பிரபந்த தனியன்கள்

நேரிசை வெண்பா
வாழிபரகாலன் வாழிகலிகன்றி*
வாழிகுறையலூர் வாழ்வேந்தன்*
வாழியரோ மாயோனை வாழ்வலியால் மந்திரங்கொள்* 
மங்கையர்கோன் நூயோன் சுடர்மானவேல்.
கட்டளைக் கலித்துறை
நெஞ்சுக்கிருள்கடிதீபம் அடங்கா நெடும்பிறவி*
நஞ்சுக்கு நல்லவமுதம் தமிழ நன்னூல் துறைகள்*
அஞ்சுக்கிலக்கியம் ஆரணசாரம் பரசமயப்*
பஞ்சுக்கனலின் பொறி பரகாலன் பனுவல்களே.
நேரிசை வெண்பா 
எங்கள்கதியே! இராமானுசமுனியே!*
சங்கைகெடுத்தாண்ட தவராசா*
பொங்குபுகழ் மங்கையர்கோனீந்த மறையாயிரமனைத்தும்*
தங்குமனம் நீயெனக்குத் தா.

   பாசுரங்கள்


  அம் கண் ஞாலம் அஞ்ச*  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*
  அவுணன் பொங்க ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

  பைங் கண் ஆனைக் கொம்பு கொண்டு*  பத்திமையால்*  
  அடிக்கீழ் செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிங்கவேழ்குன்றமே. (2)


  அலைத்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
  அவுணன் கொலைக் கையாளன் நெஞ்சு இடந்த*  கூர் உகிராளன் இடம்*

  மலைத்த செல் சாத்து எறிந்த பூசல்*  வன் துடி வாய் கடுப்ப* 
  சிலைக் கை வேடர் தெழிப்பு அறாத*  சிங்கவேழ்குன்றமே.   


  ஏய்ந்த பேழ் வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
  அவுணன் வாய்ந்த ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்* 

  ஓய்ந்த மாவும் உடைந்த குன்றும்*  அன்றியும் நின்று அழலால்* 
  தேய்ந்த வேயும் அல்லது இல்லாச்*  சிங்கவேழ்குன்றமே.


  எவ்வம் வெவ் வேல் பொன்பெயரோன்*  ஏதலன் இன் உயிரை வவ்வி* 
  ஆகம் வள் உகிரால்*  வகிர்ந்த அம்மானது இடம்*

  கவ்வும் நாயும் கழுகும்*  உச்சிப்போதொடு கால் சுழன்று* 
  தெய்வம் அல்லால் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.  


  மென்ற பேழ்வாய்*  வாள் எயிற்று ஓர் கோளரி ஆய்*
  அவுணன் பொன்ற ஆகம் வள் உகிரால்*  போழ்ந்த புனிதன் இடம்*

  நின்ற செந்தீ மொண்டு சூறை*  நீள் விசும்பூடு இரிய* 
  சென்று காண்டற்கு அரிய கோயில்*  சிங்கவேழ்குன்றமே.


  எரிந்த பைங் கண் இலங்கு பேழ் வாய்*  எயிற்றொடு இது எவ் உரு என்று* 
  இரிந்து வானோர் கலங்கி ஓட*  இருந்த அம்மானது இடம்* 

  நெரிந்த வேயின் முழையுள் நின்று*  நீள் நெறிவாய் உழுழை* 
  திரிந்த ஆனைச் சுவடு பார்க்கும்*  சிங்கவேழ்குன்றமே.


  முனைத்த சீற்றம் விண் சுடப் போய்*  மூவுலகும் பிறவும்* 
  அனைத்தும் அஞ்ச ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்* 

  கனைத்த தீயும் கல்லும் அல்லா*  வில் உடை வேடரும் ஆய்* 
  தினைத்தனையும் செல்ல ஒண்ணாச்*  சிங்கவேழ்குன்றமே.        


  நாத் தழும்ப நாஅன்முகனும்*  ஈசனும் ஆய் முறையால் ஏத்த*
  அங்கு ஓர் ஆள் அரி ஆய்*  இருந்த அம்மானது இடம்*

  காய்த்த வாகை நெற்று ஒலிப்ப*  கல் அதர் வேய்ங்கழை போய்த்* 
  தேய்த்த தீயால் விண் சிவக்கும்* சிங்கவேழ்குன்றமே*.   


  நல்லை நெஞ்சே! நாம் தொழுதும்*  நம்முடை நம் பெருமான்* 
  அல்லிமாதர் புல்க நின்ற*  ஆயிரந் தோளன் இடம்,

  நெல்லி மல்கி கல் உடைப்ப*  புல் இலை ஆர்த்து*
  அதர்வாய் சில்லி சில் என்று ஒல் அறாத*  சிங்கவேழ்குன்றமே.  


  செங் கண் ஆளி இட்டு இறைஞ்சும்*  சிஙக்வேழ்குன்று உடைய* 
  எங்கள் ஈசன் எம் பிரானை*  இருந் தமிழ் நூல்புலவன்* 

  மங்கை ஆளன் மன்னு தொல் சீர்*  வண்டு அரை தார்க் கலியன்* 
  செங்கையாளன் செஞ்சொல் மாலை*  வல்லவர் தீது இலரே. (2) 


  திவளும்வெண் மதிபோல் திருமுகத்து அரிவை*  செழுங்கடல் அமுதினில் பிறந்த அவளும்*
  நின்ஆகத்து இருப்பதும் அறிந்தும்*  ஆகிலும் ஆசைவிடாளால்*

  குவளைஅம் கண்ணி கொல்லிஅம் பாவை சொல்லு*  நின்தாள் நயந்திருந்த இவளை* 
  உன் மனத்தால் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)   


  துளம்படு முறுவல் தோழியர்க்கு அருளாள் துணை முலை சாந்துகொண்டு அணியாள்* 
  குளம் படு குவளைக் கண்இணை எழுதாள்*  கோல நல் மலர் குழற்கு அணியாள்*

  வளம் படு முந்நீர் வையம் முன் அளந்த*  மால் என்னும் மால் இன மொழியாள்* 
  இளம் படி இவளுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


  சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும்*  தடமுலைக்கு அணியிலும் தழல்ஆம்* 
  போந்த வெண் திங்கள் கதிர் சுட மெலியும்*  பொரு கடல் புலம்பிலும் புலம்பும்*

  மாந் தளிர் மேனி வண்ணமும் பொன் ஆம்*  வளைகளும் இறை நில்லா*
  என்தன் ஏந்திழைஇவளுக்கு என்நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே.


