இராமானுஜர் 1000 - நிகழ்வுகள்


இராமானுஜர் பங்கேற்ற அரங்க நிகழ்வுகள் - வரலாறா? கற்பனையா? - எஸ். இராமச்சந்திரன்

விசிஷ்டாத்வைதத் தத்துவத்தை நிறுவிய இராமானுஜர், வைணவ சமயத்தில் பன்னிரு
ஆழ்வார்களையடுத்து மிக உயர்ந்த இடத்தை வகிக்கிறார். வேதம் தமிழ் செய்த
சடகோபரான நம்மாழ்வாருக்கு இணையாக இவரைக் கருதுவதுண்டு. கி.பி. 12ஆம்
நூற்றாண்டில் இவர் திருவரங்கத்திலுள்ள திருமால் கோயிலை நிர்வகித்து
வந்தபோது சைவ சமய வெறியனான, குலோத்துங்கன் என்ற பெயருடைய சோழ அரசன்
இவரைத் துன்புறுத்தினான் என்றும், சிதம்பரம் நடராசர் கோயிலிலிருந்த
கோவிந்தராசப் பெருமாளின் மூர்த்தத்தைக் கடலில் எறிந்தான் என்றும்,
இக்கொடுஞ்செயல்களின் விளைவாக இராமானுஜர் மாறுவேடத்தில் மகிஷபுரிப்
(மைசூர்) பகுதியிலுள்ள தொண்டனூர் என்ற ஊருக்குத் தப்பிச்சென்று
பிட்டிதேவன் அல்லது விஷ்ணுவர்த்தனன் எனப்பட்ட ஹொய்சள அரசனின்
அடைக்கலத்தில் 12 ஆண்டுகள் வாழ்ந்தார் என்றும், அவரைத் துன்புறுத்திய
சோழன் கிருமிகண்டம் (தொண்டைப் புற்று) நோயினால் துன்புற்று இறந்தான்
என்றும், அதன் பின்னர் இராமானுஜர் திருவரங்கத்திற்குத் திரும்பினார்
என்றும் வைணவர்கள் நம்புகின்றனர். கருடவாகன பண்டிதர் என்பவரால்
இயற்றப்பட்ட திவ்யசூரி சரிதம், பிள்ளை லோகஞ்சீயரின் ராமானுஜார்ய திவ்ய
சரிதம், யதிராஜ வைபவம், குருபரம்பரா பிரபாவம், திருவரங்கம் கோயில்
வரலாற்றைக் கூறும் கோயிலொழுகு முதலிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ள
செய்திகளே மேற்குறித்த நம்பிக்கைகளுக்கு ஆதாரமாகும்.

இராமானுஜர் சாதி உயர்வு தாழ்வுகளை எதிர்த்தவர் என்பதும் சோழ அரசனின்
பகைமைக்குக் காரணம் என்ற கருத்து உண்டு. இராமானுஜரின் முதன்மையான சீடரான
கூரத்தாழ்வான் பிராம்மணரல்லாதவர் என்பதையும் இவருடைய மனைவியான கூரத்து
ஆண்டாளம்மையார் பிராம்மணப் பெண்மணி என்பதையும் இராமானுஜரின் சமரச
நோக்கிற்கு எடுத்துக்காட்டாகச் சொல்வதுண்டு. 1 இராமானுஜரின் சீர்திருத்த
நடவடிக்கைகள் பற்றிய பல செவிவழிச் செய்திகள் மக்களிடையே உலவுகின்றன.
வருணக் கலப்பில் தோன்றிய சவர்ண பிராம்மணர்களை - குறிப்பாக மருத்துவம்,
இசை போன்ற தொழில்களைப் பின்பற்றியவர்களை - முழுமையான உயர் பிரிவு
பிராம்மணர்களாக மாற்றியவர் இராமானுஜர் என்ற நம்பிக்கை தென்திருப்பேரை
வைணவ பிராம்மணர்களிடையே நிலவுகிறது.

இராமானுஜருக்கும் சோழ அரசனுக்குமிடையே நிலவிய பகைமை குறித்து ஆராய
வேண்டும் என்ற ஆவல் ஏற்படுவதற்கு, அண்மையில் நிகழ்ந்த இரு நிகழ்வுகளே
காரணமாக அமைந்தன. அவற்றுள் முதல் நிகழ்வு, பரவலாகப் பேசப்பட்ட,
'தசாவதாரம்' திரைப்படத்தில் இடம் பெற்ற, சிதம்பரம் கோவிந்தராசப் பெருமாள்
சிற்பம் கடலில் எறியப்பட்டது தொடர்பான கலையுலகச் சித்திரிப்பு ஆகும்.
அடுத்த நிகழ்வு, ஆய்வுலகு தொடர்பானது. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின்
முன்னாள் இயக்குநர் முனைவர் இரா. நாகசாமி அவர்களால் எழுதப்பட்டுள்ள
Ramanuja - Myth and Reality என்ற நூலில், (பதிப்பு: Tamil Arts Academy,
Chennai - 90, 2008)

