திரு சிறுபுலியூர்

கருடனும் அனந்தனும் மாற்றாந்தாய் மக்கள், பெருமாளுக்கு பரமபதத்தில் கைங்கர்யம் செய்யும் நித்ய சூரிகள் ஆயினும் பகைவர்கள். இந்த சிறுபுலியூர் திவ்ய தேசத்தின் தல வரலாறு இந்த கருட நாக பகைமையை அடிப்படையாக் கொண்டதே. இத்தலத்தைப் பற்றிய வரலாறு கருட புராணத்தில் பேசப்படுகிறது. பகவான் ஸ்ரீமந் நாராயணனை சயனத்தில் தாம் தாங்குவதாக ஆதிசேஷனுக்கும், எல்லா இடங்களிலும் அவரைச் சுமந்து செல்வதாக கருடனுக்கும் கர்வம் ஏற்பட்டது. இருவரும் இரு வேறு காலத்தே தாமே பகவானைத் தாங்குவதாக எண்ணம் கொண்டனர். விளைவு, இருவருக்கும் போட்டியும் வெறுப்பும் வளர்ந்து பகையாக மாறியது. ஆதிசேஷன் இந்தப் பகை விலக எண்ணம் கொண்டு தவமிருந்தார். அவர் தவத்துக்கு இரங்கி மாசி மாதம் வளர்பிறை ஏகாதசி தினத்தன்று அவருக்கு சேவை சாதித்த பெருமாள், ஆதிசேஷன் மடியில் அனந்த சயனம் கொண்டு சிறு குழந்தையாக பாலசயனக் கோலத்தில் கோயில் கொண்டார். அதாவது, பாற்கடலில் மிதக்கும் ஆதிசேஷன் மீது பள்ளிகொண்டிருக்கும் கோலம். கருடனுக்கு அபயமளித்த தலம். எனவே இத்தலத்தில் உயரத்தில் ஆதிசேடனுக்கும் பூமிக்கு கீழ் கருடனுக்கும் சன்னதி அமைந்துள்ளது. கருடா சௌக்கியமா? என்று கேட்டதற்கு அவரவர்கள் இருக்கவேண்டிய இடத்தில் இருந்தால் சௌக்கியம் என்று சொல்லப்பட்ட ஸ்தலம்.

அமைவிடம்

சிறுபுலியூர் அ/மி ஸ்ரீ கங்காளநாத சுவாமி திருக்கோயில் அருள்மாக்கடல் (ஜலசயனப் பெருமாள்) க்ருபா சமுத்ரப் பெருமாள் சோழ நாடு,
மயிலாடுதுறை. 25-திரு தலைச் சங்க நாண்மதியம்(தலைச்சங்காடு),

தாயார் : ஸ்ரீ திருமாமகள் நாச்சியார்
மூலவர் : அருள்மாக்கடல்
உட்சவர்: க்ருபா சமுத்ரப் பெருமாள்
மண்டலம் : சோழ நாடு
இடம் : மயிலாடுதுறை
கடவுளர்கள்: ஸ்ரீ ஸ்தலசயன பெருமாள்,திருமாமகள் நாச்சியார்


திவ்யதேச பாசுரங்கள்

    1628.   
    கள்ளம் மனம் விள்ளும் வகை*  கருதிகழல் தொழுவீர்* 
    வெள்ளம் முதுபரவைத்*  திரை விரிய கரை எங்கும்-
    தெள்ளும் மணிதிகழும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உள்ளும்*  எனது உள்ளத்துளும்*  உறைவாரை உள்ளீரே*  (2)