  'ஊழியின் பெரிதால் நாழிகை!' என்னும்*  'ஒண் சுடர் துயின்றதால்!' என்னும்* 
  'ஆழியும் புலம்பும்! அன்றிலும் உறங்கா*  தென்றலும் தீயினில் கொடிதுஆம்* 

  தோழிஓ! என்னும் 'துணை முலை அரக்கும்*  சொல்லுமின் என்செய்கேன்?' என்னும்* 
  ஏழைஎன் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


  ஓதிலும் உன் பேர் அன்றி மற்றுஓதாள்*  உருகும்நின் திருஉரு நினைந்து* 
  காதன்மை பெரிது கையறவு உடையள்*  கயல்நெடுங் கண்துயில் மறந்தாள்* 

  பேதையேன் பேதை பிள்ளைமை பெரிது*  தெள்ளியள் வள்ளிநுண் மருங்குல்* 
  ஏதலர் முன்னா என் நினைந்து இருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!          


  தன் குடிக்கு ஏதும் தக்கவா நினையாள்*  தடங்கடல் நுடங்கு எயில்இலங்கை* 
  வன்குடி மடங்க வாள்அமர் தொலைத்த*  வார்த்தை கேட்டு இன்புறும் மயங்கும்*

  மின்கொடி மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  மென்முலை பொன்பயந்திருந்த* 
  என்கொடிஇவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


  உளம்கனிந்துஇருக்கும் உன்னையே பிதற்றும்*  உனக்குஅன்றி எனக்கு அன்புஒன்றுஇலளால்* 
  'வளங்கனிப் பொழில்சூழ் மாலிருஞ் சோலை*  மாயனே! 'என்று வாய்வெருவும்* 

  களங் கனி முறுவல் காரிகை பெரிது*  கவலையோடு அவலம்சேர்ந்திருந்த* 
  இளங்கனி இவளுக்கு என் நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


  'அலம்கெழு தடக்கை ஆயன்வாய்ஆம்பற்கு*  அழியுமால் என்உள்ளம்!' என்னும்* 
  புலம்கெழு பொரு நீர்ப் புட்குழி பாடும்*  'போதுமோ நீர்மலைக்கு என்னும்* 

  குலம்கெழு கொல்லிக் கோமளவல்லி*  கொடிஇடை நெடுமழைக் கண்ணி* 
  இலங்குஎழில் தோளிக்கு என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே! (2)


  பொன்குலாம் பயலை பூத்தன மென்தோள்*  பொருகயல் கண்துயில் மறந்தாள்* 
  அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது*  இவ்அணங்கினுக்கு உற்றநோய் அறியேன்* 

  மின்குலாம் மருங்குல் சுருங்கமேல் நெருங்கி*  வீங்கிய வனமுலை யாளுக்கு* 
  என்கொல்ஆம் குறிப்பில் என்நினைந்துஇருந்தாய்*  இடவெந்தை எந்தை பிரானே!


  அன்னமும் மீனும் ஆமையும் அரியும் ஆய*  எம்மாயனே! அருளாய்'* 
  என்னும் இன்தொண்டர்க்கு இன்அருள் புரியும்*  இடவெந்தை எந்தை பிரானை* 

  மன்னுமா மாட மங்கையர் தலைவன்*  மானவேல் கலியன் வாய்ஒலிகள்* 
  பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்றுஅறுப்பாரே. (2)        


  கள்வன்கொல் யான் அறியேன்*  கரியான் ஒரு காளை வந்து* 
  வள்ளி மருங்குல்*  என்தன் மடமானினைப் போத என்று*

  வெள்ளி வளைக் கைப் பற்ற*  பெற்ற தாயரை விட்டு அகன்று* 
  அள்ளல் அம் பூங் கழனி*  அணி ஆலி புகுவர்கொலோ! (2)    


  பண்டு இவன் ஆயன் நங்காய்!*  படிறன் புகுந்து*
  என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்*  நுகர்ந்தானை உகந்து*

  அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர*  கிளிபோல் மிழற்றி நடந்து* 
  வண்டு அமர் கானல் மல்கும்*  வயல் ஆலி புகுவர்கொலோ!       


  அஞ்சுவன் வெம் சொல் நங்காய்!*  அரக்கர் குலப் பாவை தன்னை* 
  வெம் சின மூக்கு அரிந்த*  விறலோன் திறம் கேட்கில் மெய்யே* 

  பஞ்சிய மெல் அடி*  எம் பணைத் தோளி பரக்கழிந்து* 
  வஞ்சி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!     


  ஏது அவன் தொல் பிறப்பு?*  இளையவன் வளை ஊதி*
  மன்னர் தூதுவன் ஆயவன் ஊர்*  சொல்வீர்கள்! சொலீர் அறியேன்*

  மாதவன் தன் துணையா நடந்தாள்*  தடம் சூழ் புறவில்* 
  போது வண்டு ஆடு செம்மல்*  புனல் ஆலி புகுவர்கொலோ! 


  தாய் எனை என்று இரங்காள்*  தடந் தோளி தனக்கு அமைந்த* 
  மாயனை மாதவனை*  மதித்து என்னை அகன்ற இவள்*

  வேய் அன தோள் விசிறி*  பெடை அன்னம் என நடந்து* 
  போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


  என் துணை என்று எடுத்தேற்கு*  இறையேனும் இரங்கிற்றிலள்* 
  தன் துணை ஆய என்தன்*  தனிமைக்கும் இரங்கிற்றிலள்*

  வன் துணை வானவர்க்கு ஆய்*  வரம் செற்று அரங்கத்து உறையும்* 
  இன் துணைவனொடும் போய்*  எழில் ஆலி புகுவர்கொலோ!  (2)    


  அன்னையும் அத்தனும் என்று*  அடியோமுக்கு இரங்கிற்றிலள்* 
  பின்னைதன் காதலன்தன்*  பெருந் தோள் நலம் பேணினளால்*

  மின்னையும் வஞ்சியையும்*  வென்று இலங்கும் இடையாள் நடந்து* 
  புன்னையும் அன்னமும் சூழ்*  புனல் ஆலி புகுவர்கொலோ!


