2 எண்ணிக்கை பாடல் பாட
இருளிரியச் சுடர்மணிகள் இமைக்கும் நெற்றி* இனத்துத்தி அணிபணம் ஆயிரங்களார்ந்த* அரவரசப்
பெருஞ்சோதி அனந்தன் என்னும்* அணிவிளங்கு ம் உயர்வெள்ளை அணையை மேவி*
திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி* திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும்*
கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு* என் கண்ணிணைகள் என்றுகொலோ களிக்கும் நாளே (2)
வன் பெரு வானகம் உய்ய அமரர் உய்ய மண் உய்ய* மண்-உலகில் மனிசர் உய்ய*
துன்பம் மிகு துயர் அகல அயர்வு ஒன்று இல்லாச் சுகம் வளர* அகம் மகிழும் தொண்டர் வாழ *
அன்பொடு தென்திசை நோக்கிப் பள்ளிகொள்ளும்* அணி-அரங்கன் திருமுற்றத்து அடியார் தங்கள்*
இன்ப மிகு பெருங் குழுவு கண்டு* யானும் இசைந்து உடனே என்றுகொலோ இருக்கும் நாளே (2)
திடர் விளங்கு கரைப் பொன்னி நடுவுபாட்டுத்* திருவரங்கத்து அரவணையிற் பள்ளிகொள்ளும்*
கடல் விளங்கு கருமேனி அம்மான்தன்னைக்* கண்ணாரக் கண்டு உகக்கும் காதல்தன்னால்*
குடை விளங்கு விறல்-தானைக் கொற்ற ஒள் வாள்* கூடலர்கோன் கொடைக் குலசேகரன் சொற் செய்த*
நடை விளங்கு தமிழ்-மாலை பத்தும் வல்லார்* நலந்திகழ் நாரணன்-அடிக்கீழ் நண்ணுவாரே (2)
தேட்டு அருந் திறல்-தேனினைத்* தென் அரங்கனைத்* திருமாது வாழ்
வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி* மால் கொள் சிந்தையராய்*
ஆட்டம் மேவி அலந்து அழைத்து* அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்*
ஈட்டம் கண்டிடக் கூடுமேல்* அது காணும் கண் பயன் ஆவதே (2)
அல்லி மா மலர்-மங்கை நாதன்* அரங்கன் மெய்யடியார்கள் தம்*
எல்லை இல் அடிமைத் திறத்தினில்* என்றும் மேவு மனத்தனாம்*
கொல்லி-காவலன் கூடல்-நாயகன்* கோழிக்கோன் குலசேகரன்*
சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்* தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)
மெய் இல் வாழ்க்கையை* மெய் எனக் கொள்ளும்* இவ்
வையம்தன்னொடும்* கூடுவது இல்லை யான்*
ஐயனே* அரங்கா என்று அழைக்கின்றேன்*
மையல் கொண்டொழிந்தேன்* என்தன் மாலுக்கே (2)
அங்கை-ஆழி* அரங்கன் அடியிணை*
தங்கு சிந்தைத்* தனிப் பெரும் பித்தனாய்க்*
கொங்கர்கோன்* குலசேகரன் சொன்ன சொல்*
இங்கு வல்லவர்க்கு* ஏதம் ஒன்று இல்லையே (2)
ஊன் ஏறு செல்வத்து* உடற்பிறவி யான் வேண்டேன்*
ஆனேறு ஏழ் வென்றான்* அடிமைத் திறம் அல்லால்*
கூன் ஏறு சங்கம் இடத்தான்* தன் வேங்கடத்துக்*
கோனேரி வாழும்* குருகாய்ப் பிறப்பேனே (2)
ஆனாத செல்வத்து* அரம்பையர்கள் தற் சூழ*
வான் ஆளும் செல்வமும்* மண்-அரசும் யான் வேண்டேன்*
தேன் ஆர் பூஞ்சோலைத்* திருவேங்கடச் சுனையில்*
மீனாய்ப் பிறக்கும்* விதி உடையேன் ஆவேனே
செடியாய வல்வினைகள் தீர்க்கும்* திருமாலே*
நெடியானே வேங்கடவா* நின் கோயிலின் வாசல்*
அடியாரும் வானவரும்* அரம்பையரும் கிடந்து இயங்கும்*
படியாய்க் கிடந்து* உன் பவளவாய் காண்பேனே (2)
மன்னிய தண் சாரல்* வட வேங்கடத்தான்தன்*
பொன் இயலும் சேவடிகள்* காண்பான் புரிந்து இறைஞ்சிக்*
கொல் நவிலும் கூர்வேற்* குலசேகரன் சொன்ன*
பன்னிய நூற் தமிழ்-வல்லார்* பாங்காய பத்தர்களே (2)
தரு துயரம் தடாயேல்* உன் சரண் அல்லால் சரண் இல்லை*
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்* வித்துவக்கோட்டு அம்மானே*
அரி சினத்தால் ஈன்ற தாய்* அகற்றிடினும்* மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி* அதுவே போன்று இருந்தேனே (2)
வித்துவக்கோட்டு அம்மா* நீ வேண்டாயே ஆயிடினும்*
