விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தே மருவு பொழிலிடத்து மலர்ந்த போதைத்* தேன்-அதனை வாய்மடுத்து உன் பெடையும் நீயும்* 
  பூ மருவி இனிது அமர்ந்து பொறியில் ஆர்ந்த* அறு கால சிறு வண்டே! தொழுதேன் உன்னை* 
  ஆ மருவி நிரை மேய்த்த அமரர்-கோமான்* அணி அழுந்தூர் நின்றானுக்கு இன்றே சென்று* 
  நீ மருவி அஞ்சாதே நின்று ஓர் மாது* நின் நயந்தாள் என்று இறையே இயம்பிக் காணே 

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

தேன் மருவு - தேன் வெள்ளம் நிறைந்திருக்கப் பெற்ற;
பொழில் இடத்து - சோலைப்புறத்திலே;
மலர்ந்த போது - மலர்ந்த புஷ்பங்களிலுண்டான;
தேன் அதனை - தேனை;
வாய் மடுத்து - பானம்பண்ணி;

விளக்க உரை

உரை:1

தலைவியை ஒருமுகத்தாலே ஆர்றுவிக்க வேணுமென்று நினைத்த தோழி யானவள் சில கேள்விகள் கேட்க, அவற்றுக்கு மறுமாற்ற முரைக்கும் வகையாக * மைவண்ண நறுங்குஞ்சி தொடங்கி ஐந்துபாசுரங்கள் சென்றன. தோழி தான் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் விடைவந்துவிட்டபடியால் அவள் வாளா கிடந்தாள்; தலைவிக்கோ ஆற்றாமை மீதூர்ந்தது. கண்ணிற் கண்டதொரு வண்டைத் தூதுவிடுகிறாள் இப்பாசுரத்தில். ஸ்ரீராமவதாரத்தில் திர்யக்குக்கள் தூதுசென்று காரியம் தலைக்கட்டிவைக்கக் காண்கையாலே வண்டுவிடுதூதிலே முயல்கிறாள் இப்பரகாலநாயகி. முன்னடிகளில் வண்டைவிளித்துத் தொழுது, பின்னடிகளில், அது செய்ய வேண்டிய காரியத்தை விதிக்கின்றாள். திருவழுந்தூர் ஆமருவியப்பன் திருவடிவாரத்திலே சென்று தனது நிலைமையைச் சொல்லுமாறு வேண்டுகின்றாள்; அந்த வண்டு தன் பேடையோடே கலந்து மலரிலே மதுபானம் பண்ணிக் கொண்டிருந்தமையால் ‘நான் துணைவனைப் பிரிந்து உணவும் உறக்கமுமற்று வருந்திக்கிடக்கும்போது நீ இப்படி உன்காரியமே கண்ணாக இருப்பது தகுதியோ? என்னுங்கருத்து முன்னடிகளில் வெளிவரும். நாம் வருந்தி யொடுங்கி * மென்மலர்ப்பள்ளி வெம்பள்ளியாலோ என்று கிடக்கும்போது இந்த வண்டு மாத்திரம் மலர்களிலே ஏறிக்கிடப்பதற்கு யாதுகாரணமென்று பார்த்தாள்; அது நம்மைப்போலே விரஹ வேதனைப்படாமல் துணை பிரியாதிருப்பதனால் மலரிலே கால் பாவவும் மதுவைப் பருகவும் மேனி நிறம் பெற்றிருக்கவும் பெறுகின்றதென்றுணர்ந்து அங்ஙனமே விளிக்கின்றாள். பூவைக் கண்டால் அருவருத்தும் போக்யவஸ்துக்களில் வெறுப்புற்றும் மேனி நிறமழிந்தும் இராநி்ன்ற என்னையும் உன்னைப்போலே யாக்க வேண்டாவோ? நானும் துணைவனோடு கலந்து வாழும்படி நீ காரியஞ் செய்யவேண்டாவோ? என்பது உள்ளூறை. “உளங்கனிந்திருக்குமடியவர் தங்களுள்ளத்துளூறிய தேன்“ என்னப்பட்ட பகவத் விஷயமாகிற மதுவை விரும்பியும், “போந்தெ தென்னெஞ் சென்னும் பொன்வண்டு உனதடிப்போதிலொண்சீராந் தெளிதேனுண்டமர்ந்திடவேண்டி“ என்கிறபடியே ஆசார்ய பாதாரவிந்த ஸேவையாகிற மதுவைப் பருகுதலையே விரதமாகவுடைத்தாகியும், உயர்கதிக்கு ஸாதனமாகிய இரண்டு சிறகுகள் போன்ற கர்ம ஜ்ஞானங்களையுடையராகியும் ஸாரக்ராஹிகளாயுமிருக்கின்ற ஸ்ரீவைஷ்ணவர்களை வண்டாகச் சொல்லுவது வழக்கம். அப்படிப்பட்ட ஸ்ரீவைஷ்ணர்களை நோக்கி ‘நீர் எம்பெருமான் திருவடிகளிலே புருஷகாரஞ்செய்து அடியேனையும் உம்மைப்போலே பகவதநுபவமே நித்தியமாய்ச் செல்லுமாறு ஆட்படுத்திக் கொள்ளவேணும்‘ என்று பிரார்த்தித்தல் இதற்கு உள்ளூறை பொருள். * வேதம் வல்லர்களைக்கொண்டு விண்ணோர் பெருமான் திருப்பாதம் பணிவது ஸம்ப்ரதாயமென்க. போது + தேன், போதைத்தேன்; பூவிலுள்ள தேன் என்றபடி. (அறுகால சிறுவண்டே தொழுதேனுன்னை.) வண்டுக்கு ஆறுகால்கள் உள்ளமை இயல்வாதலால் இவ்விசேஷணம் இங்கு ஏதுக்கு? என்று கேட்கக்கூடும்; இரண்டு காலாகவும் நான்கு காலாகவுமின்றியே விரைந்து செல்லுகைக் குறுப்பாக ஆறுகால்கள் இருக்கப்பெற்ற பாக்கியம் என்னே! என்று வியந்து கூறுவதாகச் சில ஆசார்யர்கள் நிர்வஹித்தார்களாம். இந்த நிர்வாஹத்தில் ஸ்வாரஸ்யமில்லை; வண்டு செல்லுதற்குச் சாதனம் சிறகே யன்றிக் கால்கள் அல்லவே; ஆதலால் ‘அறுகால‘ என்னு மடைமொழிக்கு அங்ஙனே கருத்துரைத்தல் பொருந்தாதென்று, பட்டர் அருளிச்செய்ததாவது-“தொழுதேனுன்னை“ என்று மேலே யிருக்கையாலே, என்தலையிலே வைப்பதற்கு ஆறுகால்களுண்டாகப் பெற்றதே! என்று வியந்த சொல்லுகிறபடி என்பதாம். தூதுசென்று மீண்டுவந்தால் வண்டின் கால்களைத் தன்தலை நிறைய வைத்துக்கொண்டு கூத்தாடக் குதூஹலித்திருப்பதனால் அதற்குச் சேர இங்ஙனே கருத்துரைத்தல் மிகப்பொருந்தும். “எங்கானலகங்கழிவாயிரை தேர்ந்து இங்கினி தமருஞ், செங்காலமட நாராய்! திருமூழிக்களத்துறையுங், கொங்கார் பூந்துழாய் முடியென்குடக்கூத்தற்கென் தூதாய் நுங்கால்களென் தலைமேல் கெழுமீரோ நுமரோடே“ (9-7-1) என்ற திருவாய் மொழிப்பாசுரத்தின் ஈற்றடி இங்குக் குறிக்கொள்ளத்தக்கது. சிறுவண்டே! = ஏற்கனவே நீ சிறியையாயிருப்பதும் ஒரு பாக்கியம்; அனுமான் இலங்கைக்குத் தூதுசென்ற போது சிலவிடங்களில் தன்வடிவைச் சிறுக்கடித்துக் கொள்ளவேண்டி யிருந்தது; அங்ஙனே உனக்குத் தேவையில்லை; உருவமே சிறியையாயிராநி்ன்றாய்காண் என்று விசேஷார்த்தங்காண்க. ஹனுமானாகில் ‘இந்தக் குரங்கு இங்கே ஏதுக்கு வந்தது?, என்று ஆராய்ச்சிப்படவேண்டியிருக்கும்; நீ வண்டாகையாலே * தோளிணைமேலும் நன்மார்பின்மேலும் சுடர்முடிமேலும் தாளிணைமேலும் புனைந்த தண்ணந்துழாய் மாலையில் இஷ்டமானதோரிடத்திலேயிருந்து கொண்டு வார்த்தை சொல்லலாம்படியான ஜன்மமன்றோ உன்னது என்பதும் விவக்ஷிதம். பரஸ்வரஸம்ச்லேஷ ஸுகத்தாலே மயங்கி மதிகெட்டுக்கிடக்கிற வண்டின்செவியிலே உறுத்தும்படி ‘பூமருவியினதமர்ந்து பொறியிலார்ந்த அறுகால சிறுவண்டே!