திவ்யதேச பாசுரங்கள்

    3589.   
    கொடியார்மாடக்*  கோளூர்அகத்தும் புளியங்குடியும்* 
    மடியாதுஇன்னே*  நீதுயில்மேவி மகிழ்ந்ததுதான்*
    அடியார் அல்லல்தவிர்த்த*  அசைவோ? அன்றேல்*  இப் 
    படிதான் நீண்டுதாவிய*  அசைவோ? பணியாயே.

        விளக்கம்  


    • * ஆலம் பேரிலை அன்னவசஞ் செய்யும்மமானே! * என்று ப்ரளயார்ணவத்திலே தனியே கண்வளர்ந்தருளினவிடத்திற்கு வயிறெரிந்த ஆழ்வாருடைய வயிற்றெரிச்சல், தீர, திருக்கோளூரிலும் திருப்புளிங்குடியிலும் பரிவர் பலர் புடை சூழத் திருக்கண்வளர்ந்தருளாநின்றபடியைக் காட்டிக்கொடுக்க, இக்கிடைகளிலே யீடுபட்டு பேசுகிறார். இப்பாட்டில் திருக்கோளூரையும் திருப்புளிங்குடியையும் பிரஸ்தாவித்தது மற்றுமுள்ள சயனத்திருப்பதிகளுக்கும் உபலக்ஷணம். * நாகத்தணைக் குடந்தை வெஃகாத்திருவெவ்வுள், நாகத் தணையரங்கம் பேரன்பில் * என்று திருமழிசைப்பிரானும், * அரங்கம் மெய்யம் கச்சி பேர்மல்லை * என்று திருமங்கை மன்னனும் தொடுத்தருளின சயனத்திருப்பதிகள் பலவும் இங்கே விலக்ஷிதமாகலாம். இத்திருப்பதிகளிலே ஆடாமல் அசையாமல் நீ திருக்கண்வளர்ந்தள்வதற்கு என்ன காரணம்? மஹத்தான சிரம்மோ? திருவடிகளிலே சரணம் புகுந்த இந்திராதி தேவர்களுக்காக ராவணாதிகளை அழியச்செய்து அவர்களது துக்கங்களைப் போக்கின. விளைப்போ? அன்றியே, அன்றே பிறந்து அன்றே வளர்ந்து. ஸுகுமாரமான திருவடிகளைக் கொண்டு உலகமெல்லாம் தாவியளந்த சிரம்மோ? என்கிறார். இவ்விடத்தில் * நடந்த கால்கள் நொந்தவோ? நடுங்க ஞாலமேனமாய் இடந்த மெய்குலங்கவோ? * இத்தியான திருச்சந்த விருத்தப்பாசுரம் நினைக்கத் தக்கது. கொடியார் மாடம் – மாடங்களுக்கு கொடிகட்டியிருப்பதும் ஆழ்வார்க்கு அச்சத்தை விளைக்கிறதென்று நம்பிள்ளை திருவுள்ளம்பற்றி யருளிச் செய்யுமழகு பாரீர் – “சத்ருக்கள், கிடந்தவிடமறிந்து அபிசரிக்கும்படி கொடிகட்டிக்கொண்டு கிடக்கவேணுமோ? கொடிக்கு பயப்படவல்லார் இவரைப் போலில்லை, கம்ஸபயத்தாலே ஒளித்துவளர்ந்தாப்போலே யிருக்கலாகாதோ?“ என்பன ஈட்டு ஸ்ரீஸூக்திகள். இந்தப்பதிகம் பயம்மிக்கு அருளிச் செய்வதாகாயாலே இங்ஙனே பொருள் பணித்தது இன்சுவை மிக்கதேயாம், “ஆச்ரிதர்க்கு ஆத்மதானம் பண்ணுகைக்குக் கொடிகட்டிக்கொண்டிருக்கிற திருக்கோளூரிலும் என்பது ஆறாயிரப்படியருளிச்செயல். மடியாது – உலகில் உறங்குமவர்கள் சற்று இடது பக்கமாயும் சற்று வலது பக்கமாயும் மாறிமாறியசைந்து கிடப்பதுண்டே, அப்படி ஒருபோதும் அசையாமல் என்றபடி. இதற்கு மற்றொரு பொருளும் அருளிச் செய்யப்படுகிறது. திருப்பதிகளிலே எம்பெருமான் இப்படி திருக்கண்வளர்ந்தருள்வதானது நமக்காகவன்றோ வென்று இந்நிலவுலகத்தவர்கள் வரிந்து ஈடுபட வேண்டுமே, அப்படி ஒருவரம் ஈடுபடக்காணாமையாலே எம்பெருமான் இக்கிடையைவிட்டு எழுந்துபோக வேண்டியதன்றோ ப்ரரப்தம், அப்படியெழுந்து போகாமே, என்றேனுமொருநாள் யாரேனு மொருவர் பரியக்கூடுமென்று கிடக்கிறானாகச் சொல்லுகிறபடி. அசவு –அயர்வு.


