விளக்கப்படம்

  • மேலும் பார்க்க
  • பாசுரம்

    கார் வண்ணம் திருமேனி கண்ணும் வாயும்* கைத்தலமும் அடி-இணையும் கமல வண்ணம்*
    பார் வண்ண மட மங்கை பத்தர் பித்தர்* பனி மலர்மேல் பாவைக்கு பாவம் செய்தேன்* 
    ஏர் வண்ண என் பேதை என் சொல் கேளாள்* எம் பெருமான் திருவரங்கம் எங்கே? என்னும்* 
    நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும்* இது அன்றோ நிறை அழிந்தார் நிற்குமாறே?

    காணொளி


  • மேலும் பார்க்க

பதவுரை

பாவம் செய்தேன் என் - பாவியான என்னுடைய;
ஏர் வண்ணம் பேதை-  அழகியவடிவையுடைய பெண்ணானவள்;
என் சொல் கேளாள் - என் வார்த்தையைக் கேட்கிறாளில்லை;
திருமேனி கார்வண்ணம் என்னும் - (எம்பெருமானது) திருமேனி காளமேக நிறத்து என்கிறாள்;
கண்ணும் - (அவனது) திருக்கண்களும்;

விளக்க உரை

பெண்பிள்ளையின் வாய்வெருவுதல்களை வரிசையாகச் சொல்லுகிறாள் திருத்தாய் கீழ்ப்பாட்டில் “நங்காய் நங்குடிக்கிதுவோ நன்மையென்ன நறையூரும் பாடுவாள் நவில்கின்றாளே“ என்று நின்றது. ‘நாம் சொன்ன ஹிதத்தை இவள் கடந்தபடியாலே இனி படியாகவே தோற்றவிருந்து இவளுடைய பாசுரங்களைக் கேட்போம்‘ என்றெண்ணிய திருத்தாயார் ‘நங்காய்! உன் எண்ணங்களைச் சொல்லிக் காணாய்‘ என்று சொல்ல, மகளும் எம்பெருமானுடைய திருமேனியழகை வருணிப்பது, திருமடந்தை மண்மடந்தையர் பக்கலிலே அப்பெருமான் இருக்குமிருப்பைப் பேசுவது, அவனூர் எங்கேயென்று வினவுவது, நானிருங்கேயிருந்து கதறி என்ன பயன்? அவனூருக்கே போய்ச்சேருவேன் என்பது, ஆகவிப்படி நிகழும் மகளது பாசுரங்களைத் தன் உகப்புத் தோன்றத் தான் திருத்தாய். ‘கார்வண்ணந் திருமேனி கண்ணும் வாயுங் கைத்தலமு மடியிணையுங் கமல வண்ணம்‘ என்பதும், ‘பார்வண்ணமடமங்கை பத்தர்‘ என்பதும் ‘பனிமலர்மேல் பாவைக்குப் பித்தர்‘ என்பதும் ‘எம்பெருமான் திருவரங்கமெங்கே‘ என்பதும் ‘நீர்வண்ணன் நீர் மலைக்கே போவேன்‘ என்பதும் மகளுடைய வார்த்தைகளின் அநுவாதங்கள்; மற்றவை தாய்ச்சொல். ‘என்னும்‘ என்கிற வினைமுற்று மகளுடைய ஒவ்வொரு வார்த்தையோடும் அந்வயிக்கத்தக்கது. ‘என்மகள் இப்படிசொல்லுகிறாள், இப்படிசொல்கிறாள்‘ என்று ஒவ்வொரு வாக்கியமாக எடுத்துத் தாய் சொல்லுகிறாளாயிற்று. முந்துற முன்னம் இவள் எம்பெருமானுடைய வடிவழகிலே வாய்வைக்கத் தொடங்கினாளே! என்கிறாள். ‘திருமேனியானது காளமேக நிறத்தது, திருக்கண்களும் திருவாயும் திருக்கைத்தலமும் திருவடியிணையும் செந்தாமரை மலர் நிறத்தன‘ என்று திருமேனியையும் திவ்யாவயவங்களையும் பற்றிப் பேசுகின்றாளாம். அடியிலே எம்பெருமான் இவளுக்குத் தன்வடிவை முற்றூட்டாக அநுபவிக்கக் கொடுக்கையாலே அதுவே வாய்வெருவுதலாயிருக்கின்றாள் காணுமிவள். எம்பெருமான் தானுகந்தார்க்கு ஸர்வஸ்வதானமாகக் கொடுத்தருள்வது தன் திருமேனியையே. பரதாழ்வாள், சிறியதிருவடி, அக்ரூரர் முதலானாரிடத்தே இது காணலாம். “தம் ஸமுத்தாப்ய காகுத்ஸ்த; சிரஸ்யாக்ஷிபதம் கதம் – அங்கே பரதமாரோப்ய