  முற்றிலும் பைங் கிளியும்*  பந்தும் ஊசலும் பேசுகின்ற*    
  சிற்றில் மென் பூவையும்*  விட்டு அகன்ற செழுங் கோதைதன்னைப்*

  பெற்றிலேன் முற்று இழையை*  பிறப்பிலி பின்னே நடந்து* 
  மற்று எல்லாம் கைதொழப் போய்*  வயல் ஆலி புகுவர்கொலோ!    


  காவி அம் கண்ணி எண்ணில்*  கடி மா மலர்ப் பாவை ஒப்பாள்* 
  பாவியேன் பெற்றமையால்*  பணைத் தோளி பரக்கழிந்து*

  தூவி சேர் அன்னம் அன்ன நடையாள்*  நெடுமாலொடும் போய்* 
  வாவி அம் தண் பணை சூழ்*  வயல் ஆலி புகுவர்கொலோ!


  தாய் மனம் நின்று இரங்க*  தனியே நெடுமால் துணையா* 
  போயின பூங் கொடியாள்*  புனல் ஆலி புகுவர் என்று*

  காய் சின வேல் கலியன்*  ஒலிசெய் தமிழ்மாலை பத்தும்* 
  மேவிய நெஞ்சு உடையார்*  தஞ்சம் ஆவது விண் உலகே. (2)


  கண்ணார் கடல்போல்*  திருமேனி கரியாய்* 
  நண்ணார் முனை*  வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர்த்*

  திண்ணார் மதிள் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
  அண்ணா அடியேன் இடரைக் களையாயே.


  கொந்து ஆர் துளவ*  மலர் கொண்டு அணிவானே* 
  நந்தாத பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

  செந்தாமரை நீர்த்*  திருவெள்ளக்குளத்துள்* 
  எந்தாய் அடியேன் இடரைக் களையாயே.


  குன்றால் குளிர் மாரி*  தடுத்து உகந்தானே* 
  நின்றாய  பெரும் புகழ்*  வேதியர் நாங்கூர்ச்*

  சென்றார் வணங்கும்*  திருவெள்ளக்குளத்துள்* 
  நின்றாய் நெடியாய்! அடியேன் இடர் நீக்கே 


  கான் ஆர் கரிக் கொம்பு*  அது ஒசித்த களிறே!* 
  நானாவகை*  நல்லவர் மன்னிய நாங்கூர்த்*

  தேன் ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
  ஆனாய் அடியேனுக்கு அருள்புரியாயே.


  வேடு ஆர்*  திருவேங்கடம் மேய விளக்கே* 
  நாடு ஆர் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

  சேடு ஆர் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்தாய்* 
  பாடாவருவேன்*  வினை ஆயின பாற்றே.


  கல்லால் கடலை*  அணை கட்டி உகந்தாய்* 
  நல்லார் பலர்*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

  செல்வா*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
  எல்லா இடரும்*  கெடுமாறு அருளாயே.


  கோலால் நிரை மேய்த்த*  எம் கோவலர்கோவே*
  நால் ஆகிய*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்*

  சேல் ஆர் வயல் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
  மாலே என வல் வினை*  தீர்த்தருளாயே. 


  வாராகம் அது ஆகி*  இம் மண்ணை இடந்தாய்* 
  நாராயணனே!*  நல்ல வேதியர் நாங்கூர்ச்*

  சீரார் பொழில் சூழ்*  திருவெள்ளக்குளத்துள்* 
  ஆரா அமுதே* அடியேற்கு அருளாயே.


  பூவார் திருமாமகள்*  புல்கிய மார்பா!* 
  நாவார் புகழ்*  வேதியர் மன்னிய நாங்கூர்த்*

  தேவா!*  திருவெள்ளக்குளத்து உறைவானே* 
  'ஆவா!  அடியான்*  இவன் என்று அருளாயே. 


  நல்லன்பு உடை*  வேதியர் மன்னிய நாங்கூர்ச்* 
  செல்வன்*  திருவெள்ளக்குளத்து உறைவானை*

  கல்லின் மலி தோள்*  கலியன் சொன்ன மாலை* 
  வல்லர் என வல்லவர்*  வானவர் தாமே.  (2)


  பண்டை நான்மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும்*  பதங்களின் பொருளும்* 
  பிண்டம் ஆய் விரிந்த பிறங்கு ஒளி அனலும்*  பெருகிய புனலொடு நிலனும்*

  கொண்டல் மாருதமும் குரை கடல் ஏழும்*  ஏழு மா மலைகளும் விசும்பும்* 
  அண்டமும் தான் ஆய் நின்ற எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


  இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள்*  எண் இல் பல் குணங்களே இயற்ற* 
  தந்தையும் தாயும் மக்களும் மிக்கசுற்றமும்*  சுற்றி நின்று அகலாப் பந்தமும்*

  பந்தம் அறுப்பது ஓர்*  மருந்தும்பான்மையும்*  பல் உயிர்க்கு எல்லாம்* 
  அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


  மன்னுமாநிலனும் மலைகளும் கடலும்*  வானமும் தானவர் உலகும்* 
  துன்னுமா இருள் ஆய் துலங்கு ஒளி சுருங்கி*  தொல்லை நான்மறைகளும் மறைய*

  பின்னும் வானவர்க்கும் முனிவர்க்கும் நல்கி*  பிறங்கு இருள் நிறம் கெட*  ஒருநாள்- 
  அன்னம் ஆய் அன்று அங்கு அரு மறை பயந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.  


  மாஇருங் குன்றம் ஒன்று மத்து ஆக*  மாசுணம் அதனொடும் அளவி* 
  பா இரும் பௌவம் பகடு விண்டு அலற*  படுதிரை விசும்பிடைப் படர*

  சேய்இரு விசும்பும் திங்களும் சுடரும்*  தேவரும் தாம் உடன் திசைப்ப* 
  ஆயிரம் தோளால் அலை கடல் கடைந்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.     


