பிரபந்த தனியன்கள்

நாரா யணன்படைத்தான் நான்முகனை, நான்முகனுக்
கேரார் சிவன்பிறந்தான் என்னும்சொல் - சீரார்
மொழிசெப்பி வாழலாம் நெஞ்சமே, மொய்பூ
மழிசைப் பரனடியே வாழ்த்து

   பாசுரங்கள்


    வீற்றிருந்து*  விண்ஆள வேண்டுவார்*  வேங்கடத்தான் 
    பால்திருந்த*  வைத்தாரே பல்மலர்கள்*  மேல்திருந்தி

    வாழ்வார்*  வரும்மதி பார்த்து அன்பினராய்*  மற்றுஅவற்கே 
    தாழ்வாய் இருப்பார் தமர்* 


    தமர்ஆவார் யாவர்க்கும்*  தாமரை மேலாற்கும்* 
    அமரர்க்கும் ஆடுஅரவுஆர்த் தாற்கும்*  அமரர்கள்

    தாள் தாமரை*  மலர்கள் இட்டு இறைஞ்சி*  மால்வண்ணன் 
    தாள் தாமரை அடைவோம் என்று*.


    என்றும் மறந்து அறியேன்*  என் நெஞ்சத்தே வைத்து* 
    நின்றும் இருந்தும் நெடுமாலை*  என்றும்

    திருஇருந்த மார்பன்*  சிரீதரனுக்கு ஆளாய்* 
    கருஇருந்த நாள்முதலாக் காப்பு.


    காப்பு மறந்தறியேன்*  கண்ணனே என்று இருப்பன்* 
    ஆப்பு அங்குஒழியவும் பல்உயிர்க்கும்*  ஆக்கை

    கொடுத்து அளித்த*  கோனே குணப்பரனே*  உன்னை 
    விடத்துணியார்*  மெய்தெளிந்தார் தாம். 


    மெய்தெளிந்தார் என் செய்யார்*  வேறுஆனார் நீறுஆக* 
    கைதெளிந்து காட்டிக் களப்படுத்து*  பைதெளிந்த

    பாம்பின் அணையாய்*  அருளாய் அடியேற்கு* 
    வேம்பும் கறிஆகும்என்று. 


    ஏன்றேன் அடிமை*  இழிந்தேன் பிறப்பு இடும்பை* 
    ஆன்றேன் அமரர்க்கு அமராமை*  ஆன்றேன்

    கடன்நாடும் மண்நாடும்*  கைவிட்டு*  மேலை 
    இடம்நாடு காண இனி.  (2)


    இனி அறிந்தேன்*  ஈசற்கும் நான்முகற்கும் தெய்வம்* 
    இனி அறிந்தேன்*  எம்பெருமான் உன்னை*  இனி அறிந்தேன்*

    காரணன்நீ கற்றவைநீ*  கற்பவைநீ*  நல்கிரிசை
    நாரணன்நீ*  நன்கு அறிந்தேன் நான்.  (2)