பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


  கொங்கு அலர்ந்த மலர்க் குருந்தம் ஒசித்த*  கோவலன் எம் பிரான் 
  சங்கு தங்கு தடங் கடல்*  துயில் கொண்ட தாமரைக் கண்ணினன்*

  பொங்கு புள்ளினை வாய் பிளந்த*  புராணர் தம் இடம்*
  பொங்கு நீர் செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


  பள்ளி ஆவது பாற்கடல் அரங்கம்*  இரங்க வன் பேய் முலை* 
  பிள்ளையாய் உயிர் உண்ட எந்தை* பிரான் அவன் பெருகும் இடம்*

  வெள்ளியான் கரியான்*  மணி நிற வண்ணன் என்று எண்ணி*
  நாள்தொறும் தெள்ளியார் வணங்கும் மலைத்* திருவேங்கடம் அடை நெஞ்சமே!  (2) 


  நின்ற மா மருது இற்று வீழ*  நடந்த நின்மலன் நேமியான்* 
  என்றும் வானவர் கைதொழும்*  இணைத் தாமரை அடி எம் பிரான்* 

  கன்றி மாரி பொழிந்திட*  கடிது ஆ நிரைக்கு இடர் நீக்குவான்* 
  சென்று குன்றம் எடுத்தவன்*  திரு வேங்கடம் அடை நெஞ்சமே!   


  பார்த்தற்கு ஆய் அன்று பாரதம் கைசெய்திட்டு*  வென்ற பரஞ்சுடர்* 
  கோத்து அங்கு ஆயர்தம் பாடியில்* குரவை பிணைந்த எம் கோவலன்*

  ஏத்துவார் தம் மனத்து உள்ளான்*  இட வெந்தை மேவிய எம் பிரான்* 
  தீர்த்த நீர்த் தடம் சோலை சூழ்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!   


  வண் கையான் அவுணர்க்கு நாயகன்*  வேள்வியில் சென்று மாணியாய்* 
  மண் கையால் இரந்தான்*  மராமரம் ஏழும் எய்த வலத்தினான்* 

  எண் கையான் இமயத்து உள்ளான்*  இருஞ்சோலை மேவிய எம் பிரான்* 
  திண் கை மா துயர் தீர்த்தவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!        


  எண் திசைகளும் ஏழ் உலகமும் வாங்கி*  பொன் வயிற்றில் பெய்து* 
  பண்டு ஓர் ஆல் இலைப் பள்ளி கொண்டவன்*  பால் மதிக்கு இடர் தீர்த்தவன்* 

  ஒண் திறல் அவுணன் உரத்து உகிர் வைத்தவன்*  ஒள் எயிற்றொடு* 
  திண் திறல் அரியாயவன்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! 


  பாரும் நீர் எரி காற்றினோடு*  ஆகாசமும் இவை ஆயினான்* 
  பேரும் ஆயிரம் பேச நின்ற*  பிறப்பிலி பெருகும் இடம்* 

  காரும் வார் பனி நீள் விசும்பிடைச்*  சோரும் மா முகில் தோய்தர*
  சேரும் வார் பொழில் சூழ்*  எழில் திருவேங்கடம் அடை நெஞ்சமே!


  அம்பரம் அனல் கால் நிலம் சலம்*  ஆகி நின்ற அமரர்கோன்* 
  வம்பு உலாம் மலர்மேல்*  மலி மட மங்கை தன் கொழுநன்அவன்* 

  கொம்பின் அன்ன இடை மடக் குற மாதர்*  நீள் இதணம்தொறும்* 
  செம் புனம் அவை காவல் கொள்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே!


  பேசும் இன் திருநாமம் எட்டு எழுத்தும்*  சொலி நின்று பின்னரும்* 
  பேசுவார்தமை உய்ய வாங்கி*  பிறப்பு அறுக்கும் பிரான் இடம்*

  வாச மா மலர் நாறு வார் பொழில்*  சூழ் தரும் உலகுக்கு எலாம்* 
  தேசமாய்த் திகழும் மலைத்*  திருவேங்கடம் அடை நெஞ்சமே! (2)


  செங் கயல் திளைக்கும் சுனைத்*  திருவேங்கடத்து உறை செல்வனை* 
  மங்கையர் தலைவன் கலிகன்றி*  வண் தமிழ்ச் செஞ்சொல் மாலைகள்* 

  சங்கை இன்றித் தரித்து உரைக்கவல்லார்கள்*  தஞ்சமதாகவே* 
  வங்க மா கடல் வையம் காவலர் ஆகி*  வான்உலகு ஆள்வரே!   


  திரிபுரம் மூன்று எரித்தானும்*  மற்றை மலர்மிசை மேல் அயனும்வியப்ப* 
  முரிதிரை மாகடல் போல்முழங்கி*  மூவுலகும் முறையால் வணங்க* 

  எரிஅன கேசர வாள்எயிற்றோடு*  இரணியன்ஆகம் இரண்டு கூறா* 
  அரிஉருஆம் இவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே. (2)     


  வெம்திறல் வீரரில் வீரர்ஒப்பார்*  வேதம் உரைத்து இமையோர் வணங்கும்* 
  செந்தமிழ் பாடுவார் தாம்வணங்கும்* தேவர் இவர்கொல் தெரிக்கமாட்டேன்* 

  வந்து குறள்உருவாய் நிமிர்ந்து*  மாவலி வேள்வியில் மண்அளந்த* 
  அந்தணர் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்ட புயகரத்தேன்என்றாரே.   


  செம்பொன்இலங்கு வலங்கைவாளி *  திண்சிலை தண்டொடு சங்கம்ஒள்வாள்* 
  உம்பர்இருசுடர்ஆழியோடு*  கேடகம் ஒண்மலர் பற்றி எற்றே* 

  வெம்பு சினத்து அடல் வேழம்வீழ*  வெண்மருப்புஒன்று பறித்து*
  இருண்ட அம்புதம் போன்றிவர் ஆர்கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே . 


