பிரபந்த தனியன்கள்
நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து
பாசுரங்கள்
நான்முகனை* நாராயணன் படைத்தான்*
நான்முகனும் தான்முகமாய்ச்* சங்கரனைத் தான்படைத்தான்*
யான்முகமாய் அந்தாதி மேலிட்டு* அறிவித்தேன் ஆழ்பொருளை*
சிந்தாமல் கொள்மின்நீர் தேர்ந்து (2)
தேருங்கால் தேவன்* ஒருவனே என்றுஉரைப்பர்*
ஆரும்அறியார் அவன்பெருமை*
ஓரும் பொருள்முடிவும் இத்தனையே* எத்தவம் செய்தார்க்கும்*
அருள்முடிவது ஆழியான் பால்
பாலில் கிடந்ததுவும்* பண்டுஅரங்கம் மேயதுவும்*
ஆலில் துயின்றதுவும் ஆர்அறிவார்*
ஞாலத்து ஒருபொருளை* வானவர்தம் மெய்ப்பொருளை*
அப்பில் அருபொருளை யான்அறிந்தஆறு?
ஆறு சடைக்கரந்தான்* அண்டர்கோன் தன்னோடும்*
கூறுஉடையன் என்பதுவும்* கொள்கைத்தே* வேறுஒருவர்
இல்லாமை* நின்றானை எம்மானை* எப்பொருட்கும்
சொல்லானைச் சொன்னேன்* தொகுத்து.
தொகுத்த வரத்தனாய்த்* தோலாதான் மார்வம்*
வகிர்த்தவளை உகிர்தோள் மாலே* உகத்தில்
ஒருநான்று நீஉயர்த்தி* உள்வாங்கி நீயே*
அருநான்கும் ஆனாய் அறி.
அறியார் சமணர்* அயர்த்தார் பவுத்தர்*
சிறியார் சிவப்பட்டார்செப்பில்*
வெறியாய மாயவனை மாலவனை* மாதவனை ஏத்தாதார்*
ஈனவரே ஆதலால் இன்று.
இன்றுஆக* நாளையேஆக* இனிச்சிறிது
நின்றுஆக* நின்அருள் என் பாலதே* நன்றாக
நான் உன்னைஅன்றி* இலேன்கண்டாய்* நாரணனே
நீஎன்னை அன்றிஇலை.
இலைதுணை மற்றுஎன்நெஞ்சே* ஈசனை வென்ற*
சிலைகொண்ட செங்கண்மால் சேரா* குலைகொண்ட
ஈர்ஐந்தலையான்* இலங்கையை ஈடுஅழித்த*
கூர்அம்பன் அல்லால் குறை.
குறைகொண்டு நான்முகன்* குண்டிகைநீர் பெய்து*
மறைகொண்ட மந்திரத்தால் வாழ்த்தி* கறைகொண்ட
கண்டத்தான்* சென்னிமேல் ஏறக் கழுவினான்*
அண்டத்தான் சேவடியை ஆங்கு.
ஆங்குஆரவாரம் அதுகேட்டு* அழல்உமிழும்
பூங்கார் அரவுஅணையான் பொன்மேனி* யாம்காண
வல்லமே அல்லமே?* மாமலரான் வார்சடையான்*
வல்லரே அல்லரே? வாழ்த்து
வாழ்த்துக வாய்* காண்க கண் கேட்க செவி* மகுடம்
தாழ்த்தி வணங்குமின்கள்* தண்மலரால்* சூழ்த்த
துழாய் மன்னுநீள்முடி* என் தொல்லைமால் தன்னை*
வழாவண்கை கூப்பி மதித்து.
மதித்தாய்போய் நான்கில்* மதியார்போய் வீழ*
மதித்தாய் மதிகோள் விடுத்தாய்* மதித்தாய்
மடுக்கிடந்த* மாமுதலை கோள்விடுப்பான்* ஆழி
விடற்குஇரண்டும் போய் இரண்டின் வீடு.
