ஆழ்வார் அறிமுகம்


தமிழில் வேதங்கள் அல்லது ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்..!

ஆழ்வார்கள் ஏன் தோன்றினார்கள்? தமிழ் மறை என்னும் திராவிட வேதம் எப்படி வெளிப்பட்டது? 

இதற்கு ஒரு வரவு சொல்லி, காரணமும் சொல்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அவருடைய குருபரம்பரா பிரபாவம் என்னும் நூலில். ஸ்ரீவைஷ்ணவத்தில் ஆழ்வார்கள் தொடங்கி வழிவழியாக வந்த குருக்களின் பெருமை என்பது நூலின் தலைப்பின் பொருள். அவருடைய படிப்படியான விவரிப்பின் நியாயத்தைப் புரிந்து கொள்வோம். 

பரமபதம் என்னும் கேடில்லாத உலகம் இருக்கிறது. அது திருமாலின் உலகம் ஆகும். உலகங்கள் தோன்றி, இருந்து, ஒடுங்கினாலும் திருமால் என்றும் நித்தியமாகத் தமது பரமபத்தில் வீற்றிருக்கிறார். 'தத் விஷ்ணோ: பரமம் பதம்' - அதுவே விஷ்ணுவின் பரமமான பதம் - என்று வேதங்கள் குறிப்பிடும் இடம் அதுவாகும். வைகுந்தம் என்பதும் அதுவேயாம். அந்த பரமபதத்தில் செம்பொன் செய் கோவிலில், திருமாமணி மண்டபத்தில், திவ்ய ஆஸ்தாந மண்டபத்தில் வீற்றிருக்கிறான். அவனுக்கு நித்யமாக இருக்கும் அந்த உலகமாகிய நித்ய விபூதியையும், தோற்றம், மாற்றம், ஒடுக்கம் என்று தோன்றி மறையும் இந்த உலகமாகிய லீலா விபூதியையும் அவை அவை தம் தம் தத்துவங்களில் தொடர்ந்து இயங்கும்படியாக ஆள்வதுதான் தொழில். 

கோப்புடைய சீரிய சிங்காதனத்தில் அமர்ந்து ஆளும் அவனுக்கு எல்லையற்ற சோதி உருவம், என்றும் ஒருபடிப் பட்டிருக்கும் மாறாத உருவம், சின்மயமான உருவம், சின்மயமான வடிவத்தில் விளங்கும் ஆபரணங்களும், ஆயுதங்களும் ஆகியவற்றைத் தரித்தவன். அளவிறந்த அழகும், நறுமணமும், உருவப் பொலிவும், மேனி எழிலும், இளநலமும் அளவிறந்து மிகும்படியாக இருப்பவன். அவனுடைய தீமையே கலவாத நற்குணங்களோ முடிவற்றவை. அவனுடைய மேனியோ தெய்வத் தன்மையும், மங்களமும் பூரணமாக நிறைந்து விளங்குவது. 

இந்த வடிவழகையெல்லாம் என்றென்றைக்கும் போற்றிக் காதலிக்கும் தேவிமார் மூவர், ஸ்ரீ, பூமி, நீளா என்று. இவ்வாறு வைகுந்த விண்ணகரில் தெய்விகமான பேரின்பம் நிறைந்து விளங்க வீற்றிருப்பவனை அணுகி அனைத்து தொண்டுகளையும், பணிவிடைகளையும் செய்த வண்ணம் அவனைத் தங்களுடைய மங்காத ஞானத்தாலும், குன்றாது பெருகும் பக்தியாலும் அவன் திருவடியில் கைங்கரியம் செய்யும் அந்தரங்கர் வைனதேயன் என்னும் கருடாழ்வான் போன்று பலர் உண்டு. நித்ய விபூதி, லீலா விபூதி என்னும் இரண்டு உலகங்களையும் ஆள்பவனை ஏற்றித் தொழுது அவனால் நியமிக்கப்பட்டு அவனடி தொழுது நிற்கும் தேவர்கள் வரிசையில் நிற்ப, பெரும் பீடுடையவனாய் வீற்றிருப்பான். 

அவனை அண்டிப் புகல் அடைந்து எக்காலமும் ஒழிவில்லாமல் மிக உயர்ந்த பேரின்பத்தை அனுபவிக்கும் அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் போன்ற நித்யசூரிகளையும், ஸம்ஸாரத்தினின்றும் விடுபட்டுப் பிறவி ஒழித்து முக்தர்களாக ஆகிவிட்ட முத்தர்களையும், என்றும் அழிவிலா ஆனந்தம் தந்து மகிழ்ச்சியூட்டிக் கொண்டிருப்பவன் அவன். 