"இராமானுஜர் மிகச் சிறந்த ஒரு வேதாந்தியே தவிர, ஒரு சீர்திருத்தவாதி
என்பதற்கோ, திருவரங்கம் கோயிலை நிர்வகித்தார் என்பதற்கோ, சோழ அரசனால்
துன்புறுத்தப்பட்டார் என்பதற்கோ எந்த ஆதாரமும் இல்லை. இராமானுஜரை,
ஒடுக்குமுறைக்கு ஆளான ஒரு புரட்சியாளர் என்று சித்திரிப்பதற்காக வலிந்து
மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியே, வைணவர்களால் புனையப்பட்ட
இக்கட்டுக்கதைகள்; சொல்லப்போனால் சோழ அரசர்கள் சமயப் பொறை மிக்கவர்கள்;
பின்னமாகிப்போன தெய்வச் சிலைகளை நீர்நிலையில் இடுவதென்பது
சாஸ்திரபூர்வமான ஒரு நடவடிக்கையே. இரண்டாம் குலோத்துங்கன் சிதம்பரம்
நடராசர் கோயிலிலிருந்த கோவிந்தராசப் பெருமாளின் சிதைந்து போன
சுதையுருவத்தைக் கடலில் இட்ட செயலை ஒட்டக்கூத்தர் தம்முடைய மூவர்
உலாவிலும் தக்கயாகப்பரணியிலும் சற்று மிகைப்படுத்திக் கூறிவிட்டார்;
அவ்வளவுதான்."

- என்று தீர்மானமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராமானுஜர்க்கும் சோழ அரசனுக்குமிடையில் நிலவிய பகைமை என்பது வெறும்
கற்பனையா என்பதை இக்கட்டுரையில் ஆராய முயன்றுள்ளேன்.

இராமானுஜர் பற்றி வைணவர்கள் நம்புகிற செய்திகளுள் சில மிகைபடப்
புனையப்பட்டவையே. மேலும் இராமானுரின் வரலாறு குறித்த வைணவர்களின்
காலக்கணக்கீடு ஏற்கத்தக்கதாக இல்லை. எடுத்துக்காட்டாக இராமானுஜர்
கலியுலகம் 4118, சகம் 939, பிங்கல ஆண்டு பிறந்தார் என்றும் கலி. 4238,
சகம் 1059 ஆம் ஆண்டில் இறந்தார் என்றும் வைணவர்களால் தொடர்ந்து
எழுதப்பட்டு வருவது, பல வரலாற்று நிகழ்வுகளோடு பொருந்தி வரவில்லை.
இராமானுஜர் 120 வயது வரை வாழ்ந்தார் என்பது ஏற்கத்தக்கதே. அப்படியானால்,
கலியுகம் 4178, சகம் 999, பிங்கல ஆண்டு (கி.பி. 1077) பிறந்து, கலி யுகம்
4298, சகம் 1119 (கி.பி. 1197) இறந்தார் என்று கொள்வதுதான் பொருத்தமாக
உள்ளது. அதனை இக்கட்டுரையில் விரிவாக விவாதிக்கவுள்ளோம்.

ஆனால், வைணவ நூல்களில் காணப்படும் காலக் குளறுபடிகளை மட்டுமே
அடிப்படையாகக் கொண்டு இராமானுஜர் ஒரு மாமனிதர் அல்லர் என்று தீர்ப்பு
வழங்குவது சரியான ஆய்வாகாது.

1957-ஆம் ஆண்டில் தி.நா. சுப்பிரமணியம் என்ற ஆய்வாளர் “தென்னிந்தியக்
கோயில் சாசனங்கள்” என்ற தமது நூலின் 3ஆம் பாகம் 2ஆம் பகுதியில் (பதிப்பு:
அரசினர் கீழ்த்திசைச் சுவடிகள் நூலகம், சென்னை) “ஸ்ரீ இராமானுஜர்
காலத்தைப் பற்றிய ஒரு குறிப்பு” என்ற தலைப்பில் இது குறித்து விரிவாக
ஆராய்ந்து நான்கு முடிபுகளை அறிவித்துள்ளார்.

(1) இராமானுஜர் காலத்திலே ஆட்சி புரிந்து வைணவர்களுக்கு விரோதமான
மதத்துவேஷத்தால் அவரைத் துன்புறுத்திய சோழ மன்னன் இரண்டாம் குலோத்துங்கன்
ஆவான்.

(2) சோழ நாட்டைத் துறந்து இராமானுஜர் ஹொய்சள தேசம் சென்றது கி.பி.
1138-ஆம் ஆண்டு ஆகும்.

(3) பன்னிரண்டு வருஷங்கள் கழித்துத் தம்மைத் துன்புறுத்திய சோழ மன்னன்
இறந்து விட்டான் எனக் கேட்ட பிறகு அவர் சோழநாடு திரும்பியது கி.பி.
1150-ஆம் ஆண்டு ஆகும்.

(4) மைசூரிலிருந்து ஸ்ரீரங்கம் திரும்பிய பின் அவர் ஸ்ரீபாஷ்யத்தைப்
பூர்த்தி செய்தது சகாப்தம் 1077 அதாவது கி.பி. 1155-56-ஆம் ஆண்டு ஆகும்.

மேற்குறித்த முடிபுகளுள் 2, 3, 4ஆம் முடிபுகள் முற்றிலும்
ஏற்கத்தக்கவையாகும். முதல் முடிபில் இடம் பெற்றுள்ள “வைஷ்ணவர்களுக்கு
விரோதமான மதத் துவேஷத்தால்” என்ற பகுதி விரிவாக விவாதிக்கப்பட
வேண்டியதாகும். அதனை, உரிய தரவுகளின் அடிப்படையில் விவாதித்தால்
இராமனுஜருக்கும் இரண்டாம் குலோத்துங்கனுக்குமிடையே நிலவிய பகைமையின்
காரணம் புரியவரும். இராமானுஜர் வெறும் வேதாந்தியா, சமூகத்தில் ஆழமான
தாக்கத்தை ஏற்படுத்திய முன்னோடி மனிதரா என்பதும் புரியவரும்.