‘ என்று உரக்கக் கூவினவாறே வண்டு துணுக்கென்று எட்டிப்பார்க்க, தொழுதேனுன்னை என்கிறாள். தலைமகனுடைய திருவடிகள் எனக்கு ஏதுக்கு? உன்னைத் துதிப்பதும் உன்காலிலே விழுவதுமன்றோ எனக்குப்பணி என்றவாறு. எம்பெருமானைக் காட்டிலும் புருஷகாரபூதரான ஆசார்யர்கள் மிகவும் உத்தேச்யர் என்ற சாஸ்த்ரார்த்த முணர்க. என்னைத் தொழுவதேன்? வேண்டின காரியத்தைச் சொல்லலாகாதோவென்று வண்டு கேட்க; காரியத்தைக் கூறத் தொடங்குகிறாள் பின்னடிகளில். அமரர்கோமான் பக்கலிலே சென்று தூது சொல்லுங்கோள் என்றாள்; அந்தோ! அயர்வறுமமரர்களதிபதியன்றோ? அந்த மேன்மையிலே எங்களால் கிட்டப்போமோ? என்ன; ஆமருவிநிரைமேய்த்த அமரர் கோமான் என்றாள்; பரத்வம் ஒருபுறத்தே கிடக்கச்செய்தேயும் பசுக்களோடே பொருந்தி அவற்றோடே போதுபோக்குமவன் காண்; நித்யஸூரிகளுக்குத் தன்னையொழியச் செல்லாதாப்போலே பசுக்களையொழியத் தனக்குச் செல்லாதபடியான குடிப்பிறப்புடையவன்காண்; மேன்மையைக் கண்டு தியங்காதே செல்லலாமென்றாள்; ஆமாம்; அது ஒருகாலத்திலன்றோ? க்ருஷ்ணாவதாரங் கடந்து நெடுநாளாயிற்றே! என்ன; அணியழுந்தூர் நின்றனுக்கு என்கிறாள். அக்காலத்தில் பசுக்களை ரக்ஷித்தாற்போலே அக்காலத்திற்குப் பிற்பட்டவர்களாய்ப பசு ப்ராயராயிருப்பாரையும் ரக்ஷிக்கைக்காகப் * பின்னானார் வணங்குஞ் சோதியாகத் திருவழுந்தூரிலே நிற்கிறான் காண்; அங்கேபோய் அறிவிக்கவேணுமென்றாளாயிற்று. எம்பெருமான் பிரிந்துபோகிறபோது * சேலுகளுந் திருவரங்கம் நம்மூர் என்றும் * புனலரங்கமூர் என்றும் சொல்லிச் சென்று திருவரங்கத்திலே போயிருக்க. திருவழுந்தூரிலே தூதுவிடுகை பொருந்துமோ? என்னில்; கேண்மின்; ‘புனலரங்கமூரென்று போயினாரே‘ என்றது உண்மைதான்; ஆயினும், பிரிந்துபோனவர் முழுதும் போயிருக்க மாட்டார்; திருவழுந்தூரிலே பின் தங்கி நின்றிருக்கக்கூடும்; அங்கே சென்று அறிவிக்கலாமென்கிறாள் போலும் அன்றியே; புனலாங்கமூரென்று போயினார்; திருவரங்கத்தே போய்ப்பார்த்தார்; நீர்வாய்ப்பு் நிழல்வாய்ப்பும் கண்டவாறே தனிக்கிடை கிடப்பதற்குப் புறப்பட்டிருப்பர்; இப்போது திருவழுந்தூரளவிலே எழுந்தருளியிருக்கக்கூடும்; அங்கே சென்று அறிவிக்கவமையும் என்கிறாள் என்றுங் கொள்ளலாம். அணியழுந்தூர் நின்றானுக்கு = இத்தலத்தைக் கடந்து அப்பால் போகமாட்டாமை யாலே அங்கே ஸ்தாவர ப்ரதிஷ்டையாக நிற்கிளானென்கிறாள். திருவாலி திருநகரியிற் பரகாலநாயகி பக்கலில் நின்றும் ஆள்வருவது எப்போதோவென்று எதிர்பார்த்தபடியே நிற்கிறானென்கிறாள் என்னவுமாம். இன்றே சென்று = நாளைச் செய்கிறேனென்ன வொண்ணாது; நாளைக்கு நான் இருக்கப்போகிறேனோ? நானில்லையானால் அவன்தான் இருக்கப்போகிறானோ? இரண்டுதலையும் அழிந்தபின்பு