பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே 
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ் 
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள் 
குலசே கரனென்றே கூறு

 

கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே 
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை 
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன் 
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே

   பாசுரங்கள்


    தேட்டு அருந் திறல்-தேனினைத்*  தென் அரங்கனைத்*  திருமாது வாழ் 
    வாட்டம் இல் வனமாலை மார்வனை வாழ்த்தி*  மால் கொள் சிந்தையராய்*

    ஆட்டம் மேவி அலந்து அழைத்து*  அயர்வு-எய்தும் மெய்யடியார்கள்தம்* 
    ஈட்டம் கண்டிடக் கூடுமேல்*  அது காணும் கண் பயன் ஆவதே  (2)


    தோடு உலா மலர்-மங்கை தோளிணை தோய்ந்ததும்*  சுடர்-வாளியால்* 
    நீடு மா மரம் செற்றதும்*  நிரை மேய்த்ததும் இவையே நினைந்து*

    ஆடிப் பாடி அரங்க ஓ என்று அழைக்கும்*  தொண்டர் அடிப்-பொடி 
    ஆட நாம் பெறில்*  கங்கை நீர் குடைந்து ஆடும் வேட்கை*  என் ஆவதே?  


    ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும்*  முன் இராமனாய்* 
    மாறு அடர்த்ததும் மண் அளந்ததும்*  சொல்லிப் பாடி*  வண் பொன்னிப் பேர்- 

    ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு* அரங்கன் கோயில்-திருமுற்றம்* 
    சேறு செய் தொண்டர் சேவடிச்* செழுஞ் சேறு என் சென்னிக்கு அணிவனே


    தோய்த்த தண் தயிர் வெண்ணெய் பாலுடன் உண்டலும்*  உடன்று ஆய்ச்சி கண்டு* 
    ஆர்த்த தோள் உடை எம்பிரான்*  என் அரங்கனுக்கு அடியார்களாய்*

    நாத் தழும்பு எழ நாரணா என்று அழைத்து*  மெய் தழும்பத் தொழுது 
    ஏத்தி*  இன்பு உறும் தொண்டர் சேவடி*  ஏத்தி வாழ்த்தும் என் நெஞ்சமே


    பொய் சிலைக் குரல் ஏற்று-எருத்தம் இறுத்தப்*  போர்-அரவு ஈர்த்த கோன்* 
    செய் சிலைச் சுடர் சூழ் ஒளித்*  திண்ண மா மதில்-தென் அரங்கனாம்*

    மெய் சிலைக் கருமேகம் ஒன்று*  தம் நெஞ்சில் நின்று திகழப் போய்* 
    மெய் சிலிர்ப்பவர் தம்மையே நினைந்து* என் மனம் மெய் சிலிர்க்குமே


    ஆதி அந்தம் அனந்தம் அற்புதம் ஆன*  வானவர் தம்பிரான்* 
    பாத மா மலர் சூடும் பத்தி இலாத*  பாவிகள் உய்ந்திடத்*

    தீதில் நன்னெறி காட்டி*  எங்கும் திரிந்து அரங்கன் எம்மானுக்கே* 
    காதல் செய் தொண்டர்க்கு எப் பிறப்பிலும்*  காதல் செய்யும் என் நெஞ்சமே 


    கார்-இனம் புரை மேனி நற் கதிர் முத்த*  வெண்ணகைச் செய்ய வாய்*
    ஆர-மார்வன் அரங்கன் என்னும்*  அரும் பெருஞ்சுடர் ஒன்றினைச்*

    சேரும் நெஞ்சினர் ஆகிச் சேர்ந்து*  கசிந்து இழிந்த கண்ணீர்களால்*
    வார நிற்பவர் தாளிணைக்கு* ஒரு வாரம் ஆகும் என் நெஞ்சமே


    மாலை உற்ற கடற் கிடந்தவன்*  வண்டு கிண்டு நறுந்துழாய்*
    மாலை உற்ற வரைப் பெருந் திரு மார்வனை*  மலர்க் கண்ணனை*

    மாலை உற்று எழுந்து ஆடிப்பாடித்*  திரிந்து அரங்கன் எம்மானுக்கே*
    மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு*  மாலை உற்றது என் நெஞ்சமே


    மொய்த்துக் கண் பனி சோர மெய்கள் சிலிர்ப்ப*  ஏங்கி இளைத்து நின்று* 
    எய்த்துக் கும்பிடு நட்டம் இட்டு எழுந்து*  ஆடிப் பாடி இறைஞ்சி*  என்

    அத்தன் அச்சன் அரங்கனுக்கு*  அடி யார்கள் ஆகி*  அவனுக்கே 
    பித்தராம் அவர் பித்தர் அல்லர்கள்*  மற்றையார் முற்றும் பித்தரே  


    அல்லி மா மலர்-மங்கை நாதன்*  அரங்கன் மெய்யடியார்கள் தம்* 
    எல்லை இல் அடிமைத் திறத்தினில்*  என்றும் மேவு மனத்தனாம்* 

    கொல்லி-காவலன் கூடல்-நாயகன்*  கோழிக்கோன் குலசேகரன்*
    சொல்லின் இன்தமிழ் மாலை வல்லவர்*  தொண்டர் தொண்டர்கள் ஆவரே (2)