  மஞ்சுஉயர் மாமணிக் குன்றம் ஏந்தி*  மாமழை காத்துஒரு மாயஆனை அஞ்ச*
  அதன்மருப்புஒன்று வாங்கும்*  ஆயர்கொல் மாயம் அறியமாட்டேன்* 

  வெம்சுடர்ஆழியும் சங்கும் ஏந்தி*  வேதம் முன் ஓதுவர் நீதிவானத்து* 
  அம்சுடர் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்ட புயகரத்தேன் என்றாரே. 


  கலைகளும் வேதமும் நீதிநூலும்*  கற்பமும் சொல் பொருள் தானும்*
  மற்றை நிலைகளும் வானவர்க்கும் பிறர்க்கும்*  நீர்மையினால் அருள் செய்து*

  நீண்ட மலைகளும் மாமணியும்*  மலர்மேல் மங்கையும் சங்கமும் தங்குகின்ற* 
  அலைகடல் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


  எங்ஙனும் நாம்இவர் வண்ணம் எண்ணில்*  ஏதும் அறிகிலம் ஏந்திழையார்* 
  சங்கும் மனமும் நிறையும் எல்லாம்*  தம்மனஆகப் புகுந்து*

  தாமும்பொங்கு கருங்கடல் பூவைகாயா*  போதுஅவிழ் நீலம் புனைந்தமேகம்* 
  அங்ஙனம் போன்றிவர் ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.    


  முழுசிவண்டுஆடிய தண்துழாயின்*  மொய்ம்மலர்க் கண்ணியும், மேனிஅம்*
  சாந்துஇழுசிய கோலம் இருந்தவாறும்*  எங்ஙனம் சொல்லுகேன்! ஓவிநல்லார்* 

  எழுதிய தாமரை அன்னகண்ணும்*  ஏந்துஎழில்ஆகமும் தோளும்வாயும்* 
  அழகியதாம் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தேன் என்றாரே.


  மேவி எப்பாலும் விண்ணோர்வணங்க*  வேதம் உரைப்பர் முந் நீர்மடந்தை தேவி* 
  அப்பால் அதிர்சங்கம்இப்பால் சக்கரம்*  மற்றுஇவர் வண்ணம் எண்ணில்* 

  காவிஒப்பார் கடலேயும்ஒப்பார்*  கண்ணும் வடிவும் நெடியர்ஆய்*
  என் ஆவிஒப்பார் இவர்ஆர்கொல் என்ன*  அட்டபுயகரத்தே என்றாரே.        


  தஞ்சம் இவர்க்கு என்வளையும்நில்லா*  நெஞ்சமும் தம்மதே சிந்தித்தேற்கு* 
  வஞ்சிமருங்குல் நெருங்கநோக்கி*  வாய்திறந்து ஒன்று பணித்ததுஉண்டு* 

  நஞ்சம் உடைத்துஇவர் நோக்கும்நோக்கம்*  நான் இவர் தம்மை அறியமாட்டேன்* 
  அஞ்சுவன் மற்றுஇவர்ஆர் கொல்? என்ன*  அட்டபுயகரத்தேன்என்றாரே.   


  மன்னவன் தொண்டையர் கோன்வணங்கும்*  நீள்முடி மாலை வயிரமேகன்* 
  தன்வலி தன்புகழ் சூழ்ந்தகச்சி*  அட்ட புயகரத்து ஆதிதன்னை* 

  கன்னிநல் மாமதிள் மங்கைவேந்தன்*  காமருசீர்க் கலிகன்றி*
  குன்றா இன்இசையால்சொன்ன செஞ்சொல்மாலை*  ஏத்தவல்லார்க்கு இடம் வைகுந்தமே. (2) 


  நந்தா விளக்கே! அளத்தற்கு அரியாய்!*  நர நாரணனே! கருமாமுகில்போல் எந்தாய்*
  எமக்கே அருளாய் எனநின்று*  இமையோர் பரவும்இடம்*

  எத்திசையும் கந்தாரம் அம் தேன் இசைபாடமாடே*  களிவண்டுமிழற்ற நிழல்துதைந்து* 
  மந்தாரம் நின்று மணம் மல்கும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே! (2)


  முதலைத் தனி மா முரண் தீர அன்று*  முது நீர்த் தடச் செங் கண் வேழம் உய்ய* 
  விதலைத்தலைச் சென்று அதற்கே உதவி*  வினை தீர்த்த அம்மான் இடம் விண் அணவும்*

  பதலைக் கபோதத்து ஒளி மாட நெற்றிப்*  பவளக் கொழுங் கால பைங் கால் புறவம்* 
  மதலைத் தலை மென் பெடை கூடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


  கொலைப் புண் தலைக் குன்றம் ஒன்று உய்ய*  அன்று கொடு மா முதலைக்கு இடர்செய்து கொங்கு ஆர்* 
  இலை புண்டரீகத்தவள் இன்பம் அன்போடு*  அணைந்திட்ட அம்மான் இடம் ஆள் அரியால்*

  அலைப்புண்ட யானை மருப்பும் அகிலும்*  அணி முத்தும் வெண் சாமரையோடு பொன்னி* 
  மலைப் பண்டம் அண்ட திரை உந்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


  சிறை ஆர் உவணப் புள் ஒன்று ஏறி அன்று*  திசை நான்கும் நான்கும் இரிய*  செருவில் 
  கறை ஆர் நெடு வேல் அரக்கர் மடிய*  கடல் சூழ் இலங்கை கடந்தான் இடம்தான்*

  முறையால் வளர்க்கின்ற முத் தீயர் நால் வேதர்*  ஐ வேள்வி ஆறு அங்கர் ஏழின் இசையோர்* 
  மறையோர் வணங்கப் புகழ் எய்தும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


  இழை ஆடு கொங்கைத் தலை நஞ்சம் உண்டிட்டு*  இளங் கன்று கொண்டு விளங்காய் எறிந்து* 
  தழை வாட வன் தாள் குருந்தம் ஒசித்து*  தடந் தாமரைப் பொய்கை புக்கான் இடம்தான்*

  குழை ஆட வல்லிக் குலம் ஆட மாடே*  குயில் கூவ நீடு கொடி மாடம் மல்கு* 
  மழை ஆடு சோலை மயில் ஆலும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என்மனனே!


