பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு

 

கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

   பாசுரங்கள்


    ஊன் ஏறு செல்வத்து*  உடற்பிறவி யான் வேண்டேன்*
    ஆனேறு ஏழ் வென்றான்*  அடிமைத் திறம் அல்லால்*

    கூன் ஏறு சங்கம் இடத்தான்*  தன் வேங்கடத்துக்*
    கோனேரி வாழும்*  குருகாய்ப் பிறப்பேனே (2)


    ஆனாத செல்வத்து*  அரம்பையர்கள் தற் சூழ*
    வான் ஆளும் செல்வமும்*  மண்-அரசும் யான் வேண்டேன்*

    தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கடச் சுனையில்*
    மீனாய்ப் பிறக்கும்*  விதி உடையேன் ஆவேனே


    பின் இட்ட சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
    துன்னிட்டுப் புகல் அரிய*  வைகுந்த நீள் வாசல்*

    மின் வட்டச் சுடர்-ஆழி*  வேங்கடக்கோன் தான் உமிழும்* 
    பொன்-வட்டில் பிடித்து உடனே*  புகப் பெறுவேன் ஆவேனே


    ஒண் பவள வேலை*  உலவு தன் பாற்கடலுள்*
    கண் துயிலும் மாயோன்*  கழலிணைகள் காண்பதற்கு*

    பண் பகரும் வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துச்*
    செண்பகமாய் நிற்கும்*  திரு உடையேன் ஆவேனே


    கம்ப மத யானைக்*  கழுத்தகத்தின்மேல் இருந்து*
    இன்பு அமரும் செல்வமும்*  இவ் அரசும் யான் வேண்டேன்*
     

    எம்பெருமான் ஈசன்*  எழில் வேங்கட மலைமேல்*
    தம்பகமாய் நிற்கும்*  தவம் உடையேன் ஆவேனே


    மின் அனைய நுண்ணிடையார்*  உருப்பசியும் மேனகையும்*
    அன்னவர்தம் பாடலொடும்*  ஆடல் அவை ஆதரியேன்

    தென்ன என வண்டினங்கள்*  பண் பாடும் வேங்கடத்துள்*
    அன்னனைய பொற்குவடு ஆம்*  அருந்தவத்தேன் ஆவேனே


    வான் ஆளும் மா மதி போல்*  வெண் குடைக்கீழ்*  மன்னவர்தம்
    கோன் ஆகி வீற்றிருந்து*  கொண்டாடும் செல்வு அறியேன்*

    தேன் ஆர் பூஞ்சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
    கானாறாய்ப் பாயும்*  கருத்து உடையேன் ஆவேனே


    பிறை ஏறு சடையானும்*  பிரமனும் இந்திரனும்*
    முறையாய பெரு வேள்விக்*  குறை முடிப்பான் மறை ஆனான்*

    வெறியார் தண் சோலைத்*  திருவேங்கட மலைமேல்*
    நெறியாய்க் கிடக்கும்*  நிலை உடையேன் ஆவேனே


    செடியாய வல்வினைகள் தீர்க்கும்*  திருமாலே*
    நெடியானே வேங்கடவா*  நின் கோயிலின் வாசல்*

    அடியாரும் வானவரும்*  அரம்பையரும் கிடந்து இயங்கும்*
    படியாய்க் கிடந்து*  உன் பவளவாய் காண்பேனே (2)


    உம்பர் உலகு ஆண்டு*  ஒருகுடைக்கீழ் உருப்பசிதன்*
    அம்பொற் கலை அல்குல்*  பெற்றாலும் ஆதரியேன்*

    செம் பவள-வாயான்*  திருவேங்கடம் என்னும்*
    எம்பெருமான் பொன்மலைமேல்*  ஏதேனும் ஆவேனே


    மன்னிய தண் சாரல்*  வட வேங்கடத்தான்தன்*
    பொன் இயலும் சேவடிகள்*  காண்பான் புரிந்து இறைஞ்சிக்*

    கொல் நவிலும் கூர்வேற்*  குலசேகரன் சொன்ன*
    பன்னிய நூற் தமிழ்-வல்லார்*  பாங்காய பத்தர்களே (2)