பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு
கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே
பாசுரங்கள்
மன்னு புகழ்க் கௌசலைதன்* மணிவயிறு வாய்த்தவனே*
தென் இலங்கைக் கோன் முடிகள்* சிந்துவித்தாய் செம்பொன் சேர்*
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் கருமணியே*
என்னுடைய இன்னமுதே* இராகவனே தாலேலோ (2)
புண்டரிக மலரதன்மேல்* புவனி எல்லாம் படைத்தவனே*
திண் திறலாள் தாடகைதன்* உரம் உருவச் சிலை வளைத்தாய்*
கண்டவர்தம் மனம் வழங்கும்* கணபுரத்து என் கருமணியே*
எண் திசையும் ஆளுடையாய்* இராகவனே தாலேலோ
கொங்கு மலி கருங்குழலாள்* கௌசலைதன் குல மதலாய்*
தங்கு பெரும் புகழ்ச்சனகன்* திரு மருகா தாசரதீ*
கங்கையிலும் தீர்த்த மலி* கணபுரத்து என் கருமணியே*
எங்கள் குலத்து இன்னமுதே* இராகவனே தாலேலோ
தாமரை மேல் அயனவனைப்* படைத்தவனே* தயரதன்தன்-
மா மதலாய்* மைதிலிதன் மணவாளா* வண்டினங்கள்-
காமரங்கள் இசைபாடும்* கணபுரத்து என் கருமணியே*
ஏமருவும் சிலை வலவா* இராகவனே தாலேலோ
பார் ஆளும் படர் செல்வம்* பரத நம்பிக்கே அருளி*
ஆரா அன்பு இளையவனோடு* அருங்கானம் அடைந்தவனே*
சீர் ஆளும் வரை மார்பா* திருக் கண்ணபுரத்து அரசே*
தார் ஆரும் நீண் முடி* என் தாசரதீ தாலேலோ
சுற்றம் எல்லாம் பின் தொடரத்* தொல் கானம் அடைந்தவனே*
அற்றவர்கட்கு அருமருந்தே* அயோத்தி நகர்க்கு அதிபதியே*
கற்றவர்கள்தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிற்றவைதன் சொற் கொண்ட* சீராமா தாலேலோ
ஆலின் இலைப் பாலகனாய்* அன்று உலகம் உண்டவனே*
வாலியைக் கொன்று அரசு* இளைய வானரத்துக்கு அளித்தவனே*
காலின் மணி கரை அலைக்கும்* கணபுரத்து என் கருமணியே*
ஆலி நகர்க்கு அதிபதியே* அயோத்திமனே தாலேலோ
மலையதனால் அணை கட்டி* மதில்-இலங்கை அழித்தவனே*
அலை கடலைக் கடைந்து* அமரர்க்கு அமுது அருளிச் செய்தவனே*
கலை வலவர்தாம் வாழும்* கணபுரத்து என் கருமணியே*
சிலை வலவா சேவகனே* சீராமா தாலேலோ
தளை அவிழும் நறுங் குஞ்சித்* தயரதன்தன் குல மதலாய்*
வளைய ஒரு சிலையதனால்* மதில்-இலங்கை அழித்தவனே*
களை கழுநீர் மருங்கு அலரும்* கணபுரத்து என் கருமணியே*
இளையவர்கட்கு அருள் உடையாய்* இராகவனே தாலேலோ
தேவரையும் அசுரரையும்* திசைகளையும் படைத்தவனே*
யாவரும் வந்து அடி வணங்க* அரங்கநகர்த் துயின்றவனே*
காவிரி நல் நதி பாயும்* கணபுரத்து என் கருமணியே*
ஏ வரி வெஞ்சிலை வலவா* இராகவனே தாலேலோ (2)
கன்னி நன் மா மதில் புடைசூழ்* கணபுரத்து என் காகுத்தன்-
தன் அடிமேல்* தாலேலோ என்று உரைத்த* தமிழ்மாலை*
கொல் நவிலும் வேல் வலவன்* குடைக் குலசேகரன் சொன்ன*
பன்னிய நூல் பத்தும் வல்லார்* பாங்காய பத்தர்களே (2)