வீடுஆக்கும்* பெயாதுற்றிஅறி* மெய்வருத்திக்
கூடுஆக்கி* நின்றுஉண்டு கொன்றுஉழல்வீர்* வீடுஆக்கும்
மெய்ப்பொருள்தான்* வேத முதற்பொருள்தான்* விண்ணவர்க்கு
நற்பொருள்தான்* நாராயணன.
நாராயணன்* என்னைஆளி* நரகத்துச்
சேராமல்* காக்கும் திருமால்* தன்பேரான
பேசப்பெறாத* பிணச்சமயர் பேசக்கேட்டு*
ஆசைப்பட்டு ஆழ்வார் பலர.
பலதேவர்ஏத்த* படிகடந்தான் பாதம்*
மலர்ஏற இட்டுஇறைஞ்சி* வாழ்த்த வலர்ஆகில்*
மார்க்கண்டன் கண்ட வகையே* வரும்கண்டீர்*
நீர்க்கண்டன் கண்ட நிலை.
நிலைமன்னும் என்நெஞ்சம்* அந்நான்று* தேவர்
தலைமன்னர்* தாமே மாற்றாக* பலமன்னர்
போர்மாள* வெம்கதிரோன் மாய பொழில்மறைய*
தேர்ஆழியால் மறைத்தாரால்.
ஆலநிழற்கீழ்* அறநெறியை* நால்வர்க்கு
மேலையுகத்துஉரைத்தான்* மெய்த்தவத்தோன்* ஞாலம்
அளந்தானை* ஆழிக் கிடந்தானை* ஆல்மேல்
வளர்ந்தானைத்* தான்வணங்குமாறு.
மாறுஆய தானவனை* வள்உகிரால்* மார்வுஇரண்டு
கூறாகக்* கீறிய கோளரியை* வேறாக
ஏத்தியிருப்பாரை* வெல்லுமே* மற்றுஅவரைச்
சாத்தி இருப்பார் தவம்.
தவம்செய்து* நான்முகனால் பெற்ற வரத்தை*
அவம்செய்த* ஆழியாய்அன்றே* உவந்துஎம்மைக்
காப்பாய்நீ* காப்பதனை ஆவாய்நீ* வைகுந்தம்
ஈப்பாயும்* எவ்உயிர்க்கும் நீ.
நீயே உலகும்எல்லாம்* நின்அருளே நிற்பனவும்*
நீயே* தவத்தேவ தேவனும்* நீயே
எரிசுடரும் மால்வரையும்* எண்திசையும்* அண்டத்து
இருசுடரும்ஆய இவை
இவையா! பிலவாய்* திறந்துஎரி கான்ற*
இவையா!* எரிவட்டக் கண்கள்* இவையா
எரிபொங்கிக் காட்டும்* இமையோர் பெருமான்*
அரிபொங்கிக் காட்டும் அழகு?
அழகியான் தானே* அரிஉருவன் தானே*
பழகியான்* தாளே பணிமின்* குழவியாய்த்
தான் ஏழ்உலகுக்கும்* தன்மைக்கும் தன்மையனே*
மீன்ஆய் உயிர்அளிக்கும் வித்து.
வித்தும்இட வேண்டும் கொல்லோ* விடைஅடர்த்த*
பத்தி உழவன்* பழம்புனத்து* மொய்த்துஎழுந்த
கார்மேகம்அன்ன* கருமால் திருமேனி*
நீர்வானம் காட்டும் நிகழ்ந்து.
நிகழ்ந்தாய் பால்பொன்பசுப்புக்* கார்வண்ணம் நான்கும்*
இகழ்ந்தாய்* இருவரையும் வீய- புகழ்ந்தாய்*
சினப்போர்ச்சு வேதனைச்* சேனாபதியாய்*
மனப்போர் முடிக்கும் வகை.
