2 எண்ணிக்கை பாடல் பாட

ஒரு பேருந்தி இருமலர்த் தவிசில்,* 
ஒருமுறை அயனை ஈன்றனை,* ஒருமுறை- 
இருசுடர் மீதினில் இயங்கா,* மும்மதிள்- 
இலங்கை இருகால் வளைய,* ஒருசிலை- 
ஒன்றிய ஈர்எயிற்று அழல்வாய் வாளியில்- 
அட்டனை,* மூவடி நானிலம் வேண்டி,* 
முப்புரி நூலொடு மான்உரிஇலங்கு-
மார்வினில்,* இருபிறப்பு ஒருமாண்ஆகி,* 
ஒருமுறை ஈரடி மூவுலகு அளந்தனை,* 
நால்திசை நடுங்க அம்சிறைப் பறவை-
ஏறி,* நால்வாய் மும்மதத்து இருசெவி- 
ஒருதனி வேழத்து அரந்தையை,* ஒருநாள்-
இருநீர் மடுவுள் தீர்த்தனை,* முத்தீ- 
நான்மறை ஐவகை வேள்வி,* அறுதொழில்-
அந்தணர் வணங்கும் தன்மையை,* ஐம்புலன்-
அகத்தினுள் செறித்து,* நான்குஉடன் அடக்கி- 
முக்குணத்து இரண்டுஅவை அகற்றி,* ஒன்றினில்-
ஒன்றி நின்று,* ஆங்கு இரு பிறப்புஅறுப்போர்-
அறியும் தன்மையை,* முக்கண் நால்தோள்- 
ஐவாய் அரவோடு* ஆறுபொதி சடையோன்- 
அறிவுஅரும் தன்மைப் பெருமையுள் நின்றனை,* 
ஏழ்உலகு எயிற்றினில் கொண்டனை,* கூறிய-
அறுசுவைப் பயனும் ஆயினை,* சுடர்விடும்-
ஐம்படை அங்கையுள் அமர்ந்தனை,* சுந்தர-
நால்தோள் முந்நீர் வண்ண,* நின் ஈரடி-
ஒன்றிய மனத்தால்,* ஒருமதி முகத்து-
மங்கையர் இருவரும் மலரன,* அங்கையில்-
முப்பொழுதும் வருட அறிதுயில் அமர்ந்தனை,* 
நெறிமுறை நால்வகை வருணமும் ஆயினை,* 
மேதகும் ஐம்பெரும் பூதமும் நீயே,*  
அறுபதம்முரலும் கூந்தல் காரணம்*
ஏழ்விடை அடங்கச் செற்றனை,*  அறுவகைச்-
சமயமும் அறிவரு நிலையினை,* ஐம்பால்-
ஓதியை ஆகத்து இருத்தினை,* அறம்முதல்-
நான்கு அவைஆய் மூர்த்தி மூன்றாய்* 
இருவகைப் பயன்ஆய் ஒன்றுஆய் விரிந்து-
நின்றனை,* குன்றா மதுமலர்ச் சோலை- 
வண்கொடிப் படப்பை,* வருபுனல் பொன்னி-
மாமணி அலைக்கும்,* செந்நெல் ஒண்கழனித்- 
திகழ்வனம் உடுத்த,* கற்போர் புரிசைக் -
கனக மாளிகை,* நிமிர்கொடி விசும்பில்- 
இளம்பிறை துவக்கும்,* செல்வம் மல்கு தென்- 
திருக்குடந்தை,* அந்தணர் மந்திர மொழியுடன்- 
வணங்க,* ஆடுஅரவுஅமளியில் அறிதுயில்- 
அமர்ந்த பரம,*  நின் அடிஇணை பணிவன்- 
வரும்இடர் அகல மாற்றோ வினையே   (2)