        விளக்கம்  


    • கடல்வெள்ளம் அலையெறிந்து நவரத்னங்களைக் கொண்டு கொழிக்கும் நீர்க்கரைகளையுடைய சிறுபுலியூரென்னுந் திருப்பதியில் சலசயனமென்னும் ஸந்நிதியிலும் அடியேனுடைய நெஞ்சகத்திலும் பொருந்தி வாழ்கின்ற பெருமானைச் சிந்தனை செய்யுங்களென்றாராயிற்று. எம்பெருமான் வ்யாக்ரபாதர் என்னும் மாமுனிக்கு ஸேவைஸாதித்த தலமாதல் பற்றி இவ்வூர் சிறுபுலியூ ரெனப்படுமென்ப. சலசயனம் = மென்ற வடசொல் விகாரம். சலம் – மாயை; உறங்கவான்போல் யோகு செய்வதற்குக் கொண்ட சயனமாதலால் மாயப்படுக்கையென்கிறது. வ்யாக்ரபாத மஹர்ஷிக்குப் பாலசயனமாய் ஸேவை ஸாதித்தானென்க. சிறுபுலியூரென்பது க்ஷேத்ரத்தின் திருநாமம். திருக்கடன் மல்லையில் தலசயனப் பெருமாள் கிடக்குமிடம் தலசயன மென்றதுபோல, இங்குச் சலசயனப் பெருமாள் கிடக்குமிடம் சலசயன மென்னப்படும். நம்மாழ்வார் “திருக்கடித்தானமும் என்னுடைச் சிந்தையும், ஒருக்கடுத்து உள்ளேயுறையும் பிரான் கண்டீர்” என்றருளிச் செய்ததுபோலே இவரும் “சிறுபுலியூர்ச் சலசயனத் துள்ளும் என துள்ளத்துள்ளு முறைவாரை” என்றார்.


    1629.   
    தெருவில் திரிசிறு நோன்பியர்*  செஞ்சோற்றொடு கஞ்சி- 
    மருவிப்*  பிரிந்தவர் வாய்மொழி*  மதியாது வந்துஅடைவீர்*
    திருவில் பொலிமறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    உருவக் குறள்அடிகள் அடி*  உணர்மின் உணர்வீரே

        விளக்கம்  


    • சமண மதத்தவர்களுடைய சொற்களை மதியாமல் (அவமதித்து விட்டுச்) சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமாளுடைய திருவடிகளைச் சிந்தை செய்மின் என்று விவேகிகளை நோக்கி உபதேசிக்கின்றார். சமணமதத்தில் ப்ரஸித்தமாக ஒரு விரதமுண்டு; அதாவது – பெருஞ்சோறுண்ணுதல். (இது வெஞ்சோறுண்ணுதல் எனவும் வேகு சோறுண்ணுதல் எனவும் வ்யவஹரிக்கப்படுமாம்.) தயிர்ச்சோறு, செஞ்சோறு, கஞ்சிக்சோறு, என்றிப்படி சில சோறுகளைத் தின்றுகொண்டு தெருக்களில் திரிந்து கொண்டிருப்பார்களாம்; “தருக்கினால் சமண் செய்து சோறு தண் தயிரினால் திரளை, மிடற்றிடை நெருக்குவார்” என்று கீழ் இரண்டாம்பத்திலும் முதற்றிருமொழியி லருளிச்செய்யப்பட்டது காண்க. இப்படி, ஏதோ விரதஞ்செய்வதாகப் பேரிட்டுக்கொண்டு செஞ்சோற்றையும் கஞ்சியையும் உட்கொண்டு தெருத்திரிகின்ற வைதிககோஷ்டீ பஹிஷ்டர்களின் வாய்மொழிகளைத் திரஸ்கரித்து விட்டு வந்து உற்றது பற்றுங்கள் என்றாராயிற்று. திருவிற்பொலிமறையோர் = திரு என்றது ஐச்வர்யத்தை யாகவுமாம். உருவக் குறளடிகள் = பண்டு வாமநாவதாரஞ் செய்தருளின பெருமானே இங்கு அர்ச்சையாயெழுந்தருளியிருக்கிறனென்கை. அடிகள்-ஸ்வாமி.


    1630.   
    பறையும் வினைதொழுது உய்ம்மின்நீர்*  பணியும் சிறு தொண்டீர்!* 
    அறையும் புனல் ஒருபால்*  வயல் ஒருபால் பொழில் ஒருபால்*
    சிறைவண்டுஇனம் அறையும்*  சிறு புலியூர்ச் சலசயனத்து- 
    உறையும் இறைஅடிஅல்லது*  ஒன்று இறையும் அறியேனே* 