முதித; பரிஷஸ்வஜே“ என்று பரதாழ்வான் விஷயத்திலே சொல்லப்பட்டது. (நெடுநாள் கடந்தபின் கண்ணுக்கு இலக்காகித் திருவடிவாரத்தில் வீழ்ந்த பரதாழ்வானை வாரியெடுத்து மடிமீதிருத்தி மகிழ்ந்து சேரத்தழுவினாள் ஸ்ரீராமபிரான் என்பது இதன் பொருள்) “ஏஷ ஸர்வஸ்பூதஸ்து பரிஷ்வங்கோஹநூமத; மயா காலமிமம் ப்ராப்ய தத்தஸ் தஸ்ய மஹாத்மந;“ என்று சிறிய திருவடி விஷயத்திலே சொல்லிற்று. “ஸோப்யேநம் த்வஜ வஜ்ராப்ஜக்ருதசிஹ்நேந பரணிநா, ஸம்ஸப்ருச்யாக்ருஷ்ய ச ப்ரீத்யா ஸுகாடம் பரிஷஸ்வஜே“ என்று அக்ரூரர் விஷயத்திலே சொல்லப்பட்டது. மூவர்க்கும் தன் திருமேனியை அணைக்கக் கொடுப்பதே பெரும்பரிசு. கார்வண்ணந் திருமேனி = தாபத்ரயத்தினால் தகர்ப்புண்டிருப்பார்க்கு நினைத்தமாத்திரத்தில், அதனை ஆற்றக்கடவதும் விரஹதாபத்தாலே வருந்துவார்க்கு அதனைத் தணிக்க வல்லதுமான திருமேனியைப் பேசினபடி. கண்ணும் வாயுங் கைத்தலமுமடியிணையுங் கமலவண்ணம் = மேகத்திலே தாமரைக் காடு மலர்ந்தாற்போலே யாயிற்று அவயவங்களிருக்கிறபடி. பார்வண்ணமடமங்கை பத்தர் = இங்கும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக் கொள்ளவேணும்; மகள் பாசுரத்தைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி. கடலிலே உழன்று காலங்கழிக்குமவர்கள் மூழ்கி மண்ணெடுக்குமாபோலே, கீழ்ச்சொன்ன ஸௌந்தர்யஸாகரத்திலே அவலீலையாக ஆழங்காற்பட்டிருப்பவள் பூமிப்பிராட்டி; அவளிடத்தில் பக்தியுக்தனாயிருப்பன் எம்பெருமான் என்கிறது. பூமிப்பிராட்டியாலே எம்பெருமான்றான் ஸேவிக்கப்படவேண்டியதுபோய் எம்பெருமான்றான் அவளை ஸேவித்திருக்கிறானாம் ப்ரணயதாரையில் முதிர்ச்சியாலே. அவளுடைய போக்யத்தையிலே துவக்குண்டு அத்தலை இத்தலையானபடி. இப்படி ஒருத்திபக்கலிலே பக்தியைப் பண்ணி நிற்கும் பெருமான், நான் பக்தி பண்ணுகிறனென்றால் எனது பக்தியைப் பெற்றுக்கொள்வதும் செய்கிறானில்லையே! என்ற வருத்தந்தோற்றப் பார்வண்ண மடமங்கை பத்தர் என்கிறாள் பரகாலநாயகி. பித்தர் பனிமலர் மேல்பாவைக்கு = இவ்வி்டத்திலும் ‘என்னும்‘ என்கிற வினைமுற்றைக் கூட்டிக்கொள்வது. இதுவும் மகள் வார்த்தையைத் திருத்தாய் அநுவதிக்கிறபடி. குளிர்ந்த தாமரைப்பூவின் பரிமளந்தானே ஒருவடிவுகொண்ட தென்னலாம்படியுள்ள பெரிய பிராட்டியார் திறத்திலே பித்துக்கொண்டவன். என்கிறது. “அல்லிமலர்மகள் போகமயக்குக் களாகியும் நிற்குமமம்மான்” என்கிறபடியே அவளுடைய போகங்களிலேயே மயங்கி என்னை மறந்தான் திடீர் என்றாள் போலும். பாவஞ்செய்தேன் = வினவவந்தவர்கட்கு அழுதுகாட்டுகிறாள் திருத்தாய். இப்பெண்பிள்ளையைப் பெறும்படியான பாவஞ்செய்தேன் நான் என்று கண்ணீர் சொரிகின்றாளென்க. இவள் ஈடுபட்டவிஷயத்தின் வைலக்ஷண்யத்தை நம்மால் மாற்றப்போகாது; இவளுடைய ஆற்றாமையும் நம்மால் அடக்கவொண்ணாது; அவனே உபேக்ஷியாநின்றாள்; இவளோ பதறநின்றாள்; இந்நிலைமையைக் கண்டு கொண்டிருக்கவேண்டுவது என்பாபமேயன்றோ என்கிறாள். பகவத் விஷயத்திலே தன் பெண்பி்ள்ளைக்குண்டான