இப்படி ஆனந்த மயமான உலகம், ஆனந்த மயமான இருப்பு, ஆனந்த மயமான தொடர்ச்சி முடிவு என்பதே இல்லாமல் இயன்ற நிலையில் இருப்பவனுக்கு அங்கு அவ்வளவும் இருந்தும் அவன் உள்ளத்தில் மண்டி எழும் துயரம் ததும்ப, அவன் திருமுக மண்டலத்தில் அந்தத் துயரத்திற்கான வாட்டம் நிலவ, அங்கு உண்டான அவ்வளவு பேரின்பங்களும் ஒன்றும் அவனைச் சேரவில்லையோ என்னும்படி அவற்றில் பொருந்தாதவனாய் அவன் மிகவும் கவலையுடன் சிந்தித்திருப்பது ஒரு விஷயம். அங்கு அத்தனை அன்பர்கள் புடை சூழ இருந்தும் யாருமே அற்ற தனியன் போன்று அவன் அவ்வளவு வாட்டத்துடன் இருப்பதற்குக் காரணமான விஷயம் என்ன? 

இத்தகைய உயர்ந்த ஆனந்தமயமான உலகத்தில், பரம்பொருளாகிய தனக்கு முற்றிலும் பயன்கருதா கைங்கரியம் ஆகிய ஈடுஇணையில்லாத ஆனந்தமயமான உயர்ந்த பேற்றினை, நித்ய முக்தர்கள், முக்தர்கள் இவர்கள் ஒப்ப, இவர்களோடு சேர்ந்து பெறுவதற்கு அனைத்து உரிமையும் உள்ளவர்களாய் இருந்தும் கர்மங்களில் கட்டுண்ட ஜீவர்கள் அந்தோ இழக்கின்றார்களே என்று அவன் துயரம் அடைகிறான். 

பத்த (baddha) ஜீவர்களோ, அதாவது கட்டுண்ட ஜீவர்களோ கர்மங்கள் கழிந்தால்தான் தங்களுக்கு உரித்தான அந்த உயர்ந்த நற்பேற்றைப் பெற முடியும். அவர்கள் கர்ம பந்தங்களினின்றும் விடுபட வேண்டுமெனில் ஜீவர்களுக்கு கரணம், களேபரம், உலகில் பிறப்பு முதலியன தந்து, தங்கள் கர்மத் தொகுதியைக் கழித்துக் கொள்வதற்கு வாய்ப்பு நல்க வேண்டும். மிகுந்த கருணையினால் அத்தகைய வாய்ப்பை சர்வேச்வரன் தந்தான். அசித்தோடு சூக்ஷுமமாகச் சிறிதும் வேறுபாடு தோன்றாமல் கலசிக் கிடந்த ஜீவர்களுக்கு கரணம் ஆகிய இந்திரியங்கள், களேபரம் ஆகிய சரீரங்கள், போகங்கள் அனுபவிக்க, கர்மங்கள் புரியத் தகுந்த சூழ்நிலைகளாகப் பிறப்புகள், அதற்கேற்ற உலகம் எல்லாவற்றையும் சிருஷ்டி செய்தான். அவன் சிருஷ்டி செய்த நோக்கமாவது கரண களேபரங்களைக் கொண்டு ஜீவர்கள் தம் கர்மங்களைப் போக்கி, பரம்பொருளாகிய தன்னுடைய திருவடிகளைத் தொழுவார்கள் என்ற நோக்கத்தில் இவற்றைச் செய்தான். 

ஆனால் ஜீவர்களோ தங்களுக்குக் கொடுக்கபட்ட வாய்ப்பைத் தவறாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். புல்லை அறுக்கக் கொடுத்த புல்வெட்டியால் பசுமாட்டின் வாலை அறுப்பதைப் போல், களையெடுக்கக் கொடுத்த கருவியினால் களையை எடுக்காதே கண்ணைக் கெடுத்துக் கொள்வாரைப் போன்றும், ஆற்று வெள்ளத்தைக் கடக்கக் கொடுக்கப் பட்ட புணையைக் கொண்டு ஆற்றைக் கடந்து பிழைக்காமல், ஆற்று வழியிலேயே சென்று கடலில் கலந்து உயிரைப் போக்கிக் கொள்வாரைப் போன்றும் ஜீவர்கள் பகவானை அடைவதற்காக அவன் தந்த ஆக்கை, இந்திரியங்கள் ஆகியவற்றைக் கொண்டு உலக விஷயங்களில் ஈடுபடுதல், உலக இன்பங்களில் தங்களைப் போக்கிக் கொள்ளுதல், பொருள் பற்றில் அவனை மறந்து விடுதல் என்று தங்களுக்குத் தாங்களே கேட்டினைச் சூழ்ந்து கொண்டனர். 