  பண் நேர் மொழி ஆய்ச்சியர் அஞ்ச வஞ்சப்*  பகு வாய்க் கழுதுக்கு இரங்காது*  அவள்தன் 
  உண்ணா முலை மற்று அவள் ஆவியோடும்*  உடனே சுவைத்தான் இடம்*

  ஓங்கு பைந் தாள் கண் ஆர் கரும்பின் கழை தின்று வைகி*  கழுநீரில் மூழ்கி செழு நீர்த் தடத்து* 
  மண் ஏந்து இள மேதிகள் வைகும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!


  தளைக் கட்டு அவிழ் தாமரை வைகு பொய்கைத்*  தடம் புக்கு அடங்கா விடம் கால் அரவம்* 
  இளைக்கத் திளைத்திட்டு அதன் உச்சி தன்மேல்*  அடி வைத்த அம்மான் இடம்*  

  மாமதியம் திளைக்கும் கொடி மாளிகை சூழ் தெருவில்*  செழு முத்து வெண்ணெற்கு எனச் சென்று*  
  முன்றில் வளைக்கை நுளைப் பாவையர் மாறும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!    


  துளைஆர் கரு மென் குழல் ஆய்ச்சியர் தம்*  துகில் வாரியும் சிற்றில் சிதைத்தும்*
  முற்றா இளையார் விளையாட்டொடு காதல் வெள்ளம்*  விளைவித்த அம்மான் இடம்*

  வேல் நெடுங்கண் முளை வாள் எயிற்று*  மடவார் பயிற்று மொழி கேட்டிருந்து முதிராத இன்சொல்* 
  வளை வாய கிள்ளை மறை பாடும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்கு என் மனனே!  


  விடை ஓட வென்று ஆய்ச்சி மென் தோள் நயந்த*  விகிர்தா! விளங்கு சுடர் ஆழி என்னும்* 
  படையோடு சங்கு ஒன்று உடையாய்! 'என நின்று*  இமையோர் பரவும் இடம்*

  பைந் தடத்துப் பெடையோடுசெங்கால அன்னம் துகைப்ப*  தொகைப் புண்டரீகத்திடைச் செங்கழுநீர்* 
  மடை ஓட நின்று மது விம்மும் நாங்கூர்*  மணிமாடக்கோயில் வணங்குஎன்மனனே!


  வண்டு ஆர் பொழில் சூழ்ந்து அழகு ஆய நாங்கூர்*  மணிமாடக்கோயில் நெடுமாலுக்கு*
  என்றும் தொண்டு ஆய தொல் சீர் வயல் மங்கையர்கோன்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலைவல்லார்*

  கண்டார் வணங்கக் களி யானை மீதே*  கடல்சூழ் உலகுக்கு ஒரு காவலர்ஆய்* 
  விண் தோய் நெடு வெண் குடை நீழலின் கீழ்*  விரி நீர் உலகு ஆண்டு விரும்புவரே. (2)


  கவள யானைக் கொம்புஒசித்த*  கண்ணன் என்றும் காமருசீர்* 
  குவளை மேகம் அன்ன மேனி*  கொண்ட கோன் என் ஆனை என்றும்*

  தவள மாடம் நீடு நாங்கைத்*  தாமரையாள் கேள்வன் என்றும்* 
  பவள வாயாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


  கஞ்சன் விட்ட வெம் சினத்த*  களிறு அடர்த்த காளை என்றும்* 
  வஞ்சம் மேவி வந்த பேயின்*  உயிரை உண்ட மாயன் என்றும்*

  செஞ்சொலாளர் நீடு நாங்கைத்*  தேவ-தேவன் என்று என்று ஓதி* 
  பஞ்சி அன்ன மெல் அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


  அண்டர் கோன் என் ஆனை என்றும்*  ஆயர் மாதர் கொங்கை புல்கு 
  செண்டன் என்றும்*  நான்மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்*

  வண்டு உலாவு பொழில் கொள் நாங்கை*  மன்னும் மாயன் என்று என்று ஓதி* 
  பண்டுபோல் அன்று என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.      


  கொல்லை ஆனாள் பரிசு அழிந்தாள்*  கோல் வளையார் தம்முகப்பே* 
  மல்லை முந்நீர் தட்டு இலங்கை*  கட்டு அழித்த மாயன் என்றும்*

  செல்வம் மல்கு மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி*
  பல் வளையாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.   


  அரக்கர் ஆவி மாள அன்று*  ஆழ் கடல் சூழ் இலங்கை செற்ற* 
  குரக்கரசன் என்றும்*  கோல வில்லி என்றும் மா மதியை*

  நெருக்கும் மாடம் நீடு நாங்கை*  நின்மலன்தான் என்று என்று ஓதி* 
  பரக்கழிந்தாள் என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே. 


  ஞாலம் முற்றும் உண்டு உமிழ்ந்த*  நாதன் என்றும் நானிலம் சூழ்* 
  வேலை அன்ன கோல மேனி*  வண்ணன் என்றும்*

  மேல் எழுந்து சேல் உகளும் வயல் கொள் நாங்கைத்*  தேவ தேவன் என்று என்று ஓதி* 
  பாலின் நல்ல மென் மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.            


  நாடி என்தன் உள்ளம் கொண்ட*  நாதன் என்றும்*  நான்மறைகள்-
  தேடி என்றும் காண மாட்டாச்*  செல்வன் என்றும்*

  சிறை கொள் வண்டு சேடு உலவு பொழில் கொள் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
  பாடகம் சேர் மெல்அடியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


  உலகம் ஏத்தும் ஒருவன் என்றும்*  ஒண் சுடரோடு உம்பர் எய்தா* 
  நிலவும் ஆழிப் படையன் என்றும்* நேசன் என்றும்*  தென் திசைக்குத்

  திலதம் அன்ன மறையோர் நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
  பலரும் ஏச என் மடந்தை*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.


