2 எண்ணிக்கை பாடல் பாட

கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்*  கனைஇருள் அகன்றது காலைய‌ம் பொழுதாய்,* 
மதுவிரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்*  வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி,*
எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த*  இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்,* 
அதிர்தலில் அலைகடல் போன்றுளது எங்கும்*  அரங்கத்து அம்மா! பள்ளி எழுந்து அருளாயே.  (2)

ஏதம்இல் தண்ணுமை எக்கம்மத் தளியே*  யாழ்குழல் முழவமோடு இசைதிசை கெழுமி,* 
கீதங்கள் பாடினர் கின்னரர் கெருடர்கள்*  கந்தரு வரவர் கங்குலுள் எல்லாம்,*
மாதவர் வானவர் சாரணர் இயக்கர்*  சித்தரும் மயங்கினர் திருவடி தொழுவான்,* 
ஆதலில் அவர்க்கு நாள்ஓலக்கம் அருள*  அரங்கத்து அம்மா!பள்ளி எழுந்து அருளாயே.  

கடிமலர்க் கமலங்கள் மலர்ந்தன இவையோ?*  கதிரவன் கனைகடல் முளைத்தனன் இவனோ?* 
துடியிடையார் சுரி குழல் பிழிந்துஉதறித்*  துகில்உடுத்து ஏறினர் சூழ்புனல் அரங்கா,*
தொடைஒத்த துளவமும் கூடையும் பொலிந்து*  தோன்றிய தோள் தொண்டர் அடிப்பொடி என்னும்- 
அடியனை,*  அளியன் என்று அருளி உன் அடியார்க்கு-  ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்து அருளாயே!  (2)