பிரபந்த தனியன்கள்

பக்தாம்ருதம் விச் வஜநா நுமோதநம் 
ஸர்வார்த்ததம் ஸ்ரீசடகோப வாங்க்மயம்
ஸஹஸ்ரசா கோபநிஷத்ஸமாகமம் 
நமாம்யஹம் த்ராவிட வேத ஸாகரம்.
திருவழுதி நாடென்றும் தென்குருகூ ரென்றும், 
மருவினிய வண்பொருநல் என்றும், - அருமறைகள் 
அந்தாதி செய்தான் அடியிணையே எப்பொழுதும், 
சிந்தியாய் நெஞ்சே. தெளிந்து.
மனத்தாலும் வாயாலும் வண்குருகூர் பேணும் 
இனத்தாரை யல்லா திறைஞ்சேன், - தனத்தாலும் 
ஏதுங் குறைவிலேன் எந்தை சடகோபன், 
பாதங்கள் யாமுடைய பற்று.
ஏய்ந்தபெருங் கீர்த்தி இராமானுசமுனிதன் 
வாய்ந்தமலர்ப் பாதம் வணங்குகின்றேன், - ஆய்ந்தபெருஞ்ச் 
சீரார் சடகோபன் செந்தமிழ் வேதந்தரிக்கும், 
பேராத வுள்ளம் பெற.
வான்திகழும் சோலை மதிளரங்கர் வண்புகழ்மேல் 
ஆன்ற தமிழ்மறைகள் ஆயிரமும், - ஈன்ற 
முதல்தாய் சடகோபன், மொய்ம்பால் வளர்த்த 
இதத்தாய் இராமுனுசன். 
மிக்க இறைநிலையும் மெய்யாம் உயிர்நிலையும், 
தக்க நெறியும் தடையாகித் - தொக்கியலும்,
ஊழ்வினையும் வாழ்வினையும் ஓதும் குருகையர்கோன், 
யாழினிசை வேதத் தியல்.

   பாசுரங்கள்


    உயர்வு அற உயர் நலம்*  உடையவன் எவன் அவன்* 
    மயர்வு அற மதி நலம்*  அருளினன் எவன் அவன்*

    அயர்வு அறும் அமரர்கள்*  அதிபதி எவன் அவன்* 
    துயர் அறு சுடர் அடி*  தொழுது எழு என் மனனே! (2)   


    மனன்அகம் மலம் அற*  மலர்மிசை எழுதரும்* 
    மனன் உணர்வு அளவு இலன்,*  பொறி உணர்வு அவை இலன்* 

    இனன் உணர், முழு நலம்,*  எதிர் நிகழ் கழிவினும்* 
    இனன் இலன் எனன் உயிர்,*  மிகுநரை இலனே. 


    இலன் அது உடையன் இது*  என நினைவு அரியவன்* 
    நிலனிடை விசும்பிடை*  உருவினன் அருவினன்*

    புலனொடு புலன் அலன்,*  ஒழிவு இலன் பரந்த*  அந்- 
    நலன் உடை ஒருவனை*  நணுகினம் நாமே.*


    நாம் அவன் இவன் உவன்,*  அவள் இவள் உவள் எவள்* 
    தாம் அவர் இவர் உவர்,*  அது இது உது எது*

    வீமவை இவை உவை,*  அவை நலம், தீங்கு அவை* 
    ஆமவை ஆயவை ஆய்*  நின்ற அவரே.*


    அவரவர் தமதமது*  அறிவு அறி வகைவகை* 
    அவரவர் இறையவர்*  என அடி அடைவர்கள்*

    அவரவர் இறையவர்*  குறைவு இலர் இறையவர்* 
    அவரவர் விதிவழி*  அடைய நின்றனரே.  


    நின்றனர் இருந்தனர்*  கிடந்தனர் திரிந்தனர்* 
    நின்றிலர் இருந்திலர்*  கிடந்திலர் திரிந்திலர்* 

    என்றும் ஓர் இயல்வினர்*  என நினைவு அரியவர்* 
    என்றும் ஓர் இயல்வொடு*  நின்ற எம் திடரே.