  எங்ஙனே உய்வர் தானவர் நினைந்தால்*  இரணியன் இலங்கு பூண் அகலம்* 
  பொங்கு வெம் குருதி பொன்மலை பிளந்து*  பொழிதரும் அருவி ஒத்து இழிய*

  வெம் கண் வாள் எயிற்று ஓர் வெள்ளி மா விலங்கல்*  விண் உறக் கனல் விழித்து எழுந்தது* 
  அங்ஙனே ஒக்க அரி உரு ஆனான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.    


  ஆயிரம் குன்றம் சென்று தொக்கனைய*  அடல் புரை எழில் திகழ் திரள் தோள்* 
  ஆயிரம் துணிய அடல் மழுப் பற்றி*  மற்று அவன் அகல் விசும்பு அணைய*

  ஆயிரம் பெயரால் அமரர் சென்று இறைஞ்ச*  அறிதுயில் அலை கடல் நடுவே* 
  ஆயிரம் சுடர் வாய் அரவுஅணைத் துயின்றான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


  சுரிகுழல் கனி வாய்த் திருவினைப் பிரித்த*  கொடுமையின் கடு விசை அரக்கன்* 
  எரிவிழித்து இலங்கும் மணி முடி பொடிசெய்து*  இலங்கை பாழ்படுப்பதற்கு எண்ணி*

  வரிசிலை வளைய அடு சரம் துரந்து*  மறி கடல் நெறிபட மலையால்* 
  அரிகுலம் பணிகொண்டு அலை கடல் அடைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே. 


  ஊழியாய் ஓமத்துஉச்சிஆய்*  ஒருகால் உடைய தேர்ஒருவன்ஆய்*  உலகில்- 
  சூழி மால் யானைத் துயர் கெடுத்து*  இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து*

  பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி*  பகலவன் ஒளி கெடப்*  பகலே- 
  ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.


  பேயினார் முலை ஊண் பிள்ளை ஆய்*  ஒருகால் பெரு நிலம் விழுங்கி அது உமிழ்ந்த வாயன் ஆய்*
  மால் ஆய் ஆல் இலை வளர்ந்து*  மணி முடி வானவர் தமக்குச

  சேயன் ஆய்*  அடியோர்க்கு அணியன் ஆய் வந்து*  என் சிந்தையுள் வெம் துயர் அறுக்கும்* 
  ஆயன் ஆய் அன்று குன்றம் ஒன்று எடுத்தான்*  அரங்க மா நகர் அமர்ந்தானே.   


  பொன்னும் மா மணியும் முத்தமும் சுமந்து*  பொரு திரை மா நதி புடை சூழ்ந்து* 
  அன்னம் மாடு உலவும் அலை புனல் சூழ்ந்த*  அரங்க மா நகர் அமர்ந்தானை*

  மன்னு மா மாட மங்கையர் தலைவன்*  மான வேல் கலியன் வாய் ஒலிகள்* 
  பன்னிய பனுவல் பாடுவார்*  நாளும் பழவினை பற்று அறுப்பாரே.      


  ஆளும் பணியும் அடியேனைக் கொண்டான்*  விண்ட நிசாசரரைத்* 
  தோளும் தலையும் துணிவு எய்தச்*  சுடு வெம் சிலைவாய்ச் சரம் துரந்தான்*

  வேளும் சேயும் அனையாரும்*  வேல்கணாரும் பயில் வீதி* 
  நாளும் விழவின் ஒலி ஓவா*  நறையூர் நின்ற நம்பியே.    


  முனி ஆய் வந்து மூவெழுகால்*  முடி சேர் மன்னர் உடல் துணிய* 
  தனி வாய் மழுவின் படை ஆண்ட*  தார் ஆர் தோளான் வார் புறவில்*

  பனி சேர் முல்லை பல் அரும்ப*  பானல் ஒருபால் கண் காட்ட* 
  நனி சேர் கமலம் முகங்காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.


  தெள் ஆர் கடல்வாய் விட வாயச்*  சின வாள் அரவில் துயில் அமர்ந்து* 
  துள்ளா வரு மான் விழ வாளி துரந்தான்*  இரந்தான் மாவலி மண்*

  புள் ஆர் புறவில் பூங் காவி*  பொலன் கொள் மாதர் கண் காட்ட* 
  நள் ஆர் கமலம் முகம் காட்டும்*  நறையூர் நின்ற நம்பியே.            


  ஒளியா வெண்ணெய் உண்டான் என்று*  உரலோடு ஆய்ச்சி ஒண் கயிற்றால்* 
  விளியா ஆர்க்க ஆப்புண்டு*  விம்மி அழுதான் மென் மலர்மேல்*

  களியா வண்டு கள் உண்ண*  காமர் தென்றல் அலர் தூற்ற* 
  நளிர்வாய் முல்லை முறுவலிக்கும்*  நறையூர் நின்ற நம்பியே. 


  வில் ஆர் விழவில் வட மதுரை*  விரும்பி விரும்பா மல் அடர்த்து* 
  கல் ஆர் திரள் தோள் கஞ்சனைக்காய்ந்தான்*  பாய்ந்தான் காளியன்மேல்*

  சொல் ஆர் சுருதி முறை ஓதிச்*  சோமுச் செய்யும் தொழிலினோர்* 
  நல்லார் மறையோர் பலர் வாழும்*  நறையூர் நின்ற நம்பியே.      


  வள்ளி கொழுநன் முதலாய*  மக்களோடு முக்கணான் 
  வெள்கி ஓட*  விறல் வாணன் வியன் தோள் வனத்தைத் துணித்து உகந்தான்*

  பள்ளி கமலத்திடைப் பட்ட*  பகு வாய் அலவன் முகம் நோக்கி* 
  நள்ளி ஊடும் வயல் சூழ்ந்த*  நறையூர் நின்ற நம்பியே.


  மிடையா வந்த வேல் மன்னர் வீய*  விசயன் தேர் கடவி* 
  குடையா வரை ஒன்று எடுத்து*  ஆயர்கோ ஆய் நின்றான் கூர் ஆழிப்

  படையான்*  வேதம் நான்கு ஐந்து வேள்வி*  அங்கம் ஆறு இசை ஏழ்* 
  நடையா வல்ல அந்தணர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.  