வகையால் மதியாது* மண்கொண்டாய்* மற்றும்
வகையால்* வருவதுஒன்றுஉண்டே* வகையால்
வயிரம் குழைத்துஉண்ணும்* மாவலிதான் என்னும்*
வயிர வழக்குஒழித்தாய் மற்று.
மற்றுத் தொழுவார்* ஒருவரையும் யான்இன்மை*
கற்றைச் சடையான்* கரிகண்டாய்* எற்றைக்கும்
கண்டுகொள் கண்டாய்* கடல்வண்ணா* யான் உன்னைக்
கண்டு கொளகிற்குமாறு.
மால்தான்* புகுந்த மடநெஞ்சம் மற்றதுவும்*
பேறாகக்* கொள்வனோ பேதைகாள்* நீறாடி
தான்காண மாட்டாத* தார்அகலச் சேவடியை*
யான்காண வல்லேற்கு இது.
இதுஇலங்கை ஈடுஅழியக்* கட்டிய சேது*
இதுவிலங்கு வாலியை வீழ்த்தது* இதுஇலங்கை
தான்ஒடுங்க வில்நுடங்க* தண் தார்இராவணனை*
ஊன்ஒடுங்க எய்தான் உகப்பு.
உகப்புஉருவன் தானே* ஒளிஉருவன் தானே*
மகப்புஉருவன் தானே* மதிக்கில்* மிகப்புருவம்
ஒன்றுக்குஒன்று* ஓசனையான் வீழ* ஒருகணையால்
அன்றிக்கொண்டு எய்தான் அவன்.
அவன் என்னைஆளி* அரங்கத்து அரங்கில்*
அவன்என்னை எய்தாமல் காப்பான்* அவன்என்னது
உள்ளத்து* நின்றான் இருந்தான் கிடக்குமே*
வெள்ளத்து அரவுஅணையின் மேல்.
மேல் நான்முகன்* அரனைஇட்ட விடுசாபம்*
தான் நாரணன் ஒழித்தான்* தாரகையுள்* வானோர்
பெருமானை* ஏத்தாத பேய்காள்* பிறக்கும்
கருமாயம் பேசில் கதை.
கதைப்பொருள்தான்* கண்ணன் திருவயிற்றின் உள்ள*
உதைப்பளவு போதுபோக்கு இன்றி* வதைப் பொருள்தான்
வாய்ந்த குணத்துப்* படாதது அடைமினோ*
ஆய்ந்த குணத்தான் அடி.
அடிச்சகடம் சாடி* அரவுஆட்டி* யானை
பிடித்துஒசித்து* பேய்முலை நஞ்சுஉண்டு* வடிப்பவள
வாய்ப்பின்னை தோளிக்கா* வல்ஏற்று எருத்துஇறுத்து*
கோபின்னும் ஆனான் குறிப்பு.
குறிப்பு எனக்குக்* கோட்டியூர் மேயானைஏத்த*
குறிப்பு எனக்கு நன்மை பயக்க* வெறுப்பனோ
வேங்கடத்து மேயானை* மெய்வினைநோய் எய்தாமல்*
தான்கடத்தும் தன்மையான் தாள்.
தாளால் உலகம்* அளந்த அசைவேகொல்*
வாளாகிடந்தருளும்* வாய்திறவான்* நீள்ஓதம்
வந்துஅலைக்கும் மாமயிலை* மாஅல்லிக்கேணியான்*
ஐந்தலைவாய் நாகத்துஅணை? (2)
நாகத்துஅணைக் குடந்தை* வெஃகா திருஎவ்வுள்*
நாகத்துஅணை அரங்கம் பேர்அன்பில்* நாகத்து
அணைப் பாற்கடல் கிடக்கும்* ஆதி நெடுமால்*
அணைப்பார் கருத்தன் ஆவான். (2)
வான்உலவு தீவளி* மாகடல் மாபொருப்பு*
தான்உலவு வெம்கதிரும்* தண்மதியும்* மேல்நிலவு
கொண்டல் பெயரும்* திசைஎட்டும் சூழ்ச்சியும்*
அண்டம் திருமால் அகைப்பு.