  கண்ணன் என்றும் வானவர்கள்*  காதலித்து மலர்கள் தூவும்* 
  எண்ணன் என்றும் இன்பன் என்றும்*  ஏழ் உலகுக்கு ஆதி என்றும்*

  திண்ண மாடம் நீடு நாங்கைத்*  தேவதேவன் என்று என்று ஓதி* 
  பண்ணின் அன்ன மென்மொழியாள்*  பார்த்தன்பள்ளி பாடுவாளே.    


  பாருள் நல்ல மறையோர் நாங்கைப்*  பார்த்தன்பள்ளிச் செங்கண்மாலை* 
  வார் கொள் நல்ல முலை மடவாள் பாடலைத்*  தாய் மொழிந்த மாற்றம்*

  கூர் கொள் நல்ல வேல் கலியன்*  கூறு தமிழ்ப் பத்தும் வல்லார்* 
  ஏர் கொள் நல்ல வைகுந்தத்துள்*  இன்பம் நாளும் எய்துவாரே.(2)


  ஏழை ஏதலன் கீழ்மகன் என்னாதுஇரங்கி*  மற்று அவற்கு இன் அருள் சுரந்து* 
  மாழை மான் மட நோக்கி உன் தோழி*  உம்பி எம்பி என்று ஒழிந்திலை*  உகந்து

  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற சொற்கள் வந்து*  அடியேன் மனத்து இருந்திட* 
  ஆழி வண்ண! நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே


  வாத மா மகன் மர்க்கடம் விலங்கு*  மற்றுஓர்சாதிஎன்று ஒழிந்திலை*  உகந்து 
  காதல் ஆதரம் கடலினும் பெருகச்*  செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று*

  கோது இல் வாய்மையினாயொடும் உடனே*  உண்பன் நான் என்ற ஒண் பொருள்*  எனக்கும 
  ஆதல் வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


  கடி கொள் பூம் பொழில் காமரு பொய்கை*  வைகு தாமரை வாங்கிய வேழம்* 
  முடியும் வண்ணம் ஓர் முழு வலி முதலை பற்ற*  மற்று அது நின் சரண் நினைப்ப* 

  கொடிய வாய் விலங்கின் உயிர் மலங்கக்*  கொண்ட சீற்றம் ஒன்று உண்டு உளது அறிந்து*  உன 
  அடியனேனும் வந்து அடி இணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


  நஞ்சு சோர்வது ஓர் வெம் சின அரவம்*  வெருவி வந்து நின் சரண் என சரண் ஆய்* 
  நெஞ்சில் கொண்டு நின் அம் சிறைப் பறவைக்கு*  அடைக்கலம் கொடுத்து அருள்செய்தது அறிந்து*

  வெம் சொலாளர்கள் நமன்தமர் கடியர்*  கொடிய செய்வன உள*  அதற்கு அடியேன் 
  அஞ்சி வந்து நின் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


  மாகம் மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும்*  மலர் அடி கண்ட மா மறையாளன்* 
  தோகை மா மயில் அன்னவர் இன்பம்*  துற்றிலாமையில் அத்த! இங்கு ஒழிந்து*

  போகம் நீ எய்தி பின்னும் நம் இடைக்கே*  போதுவாய் என்ற பொன் அருள்*  எனக்கும 
  ஆக வேண்டும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


  மன்னு நான்மறை மா முனி பெற்ற மைந்தனை*  மதியாத வெம் கூற்றம்- 
  தன்னை அஞ்சி நின் சரண் என சரண் ஆய்*  தகவு இல் காலனை உக முனிந்து ஒழியா*

  பின்னை என்றும் நின் திருவடி பிரியாவண்ணம்*  எண்ணிய பேர் அருள்*  எனக்கும்- 
  அன்னது ஆகும் என்று அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே .


  ஓது வாய்மையும் உவனியப் பிறப்பும்*  உனக்கு முன் தந்த அந்தணன் ஒருவன்* 
  காதல் என் மகன் புகல் இடம் காணேன்*  கண்டு நீ தருவாய் எனக்கு என்று*

  கோது இல் வாய்மையினான் உனை வேண்டிய*  குறை முடித்து அவன் சிறுவனைக் கொடுத்தாய்*
  ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


  வேத வாய்மொழி அந்தணன் ஒருவன்*  எந்தை! நின் சரண் என்னுடை மனைவி* 
  காதல் மக்களைப் பயத்தலும் காணாள்*  கடியது ஓர் தெய்வம் கொண்டு ஒளிக்கும் என்று அழைப்ப*

  ஏதலார் முன்னே இன் அருள் அவற்குச்செய்து*  உன் மக்கள் மற்று இவர் என்று கொடுத்தாய்* 
  ஆதலால் வந்து உன் அடிஇணை அடைந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே. 


  துளங்கு நீள் முடி அரசர்தம் குரிசில்*  தொண்டை மன்னவன் திண் திறல் ஒருவற்கு* 
  உளம் கொள் அன்பினோடு இன் அருள் சுரந்து*  அங்கு ஓடு நாழிகை ஏழ் உடன் இருப்ப*

  வளம் கொள் மந்திரம் மற்று அவற்கு அருளிச்செய்த ஆறு*  அடியேன் அறிந்து*  உலகம் 
  அளந்த பொன் அடியே அடைந்து உய்ந்தேன்*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானே.


  மாட மாளிகை சூழ் திருமங்கைமன்னன்*  ஒன்னலர்தங்களை வெல்லும்* 
  ஆடல்மா வலவன் கலிகன்றி*  அணி பொழில் திருவரங்கத்து அம்மானை*

  நீடு தொல் புகழ் ஆழி வல்லானை*  எந்தையை நெடுமாலை நினைந்த* 
  பாடல் பத்துஇவை பாடுமின் தொண்டீர்! பாட*  நும்மிடைப் பாவம் நில்லாவே.


  மான் கொண்ட தோல்*  மார்வின் மாணி ஆய்*  மாவலி மண் 
  தான் கொண்டு*  தாளால் அளந்த பெருமானை*

  தேன் கொண்ட சாரல்*  திருவேங்கடத்தானை* 
  நான் சென்று நாடி*  நறையூரில் கண்டேனே. (2)     


  முந்நீரை முன் நாள்*  கடைந்தானை*  மூழ்த்த நாள் 
  அந்நீரை மீன் ஆய்*  அமைத்த பெருமானை* 

  தென் ஆலி மேய*  திருமாலை எம்மானை* 
  நல்நீர் சூழ்*  நறையூரில் கண்டேனே.


