பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு
கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே
பாசுரங்கள்
தரு துயரம் தடாயேல்* உன் சரண் அல்லால் சரண் இல்லை*
விரை குழுவும் மலர்ப் பொழில் சூழ்* வித்துவக்கோட்டு அம்மானே*
அரி சினத்தால் ஈன்ற தாய்* அகற்றிடினும்* மற்று அவள்தன்
அருள் நினைந்தே அழும் குழவி* அதுவே போன்று இருந்தேனே (2)
கண்டார் இகழ்வனவே* காதலன்தான் செய்திடினும்*
கொண்டானை அல்லால்* அறியாக் குலமகள் போல்*
விண் தோய் மதில் புடை சூழ்* வித்துவக்கோட்டு அம்மா* நீ
கொண்டாளாயாகிலும்* உன் குரைகழலே கூறுவனே
மீன் நோக்கும் நீள் வயல் சூழ்* வித்துவக்கோட்டு அம்மா* என்-
பால் நோக்காயாகிலும்* உன் பற்று அல்லால் பற்று இலேன்*
தான் நோக்காது* எத்துயரம் செய்திடினும்* தார்-வேந்தன்
கோல் நோக்கி வாழும்* குடி போன்று இருந்தேனே
வாளால் அறுத்துச் சுடினும்* மருத்துவன்பால்*
மாளாத காதல்* நோயாளன் போல் மாயத்தால்*
மீளாத் துயர் தரினும்* வித்துவக்கோட்டு அம்மா* நீ
ஆளா உனது அருளே* பார்ப்பன் அடியேனே
வெங்கண்-திண்களிறு அடர்த்தாய்* வித்துவக்கோட்டு அம்மானே*
எங்குப் போய் உய்கேன்?* உன் இணையடியே அடையல் அல்லால்*
எங்கும் போய்க் கரை காணாது* எறிகடல்வாய் மீண்டு ஏயும்*
வங்கத்தின் கூம்பு ஏறும்* மாப் பறவை போன்றேனே
செந்தழலே வந்து* அழலைச் செய்திடினும்* செங்கமலம்
அந்தரம் சேர்* வெங்கதிரோற்கு அல்லால் அலராவால்*
வெந்துயர் வீட்டாவிடினும்* வித்துவக்கோட்டு அம்மா* உன்
அந்தமில் சீர்க்கு அல்லால்* அகம் குழைய மாட்டேனே
எத்தனையும் வான் மறந்த* காலத்தும் பைங்கூழ்கள்*
மைத்து எழுந்த மா முகிலே* பார்த்திருக்கும் மற்று அவை போல்*
மெய்த் துயர் வீட்டாவிடினும்* வித்துவக்கோட்டு அம்மா* என்
சித்தம் மிக உன்பாலே* வைப்பன் அடியேனே
தொக்கு இலங்கி யாறெல்லாம்* பரந்து ஓடித்* தொடுகடலே
புக்கு அன்றிப் புறம்நிற்க* மாட்டாத மற்று அவை போல்*
மிக்கு இலங்கு முகில்-நிறத்தாய்* வித்துவக்கோட்டு அம்மா* உன்
புக்கு இலங்கு சீர் அல்லால்* புக்கிலன் காண் புண்ணியனே
நின்னையே தான் வேண்டி* நீள் செல்வம் வேண்டாதான்*
தன்னையே தான் வேண்டும்* செல்வம்போல் மாயத்தால்*
மின்னையே சேர் திகிரி* வித்துவக்கோட்டு அம்மானே*
நின்னையே தான் வேண்டி* நிற்பன் அடியேனே
வித்துவக்கோட்டு அம்மா* நீ வேண்டாயே ஆயிடினும்*
மற்று ஆரும் பற்று இலேன் என்று* அவனைத் தாள் நயந்து*
கொற்ற வேல்-தானைக்* குலசேகரன் சொன்ன*
நற்றமிழ் பத்தும் வல்லார்* நண்ணார் நரகமே (2)