பகவானும் மிகவும் மனம் வருந்தி, ஜீவர்களுக்கு நல்வழி எது தீவழி எது என்று பிரித்து அறிந்து கொள்ள வசதியாக வேதங்கள் முதலிய சாத்திரங்களைத் தந்தால், அதனால் வழிதவறாமல் தன்னிடம் வந்து சேருவார்கள் என்று நம்பி சாத்திரங்களை ரிஷிகள் மூலமாக வெளியிட்டான். ஆனால் ஜீவர்கள் அப்பொழுதும் சாத்திரங்களை அறிந்து நல்வழி அல்வழி என்று அறிந்து தன்னிடம் வராமல் மேலும் மேலும் தங்களுக்கு நாசத்தைச் சூழ்த்து கொள்வார்களாய், தாங்களே எதற்கும் அடிமைப்படாதவர்கள், கடவுள் என்றெல்லாம் எதுவும் இல்லை என்று தங்களது ஆத்மாவுக்குத் தாங்களே உரிமையாளர்கள் என்ற எண்ணத்தைக் கைக்கொண்டு அதனால் பகவானின் உடைமையான தங்கள் ஆத்மாவைக் களவு காணும் குற்றமாகிய ஆத்ம அபஹாரம் என்பதைச் செய்தவர்களாய் விபரீதமாகப் போனார்கள். 

பார்த்தான் பகவான். சரீரம், பிறப்பு ஆகியவை தந்தாலும் வழிதவறிப் போனார்கள். நல்வழி அறிவதற்காக சாத்திரம் ஆகிய உதவியைச் செய்தால், அதன்வழியே போகாது, தம்வழியே போய்க் கெடுகிறார்கள். சரி. நாடு காக்கும் அரசர்கள் எல்லைப் புறங்களில் உள்ள மக்கள் சமுதாயம் கீழ்ப்படியாது எதிர்த்துப் போனால் முதலில் தமது ஆணைகள் அடங்கிய ஓலையை அனுப்புவார்கள். அதற்கும் அமைதி விளையவில்லையென்றால் தாமே நேரே சென்று அடக்கி வருவதற்காகச் செல்வார்கள். அது போன்று பகவானும் தான் வெளியிட்ட சாத்திரங்களை மக்கள் ஏற்று அவற்றின் வழி ஒழுகவில்லை என்றதும் தானே நேரில் அவதரித்து ஜீவர்களைத் தன்னை நோக்கித் திருப்பப் பார்த்தான். 

அப்படியும் ஜீவர்கள், தங்களைப் போன்றே பிறந்து வளர்ந்த கடவுளின் அவதாரங்களைப் பார்த்து தம்மைப் போலவே கேவலம் அவர்களும் ஜீவர்கள்தான் என்று நினைத்து, அதனால் அவர்களின் உபதேசங்களைப் புறக்கணித்து, அவர்களோடு எதிர்த்து எதிரம்பு கோக்கவும் செய்தார்கள். 

பகவான் இதைக்கண்டு சரி இது நம்மால் ஆகும் காரியமில்லை என்று யோசித்து, மிருகங்களைப் பிடிப்பவர்கள் அந்த மிருகங்கள் ஈர்ப்புண்ணும் அதையொத்த மிருகங்களைக் கட்டி வைத்து அதன் மூலம் காட்டு மிருகங்களைப் பிடிப்பதைப் போன்று, இவர்களையொத்த ஜீவர்களைக் காட்டித்தான் இந்த ஜீவர்களை ஈர்த்து நம் வழிக்குக் கொண்டு வர வேண்டும் என்று முடிவு செய்து தன்னிடம் சின்மயமாய் இருக்கும் ஸ்ரீவத்ஸம், கௌஸ்துபம், வனமாலை, ஸ்ரீ, பூமி, நீளா, அநந்தன், கருடன், விஷ்வக்ஸேனர் ஆகியோரைப் பார்த்து, 'நீங்கள் திராவிட தேசத்தில் சென்று நதிக்கரைகளின் ஓரமாகப் பிறவி எடுத்து மக்களுக்குத் தமிழ் மொழியில் உபதேசங்களைச் செய்யுங்கள்' என்று அனுப்பினான். அவர்கள்தாம் காவிரி, தாமிரபர்ணி முதலிய நதிக்கரைகளில் ஆழ்வார்களாய் அவதரித்தார்கள். பகவானும் அவர்களின் மூலமாகத் தமிழ் மொழியில் வேதங்களாகத் திவ்ய ப்ரபந்தங்களை வெளியிட்டான். 