காட்சி 1

நாடகம் ஒன்றின் காட்சிகள் போல் விரியும் சரித்திர நிகழ்வுகள், இராமானுஜர்
பிறப்பதற்கு 7 ஆண்டுகள் முன்னர், கி.பி. 1070இல் தொடங்குகின்றன. தந்தை
வழியில் வேங்கிச் சாளுக்கியனும் தாய் வழியில் சோழனுமான விஷ்ணுவர்த்தன
ராஜேந்திரன் வசம் சோழ அரசு சென்றடைகிறது. வரலாற்று ஆசிரியர்களால் முதற்
குலோத்துங்க சோழன் எனக் குறிப்பிடப்படும் சோழ அரசன் இவனே. மரபுக்கு
முரணாகச் சோழ அரச பட்டத்தைக் கைப்பற்றிய முதற் குலோத்துங்கன், தனது
பதவியைக் காத்துக் கொள்வதற்குப் பலவித உத்திகளைக் கையாண்டான். அரசகுலப்
படைகளல்லாத - குடி படைகள் எனத்தக்க - சமூகத்தவர் பலரின் நிலையையும்
அதிகாரத்தையும் உயர்த்தியது அத்தகைய உத்திகளுள் ஒன்று. இது தென்னிந்தியச்
சமூக அமைப்பில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்திற்று.2

கி.பி. 1080ஆம் ஆண்டில் பாண்டி நாட்டை ஆண்டுவந்த சோழ அரச குலத்தைச்
சேர்ந்த விக்கிரம சோழ பாண்டியன் இறந்ததையடுத்து, முதற் குலோத்துங்க
சோழன், வேளாளர் குலத்தைச் சேர்ந்த நரலோக வீரன் என்ற தளபதியின் தலைமையில்
படைகளை அனுப்பிப் பாண்டிநாட்டைக் கைப்பற்றினான் 3 பாண்டிநாடும்
குலோத்துங்கனின் ஆட்சியின் கீழ் கொணரப்பட்டுவிட்ட நிலையில் இந்நிலையில்
சேர நாட்டின் எல்லைப் பகுதிகளில் நிலைப் படைகளை நிறுத்தி, மூவேந்தர்களின்
நாடுகளுக்கும் ஏகசக்ராதிபதி என்பதைப் பறைசாற்றும் வண்ணம் திரிபுவனச்
சக்கரவர்த்தி என்றும் பட்டம் புனைந்து தென்னிந்திய அரசர்களுள்
முதன்மையானவனாகக் குலோந்துங்கனே விளங்கத் தொடங்கினான். கி.பி. 1085-86ஆம்
ஆண்டில் உள்நாட்டில் வணிக நடவடிக்கைகளுக்குப் பெரும் ஊக்கமளிக்கம்
விதமாகச் சுங்கவரியை நீக்கி ஆணையிட்டான். 4 இதன் காரணமாக வணிகர் -
வேளாளார் சமூகங்களைச் சேர்ந்தவர்கள் குலோத்துங்க சோழனின் ஆட்சிக்கு
அரண்களாக மாறினர்.

சற்றொப்பக் கி.பி. 1080 அளவில் வணிகர் வேளாளர் கூட்டணியினர்க்கும்
வெகுஜனங்களுக்கும் பிரதிநிதிகளாக உருவாகிவந்த, பெண்வழிச் சமூகக்
கூறுகளைக் கொண்ட ஹொய்சளச் சிற்றரச வம்சத்தைச் சேர்ந்த பெண்மணியைக்
குலோத்துங்கன் மணம் புரிந்தான்.5 இவள் சீராமன், அருமொழி நங்கை என்ற
இயற்பெயரும், ஏழிசை வல்லபி ஏழுலகுடையாள் என்ற பட்டப் பெயருமுடையவளாகக்
கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பெண்மணியாகலாம்.

இரண்டாம் இராஜேந்திர சோழனின் (கி.பி. 1051-1063) மகளான மதுராந்தகியே
குலோத்துங்க சோழனின் பட்டத்தரசியாக இருந்தாள். குலோத்துங்கனுக்கு
அவளிடத்துப் பிறந்த பராந்தகன் சோழ அரசனாவதற்கு எதிர்பார்ப்புகளுடன்
வளர்ந்து வந்தான். அந்நிலையில் மதுராந்தகி மரணமடைந்ததால் ஹொய்சள குல
மனைவியின் செல்வாக்கு அதிகரித்தது. குலோத்துங்கனுக்குத் தன்னிடம் பிறந்த
விக்கிரம சோழன் அரசியலில் செல்வாக்குப் பெற வேண்டுமென்பது அந்த ஹொய்சள
குலப் பெண்ணின் ஆசையாக இருந்தது. கி.பி. 1093ஆம் ஆண்டில் விக்கிரமனை
வேங்கிப் பகுதியின் ஆளுநராகக் குலோத்துங்கன் நியமித்தான். 6 அப்போது
விக்கிரமனுக்குப் பன்னிரண்டு வயதிருக்கலாம். விக்கிரமன் வேங்கியில்
ஆளுநராக இருக்கும்போது, மூன்று ஆண்டுகள் கடந்தபின்னர் கி.பி. 1096இல்
வேளாளர் குலத்தைச் சேர்ந்த கருணாகரத் தொண்டைமான் தலைமையில் சோழர் படைகள்
வேங்கிக்கு வடக்கேயுள்ள ஸ்ரீகாகுளம் பகுதியாகிய தென்கலிங்கத்தைத்
தாக்கின. இப்போரினைச் சிறப்பித்துப் பாடிய இலக்கியமே கலிங்கத்துப்
பரணியாகும். இப்போரில் கருணாகரத் தொண்டைமானுடன் இணைந்து விக்கிரமனும்
பங்கேற்றான் எனத் தெரிகிறது. 7