        விளக்கம்  


    • க்ஷுத்ர விஷயங்களிலே தொண்டு பட்டுத் திரிகின்றவர்களை யழைத்து ‘நீங்கள் இப்படியிராமே வகுத்த விஷயத்தில் தொண்டுபடுங்கள்’ என்று முதலடியால் உபதேசித்து மற்ற மூன்றடிகளால் தமது உறுதியை அவர்கட்கு வெளியிடுகிறார். நான் இருக்கிறபடியைக் கண்டீர்களன்றோ, நீங்களும் இப்படியிருந்து வாழவேண்டாவோவென்கை. பணியுஞ்சிறு தொண்டீர் ‘என்பதைச் சிறுதொண்டர்க்கு விசேஷணமாக்கி யுரைத்தல் ஒன்று; (தகுதியற்றவர்களைப் பணிகின்ற நீசர்களே! என்றபடி.) அன்றியெ ‘பணியும்’ என்பதை ஏவற் பன்மை வினை முற்றாகக் கொண்டு எம்பெருமானைப் பணியுங்கள் என்னவுமாம். ‘பணிமின்’ என்றும் பாடமுரைப்பர்.


    1631.   
    வான்ஆர் மதி பொதியும் சடை*  மழுவாளியொடு ஒருபால்* 
    தான்ஆகிய தலைவன் அவன்*  அமரர்க்குஅதிபதிஆம்*
    தேன்ஆர்பொழில் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து 
    ஆன்ஆயனது*  அடிஅல்லது*  ஒன்று அறியேன் அடியேனே*

        விளக்கம்  


    • சிறு தொண்டர்களிடத்தில் நம்முடைய உபதேசம் பலிப்பது அரிது என்று துணிந்து உபதேசத்தை நிறுத்தித் தமது உறுதியையே இனி வெளியிட்டருளுகிறார். நம்முடைய உறுதியை வெளியிட்டுக் கொண்டோமாகில் இது கேட்டு இவர்கள் திருந்தக்கூடும் என்று நினைத்து அருளிச் செய்கிறாராகவுமாம், “ஏறாளுமிறையோன் திசைமுகனுந் திருமகளுங், கூறாளுந்தனியுடம்பன்” என்கிறபடியே சிவனுக்குத் தன் திருமேனியிலே ஒரு கூறு கொடுத்திருப்பவனும் தேவேந்திரனுக்கு அந்தர்யாமியாயிருந்து ஸ்வர்க்க லோகத்தை யாள்பவனுமான சிறுபுலியூர்ச் சலசயனப் பெருமானது திருவடிகளையன்றி மற்றொன்று மறிகின்றிலே னென்றாராயிற்று.


    1632.   
    நந்தா நெடுநரகத்திடை*  நணுகாவகை*  நாளும்- 
    எந்தாய்! என*  இமையோர் தொழுதுஏத்தும் இடம்*  எறிநீர்ச்-
    செந்தாமரை மலரும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அம்தாமரை அடியாய்!*  உனதுஅடியேற்கு அருள் புரியே*  

        விளக்கம்  



    1633.   
    முழுநீலமும் மலர்ஆம்பலும்*  அரவிந்தமும் விரவிக்* 
    கழுநீரொடு மடவார்அவர்*  கண்வாய் முகம் மலரும்*
    செழுநீர்வயல் தழுவும்*  சிறுபுலியூர்ச் சலசயனம்* 
    தொழும்நீர் மைஅதுஉடையார்*  அடி தொழுவார் துயர்இலரே* 

        விளக்கம்  


    • சிறுபுலியூரும் வேண்டா; அங்குள்ள சலசயனத் திருக்கோயிலும் வேண்டா; அதிலுள்ள பெருமானும் வேண்டா; அத்திருக்கோயிலைத் தொழுவதையே இயற்கையாகவுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் யாவருளர், அவர் திருவடிகளே சரணமென்றிருப்பார்க்குத் துயரெல்லாம் தொலைந்திடு மென்கிறார். வொண்ணாதபடியிருக்கு மென்கிறார் முன்னடிகளில்; நீலோற்பலங்களைப் பார்த்தால் அவ்வூர்ப் பெண்களினுடைய கண்களாகவும், அரக்காம்பல்களைப் பார்த்தால் அப்பெண்களது அதரமாகவும், தாமரைப்பூக்களைப் பார்த்தால் அவர்களது முகங்களாகவும் விளங்குகின்றமையால் உள் வீதிகளுக்கும் வெளி நிலங்களுக்கும் வாசிதெரிவரிதாம்.