இவ்வாறு ஆழ்வார்கள் தோன்றினார்கள். இவ்வண்ணம் தமிழ் மொழியில் நான்மறைகளும், வேதாங்கங்களுமாக திவ்ய ப்ரபந்தங்கள் வெளிப்பட்டன. நம்மாழ்வாரின் நான்கு நூல்கள் திருவிருத்தம், திருவாசிரியம், பெரிய திருவந்தாதி, திருவாய்மொழி என்பன முறையே ரிக் வேதம், யஜுர் வேதம், அதர்வ வேதம், சாம வேதம் என்ற நான்மறைகளின் தமிழ் வெளிப்பாடுகளாய்த் தோன்றின. திருமங்கை மன்னனின் ஆறு பிரபந்தங்களும் மற்றைய ஆழ்வார்களின் திவ்ய ப்ரபந்தங்கள் துணை நூல்களாகவும் தோன்றின. ஆண்டாள் அருளிய திவ்ய பிரபந்தங்கள் திராவிட வேதங்களுக்கு ஆன்ற உபநிஷதங்களின் வெளிப்பாடாய்த் தமிழில் தோன்றின. 

இவ்வண்ணம் பின்பழகிய பெருமாள் ஜீயரின் நூலான குருபரம்பரா பிரபாவம் என்னும் குருபரம்பரையின் பெருமைகளைக் கூறும் நூலில் பிரவேசம் என்னும் நுழைவாயிலில் ஜீயர் எழுதியுள்ளதை என்னால் இயன்ற மட்டும் தூய தமிழில் மாற்றித் தந்தேன். தாம் கூறும் ஒவ்வொரு கருத்திற்கும் சான்றுகளாக வடமொழி வேதங்களிலிருந்தும், தமிழ் மொழி வேதங்களிலிருந்தும், ஆசாரியர்களின் வடமொழிச் செய்யுட்களினின்றும், வைணவ ஆகமங்களிலிருந்தும் பல மேற்கோள்களைத் தந்திருக்கிறார் பின்பழகிய பெருமாள் ஜீயர். அதுவும் மணிப்பவள நடையில் அவர்களால் அனைத்தையும் அந்தந்த வாக்கியங்களின் ஊடேயே பெய்து சொல்லிவிட முடிகிறது. அவற்றை அப்படியே தமிழாக்கினால் படிப்பதற்கு மிகவும் கவனச் சிதறலாக இருக்குமோ என்ற ஐயத்தால் அந்தச் சான்றுகளை மட்டும் விடுத்து, ஜீயரின் கருத்துகளை மட்டும் தூய தமிழாக்கினேன். படிப்பவர்கள் முனியாமல் பொறுத்தருள வேண்டும். 

ஆழ்வார்கள் அவதார தினங்கள்

ஆழ்வார்கள் அவதார தினங்கள் அட்டவணை.

எண்

ஆழ்வார்

மாதம்

நக்ஷத்திரம்

1

பொய்கை ஆழ்வார்

ஐப்பசி

திருவோணம்

2

பூதத்தாழ்வார்

ஐப்பசி

அவிட்டம்

3

பேயாழ்வார்

ஐப்பசி

சதயம்

4

திருமழிசை ஆழ்வார்

தை

மகம்

5

நம்மாழ்வார்

வைகாசி

விசாகம்

6

மதுரகவி ஆழ்வார்

சித்திரை

சித்திரை

7

பெரியாழ்வார்

ஆனி

சுவாதி

8

ஆண்டாள்

ஆடி

பூரம்

9

குலசேகர ஆழ்வார்

மாசி

புணர்பூசம்

10

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

மார்கழி

கேட்டை

11

திருப்பாணாழ்வார்

கார்த்திகை

ரோகிணி

12

திருமங்கை ஆழ்வார்

கார்த்திகை

கார்த்திகை

 

ஆழ்வார்கள் அவதரித்த மாதம், நக்ஷத்திரம், இடம் மற்றும் அவர்கள் அருளிச்செய்துள்ள திவ்யப்பிரபந்தங்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை.