தனது மூத்த மகன் பராந்தகனைக் குலோத்துங்கன் கி.பி. 1110ஆம் ஆண்டில்
பட்டம் சூட்டிச் சோழ நாட்டு இளவரசனாக்கினான். இவனை வரலாற்றாசிரியர்கள்
மூன்றாம் பராந்தக சோழன் என்பர். (முதற் குலோத்துங்கன் இதற்குப் பிறகும்
15 ஆண்டுகள் உயிரோடு பதவியிலிருந்தான்.) வேங்கிப் பகுதியில் ஆளுநராக
இருந்தாலும் சோழ அரியணை மேல் கண்வைத்திருந்த விக்கிரமன் மூன்றாம்
பராந்தகனுக்கு எதிராகவும் மேலைச் சாளுக்கிய அரசன் ஆறாம்
விக்கிரமாதித்தனின் மேலாதிக்கத்தை ஏற்று - ஆனால் சுயாட்சி அமைப்பதற்கு
உரிய நேரத்தை எதிர்பார்த்து -மைசூர்ப் பகுதியில் ஆட்சிபுரிந்து வந்த
ஹொய்சளர்களுக்கு ஆதரவாகவும் செயல்படத் தொடங்கினான். கி.பி. 1110 இல்
பேளூர் கங்கவாடிப் பகுதிகளை ஹொய்சள அரசன் முதல் வல்லாளனின் தம்பியான
பிட்டிதேவன் என்கிற விஷ்ணுவர்த்தனன், கங்கர்களிடமிருந்து கைப்பற்றினான்.
கி.பி.1116ஆம் ஆண்டில் தகடூர் (தர்மபுரி) அதியமான்கள் வசமிருந்து கொங்கு
மண்டலத்தைச் சாளுக்கியர் உதவியுடன் பிட்டி தேவன் கைப்பற்றினான்.
கங்கர்களும் அதியமான்களும் முதற்குலோத்துங்க சோழனின் (அதாவது சோழ இளவரசன்
மூன்றாம் பராந்தக சோழனின்) மேலாதிக்கத்தை ஏற்றிருந்தவர்கள் என்பது
குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வுகளில் தன் மற்றொரு மகனான, வேங்கி மண்டலத்திலிருந்த
விக்கிரமனின் பங்களிப்பும் இருப்பதையுணர்ந்த முதற்குலோத்துங்கன், கி.பி.
1118ஆம் ஆண்டில் விக்கிரமனை வேங்கி நாட்டிலிருந்து வரவழைத்துச் சோழ
இளவரசனாக முடி சூட்டி, மூன்றாம் பராந்தகனை வேங்கி ஆளுநராக
அனுப்பிவைத்தான். ஆனால் விக்கிரம சோழன், மூன்றாம் பராந்தகனுக்கு அந்தச்
சிறிய சலுகை காட்டப்படுவதைக்கூட விரும்பவில்லை. கி.பி. 1119ஆம் ஆண்டில்,
மேலைச் சாளுக்கிய அரசன் மூன்றாம் விக்கிரமாதித்தன் உதவியுடன் விக்கிரம
சோழன் வேங்கியின் மீது தாக்குதல் தொடுத்தான். இத்தாக்குதலின் விளைவாக
மூன்றாம் பராந்தகன் மரணமடைந்தான் எனக் கருதப்படுகிறது.8 (இதன்பின்னர்,
பராந்தகன் உயிருடன் இருந்ததாகத் தெரியவில்லை.)

இக்கால கட்டத்திலெல்லாம் தன் தாய் வழி உறவுகளை விக்கிரமன் சரியாகப்
பராமரித்து வந்தான். கோலார் - பெங்களூர்ப் பகுதியிலுள்ள சுகட்டூரில்
கி.பி. 1119-20ஆம் ஆண்டைச் சேர்ந்த விக்கிரம சோழன் கல்வெட்டு
கண்டறியப்பட்டுள்ளது. இதன்பிறகு ஹொய்சளர்களுக்கும் விக்கிரம
சோழனுக்குமிடையே நிலவிய நல்லுறவு சீரான நிலையில் தொடர்ந்துள்ளது. 1126ஆம்
ஆண்டில் மேலைச் சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தன் இறந்த பிறகு
ஹொய்சளர்கள் முழுமையாகச் சுயாட்சியடைகின்றனர்.

