விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  வானோ மறிகடலோ*  மாருதமோ தீயகமோ,* 
  கானோ ஒருங்கிற்று கண்டிலமால்,*  ஆன்ஈன்ற-
  கன்றுஉயர தாம்எறிந்து*  காய்உதிர்த்தார் தாள்பணிந்தோம்,* 
  வன்துயரை ஆஆ! மருங்கு.

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தாள் - திருவடிகளை
பணிந்தோம் - ஆச்ரயித்தோம் (அதன் பிறகு)
வன் துயரை - வலிய (நமது) பாவங்களை
மருங்கு கண்டிலம் - ஸமீபத்தில் காணோம்;
ஒருங்கிற்று - (அப்பாவங்கள்) மறைந்து போனவிடம்
வானோ - ஆகாசமோ?

விளக்க உரை

‘வைகுந்தம் இனிதன்ற’ என்றுரைத்த ஆழ்வாரை நோக்கிச் சிலர், ‘இவ்வீபூதியில் எவ்வளவுதான் குணாநுபவம் பண்ணினாலும் பிரதீபந்தக்ங்கள் கூடவேயிருக்கிற நிலமாதலால் இவ்வநுபவம் நிலைநிற்கக்கூடியதன்றே; பிரதிபநதகங்களுக்கு அஞ்சியிருக்க வேண்டியதுதானே’ என்று சொல்ல; பகவத் விஷயத்தில் நான் இழிந்தவறே பிரதிபந்தகங்கள் போனவிடம் தெரியவில்லை என்கிறார். முள்ளைக்கொண்டே முல்லைக் களைவதுபோல எம்பெருமான் பிரதிபந்தகங்களைத் தொலைப்பதில் மிக்க நிபுணன் என்று காட்டுதற்காகக் கன்றினால் விளவெறிந்த கதையை இங்கு அருளிச்செய்கின்றார்; கம்ஸனாலேவப்பட்ட அசுரர்களில் கபித்தாஸுரன் விளாமரத்தின் வடிவமாய், கண்ணன் தன்கீழ் வரும்பொழுது மேல் விழுந்து கொல்லுவதாக எண்ணிவந்து நிற்க; அதனையறிந்து கிருஷ்ணபகவான், அவ்வாறே தன்னை முட்டிக் கொல்லும்பொருட்டுக் கன்றின்வடிவங்கொண்டு வந்த வத்ஸாஸுரனைப் பின்னிரண்டு கால்களையும் பிடித்து எடுத்துச் சுழற்றி விளாமரத்தின்மேல் எறிய, விளவும் கன்றுமாகிய இருவரும் சிதைந்து தமது அசுரவடிவத்துடனே விழுந்து இறந்தனர் என்பது கன்றுயரவெறிந்து காயுதிர்த்த வரலாறு. இப்படிப்பட்ட எம்பெருமானுடைய திருவடிகளைப் பணிந்த மாத்திரத்திலே எனது பிரதிபந்தக பாபங்களெனல்லாம் இன்னவிடம் போயினவென்று தெரியாதபடி பாறிப்பறந்து போயின; ஆகாசத்திலே மறைந்து போயினவோ, கடலில் ஒளிந்துபோயினவோ, காற்றில் உருமாய்ந்து போயினவோ, நெருப்பிலே விழுந்து நசித்ததுப் போயினவோ, அன்றி வனவாஸ யாத்திரை சென்றனவோ அறிகின்றிலேன்; அவை என்னருகில் இல்லை- என்றாயிற்று. மறிகடல்= மறிதலாவது- அலைகள் மடிந்தும் மடிந்து வீசப்பெறுதல். மாருதம்- வடசொல். “ஒருங்கிற்றும்” என்றும் ஓதுவர். கண்டிலம்- தன்மைப்பன்மை யெதிர்மறை வினைமுற்று. ஆல்- அசை; வியப்புக்குறிப்பிடைச் சொல்லுமாம். ஆனீன்றி கன்று= ‘பசுவினால் பிரஸவிக்கப்பட்ட கன்று’ என்று சொல்வதன் கருத்து யாதெனில்; ‘வத்ஸாஸுரன்’ என்று ஒருவன் திடீரென்று ஆகாசத்தின்நின்றும் வந்து குதித்துவிடவில்லை; அவ்விடத்திலுள்ள பசுவின்கன்றானவொன்றின் மேலே வந்து ஆவேசித்தனன் என்பதைக் காட்டுதலாம். காயுதிர்த்தாள் = ஆறாம் வேற்றுமைத் தொகை. ஆவா- ‘ஹா ஹா!’ என்ற வடமொழி அவ்யயங்களிரண்டு சேர்ந்து ஆவாவெனத் திரிந்தது.

English Translation

We offered worship at the feet of the Lord who threw a calf against a wood-apple tree and felled its fruits. Lot all our terrible miseries have left us without a trace. Wonder where they went? –into the sky, or into the ocean, or into the winds, or into the fire!

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்