விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    இரு கையில் சங்கு-இவை நில்லா எல்லே பாவம்!* இலங்கு ஒலி நீர்ப் பெரும் பௌவம் மண்டி உண்ட* 
    பெரு வயிற்ற கரு முகிலே ஒப்பர் வண்ணம்* பெருந் தவத்தர் அருந் தவத்து முனிவர் சூழ*
    ஒரு கையில் சங்கு ஒரு கை மற்று ஆழி ஏந்தி* உலகு உண்ட பெரு வாயர் இங்கே வந்து* என்- 
    பொரு கயல் கண் நீர் அரும்பப் புலவி தந்து* புனல் அரங்கம் ஊர் என்று போயினாரே!

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

உலகு உண்ட பெரு வாயர் - பிரளயகாலத்தில் உலகங்களை யெல்லாம் அமுதுசெய்த பெரிய திருவாயையுடைய வரும்,;
இங்கே வந்து - இவ்விடத்தே வந்து;
பொரு கயல் - ஒன்றோடொன்று போர்செய்கின்ற கயல் மீன்களைப் போன்ற;
என் கண் - எனது கண்களிலிருந்து;
நீர் அரும்ப - நீர்த்துளிகள் துளிக்கும்படி;

விளக்க உரை

புள்ளூருங்கள்வா! நீ போகேலென்பன் என்றாலுமிது நமக்கோர் புலவிதானே“ என்றாள் கீழ்ப்பாட்டில்; அது கேட்ட தோழியானவள், ‘நங்காய்! பெரிய திருவடி வந்து தூக்கிக்கொண்டு போய்விட்டானென்கிறாயே; அந்தப் பெரிய திருவடிதானும் உனக்கு அடங்கினவனல்லனோ? 1 “ஒருவன் அடிமை கொள்ளும்போது க்ருஹிணிக்கென்றன்றே ஆவணையோலை எழுதுவது; ஆகிலும் பணிசெய்வது க்ருஹிணிக்கிறே“ என்ற நியாத்தாலே கணவனுக்கு அடிமைப் பட்டாரெல்லாரும் மனைவியர்க்கும் அடிமைப்பட்டிருத்தல் முறைமையன்றோ; பகவானுக்கு அடிமைப்பட்டபோதே உனக்கும் அடிமைப்பட்டவனாயன்றோ அக்கருடனிருப்பது; அப்படி விதேயனான அவனை நீ போகேலென்று நியமிக்கக்கூடாதோ?‘ என்று கேட்க; ஆமாம் தோழீ!, அவன் ஒருவனுமேயாகிலன்றோ நியமிக்கலாம்; நித்ய விபூதியிலுள்ளரடங்கலும் வந்து சூழ்ந்துகொண்டார்கள்; அவர் தாமும் முன்புபோலின் றியே இப்போதுண்டான விலக்ஷணமான மேன்மையினாலே எதிர்த்துப் பேசவொண்ணா தபடியாயிருந்தார்; அதனாலே சென்று கிட்டவும் வார்த்தை சொல்லவும் அருமையாயிருந்தது!, என்செய்வேனென்கிறாள். இருகையிற் சங்கு இவை நில்லா = போகிறவர் தாம் மாத்தி்ரம் போகையன்றியே என்கையில் வளைகளையுங் கொண்டுபோனார். அவர் போய்விட்டாலும் அவர் உகந்த வளைகளாவது கையிலிருந்தால் அவற்றைப் பார்த்துக்கொண்டிருந்தாகிலும் ஒருவாறு போதைப் போக்கலாமென்று நினைத்துக் கையில் வளையைப் பார்த்தாள்; வளை அவர்க்கு முன்னே போய் நின்றது. இன்னொரு கையிலாவது வளை தங்கியிருக்கிறதோவென்று பார்த்தாள்; அதுவும் அதுக்கு முன்னே போய் கிடந்தது; அந்தோ! என்செய்வேன்!, இருகையிற் சங்கிவை நில்லா வென்கிறாள். ‘சங்கு நில்லா‘ என்னாமல் ‘சங்கு இவை நில்லா‘ என்றதற்குக் கருத்தென்னன்னில்; அவர் நில்லாதொழிந்தால் இவையும் நில்லாதொழிய வேணுமோ? அவர் சேஷியாகையாலே போகிறார்; எனக்கு சேஷமான இவையும் நில்லாதே போகவேணுமோ? அவர் சேதநராகையாலே