    3409.   
    உண்ணும் சோறு பருகும்நீர்*  தின்னும் வெற்றிலையும் எல்லாம் 
    கண்ணன்,*  எம்பெருமான் என்று என்றே*  கண்கள் நீர்மல்கி,* 
    மண்ணினுள் அவன்சீர் வளம் மிக்கவன் ஊர் வினவி,* 
    திண்ணம் என் இளமான் புகும் ஊர்*  திருக்கோளூரே.  

        விளக்கம்  


    • உண்ணுகின்ற சோறும் குடிக்கின்ற தண்ணீரும் தின்னுகின்ற வெற்றிலையும் எல்லாம் கண்ணனாகிய எம்பெருமான் என்று என்றே கண்கள் நீராலே நிறைய, பூமியிலே அவனுடைய கல்யாண குணங்களையும் வளத்தால் மிக்கவனான எம்பெருமானுடைய திவ்விய தேசத்தையும் கேட்டுக் கொண்டு, என்னுடைய இளமான் புகும் ஊர் திருக்கோளூர் என்னும் திவ்விய தேசமேயாகும். இது நிச்சயம்.


    3410.   
    ஊரும் நாடும் உலகமும்*  தன்னைப்போல் அவனுடைய* 
    பேரும் தார்களுமே பிதற்ற*  கற்பு வான் இடறி,* 
    சேரும் நல் வளம்சேர்*  பழனத் திருக்கோளூர்க்கே,* 
    போரும் கொல் உரையீர்*  கொடியேன் கொடி பூவைகளே!    

        விளக்கம்  


    •  ஊரிலுள்ளவர்களும் நாட்டிலுள்ளவர்களும் உலகத்திலுள்ளவர்களும், தன்னைப்போலவே, அவனுடைய திருப்பெயர்களையும் திருமாலைகளையும் பிதற்றும்படியாக, சிறந்த கற்பினையும் காற்கடைக்கொண்டு, நல்ல வளப்பங்கள் சேர்ந்திருக்கின்ற வயல்களையுடைய திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்திற்குச் சென்று சேர்கின்ற, கொடியேனுடைய பூங்கொடி போன்ற என்மகளானவள் மீண்டு வருவாளோ? சொல்லுங்கோள் என்கிறாள்.


    3411.   
    பூவை பைங்கிளிகள்*  பந்து தூதை பூம் புட்டில்கள்,* 
    யாவையும் திருமால்*  திருநாமங்களே கூவி எழும்,*  என் 
    பாவை போய் இனித்*  தண் பழனத் திருக்கோளூர்க்கே,* 
    கோவை வாய் துடிப்ப*  மழைக்கண்ணொடு என் செய்யும்கொலோ?  

        விளக்கம்  


    • பூவையும் பசிய கிளிகளும் பந்தும் தூதையும் அழகிய பூக்கூடையுமாகிய இவை எல்லாவற்றாலும் உண்டாகும் இன்ப முழுதும் திருமால் திருநாமங்களைச் சொல்லுவதனாலே உண்டாகும்படி அவன் திருநாமங்களைச் சொல்லி அதனாலே வாழ்வு பெறுகின்ற என் மகள், குளிர்ந்த வயல்களையுடைய திருக்கோளூர்க்கு இனிச் சென்று, கோவைக்கனி போன்ற வாய் துடிக்கும்படி தண்ணீர் நிறைந்த கண்களோடு நின்று என்ன செய்கிறாளோ? என்கிறாள்.


    3412.   
    கொல்லை என்பர்கொலோ*  குணம் மிக்கனள் என்பர்கொலோ,* 
    சில்லை வாய்ப் பெண்டுகள்*  அயல் சேரி உள்ளாரும் எல்லே,*
    செல்வம் மல்கி அவன்கிடந்த*  திருக்கோளூர்க்கே,* 
    மேல் இடை நுடங்க*  இளமான் செல்ல மேவினளே.    

        விளக்கம்  


    • தோழியே! செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்ய தேசத்திற்கு, என் இளமான் மெல்லிய இடையானது அசையும்படியாகச் செல்லுதற்கு ஒருபட்டடாள்; பலவாறு பேசுகின்ற வாய்களையுடைய பெண்டுகளும் அயல் ஊரிலுள்ள பெண்டுகளும் வரம்பு அழிந்த செயலையுடையள் என்பர்கொலோ? குணத்தாலே மேம்பட்டவள் என்பர்கொலோ?