  தூ வாய புள் ஊர்ந்து வந்து*  துறை வேழம்* 
  மூவாமை நல்கி*  முதலை துணித்தானை* 

  தேவாதிதேவனை*  செங் கமலக் கண்ணானை*
  நாவாய் உளானை*  நறையூரில் கண்டேனே.    


  ஓடா அரி ஆய்*  இரணியனை ஊன் இடந்த* 
  சேடு ஆர் பொழில் சூழ்*  திருநீர்மலையானை

  வாடா மலர்த் துழாய்*  மாலை முடியானை* 
  நாள்தோறும் நாடி*  நறையூரில் கண்டேனே.   


  கல் ஆர் மதிள் சூழ்*  கதி இலங்கைக் கார் அரக்கன்* 
  வல் ஆகம் கீள*  வரி வெம் சரம் துரந்த

  வில்லானை*  செல்வ விபீடணற்கு வேறாக* 
  நல்லானை நாடி*  நறையூரில் கண்டேனே .    


  உம்பர் உலகோடு*  உயிர் எல்லாம் உந்தியில்* 
  வம்பு மலர்மேல்*  படைத்தானை மாயோனை*

  அம்பு அன்ன கண்ணாள்* அசோதை தன் சிங்கத்தை* 
  நம்பனை நாடி*  நறையூரில் கண்டேனே.     


  கட்டு ஏறு நீள் சோலைக்*  காண்டவத்தைத் தீ மூட்டி 
  விட்டானை*  மெய்யம் அமர்ந்த பெருமானை*

  மட்டு ஏறு கற்பகத்தை*  மாதர்க்கு ஆய்* வண் துவரை 
  நட்டானை நாடி*  நறையூரில் கண்டேனே.


  மண்ணின் மீ பாரம் கெடுப்பான்*  மற மன்னர்* 
  பண்ணின்மேல் வந்த*  படை எல்லாம் பாரதத்து*

  விண்ணின் மீது ஏற* விசயன் தேர் ஊர்ந்தானை* 
  நண்ணி நான் நாடி*  நறையூரில் கண்டேனே.      


  பொங்கு ஏறு நீள் சோதிப்*  பொன் ஆழி தன்னோடும்* 
  சங்கு ஏறு கோலத்*  தடக் கைப் பெருமானை*

  கொங்கு ஏறு சோலைக்*  குடந்தைக் கிடந்தானை* 
  நம் கோனை நாடி*  நறையூரில் கண்டேனே.  (2)


  மன்னும் மதுரை*  வசுதேவர் வாழ் முதலை* 
  நல் நறையூர்*  நின்ற நம்பியை*  வம்பு அவிழ் தார்

  கல் நவிலும் தோளான்*  கலியன் ஒலி வல்லார்* 
  பொன்உலகில் வானவர்க்குப்*  புத்தேளிர் ஆகுவரே. (2)  


  செங்கமலத் திருமகளும் புவியும் செம்பொன்*  திருவடியின்இணை வருட முனிவர்ஏத்த* 
  வங்கம்மலி தடங்கடலுள் அநந்தன்என்னும்*  வரிஅரவின்அணைத் துயின்ற மாயோன் காண்மின்*

  எங்கும்மலி நிறை புகழ்நால் வேதம்*  ஐந்து-  வேள்விகளும் கேள்விகளும் இயன்ற தன்மை* 
  அம்கமலத்து அயன்அனையார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   (2)


  முன் இவ்உலகுஏழும் இருள் மண்டிஉண்ண*  முனிவரொடு தானவர்கள் திசைப்ப*  வந்து- 
  பன்னுகலை நால்வேதப் பொருளை எல்லாம்*  பரிமுகம்ஆய் அருளிய எம்பரமன் காண்மின்* 

  செந்நெல் மலிகதிர் கவரி வீச*  சங்கம் அவைமுரல செங்கமல மலரை ஏறி* 
  அன்னம் மலிபெடையோடும் அமரும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர்கோவே*


  குலத்தலைய மதவேழம் பொய்கை புக்கு*  கோள்முதலை பிடிக்க அதற்கு அனுங்கிநின்று*  
  நிலத்திகழும் மலர்ச்சுடர்ஏய் சோதீ! என்ன*  நெஞ்சுஇடர் தீர்த்தருளிய என்நிமலன் காண்மின்*

  மலைத்திகழ் சந்துஅகில் கனகம்மணியும் கொண்டு*  வந்துஉந்தி வயல்கள்தொறும் மடைகள்பாய*  
  அலைத்துவரும் பொன்னிவளம் பெருகும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*     


  சிலம்புமுதல் கலன்அணிந்துஓர் செங்கல் குன்றம்*  திகழ்ந்ததுஎன திருஉருவம் பன்றி ஆகி* 
  இலங்குபுவி மடந்தைதனை இடந்து புல்கி*  எயிற்றிடை வைத்தருளிய எம்ஈசன் காண்மின்*

  புலம்புசிறை வண்டுஒலிப்ப பூகம் தொக்க*  பொழில்கள் தொறும் குயில்கூவ மயில்கள் ஆல* 
  அலம்புதிரைப் புனல்புடைசூழ்ந்து அழகுஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


  சினம்மேவும் அடல்அரியின் உருவம்ஆகி*  திறல்மேவும் இரணியனது ஆகம் கீண்டு* 
  மனம்மேவு வஞ்சனையால் வந்த பேய்ச்சி-  மாள உயிர் வவ்விய எம்மாயோன் காண்மின்*

  இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை*  ஏய்வாய மரகதம்போல் கிளியின்இன் சொல்* 
  அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*   


  வானவர் தம்துயர் தீரவந்து தோன்றி*  மாண்உருஆய் மூவடி மாவலியை வேண்டி* 
  தான்அமர ஏழ்உலகும் அளந்த வென்றித்*  தனிமுதல் சக்கரப்படை என்தலைவன் காண்மின்*