சரியாக இதே கால அளவில் இராமானுஜர் திருவரங்கத்தில் வைணவ சமய
குருபீடத்தில் அமர்ந்துவிட்டார் எனத் தெரிகிறது.9 வைணவ சமய நூல்கள்
குறிப்பிடுகிற செய்திப்படி, திருவரங்கத்திலிருந்த ஆச்சாரியர் ஆளவந்தார்
இராமானுஜரைத் தமது வாரிசாக அறிவிக்கும் நோக்குடன்
திருபெரும்பூதூரிலிருந்து அவரை அழைத்து வரச் செய்தார் என்றும்,
இராமானுஜர் திருவரங்கம் வந்துசேரும் முன்னரே ஆளவந்தார் இறந்துவிட்டார்
என்றும் தெரியவருகின்றன. இது உத்தேசமாகக் கி.பி. 1100இல்
நடந்திருக்கலாம். இராமானுஜர் தமிழக வைணவ சமயத்தின் தலைமைத் தலமாகிய
திருவரங்கத்தில் ஒரு முதன்மையான வைணவ மடாதிபதியாக அமர்கிற அளவுக்குப்
புகழ் பெற்று விட்டார் என நாம் புரிந்துகொள்ளலாம். (வைணவ
மடாதிபதியாவதற்குத் துறவு பூணவேண்டிய கட்டாயம் இல்லை.) இதன் பின்னர்
இராமானுஜர் காஞ்சிபுரத்துக்குத் திரும்பி வந்து, மதுராந்தகம் ஏரிகாத்த
ராமர் கோயிலில் மகிழ மரத்தடியில் பெரியநம்பியை ஆசாரியராக ஏற்று அவரிடம்
பஞ்சநமஸ்காரம் பெற்றார் என்றும், பின்னர் துறவு பூண்டார் என்றும்
நம்பப்படுகின்றன. இதன்பின்னர் திருக்கோஷ்டியூர் நம்பியிடம் மந்திரோபதேசம்
(திருமந்திரமும், சரமசுலோகமும் முமூக்ஷுப்படியும்)10 பெற்று
அம்மந்திரங்களை உலகறிய வெளியில் சொன்னால் தமக்கு நரகமும் கேட்கும்
மக்களனைவருக்கும் உய்வும் கிட்டும் என்று எச்சரிக்கப்பட்ட பின்னரும் உலக
மக்களுக்கு அவற்றை வெளிப்படுத்திப் பெரிய நம்பியால் 'எம்பெருமானார்'
என்று அழைக்கப்பட்டார் என்றும், திருவரங்கத்தைத் தலைமையிடமாகக் கொண்டு
செயல்படத் தொடங்கினார் என்றும் சில செய்திகள் வைணவ சமய நூல்களில் பதிவு
பெற்றுள்ளன.

இந்நிகழ்வுகளுக்கெல்லாம் தமிழகத்தில் கல்வெட்டு ஆதாரம் ஏதும் கிட்டவில்லை
என்பது உண்மையே. ஆனால், இதே காலகட்டத்தில் ஹொய்சள நாட்டில்
விஷ்ணுவர்த்தனன் (பிட்டிதேவன்) இராமானுஜரைத் தனது குருவாக ஏற்றுச்
செயல்படத் தொடங்கியிருந்தான் என்பதற்கு மைசூர் ஸ்ரீரங்கப்பட்டினம்
பகுதியிலுள்ள தொண்ணூரில் (தொண்டனூர்) பொறிக்கப்பட்டுள்ள தமிழ்க்
கல்வெட்டுகள் ஆதாரமாக உள்ளன. தொண்டனூரான யாதவ நாராயணச் சதுர்வேதி
மங்கலத்தைத் தலைமையிடமாகக் கொண்டு ஹொய்சள விஷ்ணுவர்த்தனன்
ஆண்டுகொண்டிருக்கையில் மகாபிரதானி சுரிகேய நாகைய ஹெக்டேயால் கி.பி.
1120ஆம் ஆண்டில் அவ்வூரில் லக்ஷ்மி நாராயணப் பெருமாள் கோயில்
கட்டுவிக்கப்பட்டது என ஒரு தமிழ்க் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவ்வூரில்
இராமானுஜர் பெயரில் ஒரு மடம் இருந்தது. அம்மடத்துக்கு விஷ்ணுவர்த்தனன்
ஆட்சிக் காலத்தில் நிலம் வழங்கப்பட்டது என்ற செய்திகள் ஒரு கல்வெட்டில்
குறிப்பிடப்படுகின்றன. திருவரங்கதாசர் என்பவரின் பெயரும் இக்கோயிலிற்
பொறிக்கப்பட்டுள்ள விஷ்ணுவர்த்தனனின் மற்றொரு தமிழ்க் கல்வெட்டில்
குறிப்பிடப்படுகிறது. திருவரங்கதாசர் என்ற பெயரே இவருடைய தமிழ் வைணவப்
பின்னணியைத் தெளிவாக அடையாளம் காட்டிவிடுகிறது. இவர், சன்னபட்ணம்
வட்டத்திலுள்ள கிருஷ்ணாபுரம் சிவன் கோயிலிற் பொறிக்கப்பட்டுள்ள ஒரு
கல்வெட்டில் இளையாழ்வானின் (இராமானுஜரின்) அடியாராகக்
குறிப்பிட்டுக்கொள்கிறார்.11 எனவே, சோழநாட்டு வைணவத் தலமான
திருவரங்கத்துடனும் இராமானுஜரின் சமய - தத்துவ மரபுடனும் ஹொய்சளர்களுக்கு
கி.பி. 1120 அளவிலேயே நெருக்கமான உறவு ஏற்பட்டுவிட்டதெனத் தெரிகிறது.
பேளூர் சென்னகேசவ விஜயநாராயணர் கோயிலில், இராமானுஜரும் விஷ்ணுவர்த்தனனும்
குருவும் சீடனுமாகச் சித்திரிக்கப்பட்டுள்ள சிற்பக் காட்சி
இடம்பெற்றுள்ளது இது தொடர்பாகக் குறிப்பிடத்தக்கதாகும்.