  பந்து ஆர் விரலாள் பாஞ்சாலி*  கூந்தல் முடிக்க பாரதத்து* 
  கந்து ஆர் களிற்றுக் கழல் மன்னர் கலங்க*  சங்கம் வாய் வைத்தான்*

  செந்தாமரைமேல் அயனோடு*  சிவனும் அனைய பெருமையோர்* 
  நந்தா வண் கை மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியே.      


  ஆறும் பிறையும் அரவமும்*  அடம்பும் சடைமேல் அணிந்து*  உடலம் 
  நீறும் பூசி ஏறு ஊரும்*  இறையோன் சென்று குறை இரப்ப*

  மாறு ஒன்று இல்லா வாச நீர்*  வரை மார்வு அகலத்து அளித்து உகந்தான்* 
  நாறும் பொழில் சூழ்ந்து அழகு ஆய*  நறையூர் நின்ற நம்பியே 


  நன்மை உடைய மறையோர் வாழ்*  நறையூர் நின்ற நம்பியைக்* 
  கன்னி மதிள் சூழ் வயல் மங்கைக்*  கலியன் ஒலிசெய் தமிழ்மாலை*

  பன்னி உலகில் பாடுவார்*  பாடு சாரா பழ வினைகள்* 
  மன்னி உலகம் ஆண்டு போய்*  வானோர் வணங்க வாழ்வாரே.       


  திருவுக்கும் திருஆகிய செல்வா!*  தெய்வத்துக்குஅரசே! செய்ய கண்ணா* 
  உருவச் செஞ்சுடர்ஆழி வல்லானே!*  உலகுஉண்ட ஒருவா! திருமார்பா!*

  ஒருவற்குஆற்றிஉய்யும் வகைஇன்றால்*  உடன் நின்று ஐவர் என்னுள்புகுந்து*  ஒழியாது- 
  அருவித் தின்றிட அஞ்சி நின்அடைந்தேன் அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*  (2)


  பந்தார் மெல்விரல் நல்வளைத் தோளி*  பாவை பூமகள் தன்னொடும் உடனே- 
  வந்தாய்*  என் மனத்தே மன்னி நின்றாய்*  மால்வண்ணா! மழை போல் ஒளி வண்ணா*

  சந்தோகா! பௌழியா! தைத்திரியா!*  சாமவேதியனே! நெடுமாலே* 
  அந்தோ! நின்னடியன்றி மற்றுஅறியேன்* அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!* 


  நெய்யார் ஆழியும் சங்கமும் ஏந்தும்*  நீண்ட தோள்உடையாய்*  அடியேனைச்- 
  செய்யாத உலகத்திடைச் செய்தாய்*  சிறுமைக்கும் பெருமைக்கும் உள் புகுந்து*

  பொய்யால் ஐவர் என் மெய்குடிஏறிப்*  போற்றி வாழ்வதற்கு அஞ்சி நின்அடைந்தேன்* 
  ஐயா நின்னடியன்றி மற்றுஅறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


  பரனே! பஞ்சவன் பூழியன் சோழன்*  பார்மன்னர் மன்னர் தாம் பணிந்துஏத்தும்- 
  வரனே! மாதவனே! மதுசூதா!*  மற்றுஓர் நல்துணை நின்னலால் இலேன்காண்*

  நரனே! நாரணனே! திருநறையூர்!*  நம்பீ எம்பெருமான் உம்பர் ஆளும்- 
  அரனே*  ஆதிவராகம் முன்ஆனாய்!*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


  விண்டான் விண்புக வெம்சமத்து அரியாய்ப்*  பரியோன் மார்வுகம் பற்றிப் பிளந்து* 
  பண்டு ஆன்உய்ய ஓர் மால்வரை ஏந்தும்*  பண்பாளா! பரனே! பவித்திரனே* 

  கண்டேன் நான் கலியுகத்ததன் தன்மை*  கருமம்ஆவதும் என்தனக்கு அறிந்தேன்* 
  அண்டா! நின்னடியன்றி மற்றுஅறியேன்* -அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*   


  தோயாவின் தயிர் நெய்அமுது உண்ண- சொன்னார்*  சொல்லி நகும் பரிசே*  பெற்ற- 
  தாயால் ஆப்புண்டுஇருந்து அழுதுஏங்கும்-  தாடாளா!*  தரையோர்க்கும் விண்ணோர்க்கும்-

  சேயாய்*  கிரேத திரேத துவாபர-  கலியுகம்*  இவை நான்கும் முன்ஆனாய்* 
  ஆயா! நின்அடிஅன்றி மற்று அறியேன்*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*  


  கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய்!*  கார்வண்ணா! கடல் போல் ஒளி வண்ணா* 
  இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய்!*  எந்தாய்! அந்தரம் ஏழும் முன் ஆனாய்* 

  பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து*  ஐவர்- 
  அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!* 


  நெடியானே! கடிஆர் கலிநம்பீ!*  நின்னையே நினைந்து இங்கு இருப்பேனைக்* 
  கடிஆர் காளையர்ஐவர் புகுந்து*  காவல் செய்த அக்காவலைப் பிழைத்து*

  குடிபோந்து உன் அடிக்கீழ் வந்து புகுந்தேன்*   கூறைசோறு இவை தந்து எனக்குஅருளி* 
  அடியேனைப் பணிஆண்டு கொள் எந்தாய்!*   அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானே!*


  கோவாய் ஐவர் என் மெய் குடி ஏறி*  கூறை சோறு இவை தா என்று குமைத்து- 
  போகார்*  நான் அவரைப் பொறுக்ககிலேன்*  புனிதா! புள் கொடியாய்! நெடுமாலே* 

  தீவாய் நாகணையில் துயில்வானே!*  திருமாலே இனிச் செய்வது ஒன்று அறியேன்* 
  ஆ! ஆ! என்று அடியேற்கு இறை இரங்காய்*  அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே!*


  அன்னம் மன்னு பைம்பூம்பொழில் சூழ்ந்த*  அழுந்தூர் மேல்திசை நின்ற அம்மானைக்* 
  கன்னி மன்னு திண்தோள் கலிகன்றி-  ஆலி நாடன் மங்கைக் குலவேந்தன்*

  சொன்னஇன் தமிழ் நல்மணிக்கோவை*   தூய மாலை இவைபத்தும் வல்லார்* 
  மன்னி மன்னவராய் உலகுஆண்டு*  மான வெண்குடைக்கீழ் மகிழ்வாரே*  (2)


  வியம்உடை விடைஇனம்*  உடைதர மடமகள்* 
  குயம்மிடை தடவரை*  அகலம்அது உடையவர்*

  நயம்உடை நடைஅனம்*  இளையவர் நடைபயில்* 
  கயம்மிடை கணபுரம்*  அடிகள்தம் இடமே.  (2)


  இணைமலி மருதுஇற*  எருதினொடு இகல்செய்து*  
  துணைமலி முலையவள்*  மணம்மிகு கலவியுள்*

  மணம்மலி விழவினொடு*  அடியவர் அளவிய* 
  கணம்மலி கணபுரம்*  அடிகள்தம் இடமே.