அகைப்புஇல் மனிசரை* ஆறு சமயம்
புகைத்தான்* பொருகடல்நீர் வண்ணன்* உகைக்குமேல்
எத்தேவர் வாலாட்டும்* எவ்வாறு செய்கையும்*
அப்போது ஒழியும் அழைப்பு.
அழைப்பன்* திருவேங்கடத்தானைக் காண*
இழைப்பன்* திருக்கூடல் கூட* மழைப்பேர்
அருவி* மணிவரன்றி வந்துஇழிய* யானை
வெருவி அரவுஒடுங்கும் வெற்பு.
வெற்புஎன்று* வேங்கடம் பாடினேன்* வீடுஆக்கி
நிற்கின்றேன்* நின்று நினைக்கின்றேன்* கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த* நூலாட்டி கேள்வனார்*
கால்வலையில் பட்டிருந்தேன் காண்.
காணல்உறுகின்றேன்* கல்அருவி முத்து உதிர*
ஓண விழவில் ஒலிஅதிர* பேணி
வருவேங்கடவா!* என்உள்ளம் புகுந்தாய்*
திருவேங்கடம் அதனைச் சென்று.
சென்று வணங்குமினோ* சேண்உயர் வேங்கடத்தை*
நின்று வினைகெடுக்கும் நீர்மையால்* என்றும்
கடிக்கமல நான்முகனும்* கண் மூன்றத்தானும்*
அடிக்கமலம் இட்டுஏத்தும் அங்கு.
மங்குல்தோய் சென்னி* வடவேங்கடத்தானை*
கங்குல் புகுந்தார்கள்* காப்புஅணிவான்* திங்கள்
சடைஏற வைத்தானும்* தாமரை மேலானும்*
குடைஏற தாம்குவித்துக் கொண்டு.
கொண்டு குடங்கால்* மேல்வைத்த குழவியாய்*
தண்ட அரக்கன் தலை* தாளால் பண்டுஎண்ணிப்*
போம்குமரன் நிற்கும்* பொழில்வேங்கட மலைக்கே*
போம் குமரருள்ளீர்! புரிந்து.
புரிந்து மலர்இட்டுப்* புண்டரிகப் பாதம்*
பரிந்து படுகாடு நிற்ப* தெரிந்துஎங்கும்
தான்ஓங்கி நிற்கின்றான்* தண்அருவி வேங்கடமே*
வானோர்க்கும் மண்ணோர்க்கும் வைப்பு.
வைப்பன் மணிவிளக்கா* மாமதியை* மாலுக்குஎன்று
எப்பொழுதும்* கைநீட்டும் யானையை* எப்பாடும்
வேடுவளைக்கக்* குறவர் வில்எடுக்கும் வேங்கடமே*
நாடுவளைத்து ஆடுதுமேல் நன்று.
நன்மணி வண்ணன்ஊர்* ஆளியும் கோளரியும்*
பொன்மணியும்* முத்தமும் பூமரமும்* பன்மணி நீ
ரோடு பொருதுஉருளும்* கானமும் வானரமும்*
வேடும்உடை வேங்கடம்.
வேங்கடமே* விண்ணோர் தொழுவதுவும்* மெய்ம்மையால்
வேங்கடமே* மெய்வினைநோய் தீர்ப்பதுவும்* வேங்கடமே
தானவரை வீழத்* தன்ஆழிப் படைதொட்டு*
வானவரைக் காப்பான் மலை.
மலைஆமை மேல்வைத்து* வாசுகியைச் சுற்றி*
தலைஆமை தான்ஒருகை பற்றி* அலையாமல்
பீறக்கடைந்த* பெருமான் திருநாமம்*
கூறுவதே யாவர்க்கும் கூற்று.
