பிரபந்த தனியன்கள்

முந்துற்ற நெஞ்சே. முயற்றி தரித்துரைத்து
வந்தித்து வாயார வாழ்த்தியே,-சந்த
முருகூரும் சோலசூழ் மொய்பூம் பொருநல்
குருகூரன் மாறன் பேர் கூறு.

   பாசுரங்கள்


  பிறப்பு இறப்பு மூப்புப்*  பிணிதுறந்து,*  பின்னும்- 
  இறக்கவும் இன்புஉடைத்தா மேலும்,*-மறப்புஎல்லாம்-

  ஏதமே*  என்றுஅல்லால் எண்ணுவனே,*  மண்அளந்தான்- 
  பாதமே ஏத்தாப் பகல்? 


  பகல்இரா என்பதுவும்*  பாவியாது,*  எம்மை- 
  இகல்செய்து இருபொழுதும் ஆள்வர்,*-தகவாத்-

  தொழும்பர் இவர்  சீர்க்கும்*  துணைஇலர் என்றுஓரார்,* 
  செழும்பரவை மேயார் தெரிந்து.


  தெரிந்துணர்வு ஒன்றுஇன்மையால்*  தீவினையேன்,*  வாளா- 
  இருந்தொழிந்தேன்*  கீழ்நாள்கள் எல்லாம்,*-கரந்துருவின்-

  அம்மானை*  அந்நான்று பின்தொடர்ந்த*  ஆழிஅங்கை- 
  அம்மானை ஏத்தாது அயர்த்து.


  அயர்ப்பாய் அயராப்பாய்*  நெஞ்சமே! சொன்னேன்* 
  உயப்போம் நெறிஇதுவே கண்டாய்,*-செயற்பால-

  அல்லவே செய்கிறுதி*  நெஞ்சமே! அஞ்சினேன்* 
  மல்லர்நாள் வவ்வினனை வாழ்த்து.


  வாழ்த்தி அவன்அடியைப்*  பூப்புனைந்து,*  நின்தலையைத்- 
  தாழ்த்து*  இருகை கூப்புஎன்றால் கூப்பாத பாழ்த்தவிதி*

  எங்குஉற்றாய் என்றுஅவனை*  ஏத்தாதுஎன் நெஞ்சமே,* 
  தங்கத்தான்ஆ மேலும் தங்கு.


  தங்கா முயற்றியஆய்*  தாழ்விசும்பின் மீதுபாய்ந்து,* 
  எங்கே புக்கு எத்தவம் செய்திட்டன கொல்,*-பொங்குஓதத்-

  தண்அம்பால்*  வேலைவாய்க் கண்வளரும்,*  என்னுடைய- 
  கண்ணன்பால் நல்நிறம்கொள் கார்?  


  கார்கலந்த மேனியான்*  கைகலந்த ஆழியான்,* 
  பார்கலந்த வல்வயிற்றான் பாம்புஅணையான்,*-சீர்கலந்த-

  சொல்நினைந்து போக்காரேல்*  சூழ்வினையின் ஆழ்துயரை,* 
  என்நினைந்து போக்குவர் இப்போது?   (2) 


  இப்போதும் இன்னும்*  இனிச்சிறிது நின்றாலும்* 
  எப்போதும் ஈதேசொல் என்நெஞ்சே*-எப்போதும்-

  கைகழலா நேமியான்*  நம்மேல் வினைகடிவான்* 
  மொய்கழலே ஏத்த முயல் (2)