அவகாஹநம் தனக்கு மிகவும் மகிழ்ச்சிக்குடலாயிருக்கையாலே ‘புண்ணியஞ்செய்தேன்‘ என்னவேண்டுமிடத்து நாட்டாருக்காக மறைத்து “பாவஞ்செய்தேன்“ என்கிறாள். காலிப்பின்னே வருகின்ற கடல்வண்ணன் வேடத்தை வந்து காணீர், ஞாலத்தப் புத்திரனைப் பெற்றார் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை‘ என்ற யசோதைப் பிராட்டியைப்போலே “ஞாலத்துப் புத்திரியைப் பெற்றாள் நங்கைமீர்! நானே மற்றாருமில்லை” என்று சொல்லிக்கொள்ளவே இத்திருத்தாய்க்கு விருப்பம்; ஆயினும் கட்டுப்பாட்டுக்காக மறைக்கிறாளென்க. ஏர்வண்ணவென்பேதை = ஐயோ! இப்பெண்ணை தன்வடிவழகைத் தான் நன்கறிந்தாளாகில் ‘அவன்றானே நமக்காக மடலெத்துப் புறப்படட்டும்‘ என்று கிடக்கலாமே; தன்படியைத் தான் அறியாமலன்றோ இவள் இப்படி படுகிறாள் என்கிறாள். அவனுடைய கார்வண்ணம் இவளுடைய ஏர்வண்ணத்துக்கு ஏற்குமோ? ஒரு உவமையையிட்டுச் சொல்லும் படியா யிருக்கிறது அவன் வடிவு; இவள்வடிவுக்கு உவமைஇல்லையே; ‘அழகியவடிவு படைத்தவள்! என்று சொல்லலாமத்தனையொழிய த்ருஷ்டாந்தமிட்டுச் சொல்ல வழியில் லையே! என்கிறாள். என்சொல்கேளாள் = நான் இவளை அடக்கி யாண்டுகொண்டிருந்த காலமுண்டு; அது கடந்துபோயி்ற்று; “அவனுடைய திருவருள் தன்னடையே பரிபக்குவமாகும் போது கிடைக்குமேயல்லது நாம் பதறிப் பயனில்லைகாண்“ என்று நான் சொல்லப்புறப்பட்டால் நான் வாய்திறப்பதைக் கண்டவுடனே இவள் காதை அழுந்த மூடிக்கொள்ளுகிறாளே! என் செய்வெனென்கிறாள். (என்சொல் கேளாள்) “மாமேகம் சரணம் வ்ரஜ“ என்றும், “அபயம் ஸர்வபூதேப்யோ ததாம்யேதத் வ்ரதம் மம“ என்றும் அவன் சொல்லி வைத்த வார்த்தைகளைக் கேட்டிருக்குமவள் என்சொல்லைக் கேட்பளோ? எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்னும் = என்வார்த்தை கேளாத மாத்திரமேயோ? அவனிருக்கும் தேசத்திற்குச்செல்ல வழியும் தேடுகின்றாள். என்னைத் தனக்கேயாக்கிக் கொண்டவனுடைய கோயிலுக்கு எங்ஙனே வழியென்கிறாள். நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேனென்னும் = எம்பெருமான் திருவரங்கமெங்கே யென்று கேட்டவளுக்கு வழிசொல்வாரார்? ஒருவரும் வாய்திறந்திலர்; அதற்குமேல் தானே சொல்லுகின்றாள் – நீர்வண்ணன் நீர்மலைக்கேபோவேன் என்கிறாள். திருக்குறைய லூரில் நின்றும் புறப்பட்டுத் திருநீர்மலைக்குப் போய் அங்கு நின்றும் திருவரங்கம் பெரிய கோயிலுக்குப் போகவேணும் என்று இங்ஙனே இவள் வழிகண்டிருக்கிறாள் போலும். கோவிலிலே கெட்டுப்போன பொருளைக் குளத்திலே தேடுமாபோலே யிருக்கிறது இவள்படி. திருப்பதிகளிலே தங்கித் தங்கிப்போகப் பார்க்கிறாளாயிற்று. இதுவன்றோ நிறைவழிந்தார் நிற்குமாறே = தன் தலையில் ஸ்வரூபத்தைப் பாராதே எதிர்தலையின் வைலக்ஷண்யத்தையே பார்த்துப் பதருவாருடையபடி இதுவன்றோ. இப்படியும் அடக்கங்கெட்டாளே என்மகள்! என்றாளாயிற்று.

English Translation

முன் சந்தி ஆடியோ


....விரைவில்

பின் சந்தி ஆடியோ


....விரைவில்

குறிப்புகள்


....விரைவில்