கூற்றமும் சாரா* கொடுவினையும் சாரா* தீ
மாற்றமும்* சாரா வகைஅறிந்தேன்* ஆற்றங்
கரைக் கிடக்கும்* கண்ணன் கடல்கிடக்கும்* மாயன்
உரைக்கிடக்கும்* உள்ளத்து எனக்கு.
எனக்குஆவார்* ஆர்ஒருவரே* எம்பெருமான்
தனக்குஆவான்* தானே மற்று அல்லால்* புனக்காயா
வண்ணனே உன்னைப் பிறர் அறியார்* என்மதிக்கு*
விண்எல்லாம் உண்டோ விலை?
விலைக்கு ஆட்படுவர்* விசாதிஏற்றுஉண்பர்*
தலைக்குஆட்பலி திரிவர் தக்கோர்* முலைக்கால்
விடம்உண்ட வேந்தனையே* வேறாஏத்தாதார்*
கடம் உண்டார் கல்லாதவர்.
கல்லாதவர்* இலங்கை கட்டழித்த* காகுத்தன்
அல்லால்* ஒருதெய்வம் யான்இலேன்* பொல்லாத
தேவரை* தேவர் அல்லாரை* திருஇல்லாத்
தேவரைத்* தேறேல்மின் தேவு.
தேவராய் நிற்கும் அத்தேவும்* அத்தேவரில்
மூவராய் நிற்கும்* முதுபுணர்ப்பும்* யாவராய்
நிற்கின்றது எல்லாம்* நெடுமால் என்றுஓராதார்*
கற்கின்றது எல்லாம் கடை.
கடை நின்று அமரர்* கழல் தொழுது* நாளும்
இடை நின்ற இன்பத்தர் ஆவர்* புடைநின்ற
நீர்ஓத மேனி* நெடுமாலே* நின் அடியை
யார்ஓத* வல்லார் அவர்?
அவர் இவர் என்று இல்லை* அனங்கவேள் தாதைக்கு*
எவரும் எதிர் இல்லை கண்டீர்* உவரிக்
கடல் நஞ்சம் உண்டான்* கடன் என்று* வாணற்கு
உடன் நின்று தோற்றான் ஒருங்கு.
ஒருங்குஇருந்த நல்வினையும்* தீவினையும் ஆவான்*
பெரும்குருந்தம் சாய்த்தவனே பேசில்* மருங்குஇருந்த
வானவர்தாம் தானவர்தாம்* தாரகைதான்* என் நெஞ்சம்
ஆனவர்தாம்* அல்லாதது என்?
என் நெஞ்சம் மேயான்* இருள் நீக்கி எம்பிரான்*
மன்அஞ்ச முன்ஒரு நாள்* மண் அளந்தான்* என்நெஞ்சம்
மேயானை* இல்லா விடை ஏற்றான்* வெவ்வினை தீர்த்து
ஆயானுக்கு ஆக்கினேன் அன்பு.
அன்புஆவாய்* ஆர்அமுதம் ஆவாய்* அடியேனுக்கு
இன்புஆவாய்* எல்லாமும் நீஆவாய்* பொன்பாவை
கேள்வா* கிளர்ஒளிஎன் கேசவனே* கேடுஇன்றி
ஆள்வாய்க்கு* அடியேன்நான் ஆள்.
ஆள்பார்த்து உழிதருவாய்* கண்டுகொள் என்றும்* நின்
தாள் பார்த்து உழிதருவேன்* தன்மையை* கேட்பார்க்கு
அரும்பொருளாய் நின்ற* அரங்கனே* உன்னை
விரும்புவதே* விள்ளேன் மனம்.
மனக்கேதம் சாரா* மதுசூதன் தன்னைத்*
தனக்கேதான்* தஞ்சமாக் கொள்ளில்* எனக்கேதான்
இன்றுஒன்றி நின்று உலகைஏழ்* ஆணை ஓட்டினான்*
சென்று ஒன்றி நின்ற திரு.