காட்சி 2

முதற்குலோத்துங்கனின் மகன் விக்கிரமசோழன் கி.பி. 1118ஆம் ஆண்டிலிருந்து
சோழ நாட்டின் அரசனாகச் செயல்படத் தொடங்குகிறான். (இதன் பின்னர் 7
ஆண்டுகள் முதற்குலோத்துங்கன் உயிருடன் இருந்துள்ளான்) இராமானுஜர்
இக்காலகட்டத்தில் 40 வயதைக் கடந்த நிலையில் ஒரு துறவியாகத்
திருவரங்கத்தில் இருந்துள்ளார். விக்கிரம சோழன், இராமானுஜரிடம் மிகுந்த
மரியாதை வைத்திருந்தான் என்றும், அகளங்க நாட்டு ஆழ்வார் 12 என்றே
வைணவர்களால் சிறப்பிக்கப்படும் அளவுக்குத் திருவரங்கம் கோயிலுக்குத்
திருப்பணிகள் செய்தான் என்றும் வைணவர்கள் நம்புகின்றனர். ஆழ்வார் என்பது
ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர் என்பதைக் குறிக்கும் 'ஆள்வார்' என்ற
பட்டத்தின் திரிபே ஆயினும், வைணவர்களைப் பொருத்தவரை தங்களால் மிக
உயர்வாகப் போற்றப்படுவோர்க்கே இப்பட்டத்தைச் சூட்டியுள்ளனர். மேலும்,
விக்கிரம சோழனின் திருவரங்கத் திருப்பணிகள் கோயில் எழுப்புதல் தொடர்பான
செயல்பாடுகள் மட்டுமல்ல. இக்கால அளவில்தான் காடவர் (வன்யர்)13, அகம்படிய
மறவர் ஆகிய போர்க்குடியினரின் பங்கேற்பால் வைணவ சமயம் மக்கள் சமயமாக
உருவெடுக்கிறது. சோழர் அரசியலிலும் சமூக அரங்கிலும் இப்போர்க்குடிகளின்
ஆதிக்கம் வளரத் தொடங்குகிறது. வைணவ நூல்கள், விக்கிரம சோழனின்
மெய்க்காப்பாளனாகத் திகழ்ந்த திருவெள்ளறையைச் சேர்ந்த பொன்னன் என்ற
(அகம்பாடிய) மறவன், இராமானுஜரின் சீடனாகிப் பிள்ளை உறங்காவில்லிதாசன்
என்ற தாஸ்ய நாமம் பெற்று, இராமானுஜரின் உயர்குலச் சீடர்களாகிய
கூரத்தாழ்வான், முதலியாண்டான் ஆகியோரைவிட உயர்வாக மதிக்கப்பட்ட வரலாற்றை
விரிவாகவே பதிவு செய்துள்ளன.

பிள்ளை உறங்காவில்லிதாசன் மூலமாகவே விக்கிரம சோழன் இராமானுஜரின் பெருமையை
உணர்ந்தான் என்றும், அதன் பின்னர் விக்கிரமன் இராமானுஜரின் சீடனாகவே
நடந்து கொண்டான் என்றும் வைணவர்கள் நம்புகின்றனர். இது இராமானுஜரைச்
சிறப்பிப்பதற்காக வைணவர்களால் மிகைப்படுத்தப்பட்ட ஒரு செய்தியென்றோ,
கற்பனையென்றோ கருதுவது சரியாகாது. விக்கிரம சோழனால் திருவரங்கத்தில்
அகளங்கநாடன் திருமதில் (ஐந்தாவது திருச்சுற்று மதில்), திருவிக்கிரமன்
திருவீதி (தற்போதைய கீழை உத்தரவீதி) ஆகியன உருவாக்கப்பட்டன எனக்
கோவிலொழுகு குறிப்பிடுகிறது.14 விக்கிரம சோழனின் கல்வெட்டுகள் மொத்தம்
எட்டு, திருவரங்கக் கோயிலில் கண்டறியப்பட்டுள்ளன.15

இந்த இடத்தில் திருவரங்கத்துக்கும் சோழர்களுக்கும் இடையில் நிலவிய
சிறப்பான தொடர்பு குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
சைவர்களின் வழக்கில் கோவில் என்றாலே தில்லையைக் குறிப்பதுபோல,
வைணவர்களின் வழக்கில் கோயில் என்பது திருவரங்கத்தைத்தான் குறிக்கும்.
தில்லை, சோழர்களின் முடிசூடும் தலமாகத் திகழ்ந்தது போலத் திருவரங்கமும்
சோழர்களுக்கு முதன்மையான ஒரு தலமாகவே இருந்தது. சோழர்களின் பூர்விகத்
தலைநகரான உறையூரைத் (திருச்சிராப்பள்ளி) தொட்டடுத்து அமைந்திருப்பதாலும்,
சோழ குல இளவரசி ஒருவரே உறையூர் நாச்சியார் என்ற பெயரில் திருவரங்கத்
திருமாலின் தேவியாக வழிபடப்பட்டு வருவதாலும், இத்தலம் சோழர்களின்
'குலதனமாக'க் கொண்டாடப்பட்டது. சோழ அரசர்களின் பல கல்வெட்டுகளில்
சிதம்பரம் கோயில், சோழர்களின் 'குலநாயகம்' எனக் குறிப்பிடப்படுவது
போன்று, திருவரங்கம் திருமால் கோயில் ”சோழற்குக் குலதனமாய் வருகிற
கோயில்” என்று மூன்றாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டொன்றில்
குறிப்பிடப்பெற்றுள்ளது.16 எனவே, திருவரங்கம் திருமால் சோழ மன்னர்களின்
குலதெய்வம் என்றே கருதுமளவுக்கு அக்கோயில் சோழ அரச குலத்தவருக்கு
நெருக்கமான கோயிலாகத் திகழ்ந்துள்ளது. அத்தகைய தலத்தினை இராமானுஜர்
தலைநகராகக் கொண்டு தமது சமயப் பணிகளை - தலயாத்திரை மேற்கொள்ளும் வைணவ
அடியார்கள் தங்கிச் செல்வதற்குரிய மடப்பள்ளி நிர்வாகம், வைணவ சமய
இலக்கியங்கள், பாசுரங்களைக் கற்பித்தல் போன்றவை - தொடர்ந்திருக்கிறார்
என்பதால் இராமானுஜர் தென்னிந்திய வைணவத் தத்துவ இயலின் குருமார்களுள்
முதன்மையானவராக விக்கிரம சோழனால் அங்கீகரிக்கப்பட்டிருந்தார் என்று
முடிவுக்கு நாம் வருவதில் தவறில்லை. இராமானுஜர், இக்காலகட்டத்தில் பிரம்ம
சூத்ர பாஷ்யம் (உரை) எழுதும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார் எனத்
தெரிகிறது. எனவே இந்திய வேதாந்த மரபின் - விசிஷ்ட அத்வைத மரபின் -
தலைசிறந்த பிரதிநிதியாக இராமானுஜரின் புகழ் பரவத் தொடங்கிற்று.