    1634.   
    சேய்ஓங்கு*  தண் திருமாலிருஞ்சோலை மலை உறையும்- 
    மாயா*  எனக்குஉரையாய் இது*  மறை நான்கின்உளாயோ?*
    தீஓம் புகை மறையோர்*  சிறுபுலியூர்ச் சலசயனத்- 
    தாயோ?*  உனதுஅடியார் மனத்தாயோ?*  அறியேனே*   (2)

        விளக்கம்  


    • ஆழ்வார் தமக்குண்டான ஒரு ஸந்தேஹத்தை விண்ணப்பஞ் செய்கிறார். திருமாலே! நீ வேதங்களிலிருக்கின்றாயா? சிறுபுலியூர்ச் சலசயனக் கோயிலில் இருக்கின்றாயா? அன்பர்தம் உள்ளத்திலிருக்கின்றாயா? இன்னவிடத்திலிருக்கின்றாயென்று தெரியவில்லை; அடியேனக்குச் தெரியவருளிச் செய்யவேணுமென்கிறார். சிறுபுலியூர் விஷயமான இத்திருமொழியில் இத்தலத்துப் பெருமானை விளிக்கவேண்டியிருக்க ‘திருமாலிருஞ்சோலைமலையுறையும் மாயா!’ என்று அழகரை விளித்தது என்னொவெனில்; நால்வேதங்கள், சிறுபுலியூர்ச் சலசயனம், அடியார் மனம் என்னுமிடங்களில் எல்லாமுள்ள எம்பெருமான் ஒருவனே என்று உண்மையை விளக்குதல் இப்பாட்டின் உள்ளறையாதலால் திருமாலிருஞ்சோலைமலையில் உறைபவனும் இவனே யென்பது விளியினால் பெறப்படும். எம்பெருமானே! வேதமும் வைதிகருடைய ஹ்ருதயமும் உனக்கு இருப்பிடமென்று சாஸ்த்ரங்களிலே கேட்கலாயிருந்தாலும் இப்போது ப்ரத்யக்ஷத்தில் சிறுபுலியூர்ச் சலசயனத்திலிருப்புத்தான் காணலாயிருக்கின்றது; ஆகிலும் ப்ரத்யக்ஷப்ரமாணத்தையே ப்ரதாநமாகக் கொண்டு சாஸ்தரப்மாணங்களை உபமர்த்திக்கும் படியான ஸாஹஸம் அடியேனுக்கு இல்லாமையால் உன் இருப்பிடம் இன்னதென்று மிடத்தை நீயே சோதிவாய் திறந்து அருளிச் செய்தருளா யென்கிறார் என்று சிலர் நிர்வஹிப்பர்கள். இவ்விடத்துப் பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்- “இத்தால் சொல்லிற்றாய்த்து – ஸௌபரி பல வடிவுகொண்டாப்போலே இவ்வோ விடங்கள் தோறும் இனி அவ்வருகில்லை யென்னும்படி குறையற வர்த்திக்கிறபடியைக் காட்டிக்கொடுத்தான்.” என்பதாம். சாஸ்த்ரங்களைக்கொண்டே அறிய வேண்டிய அப்ராக்ருத திவ்யமங்கள விக்ரஹங்களையும், கண்ணால் கண்டு அநுபவிக்கலாம்படியான அர்ச்சாரூபங்களையும், நெஞ்சாலே அநுபவிக்கலாம்படி அந்தர்யாமியாயிருக்கும் வடிவுகளையும் ஒருகாலே ஸேவை ஸாதிப்பித்த படியாலே கண்டு ஆச்சரியப்படுகிறாரென்றவாறு. இப்பாசுரத்தைச் சிறுபான்மை அடியொற்றி ஆழ்வான் வரதராஜஸ்தவத்தில் என்றருளிச்செய்த ச்லோகம் இங்கு ஸமரிக்கத்தகும்.