நீ எங்குச் சென்று யார்பக்கலிலே என்ன சொல்லப் போகிறாய்? இரண்டு தலையும் அழிந்ததென்றால் பி்ன்னை உலகந்தானுண்டோ? நீயும் அழிந்தாயாவாய்; ஆக, நாங்களும், பிழைத்து நீயும் வாழ வேண்டியிருந்தாயாகில் இன்றே சென்று அறிவியாய் என்றாளாயிற்று. நீ மருவி = அவன் ஆமருவி நிரைமேய்த்தவனாகையாலே திர்யக்ஜாதியான உனக்கும் முகந்தரும்; நீ சென்று கிட்டலாம். அவனுடைய சீல குணத்தைக்கண்டு வைத்தும் “அவரை நாம் தேவரென்றஞ்சினோமே“ என்று மருண்டு பின்வாங்கின என்னைப் போலல்லாமல் அருகே பொருந்தி நிற்கலாம் நீ. (அஞசாதே நின்று.) வார்த்தை சொல்லும் விஷயத்தில் சிறிதும் அஞ்சவேண்டா; ‘நம்முடைய அந்த புறத்தில் நின்றும் வந்தவர்கள்‘ என்று தோற்றும்படி செருக்கி வார்த்தை சொல்லவேணும். அவர்க்கு அறிவிக்கவேண்டும் வார்த்தை ஏதென்ன; ஓர் மாதுநின் நயந்தாளென்று = என்பெயரைச் சொல்லவேண்டா; ஒருத்தி‘ என்னும்போதே அவர்தாமே தெரிந்துகொள்வர்; ‘ஒருகாட்டிலே ஒருமான் அம்புபட்டுக்கிடந்து துடிக்கின்றது‘ என்றால் உடனே எய்த வனககுத் தெரியுமன்றோ. (நின்நயந்தாள்.) ஓர்மாது‘ என்றாலே போதுமானது; அதற்கு மேலும் ஒருவார்த்தை சொல்லவேணுமென்றிருந்தாயாகில் “நின்நயந்தாள்“ உன்னை ஆசைப்பட்டிருக்கின்றாள்) என்று சொல்லு. படுகொலைப்பட்டாளென்று சொல்லு என்றபடி. ஒரு க்ஷுத்ரபுருஷனை ஆசைப்பட்டாளல்லள், பரமபுருஷனை உன்னை ஆசைபட்டாளென்று சொல்லு. பரத்வத்திலே ஆசைப்பட்டிலள், வியூகத்திலே ஆசைப்ட்டிலள், விபவாவதாரங்களிலே ஆசைப்ட்டிலள், அந்தர்யாமித்வத்திலே ஆசைப்பட்டிலள்; ஆசைப்படுதற்குரிய அர்ச்சவதாரத்திலே ஆசைப்பட்டாளென்று சொல்லு. இறையே இயம்பிக் காண் = முற்றமுடிய வார்த்தை சொல்லவேண்டுமோநீ; சிறிது வாயைத் திறக்கும்போதே உன்னை அவர் எங்ஙனம் கொண்டாடப்போகிறார் பார்; “ஏஷ ஸர்வஸ்வபூதஸ்து பரிஷ்வங்கோ ஹூமத;“ என்கிறபடியே அனுமான் பெற்ற பரிசும் ஏகதேசமென்னும்படியன்றோ நீ பஹுமாநம் பெறப்போகிறாய்; இது நான் சொல்ல வேணுமோ? அநுபவத்தில் பார்த்துக் கொள்ளாய் என்றாளாயிற்று.

உரை:2

சோலை மலர்களில் நிறைந்த தேனைப் பருகி, உன் பெடையுடன் இனிதே கலந்து மகிழும், ஆறு கால்களை உடைய சிறு வண்டே!. நான் உன்னை வணங்குகிறேன். பசுக்களை மேய்த்துக் காத்த எம் பெருமான் அழகிய திருவழுந்தூரில் உள்ளான். இன்றே, நீ அவனிடம் சென்று பயப்படாமல் நின்று, "ஒரு பெண் உன்னை ஆசைப்பட்டாள்" என்று சொல் என்கிறார்.

English Translation

O Little six-legged freckled Bumble-bee sitting happily with your companion in sweet blossoms of fragrant groves, sipping nectar together! Go now to the cowherd Lord residing in beautiful Alundur and

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்