விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    காலே பொதத்திரிந்து*  கத்துவராம் இனநாள்,* 
    மாலார் குடிபுகுந்தார் என்மனத்தே,*  -மேலால்-
    தருக்கும்இடம் பாட்டினொடும்*  வல்வினையார் தாம்,*  வீற்று- 
    இருக்கும்இடம் காணாது இளைத்து. 

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

கால் பொத திரிந்து - கால் நோவத்திரிந்து அலைந்ததனால்
மேலால் - முன்பெல்லாம்
தருக்கும் - என்னைத் துன்பப்படுத்திக் கொண்டிருந்த
இடம் பாட்டினொடும் - பெருமையோடே
இளைத்து - வருத்தமுற்று

விளக்க உரை

என் மனத்தே மாலார் குடிபுகுந்தார் = அடியவர்களிடத்திலே மிக்க மோஹங் கொண்டிருக்கின்ற எம்பெருமான் இன்று என்னுடைய நெஞ்சினுள்ளே குடிபுகுந்துவிட்டார்; இருள் மூடிக்கிடந்தவிடத்தில் ப்ரகாசம் வந்து சேர்ந்தால் பிறகு இருள் தன்னடையே விலகிப்போய்விடுவதுபோல், இதுவரையில் இங்கே குடியிருந்த பாவங்கள் இனி இவ்விடத்தில் தங்கமாட்டாமல் கிளம்பிப்போய் ‘இனி நாம் எங்கே சுகமாக வாழலாம்’ என்று இடந்தேடுகின்றன. “ஊரும் நாடு முலகமும் தன்னைப்போல், அவனுடைய பேருந் தார்களுமே பிதற்ற” (திருவாய்மொழி - 6, 7, 2) என்றபடி நான் வாழ்கிற வூரிலே எல்லாரும் என்னைப்போலவே யிருப்பர்களாதலால் அவை குடிபுகுவதற்கு எங்கே இடம் கிடைக்கும்? கால் பாவி நிற்க எங்கும் இடங்கிடைக்காமையினால் பரிச்ரமப்பட்டுத் திரிந்து அலைந்து பார்த்தன. எங்கும் இடம் வாய்க்கவில்லை; “ஐயோ! இதுவரையில் ஆழ்வாருடைய நெஞ்சில் செங்கோல் செலுத்திக் கொண்டு வாழ்ந்த வெமக்கு இன்று இக்கதி நேர்ந்து விட்டதே! என் செய்வோம்!” என்று கத்துகின்றன. “வல்வினையார்தாம் மேலால் தருக்குமிடம்பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது காலே பொதத் திரிந்து இளைத்துக் கத்துவர்” என்று அந்வயித்துக் கொள்க. அசேதநங்களான வல்லினைகளை வல்வினையார்தாம் என்று சிறப்பித்துக் கூறுவது ஏன்; என்னில்; “உவப்பினுமயிர்வினுஞ் சிறப்பினுஞ் செறலினும், இழிப்பினும் பால்திணை விழுக்கினுமியல்வே” என்பர் நன்னூலார்; இழிவு தோற்றச் சொல்ல வேண்டும்போதும் சீற்றந்தோற்றச் சொல்ல வேண்டும்போதும் பால் திணைகளை மாறாடிச் சொல்லலாம் என்றிருப்பதனால், சீற்றமும் இழிவும் தோற்ற இங்கு வினையார் என உயர்திணையாகக் கூறுகின்றாரென்க. துஷ்டர்களைக்கண்டால் ‘ஸ்வாமி எழுந்தருளுகிறார்” என்று சொல்லுவதுண்டிறே, அதுபோலக் கொள்க. மேலால் தருக்குமிடம்பாட்டினொடும் வீற்றிருக்குமிடம் காணாது = மேலால் என்பதற்கு. இனிமேல் என்றும், இதற்கு முன்பு என்றும் பொருள் கொள்ளலாம். இதுவரையிலும் என்னை நெருக்கிக்கொண்டு பெருமதிப்போடு எழுந்தருளியிருந்த இந்த வல்வினையார்கள் இப்படியே இன்னமும் எழுந்தருளியிருக்க இடம் காணாமல் என்றபடி, இனிமேல் பிறரை ஹிம்ஸித்துக் கொண்டு வைபவமாகக் குடியிருப்பதற்கு உரிய இடம் காணாமல் என்றுமாம். இடம்பாடு- பெருமை. வீற்றிருக்குமிடம் = வீற்றிருத்தலாவது வீறுதோற்ற இருந்தால்; வீறு- பெருமை. தனது பெருமைக்குக் குறையில்லாமல் மேனாணிப்போடேயிருத்தல் வீற்றிருத்தலெனப்படும். ‘தாங்கள் விழுந்துகிடக்க இடம் கிடைக்காமல்’ என்று இழிவாகச் சொல்லவேண்டியதை இப்படி மாற்றியருளிச்செய்தாரென்க.

English Translation

The adorable Lord has entered my heart. All my tyrant karma kings with their booty of wicked deeds have no place to rest, and are spending their days roaming and moaning with sore feet.

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்