தென்னிந்தியாவைப் பொருத்தவரை திருவரங்கத் தீவும் வேங்கட மலையும்
வைணவத்தின் தலைமைத் தலங்களாகும். சிலப்பதிகாரக் காலத்திலிருந்தே
இவ்விரண்டு தலங்களும் வைணவர்களின் தீர்த்த யாத்திரையில் தவறாது
இடம்பெறும் தலங்களாக இருந்துவந்துள்ளன. திருவேங்கடத் திருப்பதியிலும்
இராமானுஜரின் செல்வாக்கு எட்டியிருந்து என்பதற்கு ஆதாரம் உண்டு.17 எனவே
திருவரங்கத்தைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டுவந்த இராமானுஜர்
இக்காலகட்டத்திலேயே வைணவ தரிசன மரபின் பிதாமகனாகக் கருதப்பட்டிருப்பின்
அதில் வியப்படைவதற்கு ஒன்றுமில்லை. முழுமையான அரச ஆதரவினால்தான் இது
சாத்தியமாயிருக்க வேண்டும் என்பதிலும் ஐயத்திற்கிடமில்லை.18

விஷ்ணு வர்த்தனனுக்கும் விக்கிரம சோழனுக்குமிடையே நல்லுறவு நிலவியதன்
விளைவாகவே, இராமானுஜர்க்கும் விஷ்ணு வர்த்தனனுக்குமிடையே நட்பு
ஏற்பட்டிருக்க வேண்டும். விஷ்ணு வர்த்தனன், ஜைன சமயத்தைச் சார்ந்தவனாக
இருந்தான் என்றும், இராமானுஜரால் வைணவனாக மாற்றப்பட்டான் என்றும் வைணவ
சமய நூல்கள் குறிப்பிடுகின்றன. இது மிகைப்படுத்தப்பட்ட கருத்தெனவே
தோன்றுகிறது.19 ஆயினும், கி.பி. 1120 அளவிலேயே இராமானுஜரின் செல்வாக்கு
வட்டம் ஹொய்சள தேசம் வரை வியாபித்திருந்தது என்பதை நாம் முன்னரே
பரிசீலித்த கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

விக்கிரம சோழனின் ஆட்சியில் மறக்குல அகம்படியர்கள் அதிகார அடுக்கில்
முதன்மையான இடம் பெற்றனர் என்பதற்குச் சான்றுகள் உண்டு.20 காடவர்
(வன்யர்) குலத்தவரும் விக்ரம சோழனின் தாயத்தாராகக் கருதப்பட்டு
வேளக்காரப் படையினராக அங்கீகரிக்கப்பட்டனர். "மீனவனை வெந்கண்ட விக்ரம
சோழன் தாய வேளைக்காரன் நாலாயிரவன் சம்புவரையன்" என்பவன் இவர்களுள்
முதன்மையானவன்.21 இவனுக்கு நாலாயிரவன் கோத்திரப் பெயர் சூட்டப்
பெற்றிருப்பது, நாலாயிர திவ்வியப் பிரபந்தத் தொடர்பிலாகும். ("மீனவனை
வெந்கண்ட" என்பது பாண்டியனைப் புறமுதுகு காட்டி ஓடச்செய்த எனப்
பொருள்படும்.) மறக்குல அகம்படியராகிய வாணாதிராயர்கள் வைணவ மரபின் பெரிய
திருவடி கருடனைத் தங்கள் சின்னமாகவும், சம்புவரையர்கள் சிறிய
திருவடியாகிய அனுமனைத் தங்கள் சின்னமாகவும் கொண்டனர். வாணாதிராயர்கள்
மதுரையையடுத்து அழகர் கோயில் கள்ளழகரைத் தலைமைத் தெய்வமாகக் கருதினர்.
ஜம்புகேசர் என அழைத்துக்கொண்ட சம்புவரையர்கள் செங்கழுநீர் (செங்கேணி)
என்ற பட்டத்தை ஏற்றிருந்தனர். ஜம்புகேசம் என்பது திருவரங்கத்திற்குரிய
பெயராகும்.22