  தேன்அமரும் பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  செழுமாட மாளிகைகள் கூடம்தோறும்* 
  ஆனதொல்சீர் மறையாளர் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே* 


  பந்துஅணைந்த மெல்விரலாள் சீதைக்கு ஆகி*  பகலவன் மீதுஇயங்காத இலங்கை வேந்தன்* 
  அந்தம்இல் திண் கரம்சிரங்கள் புரண்டு வீழ*  அடுகணையால் எய்துஉகந்த அம்மான் காண்மின்*

  செந்தமிழும் வடகலையும் திகழ்ந்த நாவர்*  திசைமுகனை அனையவர்கள் செம்மை மிக்க* 
  அந்தணர்தம் ஆகுதியின் புகைஆர் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


  கும்பமிகு மதவேழம் குலைய கொம்பு- பறித்து மழவிடை அடர்த்து குரவை கோத்து* 
  வம்புஅவிழும் மலர்க்குழலாள்ஆய்ச்சி வைத்த- தயிர்வெண்ணெய் உண்டுஉகந்த மாயோன் காண்மின்*

  செம்பவளம் மரதகம் நல் முத்தம் காட்டத்*  திகழ்பூகம் கதலிபல வளம்மிக்கு எங்கும்*
  அம்பொன் மதிள்பொழில் புடைசூழ்ந்து அழகார் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*


  ஊடுஏறு கஞ்சனொடு மல்லும் வில்லும்*  ஒண்கரியும் உருள்சகடும் உடையச் செற்ற* 
  நீடுஏறு பெருவலித் தோள்உடைய வென்றி*  நிலவுபுகழ் நேமிஅங்கை நெடியோன் காண்மின்*

  சேடுஏறு பொழில்தழுவும் எழில்கொள் வீதி*  திருவிழவில் மணிஅணிந்த திண்ணை தோறும்* 
  ஆடுஏறு மலர்க்குழலார் பயிலும் செல்வத்து*  அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே*      


  பன்றிஆய் மீன்ஆகி அரிஆய்*  பாரைப்- படைத்து காத்துஉண்டு உமிழ்ந்த பரமன் தன்னை* 
  அன்று அமரர்க்குஅதிபதியும் அயனும் சேயும்- அடிபணிய அணிஅழுந்தூர் நின்ற கோவை*

  கன்றி நெடுவேல் வலவன் ஆலிநாடன்*  கலிகன்றி ஒலிசெய்த இன்பப் பாடல்* 
  ஒன்றினொடு நான்கும் ஓர்ஐந்தும் வல்லார்*  ஒலிகடல் சூழ்உலகுஆளும் உம்பர் தாமே* (2)


  வானோர் அளவும் முது முந்நீர்*  வளர்ந்த காலம்,*  வலிஉருவின்- 
  மீன்ஆய் வந்து வியந்து உய்யக்கொண்ட*  தண்தாமரைக் கண்ணன்*

  ஆனா உருவில் ஆன்ஆயன்*  அவனை அம்மா விளைவயலுள்* 
  கான்ஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.   (2)


  மலங்கு விலங்கு நெடுவெள்ளம் மறுக*  அங்கு ஓர் வரைநட்டு* 
  இலங்கு சோதிஆர் அமுதம்*  எய்தும் அளவு ஓர்ஆமைஆய்*

  விலங்கல் திரியத் தடங்கடலுள்*  சுமந்து கிடந்த வித்தகனை*
  கலங்கல் முந்நீர்க் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


  பாரஆர் அளவும் முதுமுந்நீர்*  பரந்த காலம்,* வளைமருப்பின்-
  ஏர்ஆர் உருவத்து ஏனம்ஆய்*  எடுத்த ஆற்றல் அம்மானை*

  கூர்ஆர் ஆரல்இரை கருதி*  குருகு பாய கயல் இரியும்*
  கார்ஆர் புறவன் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


  உளைந்த அரியும் மானிடமும்*  உடனாய்த் தோன்ற ஒன்றுவித்து* 
  விளைந்த சீற்றம் விண்வெதும்ப*  வேற்றோன் அகலம் வெம்சமத்துப்*

  பிளந்து வளைந்த உகிரானை*  பெருந்தண் செந்நெல் குலைதடிந்து* 
  களம்செய் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே* 


  தொழும்நீர் வடிவின் குறள்உருவுஆய்*  வந்து தோன்றி மாவலிபால்*
  முழுநீர் வையம் முன்கொண்ட*  மூவா உருவின் அம்மானை*

  உழும்நீர் வயலுள் பொன்கிளைப்ப*  ஒருபால் முல்லை முகையோடும்*
  கழுநீர் மலரும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


  வடிவாய் மழுவே படைஆக*  வந்து தோன்றி மூவெழுகால்* 
  படிஆர் அரசு களைகட்ட*  பாழி யானை அம்மானை*

  குடியா வண்டு கொண்டுஉண்ண8  கோல நீலம் மட்டு உகுக்கும்* 
  கடிஆர் புறவின் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


  வையம் எல்லாம் உடன்வணங்க*  வணங்கா மன்னனாய்த் தோன்றி* 
  வெய்ய சீற்றக் கடிஇலங்கை* குடிகொண்டு ஓட வெம்சமத்துச்*

  செய்த வெம்போர் நம்பரனை*  செழுந்தண் கானல் மணம்நாறும்* 
  கைதை வேலிக் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே. 


  ஒற்றைக் குழையும் நாஞ்சிலும்*  ஒருபால் தோன்ற தான்தோன்றி*  
  வெற்றித் தொழிலார் வேல்வேந்தர்*  விண்பால் செல்ல வெம்சமத்துச்*

  செற்ற கொற்றத் தொழிலானை*  செந்தீ மூன்றும் இல்இருப்ப*  
  கற்ற மறையோர் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.


  துவரிக் கனிவாய் நிலமங்கை*  துயர்தீர்ந்து உய்ய பாரதத்துள்*
  இவரித்து அரசர் தடுமாற*  இருள்நாள் பிறந்த அம்மானை*

  உவரி ஓதம் முத்துஉந்த*  ஒருபால் ஒருபால் ஒண் செந்நெல்*
  கவரி வீசும் கண்ணபுரத்து*  அடியேன் கண்டு கொண்டேனே.  