திருநின்ற பக்கம்* திறவிது என்றுஓரார்*
கருநின்ற கல்லார்க்கு உரைப்பர்* திருஇருந்த
மார்பில்* சிரீதரன்தன் வண்டுஉலவு தண்துழாய்த்*
தார்தன்னைச் சூடித் தரித்து.
தரித்திருந்தேன் ஆகவே* தாரா கணப்போர்
விரித்துஉரைத்த* வெம்நாகத்துஉன்னைத்* தெரித்துஎழுதி
வாசித்தும் கேட்டும்* வணங்கி வழிபட்டும்*
பூசித்தும் போக்கினேன் போது.
போதான இட்டுஇறைஞ்சி ஏத்துமினோ* பொன்மகரக்
காதானை* ஆதிப் பெருமானை* நாதானை
நல்லானை நாரணனை* நம்ஏழ் பிறப்புஅறுக்கும்
சொல்லானை* சொல்லுவதே சூது.
சூதுஆவது* என்நெஞ்சத்து எண்ணினேன்* சொல்மாலை
மாதுஆய* மாலவனை மாதவனை* யாதானும்
வல்லவா* சிந்தித்து இருப்பேற்கு* வைகுந்தத்து
இல்லையோ* சொல்லீர் இடம்?
இடம்ஆவது* என்நெஞ்சம் இன்றெல்லாம்* பண்டு
படநாகணை* நெடியமாற்கு* திடமாக
வையேன்* மதிசூடி தன்னோடு* அயனைநான்
வையேன்* ஆட்செய்யேன் வலம்.
வலம்ஆக* மாட்டாமை தான்ஆக* வைகல்
குலம்ஆக* குற்றம்தான்ஆக* நலம்ஆக
நாரணனை நாபதியை* ஞானப் பெருமானை*
சீரணனை ஏத்தும் திறம்.
திறம்பேல்மின் கண்டீர்* திருவடிதன் நாமம்*
மறந்தும் புரம்தொழா மாந்தர்* இறைஞ்சியும்
சாதுவராய்ப்* போதுமின்கள் என்றான்* நமனும்தன்
தூதுவரைக் கூவிச் செவிக்கு.
செவிக்கு இன்பம் ஆவதுவும்* செங்கண்மால் நாமம்*
புவிக்கும் புவிஅதுவே கண்டீர்* கவிக்கு
நிறை பொருளாய் நின்றானை* நேர்பட்டேன்* பார்க்கில்
மறைப்பொருளும்* அத்தனையே தான்
தான் ஒருவன்ஆகி* தரணி இடந்துஎடுத்து*
ஏன் ஒருவனாய்* எயிற்றில் தாங்கியதும்* யான் ஒருவன்
இன்றா* அறிகின்றேன் அல்லேன்* இருநிலத்தைச்*
சென்றுஆங்கு அடிப்படுத்த சேய்.
சேயன் அணியன்* சிறியன் மிகப்பெரியன்*
ஆயன் துவரைக்கோனாய்* நின்ற மாயன்* அன்று
ஓதிய* வாக்குஅதனைக் கல்லார்* உலகத்தில்
ஏதிலர்ஆம்* மெய்ஞ்ஞானம் இல்.
'இல்லறம் அல்லேல்* துறவறம்இல்' என்னும்*
சொல் அறம் அல்லனவும் சொல் அல்ல* நல்லறம்
ஆவனவும்* நால்வேத மாத்தவமும்* நாரணனே
ஆவது ஈதுஅன்று என்பார்ஆர்?
ஆரே அறிவார்8 அனைத்து உலகும் உண்டுஉமிழ்ந்த*
பேர்ஆழியான் தன் பெருமையை* கார்செறிந்த
கண்டத்தான்* எண்கண்ணான் காணான்* அவன் வைத்த
பண்டைத் தானத்தின் பதி.
