2 எண்ணிக்கை பாடல் பாட

பூநிலாய ஐந்துமாய்*  புனற்கண்நின்ற நான்குமாய்,* 
தீநிலாய மூன்றுமாய்*  சிறந்த கால்இரண்டுமாய்,* 
மீநிலாயது ஒன்றும்ஆகி*  வேறுவேறு தன்மையாய்,* 
நீநிலாய வண்ணம்நின்னை*  யார்நினைக்க வல்லரே?* (2)

தன்னுளே திரைத்துஎழும்*  தரங்க வெண் தடங்கடல்* 
தன்னுளே திரைத்துஎழுந்து*  அடங்குகின்ற தன்மைபோல்,*
நின்னுளே பிறந்துஇறந்து*  நிற்பவும் திரிபவும்,* 
நின்னுளே அடங்குகின்ற*  நீர்மை நின்கண் நின்றதே,* (2)

செழுங்கொழும் பெரும்பனி பொழிந்திட,*  உயர்ந்தவேய்- 
விழுந்துஉலர்ந்துஎழுந்து*  விண்புடைக்கும் வேங்கடத்துள்நின்று*
எழுந்திருந்து தேன்பொருந்து*  பூம்பொழில் தழைக்கொழும்* 
செழுந்தடங் குடந்தையுள்*  கிடந்தமாலும் அல்லையே?  (2)

நடந்தகால்கள் நொந்தவோ*  நடுங்க ஞாலம் ஏனமாய்,* 
இடந்த மெய் குலுங்கவோ?*  இலங்கு மால் வரைச்சுரம்*
கடந்த கால் பரந்த*  காவிரிக் கரைக் குடந்தையுள்,* 
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு*  வாழி கேசனே!  (2)

கரண்ட மாடு பொய்கையுள்*  கரும்பனைப் பெரும்பழம்,* 
புரண்டு வீழ வாளைபாய்*  குறுங்குடி நெடுந்தகாய்,*
திரண்ட தோள் இரணியன்*  சினங்கொள் ஆகம் ஒன்றையும்,* 
இரண்டுகூறு செய்துகந்த*  சிங்கம் என்பது உன்னையே   (2)

இரந்து உரைப்பது உண்டுவாழி*  ஏமநீர் நிறத்துஅமா,* 
வரம் தரும் திருக்குறிப்பில்*  வைத்ததுஆகில் மன்னு சீர்,*
பரந்த சிந்தை ஒன்றி நின்று*  நின்னபாத பங்கயம்,* 
நிரந்தரம் நினைப்பதாக*  நீ நினைக்க வேண்டுமே  (2)

அத்தன்ஆகி அன்னைஆகி*  ஆளும் எம் பிரானுமாய்,* 
ஒத்துஒவ்வாத பல் பிறப்புஒழித்து*  நம்மை ஆட்கொள்வான்,*
முத்தனார் முகுந்தனார்*  புகுந்து நம்முள் மேவினர்,* 
எத்தினால் இடர்க் கடற்கிடத்தி*  ஏழை நெஞ்சமே!  (2)

பொன்னிசூழ் அரங்கம்மேய*  பூவைவண்ண! மாய!கேள்,* 
என்னதுஆவி என்னும்*  வல்வினையினுட் கொழுந்துஎழுந்து,*
உன்னபாதம் என்னநின்ற*  ஒண்சுடர்க் கொழுமலர்,* 
மன்ன வந்து பூண்டு*  வாட்டம்இன்றி எங்கும் நின்றதே.  (2)

இயக்குஅறாத பல்பிறப்பில்*  என்னை மாற்றி இன்று வந்து,* 
உயக்கொள் மேக வண்ணன் நண்ணி*  என்னிலாய தன்னுளே,*
மயக்கினான் தன் மன்னுசோதி*  ஆதலால் என் ஆவிதான்,- 
இயக்குஎலாம் அறுத்து*  அறாத இன்ப வீடு பெற்றதே  (2)