மற்று ஆரும் பற்று இலேன் என்று* அவனைத் தாள் நயந்து*
கொற்ற வேல்-தானைக்* குலசேகரன் சொன்ன*
நற்றமிழ் பத்தும் வல்லார்* நண்ணார் நரகமே (2)
ஏர் மலர்ப் பூங்குழல் ஆயர் மாதர்* எனைப் பலர் உள்ள இவ் ஊரில்* உன்தன்
மார்வு தழுவுதற்கு* ஆசையின்மை அறிந்தறிந்தே உன்தன் பொய்யைக் கேட்டு*
கூர் மழை போல் பனிக் கூதல் எய்திக்* கூசி நடுங்கி யமுனை யாற்றில்*
வார் மணற் குன்றிற் புலர நின்றேன்* வாசுதேவா உன் வரவு பார்த்தே (2)
அல்லி மலர்த் திருமங்கை கேள்வன் தன்னை நயந்து* இள ஆய்ச்சிமார்கள்*
எல்லிப் பொழுதினில் ஏமத்து ஊடி* எள்கி உரைத்த உரையதனைக்*
கொல்லி நகர்க்கு இறை கூடற்கோமான்* குலசேகரன் இன்னிசையில் மேவிச்*
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும்* சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பந் தானே. (2)
ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ* அம்புயத் தடங் கண்ணினன் தாலோ*
வேலை நீர் நிறத்து அன்னவன் தாலோ* வேழப் போதகம் அன்னவன் தாலோ*
ஏல வார் குழல் என்மகன் தாலோ* என்று என்று உன்னை என் வாயிடை நிறையத்*
தால் ஒலித்திடும் திருவினை இல்லாத்* தாயரிற் கடை ஆயின தாயே (2)
மல்லை மா நகர்க்கு இறையவன்தன்னை* வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து*
எல்லையில் பிள்ளை செய்வன காணாத்* தெய்வத் தேவகி புலம்பிய புலம்பல்*
கொல்லி காவலன் மால் அடி முடிமேல்* கோலமாம் குலசேகரன் சொன்ன
நல்லிசைத் தமிழ் மாலை வல்லார்கள்* நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே (2)
மன்னு புகழ்க் கௌசலைதன்* மணிவயிறு வாய்த்தவனே*
தென் இலங்கைக் கோன் முடிகள்* சிந்துவித்தாய் செம்பொன் சேர்*
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் கருமணியே*
என்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ (2)
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*
ஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ (2)
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் காகுத்தன்-
தன் அடிமேல்* தாலேலோ என்று உரைத்த* தமிழ்மாலை*
கொல் நவிலும் வேல் வலவன்* குடைக் குலசேகரன் சொன்ன*
பன்னிய நூல் பத்தும் வல்லார்* பாங்காய பத்தர்களே (2)
வன் தாளின் இணை வணங்கி வளநகரம் தொழுது ஏத்த* மன்னன் ஆவான்-
நின்றாயை* அரியணை மேல் இருந்தாயை* நெடுங் கானம் படரப் போகு-
என்றாள் எம் இராமாவோ* உனைப் பயந்த* கைகேசி தன் சொற் கேட்டு*
நன்றாக நானிலத்தை ஆள்வித்தேன்* நன்மகனே உன்னை நானே* (2)
ஏர் ஆர்ந்த கரு நெடுமால் இராமனாய்* வனம் புக்க அதனுக்கு ஆற்றாத்*
தார் ஆர்ந்த தடவரைத் தோள் தயரதன் தான் புலம்பிய* அப் புலம்பல்தன்னை*
கூர் ஆர்ந்த வேல் வலவன்* கோழியர்கோன் குடைக் குல சேகரன் சொற் செய்த*
சீர் ஆர்ந்த தமிழ்மாலை இவை வல்லார்* தீ நெறிக்கண் செல்லார் தாமே (2)
அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்* அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்*
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை* என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்* இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று* அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்* நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*
SUBSCRIBE TO OUR WHATSAPP BROADCAST TO RECEIVE
TAMIL VEDAM UPDATES. FILL IN THE DETAILS BELOW AND CLICK JOIN US