பதிப்பகைஞற்கு ஆற்றாது* பாய்திரை நீர்ப் பாழி*
மதித்துஅடைந்த வாள்அரவம் தன்னை* மதித்துஅவன்தன்
வல்ஆகத்து ஏற்றிய* மாமேனி மாயவனை*
அல்லாது ஒன்று ஏத்தாது என் நா.
நாக்கொண்டு* மானிடம் பாடேன்* நலம்ஆக
தீக்கொண்ட* செஞ்சடையான் சென்று* என்றும் பூக்கொண்டு
வல்லவாறு* ஏத்த மகிழாத* வைகுந்தச்
செல்வனார்* சேவடிமேல் பாட்டு.
பாட்டும் முறையும்* படுகதையும் பல்பொருளும்*
ஈட்டிய தீயும் இருவிசும்பும்* கேட்ட
மனுவும்* சுருதி மறை நான்கும்* மாயன்
தனமாயையில் பட்டதற்பு.
தற்புஎன்னைத்* தான் அறியானேலும்* தடங்கடலைக்
கல்கொண்டு* தூர்த்த கடல்வண்ணன்* என்கொண்ட
வெவ்வினையும் நீங்க* விலங்கா மனம் வைத்தான்*
எவ்வினையும் மாயுமால் கண்டு.
கண்டு வணங்கினார்க்கு* என்னாம்கொல்* காமன் உடல்
கொண்ட* தவத்தாற்கு உமைஉணர்த்த* வண்டுஅலம்பும்
தார்அலங்கல் நீள்முடியான்* தன் பெயரே கேட்டிருந்து* அங்கு
ஆர்அலங்கல் ஆனமையால் ஆய்ந்து.
ஆய்ந்துகொண்டு* ஆதிப் பெருமானை* அன்பினால்
வாய்ந்த* மனத்து இருத்த வல்லார்கள்* ஏய்ந்த தம்
மெய்குந்தம்ஆக* விரும்புவரே* தாமும் தம்
வைகுந்தம் காண்பார் விரைந்து.
விரைந்துஅடைமின் மேல் ஒருநாள்* வெள்ளம் பரக்க*
கரந்துஉலகம்* காத்து அளித்த கண்ணன் பரந்துஉலகம்*
பாடின ஆடின கேட்டு* படுநரகம்
வீடின வாசற் கதவு.
கதவு மனம் என்றும்* காணலாம் என்றும்*
குதையும் வினைஆவி தீர்ந்தேன்* விதைஆக
நல்தமிழை வித்தி* என் உள்ளத்தை நீவிளைத்தாய்*
கற்றமொழி ஆகிக் கலந்து.
கலந்தான் என் உள்ளத்து* காமவேள் தாதை*
நலம்தானும்* ஈதுஒப்பது உண்டே* அலர்ந்தலர்கள்
இட்டுஏத்தும்* ஈசனும் நான்முகனும்* என்றிவர்கள்
விட்டுஏத்த* மாட்டாத வேந்து.
வேந்தர்ஆய் விண்ணவர்ஆய்* விண்ஆகி தண்ணளிஆய்*
மாந்தர்ஆய் மாதுஆய்* மற்று எல்லாம்ஆய்* சார்ந்தவர்க்குத்
தன்ஆற்றான் நேமியான்* மால்வண்ணன் தான் கொடுக்கும்*
பின்னால்தான் செய்யும் பிதிர்.
பிதிரும் மனம் இலேன்* பிஞ்ஞகன் தன்னோடு,*
எதிர்வன்; அவன் எனக்கு நேரான்* அதிரும்
கழற்கால மன்னனையே* கண்ணனையே* நாளும்
தொழக் காதல் பூண்டேன் தொழில்.
