பிரபந்த தனியன்கள்
நேரிசை வெண்பா
இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே
தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள் பொன்னஞ்
சிலைசேர் நுதலியர்வேள் சேரலர்கோன் எங்கள்
குலசே கரனென்றே கூறு
கட்டளைக் கலித்துறை
ஆரம் கெடப்பர னன்பர்கொள் ளாரென்று அவர்களுக்கே
வாரங் கொடுகுடப் பாம்பில்கை யிட்டவன் மாற்றலரை
வீரங் கெடுத்தசெங் கோல்கொல்லி காவலன் வில்லவர்கோன்
சேரன் குலசே கரன்முடி வேந்தர் சிகாமணியே
பாசுரங்கள்
அங்கண் நெடு மதில் புடை சூழ் அயோத்தி என்னும்* அணி நகரத்து உலகு அனைத்தும் விளக்கும் சோதி*
வெங் கதிரோன் குலத்துக்கு ஓர் விளக்காய்த் தோன்றி* விண் முழுதும் உயக் கொண்ட வீரன்தன்னைச்*
செங்கண் நெடுங் கரு முகிலை இராமன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எங்கள் தனி முதல்வனை எம்பெருமான்தன்னை* என்று கொலோ கண் குளிரக் காணும் நாளே (2)
வந்துஎதிர்ந்த தாடகைதன் உரத்தைக் கீறி* வருகுருதி பொழிதர வன்கணை ஒன்றேவி*
மந்திரம்கொள் மறைமுனிவன் வேள்வி காத்து* வல்லரக்கர் உயிருண்ட மைந்தன் காண்மின்*
செந்தளிர்வாய் மலர்நகைசேர் செழுந்தண் சோலைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
அந்தணர்கள் ஒரு மூவாயிரவர் ஏத்த* அணிமணி ஆசனத்திருந்த அம்மான் தானே.
செவ்வரி நற் கருநெடுங்கண் சீதைக்கு ஆகிச்* சினவிடையோன் சிலையிறுத்து மழுவாள் ஏந்தி*
வெவ்வரி நற் சிலைவாங்கி வென்றி கொண்டு* வேல்வேந்தர் பகை தடிந்த வீரன்தன்னைத்*
தெவ்வர் அஞ்சு நெடும்புரிசை உயர்ந்த பாங்கர்த்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எவ்வரி வெஞ்சிலைத் தடக்கை இராமன் தன்னை* இறைஞ்சுவார் இணையடியே இறைஞ்சினேனே*
தொத்து அலர் பூஞ் சுரிகுழல்-கைகேசி சொல்லால்* தொல் நகரம் துறந்து துறைக் கங்கைதன்னைப்*
பத்தி உடைக் குகன் கடத்த வனம் போய்ப் புக்கு* பரதனுக்குப் பாதுகமும் அரசும் ஈந்து*
சித்திரகூடத்து இருந்தான்தன்னை இன்று- தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எத்தனையும் கண்குளிரக் காணப் பெற்ற* இருநிலத்தார்க்கு இமையவர் நேர் ஒவ்வார்தாமே
வலிவணக்கு வரைநெடுந்தோள் விராதைக் கொன்று* வண்டமிழ்மா முனிகொடுத்த வரிவில் வாங்கி*
கலைவணக்கு நோக்கரக்கி மூக்கை நீக்கிக்* கரனோடு தூடணன்ற னுயிரை வாங்கி*
சிலைவணக்கி மான்மரிய வெய்தான் றன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ர கூடந் தன்னுள்*
தலைவணக்கிக் கைகூப்பி யேத்த வல்லார்* திரிதலால் தவமுடைத்தித் தரணி தானே.
தனம் மருவு வைதேகி பிரியல் உற்று* தளர்வு எய்திச் சடாயுவை வைகுந்தத்து ஏற்றி*
வனம் மருவு கவியரசன் காதல் கொண்டு* வாலியைக் கொன்று இலங்கைநகர் அரக்கர்கோமான்*
சினம் அடங்க மாருதியாற் சுடுவித்தானைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
இனிது அமர்ந்த அம்மானை இராமன்தன்னை* ஏத்துவார் இணையடியே ஏத்தினேனே*
குரை கடலை அடல் அம்பால் மறுக எய்து* குலை கட்டி மறுகரையை அதனால் ஏறி*
எரி நெடு வேல் அரக்கரொடும் இலங்கை வேந்தன்* இன்னுயிர் கொண்டு அவன்தம்பிக்கு அரசும் ஈந்து*
திருமகளோடு இனிது அமர்ந்த செல்வன்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
அரசு-அமர்ந்தான் அடி சூடும் அரசை அல்லால்* அரசு ஆக எண்ணேன் மற்று அரசு தானே*
அம் பொன் நெடு மணிமாட அயோத்தி எய்தி* அரசு எய்தி அகத்தியன்வாய்த் தான் முன் கொன்றான்*
தன் பெருந்தொல் கதை கேட்டு மிதிலைச் செல்வி* உலகு உய்யத் திரு வயிறு வாய்த்த மக்கள்*
செம் பவளத் திரள்வாய்த் தன் சரிதை கேட்டான்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
எம்பெருமான் தன்சரிதை செவியால் கண்ணால்* பருகுவோம் இன்னமுதம் மதியோம் ஒன்றே*
செறி தவச் சம்புகன்தன்னைச் சென்று கொன்று* செழு மறையோன் உயிர் மீட்டு தவத்தோன் ஈந்த
நிறை மணிப் பூண் அணியும் கொண்டு இலவணன் தன்னைத்* தம்பியால் வான் ஏற்றி முனிவன் வேண்டத்
திறல் விளங்கும் இலக்குமனைப் பிரிந்தான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்
உறைவானை மறவாத உள்ளந்தன்னை* உடையோம் மற்று உறுதுயரம் அடையோம் அன்றே
அன்று சராசரங்களை வைகுந்தத்து ஏற்றி* அடல் அரவப் பகையேறி அசுரர்தம்மை*
வென்று இலங்கு மணி நெடுந்தோள் நான்கும் தோன்ற* விண் முழுதும் எதிர்வரத் தன் தாமம் மேவி*
சென்று இனிது வீற்றிருந்த அம்மான்தன்னைத்* தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்*
என்றும் நின்றான் அவன் இவனென்று ஏத்தி நாளும்* இறைஞ்சுமினோ எப்பொழுதும் தொண்டீர் நீரே*
தில்லைநகர்த் திருச்சித்ரகூடந் தன்னுள்* திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை*
எல்லை இல் சீர்த் தயரதன்தன் மகனாய்த் தோன்றிற்று* அது முதலாத் தன் உலகம் புக்கது ஈறா*
கொல் இயலும் படைத் தானைக் கொற்ற ஒள்வாள்* கோழியர்கோன் குடைக் குலசேகரன் சொற் செய்த*
நல் இயல் இன் தமிழ்மாலை பத்தும் வல்லார்* நலந் திகழ் நாரணன் அடிக்கீழ் நண்ணுவாரே*