    3413.   
    மேவி நைந்து நைந்து விளையாடலுறாள்*  என் சிறுத்- 
    தேவிபோய்,*  இனித்தன் திருமால்*  திருக்கோளூரில்,*
    பூ இயல் பொழிலும்*  தடமும் அவன் கோயிலும் கண்டு,* 
    ஆவி உள் குளிர*  எங்ஙனே உகக்கும்கொல் இன்றே?   

        விளக்கம்  


    • என்னுடைய இளமைபொருந்திய பெண்ணானவள், அவனை மனத்தாலே அடைந்து அதனாலே மனமும் சரீரமும் உருகக் குலைந்து விளையாடுதலைச் செய்யாள்; இனிச் சென்று, தனது திருமால் எழுந்தருளியிருக்கின்ற திருக்கோளூர் என்னும் திவ்விய தேசத்தில் இருக்கின்ற பூக்கள் நிறைந்த சோலைகளையும் குளங்களையும் அவனுடைய கோயிலையும் உயிர் குளிரும்படியாகக் கண்டு இன்று எப்படி மகிழ்கின்றாளோ?


    3414.   
    இன்று எனக்கு உதவாது அகன்ற*  இளமான் இனிப்போய்,* 
    தென் திசைத் திலதம் அனைய*  திருக்கோளூர்க்கே 
    சென்று,*  தன் திருமால் திருக்கண்ணும்*  செவ்வாயும் கண்டு,* 
    நின்று நின்று நையும்*  நெடும் கண்கள் பனி மல்கவே.

        விளக்கம்  


    • இன்றையதினத்தில் எனக்கு உதவாமல் நீங்கிய என்மகளானவள், இதற்குமேல் சென்று தென்திசைக்குத் திலதத்தைப் போன்று விளங்குகின்ற திருக்கோளூர் என்னும் திவ்வியதேசத்தை அடைந்து, தன் திருமாலினுடைய திருக்கண்களையும் சிவந்த திருவாயினையும் கண்டு, நீண்ட தனது கண்களில் தண்ணீர் நிறையும்படியாக நின்றுநின்று வருந்தாநிற்பாள்.


    3415.   
    மல்கு நீர்க் கண்ணொடு*  மையல் உற்ற மனத்தினளாய்,* 
    அல்லும் நன் பகலும்*  நெடுமால் என்று அழைத்து இனிப்போய்,* 
    செல்வம் மல்கி அவன் கிடந்த*  திருக்கோளுர்க்கே,* 
    ஒல்கி ஒல்கி நடந்து*  எங்ஙனே புகும்கொல் ஒசிந்தே?

        விளக்கம்  


    • என்னுடைய இளமான், பெருகுகின்ற தண்ணீரையுடைய கண்களோடு மயக்கம் பொருந்திய மனத்தினையுடையவளாகி நல்ல இரவும் நல்ல பகலும் நெடுமால் என்று அழைத்துக்கொண்டு, அதற்குமேல், செல்வம் மிகும்படி அவன் சயனித்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கு, வருந்தித் தளர்ந்து நடந்து சென்று எங்ஙனே புகுவாள் என்க.


    3416.   
    ஒசிந்த நுண் இடைமேல்*  கையை வைத்து நொந்து நொந்து,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  கண்ண நீர் துளும்பச் செல்லும்கொல்,* 
    ஒசிந்த ஒண் மலராள்*  கொழுநன் திருக்கோளூர்க்கே,* 
    கசிந்த நெஞ்சினளாய்*  எம்மை நீத்த எம் காரிகையே?         