 

 

ஆழ்வார் திருநாமம் (பெயர்)

 

அவதரித்த (பிறந்த)மாதம், நட்சத்திரம், ஊர்

 

அருளிச்செய்த பிரபந்தத்தின் பெயர் மற்றும்பாடல்களின் எண்ணிக்கை

 

பொய்கை ஆழ்வார்

 

ஐப்பசி - திருவோணம் -திருக்கச்சி (காஞ்சிபுரம்)

முதல் திருவந்தாதி (100 பாடல்கள்)

 

பூதத்தாழ்வார்   

 

ஐப்பசி - அவிட்டம் –திருக்கடல் மல்லை (மாமல்லபுரம்)

இரண்டாம்  திருவந்தாதி (100)

 

பேயாழ்வார்   

 

ஐப்பசி – சதயம் -திருமயிலை (மைலாப்பூர்)

மூன்றாம் திருவந்தாதி  (100)

 

திருமழிசை ஆழ்வார்

 

தை - மகம் - திருமழிசை

நான்முகன் திருவந்தாதி (96) &திருச்சந்தவிருத்தம் (120)

நம்மாழ்வார்  

 

வைகாசி - விசாகம்  -திருக்குருகூர்

திருவிருத்தம்  (100),       

திருவாசிரியம் (7),            

பெரிய திருவந்தாதி (87) &

திருவாய்மொழி (1102)

குலசேகர  ஆழ்வார்  

)

மாசி - புனர்பூசம் -திருவஞ்சிக்களம் (கேரளமாநிலம்

பெருமாள் திருமொழி (105)

பெரியாழ்வார்

 

ஆனி - சுவாதி -ஸ்ரீவில்லிபுத்தூர்

திருப்பல்லாண்டு (12)  &

பெரியாழ்வார் திருமொழி (461)   

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

 

மார்கழி – கேட்டை -திருமண்டங்குடி

திருமாலை (45) &

திருப்பள்ளியெழுச்சி (10)

 

திருப்பாணாழ்வார் 

 

கார்த்திகை – ரோகிணி -திரு உறையூர்

அமலனாதிபிரான் (10)

 

திருமங்கை ஆழ்வார்

 

கார்த்திகை - கார்த்திகை (கிருத்திகை) -திருக்குறையலூர்

பெரிய திருமொழி  (1084) திருக்குறுந்தாண்டகம் (20),திருநெடுந்தாண்டகம் (30),                   

திருவெழுக்கூற்றிருகை  (1),      

சிறிய திருமடல் (1),             

பெரிய திருமடல் (1).

ஸ்ரீ ஆண்டாள்

 

ஆடி - பூரம் -ஸ்ரீவில்லிபுத்தூர்

திருப்பாவை (30) &             

நாச்சியார் திருமொழி (143)

மதுரகவி  ஆழ்வார்

 

சித்திரை - சித்திரை -திருக்கோளூர்

கண்ணிநுண் சிறுத்தாம்பு (11)

 

ஆழ்வார்கள் அவதார ஸ்தலங்கள் அட்டவணை.

எண்

ஆழ்வார்

அம்சம்

அவதார ஸ்தலம்

1

பொய்கை ஆழ்வார்

பாஞ்சசன்னியம் (சங்கு)

பொற்றாமரைக் குளம், திருவெஃகா

2

பூதத்தாழ்வார்

கௌமோதகம் (கதை)

திருக்கடல்மல்லை,(மகாபலிபுரம்)

3

பேயாழ்வார்

நாந்தகம்(வாள்)

ஆதிகேசவபெருமாள்கோயில், மயிலாப்பூர்

4

திருமழிசை ஆழ்வார்

ஆழி (சக்கரத்தாழ்வார்)

திருமழிசை

5

நம்மாழ்வார்

சேனை முதலியார்

திருக்குருகூர்

6

மதுரகவி ஆழ்வார்

நித்யஸூரி குமுதர்

திருக்கோளூர்

7

பெரியாழ்வார்

கருடாழ்வார்

ஸ்ரீ வில்லிபுத்தூர்

8

ஆண்டாள்

பூமாதேவி

ஸ்ரீ வில்லிபுத்தூர்

9

குலசேகர ஆழ்வார்

கௌஸ்துபம்

திருவஞ்சிக்களம்

10

தொண்டரடிப்பொடி ஆழ்வார்

வைஜயந்தி (வனமாலை)

திருமண்டங்குடி

11

திருப்பாணாழ்வார்

ஸ்ரீவத்ஸம்

உறையூர்

12

திருமங்கை ஆழ்வார்

சார்ங்கம் (வில்)

திருக்குறையலூர் (திருவாலி)