என்னிடத்தில் ஏதேனுங் குறைகண்டு போகலாம்; அசேதனமான இவையும் போகவேணுமோ? வந்து கலந்தவராகையாலே போகிறார் அவர்; ஸஹஜமான இவையும் போகவேணுமோ? நம் கைக்கு அடங்காதவராகையாலே அவர் போனார்; நம் கைக்ககு அடங்கின இவையும் போகவேணுமோ? அவர் நிற்கிலும் இவை நிற்கின்றனவில்லையே யென்கிறாள். போகேலென்னச் செய்தேயும் அவர் போனாப்போலே இவையும் பலகால் எடுத்தெடுத்துக் கையிலேயிடச் செய்தேயும் கழலுகின்றமை தோற்றும் நில்லா என்றதில். எல்லே பாவம்! = ஈதென்ன கஷ்டகாலம்!? சேதனப்பொருளோடு அசேதனப் பொருளோடு வாசியற எல்லாம் என்னைக் கைவிடும்படியாக என்ன பாபம் பண்ணினோனோ வென்கிறாள். கைப்பட்டதும் போகும்படியான பாபத்தை யன்றோ பண்ணினே னென்கிறாள். தன்னோடு கலந்து பிரிந்துபோகிறபோது அவருடைய வடிவிற்பிறந்த புதுக்கணிப்பைச் சொல்லுகிறாள் இலங்கொலி நீர்ப் பெரும் பௌவம் மண்டியுண்ட பெருவயிற்ற கருமுகிலேயொப்பர் வண்ணம் என்று. தன்னை வெறுந்தரையாக்கினபடிக்கு ஒரு க்ருஷ்டாந்த மிட்டுச் சொல்லுகிறாள் போலும். இயற்கையான வொளிமிக்க கம்பீரமான மஹாமுத்ரத்தை வெறுந்தரையாகப் பருகி நீர் கொண்டெழுந்த காளமேகம் போலே காண் போகிற போது அவரது வடிவு இருந்தபடி. கீழ்ப்பாட்டில் “என்னொளிவளையும் மாநிறமுங் கொண்டார்“ என்றாளே; இங்கு நின்றுங் கொண்டதெல்லாம் அங்கே குடிகொண்டதாக வேணுமே, அது தோன்றச் சொல்லுகிறபடி. பரகாலநாயகி, தன்னைப் பெருங்கடலாகவும் அவரைக் காளமேகமாகவுங் கருதி இது சொல்லுகிறாளென்க. மேகமானது பெரிய அபிநிவேசத்தோடே வந்து கடலில் ஸாரத்தைக் கவர்ந்து செல்வதுபோல அவரும் இத்தலையில் ளெஸந்தர்ய ஸாகரத்தைக் கவர்ந்து சென்றமை சொன்னபடி. அதுதானும் அவரது வடிவிலே நன்கு தோன்றியிருக்கையாலே ஸ்பஷ்டமாயிற்று. பெருவயிற்ற கருமுகிலே யொப்பர் வண்ண மென்று பெருமாளுடைய இயற்கையான அழகு சொல்லுகிறதன்று; தற்காலத்திலுண்டான அழகைச் சொல்லுகிறாள். ஐயோ! மேகம் முகக்குமிடமாகப் பெற்றேனே. மேகம் முகந்து பெய்யுமிடமாகப் பெற்றிலேனே! என்கிற வருத்தம் ‘மண்டி யுண்ட‘ என்றதில் தொனிக்கும். அன்றியும், இத்தலையிலுள்ள தெல்லாவற்றையும் கொள்ளை கொண்டும் இன்னமும் அவருடைய வயிறு நிரம்பவில்லையே, அவருக்கு த்ருப்தி பிறக்க வில்லையே! என்பது ‘பெருவயிற்ற‘ என்பதில் தொனிக்கும். அவர் பிரிந்துபோகிறபோது வடிவில் புகர் இருந்தபடியும் சுற்றும் புடைசூழ நின்றார் பெருவெள்ளமிருந்தபடியும் மேன்மையிருந்தபடியும் தோழீ! நீ காணப்பெற்றிலையே!, அவற்றை என்சொல்லவல்லே னென்வாய்கொண்டு? (பெருந்தவத்த ரருந்தவத்து முனிவர் சூழ ஒரு கையிற் சங்கொருகை மற்றாழியேந்தி உலகுண்ட பெருவாயர் போயினார்.) ஒருவ ரிருவராய் வந்து கிட்டினார்களோ? கடலில் அமுதந் தோன்றினவன்று அதனை அமரர் சுற்றிலும் சூழ்ந்துகொண்டாப்போலே காண் என்னைப்பிரிந்து