  மீனோடு ஆமைகேழல் அரிகுறள்ஆய்*  முன்னும் இராமன்ஆய் 
  தான்ஆய்*  பின்னும் இராமன்ஆய் தாமோதரன்ஆய்*  கற்கியும்

  ஆனான் தன்னைக்*  கண்ணபுரத்து அடியன்*  கலியன் ஒலிசெய்த*
  தேன்ஆர் இன்சொல் தமிழ்மாலை*  செப்ப பாவம் நில்லாவே.  (2)


  முந்துற உரைக்கேன் விரைக்குழல் மடவார்*  கலவியை விடுதடு மாறல்,* 
  அந்தரம் ஏழும் அலைகடல் ஏழும் ஆய*  எம் அடிகள்தம் கோயில்,*

  சந்தொடு மணியும் அணிமயில் தழையும்*  தழுவி வந்து அருவிகள் நிரந்து,* 
  வந்துஇழி சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!   (2)


  இண்டையும் புனலும் கொண்டுஇடை இன்றி*  எழுமினோ தொழுதும்என்று,*  இமையோர்- 
  அண்டரும் பரவ அரவணைத் துயின்ற*  சுடர்முடிக் கடவுள்தம் கோயில்,*

  விண்டுஅலர் தூளி வேய்வளர் புறவில்*   விரைமலர் குறிஞ்சியின் நறுந்தேன்,*
  வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே


  பிணிவளர் ஆக்கை நீங்க நின்றுஏத்த*  பெருநிலம் அருளின் முன்அருளி,* 
  அணிவளர் குறள்ஆய் அகல்இடம் முழுதும்*  அளந்த எம் அடிகள்தம் கோயில்,*

  கணிவளர் வேங்கை நெடுநிலம் அதனில்*  குறவர்தம் கவணிடைத் துரந்த,*
  மணிவளர் சாரல் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


  சூர்மையில்ஆய பேய்முலை சுவைத்து*  சுடுசரம் அடுசிலைத் துரந்து,* 
  நீர்மை இலாத தாடகை மாள*  நினைந்தவர் மனம்கொண்ட கோயில்,*

  கார்மலி வேங்கை கோங்குஅலர் புறவில்*  கடிமலர்க் குறிஞ்சியின் நறுந்தேன்,*
  வார்புனல்சூழ் தண் மாலிருஞ்சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


  வணங்கல்இல் அரக்கன் செருக்களத்து அவிய*  மணிமுடி ஒருபதும் புரள,* 
  அணங்குஎழுந்துஅவன் தன் கவந்தம் நின்றுஆட*  அமர்செய்த அடிகள்தம் கோயில்,*

  பிணங்கலின் நெடுவேய் நுதிமுகம் கிழிப்ப*   பிரசம் வந்துஇழிதர பெருந்தேன்,*
  மணங்கமழ் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!    


  விடம்கலந்து அமர்ந்த அரவணைத் துயின்று*  விளங்கனிக்கு இளங்கன்று விசிறி,*
  குடம்கலந்துஆடி குரவைமுன் கோத்த*  கூத்த எம் அடிகள்தம் கோயில்,*

  தடங்கடல் முகந்து விசும்பிடைப் பிளிற*  தடவரைக் களிறுஎன்று முனிந்து,*
  மடங்கல் நின்றுஅதிரும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


  தேனுகன் ஆவி போய்உக*  அங்குஓர் செழுந்திரள் பனங்கனி உதிர,* 
  தான் உகந்து எறிந்த தடங்கடல் வண்ணர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

  வானகச் சோலை மரகதச் சாயல்*  மாமணிக் கல்அதர் நுழைந்து,* 
  மான்நுகர் சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


  புதம்மிகு விசும்பில் புணரி சென்று அணவ*  பொருகடல் அரவணைத் துயின்று,* 
  பதம்மிகு பரியின் மிகுசினம் தவிர்த்த*  பனிமுகில் வண்ணர்தம் கோயில்,*

  கதம்மிகு சினத்த கடதடக் களிற்றின்*  கவுள்வழி களிவண்டு பருக,* 
  மதம்மிகு சாரல் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே!


  புந்திஇல் சமணர் புத்தர் என்றுஇவர்கள்*  ஒத்தன பேசவும் உவந்திட்டு,* 
  எந்தை பெம்மானார் இமையவர் தலைவர்*  எண்ணிமுன் இடம்கொண்ட கோயில்,*

  சந்தனப் பொழிலின் தாழ்சினை நீழல்*  தாழ்வரை மகளிர்கள் நாளும்,*
  மந்திரத்து இறைஞ்சும் மாலிருஞ் சோலை*  வணங்குதும் வா! மட நெஞ்சே! 


  வண்டுஅமர் சாரல் மாலிருஞ் சோலை*  மாமணி வண்ணரை வணங்கும்,*
  தொண்டரைப் பரவும் சுடர்ஒளி நெடுவேல்*  சூழ் வயல்ஆலி நல்நாடன்*

  கண்டல் நல்வேலி மங்கையர் தலைவன்*  கலியன் வாய் ஒலிசெய்த பனுவல்,*
  கொண்டு இவைபாடும் தவம்உடையார்கள்*  ஆள்வர் இக் குரைகடல்உலகே (2)


  காதில் கடிப்புஇட்டு*  கலிங்கம் உடுத்து,* 
  தாதுநல்ல*  தண்அம் துழாய் கொடுஅணிந்து,*

  போது மறுத்து*  புறமே வந்து நின்றீர்,*
  ஏதுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  (2)   


  துவர்ஆடை உடுத்து*  ஒருசெண்டு சிலுப்பி,* 
  கவர்ஆக முடித்து*  கலிக்கச்சுக் கட்டி,*

  சுவர்ஆர் கதவின் புறமே*  வந்து நின்றீர்,*
  இவர்ஆர்? இதுஎன்? இதுஎன்? இதுஎன்னோ!


