விளக்கப்படம்

 • மேலும் பார்க்க
 • பாசுரம்

  தேர் ஆளும் வாள் அரக்கன் செல்வம் மாள* தென் இலங்கை முன் மலங்கச் செந்தீ ஒல்கி* 
  போர் ஆளன் ஆயிரந் தோள் வாணன் மாள* பொரு கடலை அரண் கடந்து புக்கு மிக்க-     
  பார் ஆளன்* பார் இடந்து பாரை உண்டு- பார் உமிழ்ந்து பார் அளந்து* பாரை ஆண்ட- 
  பேர் ஆளன்* பேர் ஓதும் பெண்ணை மண்மேல்* பெருந் தவத்தள் என்று அல்லால் பேசல் ஆமே?     

  காணொளி


 • மேலும் பார்க்க

பதவுரை

முன் - முன்பொருகால்;
தேர் ஆளும் வாள் அரக்கன் - தேர்வீரனும் வாட்படைவல்லவனுமான இராவணனுடைய;
செல்வம் மாள - ஐச்வரியம் அழியவும்;
தென் இலங்கை மலங்க - (அவனது) தென்னிலங்கா புரி கலங்கவும்;
செம் தீ ஓங்கி - சிவந்த நெருப்பாலே கொளுத்தி,;