போகிறபோது அவரைப் பரிகாரம் வந்து சூழ்ந்துகொண்டது. * வைகுண்ட து பரே லோகே ச்ரியா ஸார்த்தம் ஜகத்பதி;, ஆஸ்தே விஷ்ணுரசிந்த்யாத்மா பக்தைர் பாகவதைஸ் ஸஹ * என்று சொல்லப்பட்ட பக்தர்களும் பாகவதர்களும் வந்து சுற்றிலும் சூழ்ந்துகொண்டார்கள். அந்தப்பெருங் கூட்டத்தை விலக்கிக் கொண்டு நான் கிட்டிச்சென்று அவரைப் போகேலென்று சொல்வது எங்ஙனே? அந்தப் பெருவெள்ளத்தை ஒருபடி நீஞ்சிக்கொண்டு சென்றோமேயாகிலும், “குழுமித் தேவர்குழாங்கள் கைதொழச் சோதி வெள்ளத்தினுள்ளே எழுவதோருரு“ என்னப்பட்ட அவருடைய திருவுரு கண்ணால் முகக்கலாயிருந்ததோ? கையுந் திருவாழியுமாய்நின்ற மேன்மை கிட்டலாம்படியிருந்ததோ? (ஒருகையிற் சங்கு ஒருகை மற்றாழியேந்தி) அவர்தாம் வந்த போதிலே என்கையைப் பிடித்த கையும் என்காலைப் பிடித்த கையும் இப்போது சங்கும் சக்கரமும் பொலிய நின்றனவே!. கலந்தபோது அவர்க்கு இருந்த நீர்மைக்கு எல்லையில்லாதாப்போலே காண் போகிறபோதிருந்த மேன்மைக்கு எல்லை யில்லாதிருந்தபடியும். “வடிவார்சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு, படை போர்புக்கு முழங்கும் அப்பாஞ்ச சன்னியமும் பல்லாண்டே“ என்று நெடுந்தூரத்திலே நின்று அந்த மேன்மைக்குப் பல்லாண்டு பாடும்படியா யிருந்ததத்தனையன்றி அணுகிச் சென்று வாய்திறக்க வழியுண்டாயிருந்ததோ வென்கிறாள். (உலகுண்ட பெருவாய ரிங்கேவந்து) இத்தால் பிரளமாகிற பெரிய ஆபத்துக்கு உதவினவர் என்று சொல்லுகிறதன்று, அவர் தன்னோடு கலக்க வருகிறபோது இருந்த ரீதியைப்பற்றிச் சொல்லுகிறாள். பிரளயகாலத்திலே உலகங்கட்கெல்லாம் தம்மையொழியச் செல்லாமையிருந்தாப்போலே என்னையொழியச் செல்லாதவராயன்றோ அவர் ஸம்ச்லேஷிக்கவந்தபோதில் இருந்தபடி என்கை. பொருகயற்கண் நீரரும்பப் புலவிதந்து = அவர் வந்து கலந்ததனால் நான்பெற்றபேறு இதுகாணென்கிறாள். “கண்ணீர் பெருக“ என்னாமல் ‘அரும்ப‘ என்றதனால் விரஹசோகாக்நியாலே உள்ளூலர்ந்து கிடக்கின்றமை தோன்றும். உள்ளே உலர்ந்து கிடக்கும் போது கண்ணீர்பெருகுவதெங்ஙனே? (புலவி தந்து) தன்னைக் கிட்டினாரை “வீவிலின்பம் மிகவெல்லை நிகழ்ந்தனன்“ என்கிறபடியே ஆனந்தத்தின் எல்லையிலே நிறுத்தவல்லவரான அவர்காண் எனக்கு இப்போது துயரத்தை விளைத்தது. (தந்து) உபயவிபூதிநாதரான அவர் தம் முடைய பணப்பையில் நின்றும் அவிழ்த்துத் தந்த செல்வம் இதுகாணென்கிறாள் போலும். அவர் தமக்கு நெஞ்சில் இரக்கமில்லாமை வந்தேறியானாலும் இயற்கையிலே கருணை யுண்டாகையாலே அதனால் தூண்டப் பெற்று ஒருவார்த்தை சொல்லிப்போனார்காண்; பிரிவில் நான் தரித்திருக்கவேணுமென்று பார்த்து ‘நம்ஊர் திருவரங்கம் பெரியகோயில்‘ என்று அழகும் போனபோதை யழகும் தோழீ! நீ காணப்பெற்றிலையே! என்றாளாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்