விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    மின் அனைய நுண்ணிடையார்*  உருப்பசியும் மேனகையும்*
    அன்னவர்தம் பாடலொடும்*  ஆடல் அவை ஆதரியேன்
    தென்ன என வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துள்*
    அன்னனைய பொற்குவடு ஆம்*  அருந்தவத்தேன் ஆவேனே

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

மின் அனைய நுண் இடையார் - மின்னல் போல் ஸூக்ஷ்மமான இடையே உடையவர்களாகிய;
உருப்பசியும் மேனகையும் அன்னவர் தம் - ஊர்வசியும் மேனகையும் போலழகியவர்களான ஸ்த்ரீகளின்;
பாடலொடும் ஆடல் அவை - பாட்டும் ஆட்டமுமாகிய அவற்றை;
ஆதரியேன் - யான் விரும்பவில்லை;

விளக்க உரை

உரை:1

“தம்பகமாய் நிற்குந் தவமுடையேனாவேன்” என்றவர் சிறிது யோசித்த வளவில், அரசாங்கத்தார், மலையிலுள்ள செடி செட்டுகளை அடிக்கடி சோதிப்பவராதலால் திடீரென்று அவர்கள் தம்பகத்தைக் களைத்தெறிந்திடக் கூடுமெனவும், அது தானே விரைவில் தீந் தொழியக்கூடுமெனவும் நினைத்து, அங்ஙனன்றி என்றும் ஒரு படியா யிருக்கும்படி அத்திருமலையில் ஒரு பாகமாகக் கடவேனென்று அபேக்ஷிக்கின்றார். முன்னிரண்டடிகளால் தேவலோக போகத்தில் தமக்கு எள்ளளவும் நசை யில்லாமையை வெளியிட்டார்.

உரை:2

முள்செடியாய் நின்றால் எனக்கு மட்டுமே பயன். எம்பெருமானுக்கோ அடியவர்களுக்கோ எந்த பயனும் இல்லை. அதனால் திருவேங்கடமலையில் இருக்கும் பல சிகரங்களுக்குள் ஒரு சிகரமாக நான் நின்றால் இறைவன் இருக்கும் இடம் இது என்று அடியவர்களுக்கு உணர்த்தும் பேறு கிடைக்கும். (சிகரம் என்றால் மலைச் சிகரம் என்றும் கோபுரம் என்றும் பொருள் தரும்).
மின்னலைப் போன்ற நுண்ணிய இடையினை உடைய ஊர்வசியும் மேனகையும் அவர்களைப் போன்றவர்களும் பாடியும் ஆடியும் மகிழ்விக்கும் இன்பங்களை நான் விரும்பேன். அவர்களின் பாடல் ஆடலைவிட இனிமையாக தேனினைப் போல் (தென்ன வென) வண்டுக் கூட்டங்கள் பண்களைப் பாடி ஆடும் திருவேங்கடத்துள் அழகு மிகுந்த பொற்சிகரமாக ஆகும் அரிய தவத்தை உடையவன் ஆவேனே.

English Translation

I do not crave for the song and dance performances of Urvasis and Menakas of lightning-thin waists. I wish to be a golden peak on Venkatam hill, and enjoy the dance of bumble-bees that hum Tena-Tena on Panns.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்