  புயல்உறு வரைமழை*  பொழிதர மணிநிரை* 
  மயல்உற வரைகுடை*  எடுவிய நெடியவர்*

  முயல்துளர் மிளைமுயல் துள*  வள விளைவயல்*
  கயல்துளு கணபுரம்*  அடிகள்தம் இடமே.


  ஏதலர் நகைசெய*  இளையவர் அளைவெணெய்* 
  போதுசெய்து அமரிய*  புனிதர்நல் விரை*  மலர்-

  கோதிய மதுகரம்*  குலவிய மலர்மகள்*
  காதல்செய் கணபுரம்*  அடிகள்தம் இடமே.   (2)


  தொண்டரும் அமரரும்*  முனிவரும் தொழுதுஎழ* 
  அண்டமொடு அகல்இடம்*  அளந்தவர் அமர்செய்து*

  விண்டவர் பட*  மதிள்இலங்கை முன்எரிஎழக்*
  கண்டவர் கணபுரம்*  அடிகள்தம் இடமே.


  மழுவுஇயல் படைஉடை*  அவன்இடம் மழைமுகில்*
  தழுவிய உருவினர்*  திருமகள் மருவிய,*

  கொழுவிய செழுமலர்*  முழுசிய பறவைபண்*
  எழுவிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.  


  பரிதியொடு அணிமதி*  பனிவரை திசைநிலம்* 
  எரிதியொடு எனஇன*  இயல்வினர் செலவினர்*

  சுருதியொடு அருமறை*  முறைசொலும் அடியவர்*
  கருதிய கணபுரம்*  அடிகள்தம் இடமே.      


  படிபுல்கும் அடிஇணை*  பலர்தொழ மலர்வைகு*
  கொடிபுல்கு தடவரை*  அகலம்அது உடையவர்*

  முடிபுல்கு நெடுவயல்*  படைசெல அடிமலர்*
  கடிபுல்கு கணபுரம்*  அடிகள்தம் இடமே


  புலம்மனும் மலர்மிசை*  மலர்மகள் புணரிய*
  நிலமகள்என இன*  மகளிர்கள் இவரொடும்*

  வலம்மனு படையுடை*  மணிவணர் நிதிகுவைக்*
  கலம்மனு கணபுரம்*  அடிகள்தம் இடமே. 


  மலிபுகழ் கணபுரம்உடைய*  எம் அடிகளை*
  வலிகெழு மதிள்அயல்*  வயல்அணி மங்கையர்*

  கலியன தமிழ்இவை*  விழுமிய இசையினொடு*
  ஒலிசொலும் அடியவர்*  உறுதுயர் இலரே.   (2)


  தந்தை தாய் மக்களே*  சுற்றம்என்று உற்றவர் பற்றி நின்ற,*
  பந்தம்ஆர் வாழ்க்கையை*  நொந்து நீ பழிஎனக் கருதினாயேல்,*

  அந்தம்ஆய் ஆதிஆய்*  ஆதிக்கும் ஆதிஆய் ஆயன்ஆய,*
  மைந்தனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!.  (2)


  மின்னும்மா வல்லியும் வஞ்சியும் வென்ற*  நுண்இடை நுடங்கும்,*
  அன்னமென் நடையினார் கலவியை* அருவருத்து அஞ்சினாயேல்,*

  துன்னுமா மணிமுடிப் பஞ்சவர்க்குஆகி*  முன் தூது சென்ற*
  மன்னனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  பூண்உலாம் மென்முலைப் பாவைமார்*  பொய்யினை 'மெய் இது' என்று,* 
  பேணுவார் பேசும் அப்பேச்சை*  நீ பிழை எனக் கருதினாயேல்,*

  நீள்நிலா வெண்குடை வாணனார்*  வேள்வியில் மண் இரந்த,*
  மாணியார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  பண்உலாம் மென்மொழிப் பாவைமார்*  பணைமுலை அணைதும் நாம்என்று* 
  எண்ணுவார் எண்ணம்அது ஒழித்து*  நீ பிழைத்து உயக் கருதினாயேல்,*

  விண்உளார் விண்ணின் மீதுஇயன்ற*  வேங்கடத்துஉளார்,*  வளங்கொள் முந்நீர்-
  வண்ணனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே! 


  மஞ்சுதோய் வெண்குடை மன்னர்ஆய்*  வாரணம் சூழ வாழ்ந்தார்,*
  துஞ்சினார் என்பதுஓர் சொல்லை*  நீ துயர்எனக் கருதினாயேல்,*

  நஞ்சுதோய் கொங்கைமேல் அம்கைவாய் வைத்து*  அவள் நாளை உண்ட,-
  மஞ்சனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  உருவின்ஆர் பிறவிசேர்*  ஊன்பொதி நரம்புதோல் குரம்பையுள் புக்கு* 
  அருவிநோய் செய்துநின்று*  ஐவர்தாம் வாழ்வதற்கு அஞ்சினாயேல்,*

  திருவின்ஆர் வேதம்நான்கு ஐந்துதீ*  வேள்வியோடு அங்கம் ஆறும்,*
  மருவினார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  நோய்எலாம் பெய்ததுஓர் ஆக்கையை*  மெய்எனக் கொண்டு,*  வாளா- 
  பேயர்தாம் பேசும் அப்பேச்சை*  நீ பிழைஎனக் கருதினாயேல்,*

  தீஉலாம் வெம்கதிர் திங்கள்ஆய்*  மங்குல் வான்ஆகி நின்ற,*
  மாயனார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  மஞ்சுசேர் வான்எரி*  நீர்நிலம் கால்இவை மயங்கி நின்ற,*
  அஞ்சுசேர் ஆக்கையை*  அரணம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

  சந்துசேர் மென்முலைப்*  பொன்மலர்ப் பாவையும் தாமும்,*  நாளும்-
  வந்துசேர் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  வெள்ளியார் பிண்டியார் போதியார்*  என்றுஇவர் ஓது கின்ற,*
  கள்ளநூல் தன்னையும்*  கருமம்அன்று என்றுஉயக் கருதினாயேல்,*

  தெள்ளியார் கைதொழும் தேவனார்*  மாமுநீர் அமுது தந்த,*
  வள்ளலார் வல்லவாழ்*  சொல்லுமா வல்லைஆய் மருவு நெஞ்சே!


