பிரபந்த தனியன்கள்

கருவிருத் தக்குழி நீத்தபின் காமக் கடுங்குழிவீழ்ந்து,
ஒருவிருத் தம்புக் குழலுறு வீர்.உயி ரின்பொருள்கட்கு,
ஒருவிருத் தம்புகு தாமல் குருகையர் கோனுரைத்த,
திருவிருத் தத்தோ ரடிகற் றிரீர்திரு நாட்டகத்தே.

   பாசுரங்கள்


  தலைப்பெய்து யான் உன்*  திருவடி சூடும் தகைமையினால் ,*
  நிலைப்பு எய்த ஆக்கைக்கு நோற்ற இம் மாயமும்,*  மாயம் செவ்வே-

  நிலைப்பு எய்திலாத நிலைமையும் காண்தோறு அசுரர் குழாம்*
  தொலைப் பெய்த நேமி எந்தாய்,*  தொல்லை ஊழி சுருங்கலதே. 


  சுருங்கு உறி வெண்ணெய்*  தொடு உண்ட கள்வனை,*  வையம் முற்றும்
  ஒருங்குற உண்ட*  பெரு வயிற்றாளனை,*  மாவலிமாட்டு-

  இருங் குறள் ஆகி இசைய ஓர் மூவடி வேண்டிச் சென்ற*
  பெருங் கிறியானை அல்லால்,*  அடியேன் நெஞ்சம் பேணலதே.


  பேண் நலம் இல்லா அரக்கர்*  முந்நீர பெரும் பதிவாய்,*
  நீள் நகர் நீள் எரி வைத்தருளாய் என்று,*  நின்னை விண்ணோர்- 

  தாள் நிலம் தோய்ந்து தொழுவர் நின் மூர்த்தி பல் கூற்றில் ஒன்று*
  காணலும் ஆம்கொல் என்றே,*  வைகல் மாலையும் காலையுமே.


  காலை வெய்யோற்கு முன் ஓட்டுக்கொடுத்த*  கங்குல் குறும்பர்*
  மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர்,*  அன்ன கண்டும்- 
   

  காலை நல் ஞானத் துறை படிந்து ஆடி கண் போது செய்து* 
  மாலை நல் நாவில் கொள்ளார்,*  நினையார் அவன் மைப் படியே.


  மைப் படி மேனியும்*  செந்தாமரைக் கண்ணும் வைதிகரே,*
  மெய்ப்படியால் உன் திருவடி சூடும் தகைமையினார்,* 

  எப்படி ஊர் ஆ மிலைக்கக் குருட்டு ஆ மிலைக்கும் என்னும்*
  அப்படி யானும் சொன்னேன்*  அடியேன் மற்று யாது என்பனே.? 


  யாதானும் ஓர் ஆக்கையில் புக்கு,*  அங்கு ஆப்புண்டும் ஆப்பு அவிழ்ந்தும்* 
  மூது ஆவியில் தடுமாறும்*  உயிர் முன்னமே,*  அதனால்- 

  யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல் வீடுசெய்யும்*
  மாதாவினை பிதுவை,*  திருமாலை வணங்குவனே. (2)


  வணங்கும் துறைகள்*  பல பல ஆக்கி,*  மதி விகற்பால்-
  பிணங்கும் சமயம் பல பல ஆக்கி,*  அவை அவைதோறு-

  அணங்கும் பல பல ஆக்கி நின் மூர்த்தி பரப்பி வைத்தாய்* 
  இணங்கும் நின்னோரை இல்லாய்,*  நின்கண் வேட்கை எழுவிப்பனே


  எழுவதும் மீண்டே*  படுவதும் பட்டு,*  எனை ஊழிகள் போய்க்-
  கழிவதும் கண்டு கண்டு எள்கல் அல்லால்,*  இமையோர்கள் குழாம்-

  தொழுவதும் சூழ்வதும் செய் தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு* 
  கழிவது ஓர் காதல் உற்றார்க்கும்,*  உண்டோ கண்கள் துஞ்சுதலே? 


  துஞ்சா முனிவரும்*  அல்லாதவரும் தொடர நின்ற,*
  எஞ்சாப் பிறவி இடர் கடிவான்,*  இமையோர் தமக்கும்- 

  தன் சார்வு இலாத தனிப் பெரு மூர்த்தி தன் மாயம் செவ்வே*
  நெஞ்சால் நினைப்பு அரிதால்,*  வெண்ணெய் ஊண் என்னும் ஈனச் சொல்லே.


  ஈனச் சொல் ஆயினும் ஆக,*  எறி திரை வையம் முற்றும்*
  ஏனத்து உருவாய் இடந்த பிரான்,*  இருங் கற்பகம் சேர்-

  வானத்தவர்க்கும் அல்லாதவர்க்கும் மற்று எல்லா எவர்க்கும*
  ஞானப் பிரானை அல்லால் இல்லை*  நான் கண்ட நல்லதுவே (2) 


  நல்லார் நவில் குருகூர் நகரான்,*  திருமால் திருப் பேர்-
  வல்லார்*  அடிக் கண்ணி சூடிய*  மாறன் விண்ணப்பம் செய்த-

  சொல் ஆர் தொடையல் இந் நூறும் வல்லார் அழுந்தார் பிறப்பு ஆம்*
  பொல்லா அருவினை*  மாய வன் சேற்று அள்ளல் பொய்ந் நிலத்தே. (2)