  கருளக் கொடி ஒன்றுஉடையீர்!*  தனிப்பாகீர்,* 
  உருளச் சகடம் அது*  உறுக்கி நிமிர்த்தீர்,*

  மருளைக் கொடுபாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
  இருளத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


  நாமம் பலவும் உடை*  நாரண நம்பீ,* 
  தாமத் துளவம்*  மிக நாறிடுகின்றீர்,*

  காமன்எனப்பாடி வந்து*  இல்லம் புகுந்தீர்,* 
  ஏமத்து இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


  சுற்றும் குழல்தாழ*  சுரிகை அணைத்து,* 
  மற்று பல*  மாமணி பொன்கொடுஅணிந்து,*

  முற்றம் புகுந்து*  முறுவல்செய்து நின்றீர்,*
  எற்றுக்கு இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!  


  ஆன்ஆயரும்*  ஆநிரையும் அங்குஒழிய,* 
  கூன்ஆயதுஓர்*  கொற்ற வில்ஒன்று கைஏந்தி,*

  போனார் இருந்தாரையும் பார்த்து புகுதீர்,*
  ஏனோர்கள் முன்என்?*  இதுஎன்? இதுஎன்னோ!


  மல்லே பொருத திரள்தோள்*  மணவாளீர்,* 
  அல்லே அறிந்தோம்*  நும் மனத்தின் கருத்தை,*

  சொல்லாது ஒழியீர்*  சொன்ன போதினால் வாரீர்*
  எல்லே இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


  புக்குஆடுஅரவம்*  பிடித்துஆட்டும் புனிதீர்,* 
  இக்காலங்கள்*  யாம் உமக்கு ஏதொன்றும் அல்லோம்,*

  தக்கார் பலர்*  தேவிமார் சாலஉடையீர்,*
  எக்கே! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!


  ஆடி அசைந்து*  ஆய்மடவாரொடு நீபோய்க்*
  கூடிக் குரவை*  பிணை கோமளப் பிள்ளாய்,*

  தேடி திருமாமகள்*  மண்மகள் நிற்ப,*
  ஏடி! இதுஎன்?*  இதுஎன்? இதுஎன்னோ!   


  அல்லிக் கமலக் கண்ணனை*  அங்கு ஓர்ஆய்ச்சி*
  எல்லிப் பொழுதுஊடிய*  ஊடல் திறத்தைக்,*

  கல்லின் மலிதோள்*  கலியன் சொன்ன மாலை,*
  சொல்லித் துதிப்பார் அவர்*  துக்கம் இலரே.   (2) 


  மாற்றம்உள*  ஆகிலும் சொல்லுவன்,*  மக்கள்- 
  தோற்றக் குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்று இன்னம்,*

  ஆற்றங்கரை வாழ் மரம்போல்*  அஞ்சுகின்றேன்,* 
  நாற்றம் சுவை*  ஊறு ஒலிஆகிய நம்பீ!  (2)         


  சீற்றம்உள*  ஆகிலும் செப்புவன்,*  மக்கள்- 
  தோற்றக்குழி*  தோற்றுவிப்பாய் கொல்என்றுஅஞ்சி,*

  காற்றத்து இடைப்பட்ட*  கலவர் மனம்போல்,*
  ஆற்றத்துளங்கா நிற்பன்*  ஆழிவலவா!     


  தூங்குஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
  வாங்காய்என்று சிந்தித்து*  நான்அதற்கு அஞ்சி,*

  பாம்போடு ஒருகூரையிலே*  பயின்றால்போல்,*
  தாங்காது உள்ளம் தள்ளும்*  என் தமரைக்கண்ணா!       


  உருஆர் பிறவிக்கண்*  இன்னம் புகப்பெய்து,* 
  திரிவாய்என்று சிந்தித்தி*  என்றுஅதற்கு அஞ்சி,*

  இருபாடு எரிகொள்ளியின்*  உள் எறும்பே போல்,* 
  உருகாநிற்கும்*  என்உள்ளம் ஊழி முதல்வா!


  கொள்ளக் குறையாத*  இடும்பைக் குழியில்,* 
  தள்ளிப் புகப்பெய்தி கொல்*  என்றுஅதற்கு அஞ்சி,*

  வெள்ளத்து இடைப்பட்ட*  நரிஇனம் போலே,*
  உள்ளம் துளங்கா நிற்பன்*  ஊழி முதல்வா!     


  படைநின்ற*  பைந்தாமரையோடு*  அணிநீலம்- 
  மடைநின்று அலரும்*  வயல்ஆலி மணாளா,*

  இடையன் எறிந்த மரமே*  ஒத்துஇராமே,* 
  அடைய அருளாய்*  எனக்கு உன்தன் அருளே. 


  வேம்பின்புழு*  வேம்புஅன்றி உண்ணாது,*  அடியேன்- 
  நான்பின்னும்*  உன்சேவடிஅன்றி நயவேன்,*

  தேம்பல் இளந்திங்கள்*  சிறைவிடுத்து,*  ஐவாய்ப்- 
  பாம்பின் அணைப்*  பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ!  (2)


  அணிஆர் பொழில்சூழ்*  அரங்க நகர்அப்பா,* 
  துணியேன் இனி*  நின் அருள்அல்லது எனக்கு,*

  மணியே! மணிமாணிக்கமே!*  மதுசூதா,*
  பணியாய் எனக்கு உய்யும்வகை,*  பரஞ்சோதீ!  (2)


  நந்தா நரகத்து அழுந்தா வகை,*  நாளும்- 
  எந்தாய்! தொண்டர்ஆனவர்க்கு*  இன்அருள் செய்வாய்,*

  சந்தோகா! தலைவனே!*  தாமரைக் கண்ணா,*
  அந்தோ! அடியேற்கு*  அருளாய் உன்அருளே  (2)


  குன்றம் எடுத்து*  ஆநிரை காத்தவன் தன்னை,* 
  மன்றில் புகழ்*  மங்கை மன் கலிகன்றி சொல்,*

  ஒன்று நின்ற ஒன்பதும்*  வல்லவர்-தம்மேல்,* 
  என்றும் வினைஆயின*  சாரகில்லாவே,    (2)