  மறைவலார் குறைவுஇலார் உறையும்ஊர்*  வல்லவாழ் அடிகள் தம்மைச்,*
  சிறைகுலாம் வண்டுஅறை சோலைசூழ்*  கோலநீள்ஆலி நாடன்,*

  கறைஉலாம் வேல்வல*  கலியன்வாய் ஒலிஇவை கற்று வல்லார்,*
  இறைவர்ஆய் இருநிலம் காவல்பூண்டு*  இன்பம் நன்கு எய்துவாரே.   (2)


  மானம்உடைத்து உங்கள் ஆயர் குலம் அதனால்*  பிறர் மக்கள் தம்மை*
  ஊனம்உடையன செய்யப் பெறாய்என்று*  இரப்பன் உரப்ப கில்லேன்*

  நானும் உரைத்திலேன் நந்தன் பணித்திலன்*   நங்கைகாள்! நான்என் செய்கேன்?
  தானும்ஓர் கன்னியும் கீழை அகத்துத்*  தயிர்கடை கின்றான் போலும்!  (2)


  காலை எழுந்து கடைந்த இம்மோர்விற்கப் போகின்றேன்*  கண்டே போனேன்,* 
  மாலை நறுங்குஞ்சி நந்தன் மகன்அல்லால்*  மற்று வந்தாரும் இல்லை,*

  மேலை அகத்து நங்காய்! வந்து காண்மின்கள்*  வெண்ணெயேஅன்று, இருந்த*
  பாலும் பதின்குடம் கண்டிலேன்*  பாவியேன் என்செய்கேன் என்செய்கேனோ!


  தெள்ளிய வாய்ச்சிறியான் நங்கைகாள்!*  உறி மேலைத் தடாநிறைந்த,*
  வெள்ளி மலைஇருந்தால்ஒத்த வெண்ணெயை*   வாரி விழுங்கி யிட்டு,*

  கள்வன் உறங்குகின்றான் வந்து காண்மின்கள்*  கைஎல்லாம் நெய்,*  வயிறு-
  பிள்ளை பரம்அன்று இவ்ஏழ்உலகும் கொள்ளும்*  பேதையேன் என்செய்கேனோ!


  மைந்நம்பு வேல்கண்நல்லாள்*  முன்னம் பெற்ற வளைவண்ண நல்மா மேனி,*
  தன்நம்பி நம்பியும் இங்கு வளர்ந்தது*  அவன் இவை செய்தறியான்*

  பொய்ந்நம்பி புள்ளுவன் கள்வம்*  பொதிஅறை போகின்றவா தவழ்ந்திட்டு,* 
  இந்நம்பி நம்பியா ஆய்ச்சியர்க்கு உய்வுஇல்லை*  என்செய்கேன் என்செய்கேனோ!


  தந்தை புகுந்திலன் நான் இங்கு இருந்திலேன்*  தோழிமார் ஆரும்இல்லை,* 
  சந்த மலர்க்குழலாள்*  தனியே விளையாடும்இடம் குறுகி,*

  பந்து பறித்து துகில்பற்றிக் கீறி*  படிறன் படிறு செய்யும்,* 
  நந்தன் மதலைக்கு இங்குஎன்கடவோம்? நங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


  மண்மகள் கேள்வன் மலர்மங்கை நாயகன்*  நந்தன் பெற்ற மதலை,* 
  அண்ணல் இலைக்குழல் ஊதிநம் சேரிக்கே*   அல்லில்தான் வந்த பின்னை,*

  கண்மலர் சோர்ந்து முலைவந்து விம்மி*  கமலச் செவ்வாய் வெளுப்ப,* 
  என்மகள் வண்ணம் இருக்கின்ற வாநங்காய்!*  என்செய்கேன் என்செய்கேனோ!


  ஆயிரம் கண்உடை இந்திரனாருக்கு அன்று*  ஆயர் விழவுஎடுப்ப,* 
  பாசனம் நல்லன பண்டிகளால்*  புகப் பெய்த அதனை எல்லாம்,*

  போயிருந்து அங்குஒரு பூத வடிவுகொண்டு*  உன்மகன் இன்று நங்காய்,* 
  மாயன் அதனை எல்லாம் முற்ற*  வாரி வளைத்து உண்டுஇருந்தான் போலும்! 


  தோய்த்த தயிரும் நறுநெய்யும் பாலும்*  ஓர்ஓர்குடம் துற்றிடும்என்று,* 
  ஆய்ச்சியர் கூடி அழைக்கவும்*  நான்இதற்குஎள்கி இவனை நங்காய்*

  சோத்தம் பிரான்! இவை செய்யப் பெறாய்! என்று*  இரப்பன் உரப்பகில்லேன்* 
  பேய்ச்சி முலைஉண்ட பின்னை*  இப்பிள்ளையைப் பேசுவது அஞ்சுவனே! 


  ஈடும் வலியும் உடைய*  இந் நம்பி பிறந்த எழு திங்களில்,* 
  ஏடுஅலர் கண்ணியினானை வளர்த்தி*  யமுனை நீராடப் போனேன்,*

  சேடன் திருமறு மார்வன்*  கிடந்து  திருவடியால்,*  மலை போல்-
  ஓடும் சகடத்தைச் சாடிய பின்னை*  உரப்புவது அஞ்சுவனே!