கி.பி. 12ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைணவ சமயத்தைப் பின்பற்றிய
கருணாகரத் தொண்டைமான்23 வாணாதிராயர், சம்புவரையர் போன்றவர்களே சோழர்களின்
படைத் தலைமைப் பொறுப்பினை ஏற்றிருந்துள்ளனர். இது, சோழ அரசே வைணவச்
சார்பான ஓர் அரசோ என்ற மயக்கத்தை ஏற்படுத்துவதோடு, இராமானுஜர் சோழ
அரசகுரு என்ற தகுதியை அடைந்துவிட்டது போன்ற ஒரு தோற்றத்தை
உருவாக்குவதையும் வரலாற்று ஆய்வாளர்கள் உணர முடியும். இக்காலகட்டத்தில்
கி.பி. 1120இல் கலிங்க மன்னன் அனந்தவர்மன் சோடகங்கன், ஒரிஸ்ஸாவிலுள்ள
புரீ ஜகந்நாதர் ஆலயத்தை நிர்மாணித்தான் என்றும், இராமானுஜரால் மடம் ஒன்று
அங்கு நிறுவப்பட்டதென்றும் நம்பப்படுகின்றன. குறுகிய கால அளவில்
கப்பற்பயணம் மேற்கொண்டு சோழ நாட்டிலிருந்து கலிங்கம் சென்றுவருவது என்பது
இயலாத காரியமன்று. எனவே இது சாத்தியமானதே. அவ்வாறு நடந்திருப்பின் அது
கருணாகரத் தொண்டைமானின் முன்முயற்சியால்தான் நடந்திருக்க வேண்டும்.

காட்சி 3

கி.பி. 1133இல் விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கனுக்கு இளவரசப்
பட்டம் கட்டினான். இரண்டாம் குலோத்துங்கன், வீர சைவ நெறியினரான
ஒட்டக்கூத்தரிடம் கல்வி பயின்ற மாணவனாவான். ஒட்டக்கூத்தனின் பாத
தாமரையைத் தன் தலையில் சூடும் குலோத்துங்க சோழன் என்று என்னை மக்கள்
குறிப்பிடுவது வழக்கம் (பாடும் கவிப்பெருமான் ஒட்டக்கூத்தன்
பதாம்புயத்தைச் சூடும் குலோத்துங்க சோழனென்றே யெனைச் சொல்லுவரே) என்று
குலோத்துங்கன் தன்னைப் பற்றிக் குறிப்பிட்டுக் கொண்டதாகப் பிற்கால நூலான
தமிழ் நாவலர் சரிதை (பா. 132) குறிப்பிடுகிறது. எனவே, தன் தந்தையைச்
சீடன் போன்று நடத்தத் துணிந்த, எல்லை தாண்டிச் செல்வாக்குச் செலுத்திய,
சோழ அரசகுரு போன்று செயல்பட்ட, இராமானுஜர் மீது அவன் துவேஷம்
கொண்டிருப்பின் அது எதிர்பார்க்கக்கூடியதே. கவிராக்ஷசர் ஒட்டக்கூத்தரின்
போதனைகளும் இவன் மனதிலிருந்த வெறுப்புத்தீயை விசிறிவிட்டிருக்க
வாய்ப்புண்டு. இராமானுஜரை அவமதிக்க, தக்க தருணத்தை எதிர்பார்த்துக்
குலோத்துங்கன் காத்திருந்தான் எனத் தோன்றுகிறது. தில்லைக் கோயிலை
விரிவுபடுத்திக்கட்டி, அக்கோயிலுக்குப் பொன்னாலான ஓடுகள் வேய்கின்ற
திருப்பணியைக் குலோத்துங்கன் தொடங்கினான். இப்பணி முழுவீச்சில்
நடைபெறுகிற தருணத்தில், கி.பி. 1138ஆம் ஆண்டில் விக்கிரம சோழன்
மரணமடைந்தான். அதே ஆண்டில் இரண்டாம் குலோத்துங்கன் தில்லைக் கோயிலில்
நந்திவர்ம பல்லவன் காலத்திலிருந்தே இருந்து வந்த கோவிந்தராஜப் பெருமாளின்
சிலையினை (அல்லது சுதையுருவத்தினை) அங்கிருந்து நீக்கிக் கடலில்
எறிந்திடச் செய்தான்.24 அதாவது, சோழர்களின் ‘குலநாயகமான' தில்லைக்
கோயிலில் சைவ சமயம் சார்ந்த வழிபாடுகள் மட்டுமே நடைபெறும்வண்ணம்
நடவடிக்கைகளை மேற்கொண்டான். இம்மன்னனுடைய அரசியல் அதிகாரிகளுள்,
தென்னிந்தியச் சைவ சமயத்தின் 'சூதபெளராணிகரா'ன, தொண்டை மண்டல வேளாளர்
சமூகத்தவரான சேக்கிழார் முதன்மையானவர். (சேக்கிழாரின் பெரியபுராணம்,
கி.பி. 1139-40ஆம் ஆண்டுகளில் அரங்கேறிற்றென அறிஞர்கள் கருதுகின்றனர்.)

இப்படியொரு மாறுபட்ட சூழல் உருவாகிவிட்டதன் விளைவாகத் தில்லைக் கோயில்
முழுமையாகச் சோழ அரச குடும்பத்தின் ஆதிக்கத்தின் கீழ்க் கொணரப்பட்டது
போலத் திருவரங்கத்தையும் கொணர்கிற ஒரு முயற்சி தொடங்கிற்று. இராமானுஜர்,
சோழர்களின் அதிகாரபூர்வத் தெய்வமான சிவபிரானின் முதன்மையையும் - அதன்
வழி, சோழ அரசனின் ஆதிக்கத்தையும் ஏற்கச் செய்யவேண்டும் என்ற வகையில்
குலோத்துங்கனால் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது என வைணவ நூல்கள்
தெரிவிக்கின்றன. இதுவே, வைணவ சமயத்துக்கு எதிராகச் சோழ அரசன் மேற்கொண்ட
முதற்செயல் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, கங்கை கொண