        விளக்கம்  


    • (ஒசிந்தநுண்ணிடை) என் மகள்தான் எம்பெருமானை விரும்பிச் செய்றாளோ அவன் பெரியபிராட்டியார்க்கு வல்லபன் என்னுமிடம் இவள் அறியாள்போலும், “அவள் பக்கலிலே வியாமோஹங் கொண்டிருக்குமிவன் நம்மை லக்ஷியம் பண்ணுவனோ?“ என்று இப்பெண்பிள்ளை நினைக்க வேண்டியிருக்க அங்ஙனம் நினையாமல் அப்பெரிய பிராட்டியாருடைய புருஷகாரபலத்தாலே நமக்கொரு குறையிராது என்று நினைத்தோ, அவ்விருவருமான சேர்த்தியழகைச் சேவிப்போமென்று நினைத்தோ திருக்கோளூர்க்கேசெல்லப் புறப்பட்டாள், இவள் அத்தனைதூரம் வழிநடந்துசெல்ல வல்லளோ? எங்ஙனே சென்று சேர்ந்திருப்பவள் என்கிறாள் திருத்தாய். வழி நடக்கும்போது சிறிதும் சிரமமின்றியே நடந்து செல்பவர்கள் கையை வீசிக்கொண்டு போவார்கள், அப்படியல்லாமல் கிராமத்தினால் இளைத்துப் போமவர்கள் இடுப்பின்மீது கையை ஊன்ற வைத்துக்கொண்டு சிரமம் ஸ்புஷ்டமாகத் தெரியுமபடி செல்வர்கள். இஃது உலகிற்காணும் இயற்கையாதலால், தன்மகளுடைய மேனிமெலிவை அநுஸந்தித்த திருத்தாயார் அவள் மிகவும் சிரமத்தோடுதான் செல்ல நேருமென்பதை ஊஹித்து முதலடி கூறுகின்றாள். சிரமத்தை ஸஹித்துக்கொண்டு ஒருபடி நடந்துசென்றாலும், நெஞ்சு ஸ்வாதீனமாய், கண் நிராபாதமாயிருந்த்தாகில் குறையில்லை,நெஞ்சும் கசிந்து கண்ணும் நீர்துளும்ப நிற்குமிவள் எங்ஙனே வழிதெரிந்து போகவல்லள் என்கிறாள் இரண்டாமடியால். இப்பெண்பிள்ளை, தானும் நானுமாக இருந்த சேர்த்தியைத் தவிர்த்து, பெருமாளும் பிராட்டியுமான சேர்த்தியைக் காணவேண்டியெ போலுமேன்கிறாள் பின்னடிகளால் – காரிகை அழகுடைய பெண்.


    3417.   
    காரியம் நல்லனகள்*  அவை காணில் என் கண்ணனுக்கு என்று,* 
    ஈரியாய் இருப்பாள் இது எல்லாம்*  கிடக்க இனிப் போய்,* 
    சேரி பல் பழி தூஉய் இரைப்ப*  திருக்கோளூர்க்கே,* 
    நேரிழை நடந்தாள்*  எம்மை ஒன்றும் நினைந்திலளே.       

        விளக்கம்  


    • என்நேரிழை, சிறந்த பொருள்களைக் கண்டால் என் கண்ணபிரானுக்கு என்று சொல்லிக்கொண்டு அன்புள்ளவளாய் இருப்பாள்; இவை எல்லாம் கிடக்க, சேரியிலுள்ளார் எல்லாரும் பலவகைப்பட்ட பழிகளைத் தூற்றி இரைக்கும்படியாக இனிச்சென்று திருக்கோளூர்க்கே நடந்தாள்; என்னைச் சிறிதும் நினைத்தாள் இல்லை என்கிறாள்.


    3418.   
    நினைக்கிலேன் தெய்வங்காள்*  நெடும் கண் இளமான் இனிப்போய்* 
    அனைத்து உலகும் உடைய*  அரவிந்தலோசனனைத்,* 
    தினைத்தனையும் விடாள்*  அவன் சேர் திருக்கோளூர்க்கே,* 
    மனைக்கு வான் பழியும் நினையாள்*  செல்ல வைத்தனளே.

        விளக்கம்  


    • தெய்வங்களே! என் மகளுடைய தன்மைகளை என்னால் நினைக்க முடியவில்லை; நீண்ட கண்களையுடைய இளமை பொருந்திய மான் போன்றவளான என் மகள் இப்பொழுது சென்று, எல்லா உலகங்களையுமுடைய தாமரைக்கண்ணனாகிய எம்பெருமானைத் தினையளவு சிறிய பொழுதும் விடாதவளாகி, அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூர் என்ற திவ்விய தேசத்திற்கே, குடிக்கு உண்டாகும் பெரிய பழியையும் நினையாதவளாகிச் சொன்றாள் என்க.


    3419.   
    வைத்த மா நிதியாம்*  மதுசூதனையே அலற்றி,* 
    கொத்து அலர் பொழில்சூழ்*  குருகூர்ச் சடகோபன் சொன்ன,* 
    பத்து நூற்றுள் இப்பத்து*  அவன்சேர் திருக்கோளூர்க்கே,* 
    சித்தம் வைத்து உரைப்பார்*  திகழ் பொன் உலகு ஆள்வாரே.    

        விளக்கம்  


    • சேமித்து வைத்த சேமநிதிபோன்ற மதுசூதனையேபற்றி பூங்கொத்துக்கள் மலர்கின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபராலே அலற்றி அருளிச்செய்யப்பட்ட பத்து நூற்றுள் இந்தப் பத்துப் பாசுரங்களையும் அவன் சேர்ந்திருக்கின்ற திருக்கோளூரிலேயே சித்தத்தை வைத்து உரைப்பவர்கள் விளங்குகின்ற பரமபதத்தை ஆள்வார்கள் என்றபடி.