விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  கலந்து நலியும்*  கடுந்துயரை நெஞ்சே,* 
  மலங்க அடித்து மடிப்பான்,*  -விலங்கல்போல்-
  தொல்மாலை கேசவனை*  நாரணனை மாதவனை,* 
  சொல்மாலை எப்பொழுதும் சூட்டு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

கடு துயரை - கடுமையான துக்கங்களை
மலங்க அடித்து மடிப்பான் - முகம் சிதறப் புடைத்துத் துரத்த வேண்டில்,
விலக்கல்போல் - மலைபோன்றவனும்
தொல் மாலை - அநாதிசாலமாக நம்மேல் வ்யாமோஹமுடையவனும்
கேசவனை - சிறந்த திருக்குழல் கற்றையை யுடையவனும்

விளக்க உரை

இது முதல் மூன்று பாசுரங்களில் ஆழ்வார் தமது திருவுள்ளத்திற்கு நன்மை உபதேசித்தருளுகிறார். நெஞ்சே; நம்முடன் கூடவேயிருந்து நம்மைத் துன்பப்படுத்துகின்றனவாய், அநுபவித்தே ஒழிக்க வேண்டுமமையான பாவங்களை முகஞ்சிதறப்புடைத்து, பின் பொருகாலும் நம்மருகே நாடவொட்டாமல் துரத்தவேண்டுமானால் எம்பெருமான் விஷயத்திலே நல்ல பாசுரங்களை இடைவிடாது பேசிக்கொண்டேயிரு என்கிறார் இப்பாட்டில். துயர் என்று துக்கங்களையும் துக்கங்களுக்குக் காரணமான பாவங்களையுஞ் சொல்லும். அசேதநங்களான பாவங்களை மலங்கவடித்தால் அஸம்பாவிதமாயினும், அவற்றினிடத்துத் தமக்குள்ள ரோஷத்தைக் காட்டினாராமித்தனை. மடிப்பான்- ஆன்விகுதிபெற்ற வினையெச்சம். விலங்கல்போல்தொன்மாலை = ‘விலங்கல்’ என்று மலைக்குப்பெயர்; மலையானது ஒருவராலும் அசைக்க முடியாமல் ஸ்திரப்ரதிஷ்டையாக இருப்பதுபோல, எம்பெருமான் குத்ருஷ்டிகள் முதலான மாதாந்தரஸ்தர்களுடைய எப்படிப்பட்ட குத்ஸிதவாதங்களாலும் சலிப்பிக்க முடியாமல் வேதவேதாந்தங்களில் ஸ்திரப்ரதிஷ்டையையுடையனாயிருத்தல் பற்றி மலையை உவமையாகச் சொல்வார்கள். மற்றும் பல காரணங்களுமுண்டு. “நின்ற குன்றத்தினை நோக்கி நெடுமாலே’ வாவென்றுகூவும்” என்ற திருவாய்மொழியும் இங்கு அநுஸந்திக்கத்தகும். மால் என்பதற்கு ‘மோஹமுடையவன்’ என்று பொருள்; ‘தொல் மால்’ என்றது - நெடுநாள் முதற்கொண்டே நம்மேல் மோஹமுடையவன் என்றபடி: “எதிர் சூழல்புக்கு எனைத்தோர் பிறப்பும் எனக்கேயருள்கள் செய்ய, விதிசூழ்ந்ததால் எனக்கேலெம்மான் திரிவிக்கிரமனையே.” என்று திருவாய் மொழியிலருளிச் செய்வது காண்க. கேசவன் என்பதற்கு- சிறந்த மயிர்முடியையுடையவன் என்றும், பிரமனுக்கும் சிவனுக்கும் தலைவன் என்றும், கேசி யென்னும் பெயரையுடையவனாய்க் குதிரை வடிவங்கொண்டு நலியவந்த அசுரனைக் கொன்றவனென்றும் மூன்றுவகையாகப் பொருள் கூறுவதுண்டு. சொல்மாலை சூட்டு = அடியார்களின் வாயில் நின்றும் வருகிற பாசுரம் எம்பெருமானுக்குப் பூமாலைபோன்று பரமபோக்யமாயிருத்தலால் ‘சொல்மாலை’ என்பது வழக்கம். பூமாலையைத் தலைமேலணிந்து மகிழ்வது போல, இப்படிப்பட்ட அருளிச்செயல்களையும் எம்பெருமான் தலைதுலுக்கிக்கொண்டாடுவன் என்பது தோன்ற ‘சூட்டு’ எனப்பட்டது. “சூட்டினேன் சொல்மாலை’ னஎ“றார் பொய்கையாழ்வாரும் உலகில் மாதர்கட்குப் பூமாலையினால் அழகு உண்டாவது போலே எம்பெருமானுக்கு அருளிச் செயல்களினால் அழகு உண்டாகுமென்க.

English Translation

O, The mountain-like adorable Lord Kesava, Narayana, Madava is ever ready to destroy the terrible Karmas that torment us, you, - O Heart!, -forever adore him with song garlands.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்