    1635.   
    மைஆர் வரிநீல*  மலர்க்கண்ணார் மனம் விட்டிட்டு* 
    உய்வான் உனகழலே*  தொழுது எழுவேன்*  கிளிமடவார்- 
    செவ்வாய் மொழி பயிலும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஐவாய் அரவுஅணைமேல்*  உறை அமலா! அருளாயே* 

        விளக்கம்  


    • மாதர்களின் கண்ணழகிலீடுபட்டு அழிந்துபோகாமே உன்திறத்திலீடுபட்டு உய்வு பெறவேண்டி, சிறுபுலியூர்ச் சலசயனத்தெம்பிரானே! உன்னைத் தொழுகின்றேன்; உபேக்ஷியாமல் அருள்புரிய வேணுமென்கிறார். கிளிமடவார் செவ்வாய்மொழிபயிலும் இரண்டு வகையாகப் பொருள் கொள்ளலாம்; கிளிபோன்ற மடவாருடைய சிவந்த வாயில் நின்று முண்டான இன் சொற்களானவை பயிலும் – நிரம்பியிருக்கப்பெற்ற சிறுபுலியூர் என்றும்; கிளிகளானவை மடவாருடைய செவ்வாய்மொழிகளை அநுவாதம் செய்யப்பெற்ற சிறுபுலியூர் என்றும்.


    1636.   
    கருமாமுகில் உருவா!*  கனல் உருவா! புனல் உருவா* 
    பெருமால் வரை உருவா!*  பிறஉருவா! நினதுஉருவா!*
    திருமாமகள் மருவும்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    அருமா கடல்அமுதே!*  உனது அடியே சரண்ஆமே*  (2)

        விளக்கம்  


    • இப்பாசுரத்தின் இனிமை கனிந்த நெஞ்சினரால் நன்கு அனுபவிக்கத்தக்கது. ஆழ்வார் தமது உள்ளன்பு நன்கு விளங்க எம்பெருமானை வாயார விளிக்கின்றார். காணும்போதே ஸகலதாபமும் தீரும்படி பெரிய காளமேகம் போன்ற திருவுருவத்தை யுடையவனே!, தீயபுந்தியையுடைய கம்ஸன்போல்வார்க்குக் கிட்டவொண்ணாதபடி நெருப்புப் போன்றிருப்பவனே!, அக்ரூரர், விதுரர், மாலாகாரர் போல்வாரான மெய்யன்பர்க்குத் தண்ணீர்போலே விரும்பத்தக்க ரூபத்தை யுடையவனே!, மலைபோல் எல்லைகாண வொண்ணாத ப்ரகாரத்தை யுடையவனே!, “நீராய் நிலனாய்த் தீயாய்க் காலாய் நெடுவானாய், சீரார் சுடர்களிரண்டாய் சிவனாயயனானாய்” “தாயாய்த் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்” இத்யாதிப்படியே எல்லாவடிவுமானவனே! இப்படி ஜகதாகாரனாயிருப்பதுந்தவிர “கூராராழி வெண்சங்கேந்தி” என்கிற அஸாதாரண வடிவுகளையுமுடையவனே!, பெரிய பிராட்டியார் நித்யவாஸம் பண்ணப்பெற்ற சிறுபுலியூர்ச் சலசயனத்துப் பரமபோக்யனே! உன் திருவடிகளே சரணம் என்றாராயிற்று,


    1637.   
    சீர்ஆர் நெடுமறுகின்*  சிறுபுலியூர்ச் சலசயனத்து* 
    ஏர்ஆர்முகில் வண்ணன்தனை*  இமையோர் பெருமானை*
    கார்ஆர் வயல் மங்கைக்குஇறை*  கலியன்ஒலி மாலை* 
    பாரார் இவை பரவித்தொழப்*  பாவம் பயிலாவே*  (2)

        விளக்கம்  


    • செல்வம் மிக்க திருவீதிகளை யுடைய சிறுபுலியூரில் சலசயனக்கோயிலிலுறையும் பெருமான் விஷயமாகத் திருமங்கையாழ்வார் திருவாய் மலர்ந்தருளிய இத்திருமொழியை வாயாலேசொல்லி ஆச்ரயிக்கவே, பாபங்கள் தாமே ‘நமக்கு இவ்விடம் இருப்பல்ல’ என்று விட்டுப்போம் என்று பயனுரைத்ததாயிற்று.