விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  என்றும் ஒருநாள்*  ஒழியாமை யான்இரந்தால்,* 
  ஒன்றும் இரங்கார் உருக்காட்டார்,*-குன்று-
  குடைஆக*  ஆகாத்த கோவலனார்,*  நெஞ்சே!- 
  புடைதான் பெரிதே புவி.  

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

ஒன்றும் இரங்கார் - சிறிதும் தயவு செய்கிறாரில்லை;
உரு காட்டார் - தன் திருமேனியைக் காட்டுகிறாரில்லை;
நெஞ்சே - ஓ மனமே!
புவி - நாமிருக்கும் இடம்
பெரிதே புடை தான் - (அவருடைய அருள் வெள்ளம் ஏறிப்பாய முடியாத) மிகப் பெரிய மேட்டு நிலமோ?

விளக்க உரை

சொன்னபடி போலிகண்டு மேல்விழும்படியான காதலர் கிளர்ந்திருக்கச் செய்தேயும் அப்பெருமானைக் கண்ணாலே கண்டு அநுபவிக்கப்பெறாமையாலே வருந்தி, ‘பேரருளாளனான அப்பெருமான் தன் திருமேனியை நமக்குக் காட்டுகின்றானில்லையே!’ என்று தளர்ச்சி தோற்றப் பேசுகிறார். நான் ஒழிவில்காலமெல்லாம் அல்லும் பகலும் கதறிக்கதறி வேண்டிக்கொண்டாலும் அப்பெருமான் சிறிதும் நம்மேல் இரக்கம் காட்டுகின்றாரில்லையே!; அவர்க்கு இயற்கையாக அருள் கிடையாதென்றுதான் நாம் நினைக்கமுடியுமோ? இந்திரன் பசிக்கோபத்தினால் ஏழு நாள் விடாமழை பெய்வித்தகாலத்திலே கோவர்த்தனத்தைக் குடையாகவேந்திநின்ற கோக்களையும் கோவலரையும் பரிந்து காத்தருளின பரமதயாளுவன்றோ அவர்; அப்படிப்பட்ட பேரருளாளன் நம்மேல் அருள் செய்கின்றிலனென்றால் இஃது என்ன கொடுமை!. நெஞ்சே! புடைதான் பெரிதே புவி= இந்த வாக்கியத்தின் ஆழ்பொருளைக் கண்டறிந்து பெரியவாச்சான்பிள்ளை அருளிச் செய்யுமழகு பாரீர்; - “அவர்க்கு நீர்மையில்லையென்னப்போகாதிறே; அவர்நீர்மை ஏறிப்பாயாததோரிடந்தேடி எங்கே, கிடந்தோம்!.’ என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி. மேடான இடத்தைப் புடையென்று சொல்வதுண்டாகையாலே, புவி புடை பெரிதே= நாமிருக்குமிடம் (அவருடைய கருணைப் பெருவெள்ளம் ஏறிப்பாயமுடியாத) மேட்டுநிலமோ? என்றதாயிற்று. இதற்கு மற்றொருபடியாகவும் பொருள் கொள்ளலாம்; “புடைபெரிது” என்றால் ‘விசாலமானது’ என்று ப்ரஸித்தமாகச் சொல்லுவதுண்டாகையாலே அப்பொருளையே இங்குங்கொண்டு, ‘இந்தப் பூமி விசாலமன்றோ?” என்றதன் கருத்தாவது- விசாலமான இந்த நிலவுலகத்திலே எம்பெருமா-னுடைய அருள்வெள்ளம் பாயவொண்ணாத எந்த மூலையிலே கிடந்தோம்! என்றதாகலாம். முந்தின பொருளே சுவையுடைத்து.

English Translation

Everyday without fail, I offer worship but the cowherd Lord who lifted a mountain to protect the cows does not come, he has no pity. O Heart! does the Earth extend only on one side?

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்