தொழில் எனக்குத்* தொல்லை மால்தன் நாமம் ஏத்த*
பொழுது எனக்கு மற்றுஅதுவே போதும்* கழிசினத்த
வல்லாளன்* வானரக்கோன் வாலி மதன் அழித்த*
வில்லாளன் நெஞ்சத்து உளன்.
உளன்கண்டாய் நல்நெஞ்சே* உத்தமன் என்றும்
உளன்கண்டாய்* உள்ளுவார் உள்ளத்து உளன்கண்டாய்*
தன் ஒப்பான் தான்ஆய்* உளன்காண் தமியேற்கும்*
என் ஒப்பார்க்கு ஈசன் இமை.
இமயப் பெருமலை போல்* இந்திரனார்க்கு இட்ட*
சமய விருந்துஉண்டுஆர் காப்பார்* சமயங்கள்
கண்டான் அவை காப்பான்* கார்க்கண்டன் நான்முகனோடு*
உண்டான் உலகோடுஉயிர்.
உயிர்கொண்டு உடல் ஒழிய* ஓதும் போதுஓடி*
அயர்வுஎன்ற தீர்ப்பான்* பேர் பாடி* செயல்தீரச்
சிந்தித்து* வாழ்வாரே வாழ்வார்* சிறுசமயப்
பந்தனையார் வாழ்வேல் பழுது.
பழுதுஆகாது ஒன்று அறிந்தேன்* பாற்கடலான் பாதம்*
வழுவா வகை நினைந்து* வைகல் தொழுவாரைக்*
கண்டு இறைஞ்சி வாழ்வார்* கலந்த வினைகெடுத்து*
விண்திறந்து வீற்றி இருப்பார் மிக்கு.
வீற்றிருந்து* விண்ஆள வேண்டுவார்* வேங்கடத்தான்
பால்திருந்த* வைத்தாரே பல்மலர்கள்* மேல்திருந்தி
வாழ்வார்* வரும்மதி பார்த்து அன்பினராய்* மற்றுஅவற்கே
தாழ்வாய் இருப்பார் தமர்*
தமர்ஆவார் யாவர்க்கும்* தாமரை மேலாற்கும்*
அமரர்க்கும் ஆடுஅரவுஆர்த் தாற்கும்* அமரர்கள்
தாள் தாமரை* மலர்கள் இட்டு இறைஞ்சி* மால்வண்ணன்
தாள் தாமரை அடைவோம் என்று*.
என்றும் மறந்து அறியேன்* என் நெஞ்சத்தே வைத்து*
நின்றும் இருந்தும் நெடுமாலை* என்றும்
திருஇருந்த மார்பன்* சிரீதரனுக்கு ஆளாய்*
கருஇருந்த நாள்முதலாக் காப்பு.
காப்பு மறந்தறியேன்* கண்ணனே என்று இருப்பன்*
ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்* ஆக்கை
கொடுத்து அளித்த* கோனே குணப்பரனே* உன்னை
விடத்துணியார்* மெய்தெளிந்தார் தாம்.
மெய்தெளிந்தார் என் செய்யார்* வேறுஆனார் நீறுஆக*
கைதெளிந்து காட்டிக் களப்படுத்து* பைதெளிந்த
பாம்பின் அணையாய்* அருளாய் அடியேற்கு*
வேம்பும் கறிஆகும்என்று.
ஏன்றேன் அடிமை* இழிந்தேன் பிறப்பு இடும்பை*
ஆன்றேன் அமரர்க்கு அமராமை* ஆன்றேன்
கடன்நாடும் மண்நாடும்* கைவிட்டு* மேலை
இடம்நாடு காண இனி. (2)
இனி அறிந்தேன்* ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்*
இனி அறிந்தேன்* எம்பெருமான் உன்னை* இனி அறிந்தேன்*
காரணன்நீ கற்றவைநீ* கற்பவைநீ* நல்கிரிசை
நாரணன்நீ* நன்கு அறிந்தேன் நான். (2)