விளக்க உரை

பண்டு ஸ்ரீராமாவதாரத்தில் பிராட்டிக்கு உதவினபடியையும், ஸ்ரீகிருஷ்ணாவதாரத்தில் பேரனுக்கு உதவினபடியையும், வராஹாவதாரத்தில் பூமிப்பிராட்டிக்கு உதவினபடியையும், பிரளயகாலத்தில் உலகங்கட்கெல்லா முதவினபடியையும், த்ரிவிக்ரமாவதாரத்தில் ஸர்வஸ்வதானம் பண்ணினபடியையும் எடுத்தெடுத்துப் பரகாலநாயகி வாய்விட்டுக் கதறுகின்றபடியைத் திருத்தாயார் சொல்லாநின்று கொண்டு, இப்படிப்பட்ட என்மகளை இந்நிலவுலகத்தில் பெரும்பாக்கியம் படைத்தவளென்று சொல்லலாமத்தனையன்றி வேறெதுவும் சொல்லப்போகாதென்று தலைக்கட்டுகிற பாசுரம் இது. தேராளும் வாளரக்கன் செல்வம்மாள் = இத்தனை தேர்களை ஆண்டா னென்று ஒரு கணக்கிட்டுச் சொல்லாத பொதுவிலே ‘தேராளும்‘ என்றது, தேரென்று பேர் பெற்றவை யெல்லாவற்றையும் ஆண்டவனென்றபடி. இது சொன்னது ரத கஜ துரக பதாதிகள் என்கிற சதுரங்க பலத்தையும் ஆண்டமை சொன்னவாறு. பெருவீரர்களைப் பேசும்போது ‘அதிரர்‘ ‘மஹாரதர்‘ என்று தேரையிட்டு நிரூபித்துப் பேசுவது மரபாதலால் இங்கும் தேராளும் என்றது. (வாளாரக்கன்.) கீழ்ச்சொன்ன சதுரங்கபலங்களையும் அழகுக்காகக் கட்டிவைத்தானத்தனையே யென்னவேண்டும்படியான தனிவீரன். ஆக இப்படிப்பட்ட அரக்கனுடைய செல்வம்மாள = ஒன்றுக்கும் விகாரப்படகில்லாத அனுமானும் கண்டு போர்ப்பொலியக் கொண்டாடின செல்வமன்றோ இராவணனது. “யத்யதர்மோ ந பலவாந் ஸ்யாதயம் ராக்ஷஸே ச்வா; ஸ்தாயம் ஸுரலோகஸ்ய ஸசக்ரஸ்யாபி ரக்ஷிதா.“ (இவ்விராவணனிடத்தில் அதர்மம் ஒன்று மாத்திரம் இல்லாதிருந்தால் இவனே தேவாதி தேவனாக விளங்கவல்லவன் (என்றாயிற்று அனுமான் பேசினது. அங்ஙனம் வியக்கத்தக்க ஐச்வரியமெல்லாம் தொலையும்படியாக. தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கி = தென் என்று கட்டளைப்பட்டிருக்குமொழுங்கபாட்டைச் சொன்னபடி. சுற்றுங்கடலாய் அப்புறம் நாடாய் அங்கே மலையாய் அதன்மேலே மதிளும் அட்டாலையுமாயிருக்கிற கட்டழகையுடைய இலங்காபுரி என்றபடி. அப்படிப்பட்ட நகரம் நிலை கலங்கும்படியாக நெருப்பையிட்டுக் கொளுத்திச் சுடுகாடாக்கினபடி. இதற்கு முன்னே அக்னிபகவான் இராவணனிடம் அஞ்சி நடுங்கி அவனுக்குக் குற்றேவல் செய்துகொண்டு போதுமான இரைபெறாத உடம்பு வெளுத்துக் கிடந்தான்; அனுமான் இலங்கை புக்க பின்பு அவனுடைய வாலை அண்டைகொண்டு வயிறுநிரம்பப் பெற்றுத் தன்னிறம் பெற்றுத் தேக்கமீட்டானென்க. ஆக இவ்வளவும் பிராட்டிக்காகச் செய்த காரியத்தைச் சொன்னாளாயிற்று. இனி இரண்டாமடியால் பேரனுக்குச் செய்த காரியஞ் சொல்லுகிறது. வாணனை உயிரோடு விட்டிருக்கச் செய்தேயும் ‘வாணன் மாள‘ என்றது எங்ஙனே யென்னில்; பின்பு அவன் உயிரோடிருந்த இருப்பு பிணமாயிருக்குந் தன்மையிற்காட்டில் வாசியற்ற தென்பது விளங்க மாள என்றது. பொருகடலை அரண்கடந்துபுக்கு மிக்க பாராளன் = எதிரிகட்கு அணுகவொண்ணாதபடி திரைக்கிளர்த்தியை யுடைத்தான கடலாகிற அரனைக் கடந்து பரணபுரத்திலே சென்று புகுந்து வீரலக்ஷ்மியாலே மிக்கவனாய், பூமிக்குச் சுமையான வாணன் தோள்களை அறுத்தொழிக்கையாலே பூமிக்கு நிர்வாஹகனானவன். பாரிடந்து = பிரளயத்தைச் சார்ந்திருந்த பூமியை மஹாவராஹரூபியாகச் சென்று உத்தரித்து வந்தபடி சொல்லுகிறது. * பாசிதூர்த்துக் கிடந்த பார்மகட்குப் பண்டொருநாள், மாசுடம்பில் நீர்வாரா மானமிலாப் பன்றியாந் தேசுடைய தேவர் என்னை மாத்திரம் இப்படி உபேக்ஷித்திருப்பதே! என்பது கருத்து. பாரையுண்டு = பூமியை யடங்கலும் பிரளயப் பெருவேள்ளம் கொள்ளப் புகுகையில் எல்லாவற்றையும் வாரித்திருவயிற்றிலே வைத்துக்காத்தபடி சொல்லுகிறது. நானும் அக்காலத்தில் இருந்திருந்தேனாகில் திருமேனியோடே ஸம்பந்தம் பெற்றிருப்பேனே என்றவாறு. பாருமிழந்து = பிரளயகாலத்தில் திருவயிற்றினுள்ளே அடக்கின பூமியை மறுபடியும் வெளிப்படுத்திக் காணகளெபரங்களைக் கொடுத்தருளி உருப்படுத்தினது இங்ஙனம் உபேக்ஷிக்கைக்காகவோ? என்றவாறு. பாரளுந்து = உலகளக்கிற வியாஜத்தாலே விரும்பாதார் தலையிலும் திருவடியைவைத்து ஸத்தை பெறுவித்தருளினவன், விரும்புகின்ற எனக்குத் திருமார்பைத் தாராவிடினும் ஊர்ப்பொதுவான திருவடியையும் தாரா தொழிவதே! என்ற கருத்தப்படச் சொல்லுகிறபடி. பாரையாண்ட = ஆகக் கீழ்ச் சொன்னவற்றையெல்லாம் திரளப்பிடித்து நிகமனஞ் செய்கிறபடி. * தேராளும் வாளரக்கன் செல்வம்மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீயொல்கிப் பாரையாண்ட பேராளன்; பாரிடந்து பாரையாண்ட பேராளன்; பாரையுண்டு பாரையாண்ட பேராளன்; பாருமிழந்து பாரையாண்ட பேராளன்; பாரளந்து பாரை யாண்ட பேராளன் – என்றிங்ஙனே அந்வயித்துக்கொள்ளலாம். இவை பரகாலநாயகி ஓதின திருநாமங்களாம். ஆக இப்படிப்பட்டவையும் இவை போல்வனவுமான திருநாமங்களை இடைவிடாமல் காலக்ஷபார்த்தமாகப் பேசவல்லவிவளை, மண்மேற்பெருத்தவத்த ளென்றல்லால் பேசலாமே? = நித்யஸூரிகளின் திரளில் நின்று பிறிகதிர்ப்பட்டு வந்தவள் என்னலாமத்தனையொழிய வேறுபேசப்போமோ? பூமியிலேயிருக்கச் செய்தே நித்யஸூரிகள் பரிமாற்றத்தையுடையவளென்றே சொல்லிவேணும். ஆகத் திருத்தாயார் பாசுரமாகச் சென்ற இடைப்பத்து முற்றிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்