றமப்பிறப்பு அவ்வியல்வே நம்மையாட்கொள்ளுமே” என்று எம்பெருமானுரை அடிபணிந்தவர்கள் எக்குற்றவாளராயிருப்பினும் எவ்விழிபிறப்பாளராயினும் எவ்வியல்வினராயிருப்பினும் எம்பெருமானாசை ஆச்ரயிக்கப்பெற்ற பெருமையினால் மிகச் சீரியவரேயாவர் என்றாற்போலே, இத்திருமொழியை ஓதுமவர்களும் எத்தன்மையரா யிருப்பினும் இந்த ஸ்ரீஸூக்தியை அதிகரிக்கப்பெற்ற பெருமையினால் சிறந்தவரேயாவர் என்க. “உலகத்துஆரார்; அவரே” என்றதனால் இப்பொருள் விளங்கும்.