  அஞ்சுவன் சொல்லி அழைத்திட நங்கைகாள்!*  ஆயிரம் நாழி நெய்யை,*
  பஞ்சிய மெல்அடிப் பிள்ளைகள் உண்கின்று*  பாகம்தான் வையார்களே,*

  கஞ்சன் கடியன் கறவுஎட்டு நாளில்*  என்கை வலத்துஆதும் இல்லை,* 
  நெஞ்சத்துஇருப்பன செய்து வைத்தாய் நம்பீ!*  என்செய்கேன் என்செய்கேனோ!


  அங்ஙனம் தீமைகள் செய்வர்களோ நம்பீ!*  ஆயர் மடமக்களை,*
  பங்கய நீர்குடைந்துஆடுகின்றார்கள்*  பின்னே சென்றுஒளித்திருந்து,*

  அங்கு அவர் பூந்துகில் வாரிக்கொண்டிட்டு*  அரவுஏர்இடையார் இரப்ப,* 
  மங்கை நல்லீர் வந்து கொள்மின் என்ற*  மரம் ஏறி இருந்தாய் போலும் 


  அச்சம் தினைத்தனை இல்லை இப்பிள்ளைக்கு*  ஆண்மையும் சேவகமும்,* 
  உச்சியில் முத்தி வளர்த்துஎடுத்தேனுக்க*  உரைத்திலன் தான்இன்று போய்,*

  பச்சிலைப் பூங்கடம்பு ஏறி*  விசைகொண்டு  பாய்ந்து புக்கு*  ஆயிரவாய்-
  நச்சுஅழல் பொய்கையில் நாகத்தினோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


  தம்பரம் அல்லன ஆண்மைகளைத்*  தனியேநின்று தாம் செய்வரோ?,
  எம்பெருமான் உன்னைப் பெற்ற வயிறுஉடையேன்*  இனி யான்என் செய்கேன்?,*

  அம்பரம் ஏழும் அதிரும் இடிகுரல்*  அங்குஅனல் செங்கண்உடை,*
  வம்புஅவிழ் கானத்து மால்விடையோடு*  பிணங்கி நீ வந்தாய் போலும்!   


  அன்ன நடை மட ஆய்ச்சி வயிறுஅடித்து அஞ்ச*  அருவரை போல்,* 
  மன்னு கருங்களிற்று ஆர்உயிர் வவ்விய*  மைந்தனை மாகடல் சூழ்,*

  கன்னிநல் மாமதிள் மங்கையர் காவலன்*  காமரு சீர்க்கலிகன்றி*
  இன்இசை மாலைகள் ஈர்ஏழும் வல்லவர்க்கு*  ஏதும் இடர் இல்லையே.  (2)   


  நீள்நாகம் சுற்றி*  நெடுவரைநட்டு,*  ஆழ்கடலைப்- 
  பேணான் கடைந்து*  அமுதம் கொண்டுஉகந்த பெம்மானை,*

  பூண்ஆர மார்வனை*  புள்ஊரும் பொன்மலையை,* 
  காணாதார் கண்என்றும்*  கண்அல்ல கண்டாமே   (2)


  நீள்வான் குறள்உருஆய்*  நின்றுஇரந்து மாவலிமண்,* 
  தாளால் அளவிட்ட*  தக்கணைக்கு மிக்கானை,*

  தோளாத மாமணியை*  தொண்டர்க்கு இனியானை,*
  கேளாச் செவிகள்*  செவிஅல்ல கேட்டாமே.


  தூயானை*  தூய மறையானை,*  தென்ஆலி 
  மேயானை*  மேவாள் உயிர்உண்டு அமுதுஉண்ட 

  வாயானை*  மாலை வணங்கி*  அவன்பெருமை 
  பேசாதார்*  பேச்சுஎன்றும் பேச்சுஅல்ல கேட்டாமே.


  கூடா இரணியனைக்*  கூர்உகிரால் மார்வுஇடந்த,* 
  ஓடா அடல்அரியை*  உம்பரார் கோமானை,*

  தோடுஆர் நறுந்துழாய் மார்வனை,*  ஆர்வத்தால்- 
  பாடாதார் பாட்டுஎன்றும்*  பாட்டுஅல்ல கேட்டாமே.


  மைஆர் கடலும்*  மணிவரையும் மாமுகிலும்,* 
  கொய்ஆர் குவளையும் காயாவும்*  போன்றுஇருண்ட*

  மெய்யானை மெய்ய மலையானை*  சங்குஏந்தும் 
  கையானை கைதொழா*  கைஅல்ல கண்டாமே.


  கள்ஆர் துழாயும்*  கணவலரும் கூவிளையும்,* 
  முள்ஆர் முளரியும்*  ஆம்பலும்முன் கண்டக்கால்,*

  புள்ஆய் ஓர் ஏனம்ஆய்ப்*  புக்குஇடந்தான் பொன்அடிக்குஎன்று,*
  உள்ளாதார் உள்ளத்தை*  உள்ளமாக் கொள்ளோமே.


  கனைஆர் கடலும்*  கருவிளையும் காயாவும்* 
  அனையானை,*  அன்பினால் ஆர்வத்தால்,*  என்றும்-

  சுனைஆர் மலர்இட்டு*  தொண்டராய் நின்று,* 
  நினையாதார் நெஞ்சுஎன்றும்*  நெஞ்சுஅல்ல கண்டாமே.


  வெறிஆர் கருங்கூந்தல்*  ஆய்ச்சியர் வைத்த* 
  உறிஆர் நறுவெண்ணெய்*  தான்உகந்து உண்ட

  சிறியானை*  செங்கண்*  நெடியானை சிந்தித்து- 
  அறியாதார்*  என்றும் அறியாதார் கண்டாமே.


  தேனொடு வண்டுஆலும்*  திருமாலிருஞ்சோலை,* 
  தான்இடமாக் கொண்டான்*  தடமலர்க் கண்ணிக்காய்,*

  ஆன்விடை ஏழ்அன்று அடர்த்தாற்கு*  ஆள்ஆனார் அல்லாதார்,* 
  மானிடவர் அல்லர் என்று*  என்மனத்தே வைத்தேனே.  (2)


  மெய்ந்நின்ற*  பாவம் அகல,*  திருமாலைக்- 
  கைந்நின்ற ஆழியான்*  சூழும் கழல்சூடிக்,*

  கைந்நின்ற வேல்கைக்*  கலியன் ஒலிமாலை,* 
  ஐயொன்றும் ஐந்தும்*  இவைபாடி ஆடுமினே. (2)