    திட விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசைப்*
    படர் பொருள் முழுவதும் ஆய்*  அவைஅவைதொறும்* 

    உடல்மிசை உயிர் எனக்*  கரந்து எங்கும் பரந்துளன்* 
    சுடர் மிகு சுருதியுள்*  இவை உண்ட சுரனே.     


    சுரர் அறிவு அரு நிலை*  விண் முதல் முழுவதும்* 
    வரன் முதலாய் அவை*  முழுது உண்ட பரபரன்*

    புரம் ஒரு மூன்று எரித்து*  அமரர்க்கும் அறிவியந்து* 
    அரன் அயன் என*  உலகு அழித்து அமைத்து உளனே.


    உளன் எனில் உளன் அவன்*  உருவம் இவ் உருவுகள்* 
    உளன் அலன் எனில், அவன்*  அருவம் இவ் அருவுகள்* 

    உளன் என இலன் என*  இவை குணம் உடைமையில்* 
    உளன் இரு தகைமையொடு*  ஒழிவு இலன் பரந்தே.


    பரந்த தண் பரவையுள்*  நீர்தொறும் பரந்துளன்* 
    பரந்த அண்டம் இது என:*  நிலம் விசும்பு ஒழிவு அறக்*

    கரந்த சில் இடந்தொறும்*  இடம் திகழ் பொருள்தொறும்* 
    கரந்து எங்கும் பரந்துளன்:*  இவை உண்ட கரனே.   


    கர விசும்பு எரி வளி*  நீர் நிலம் இவைமிசை* 
    வரன் நவில் திறல் வலி*  அளி பொறை ஆய்நின்ற*

    பரன் அடிமேல்*  குருகூர்ச் சடகோபன் சொல்* 
    நிரல் நிறை ஆயிரத்து*  இவை பத்தும் வீடே. (2)


    வீடுமின் முற்றவும்* வீடு செய்து*  உம் உயிர்

    வீடு உடையானிடை* வீடு செய்ம்மினே. (2)  


    மின்னின் நிலை இல* மன் உயிர் ஆக்கைகள்* 

    என்னும் இடத்து*  இறை உன்னுமின் நீரே.


    நீர் நுமது என்று இவை* வேர்முதல் மாய்த்து*  இறை

    சேர்மின் உயிர்க்கு*  அதன் நேர் நிறை இல்லே.


    இல்லதும் உள்ளதும்* அல்லது அவன் உரு*

    எல்லை இல் அந் நலம்* புல்கு பற்று அற்றே.


    அற்றது பற்று எனில்* உற்றது வீடு உயிர்*

    செற்ற அது மன் உறில்* அற்று இறை பற்றே.


    பற்று இலன் ஈசனும்* முற்றவும் நின்றனன்*

    பற்று இலையாய்* அவன் முற்றில் அடங்கே.


    அடங்கு எழில் சம்பத்து* அடங்கக் கண்டு*  ஈசன்

    அடங்கு எழில் அஃது என்று* அடங்குக உள்ளே.


    உள்ளம் உரை செயல்* உள்ள இம் மூன்றையும்*

    உள்ளிக் கெடுத்து*  இறை உள்ளில் ஒடுங்கே.


    ஒடுங்க அவன்கண்*  ஒடுங்கலும் எல்லாம்*

    விடும் பின்னும் ஆக்கை*  விடும்பொழுது எண்ணே.


    எண் பெருக்கு அந் நலத்து*  ஒண் பொருள் ஈறு இல*

    வண் புகழ் நாரணன்*  திண் கழல் சேரே.


    சேர்த்தடத்*  தென் குரு கூர்ச் சடகோபன் சொல்*

    சீர்த் தொடை ஆயிரத்து*  ஓர்த்த இப்பத்தே. (2)


    பத்து உடை அடியவர்க்கு எளியவன்;*  பிறர்களுக்கு அரிய 
    வித்தகன்*  மலர்மகள் விரும்பும்* நம் அரும்பெறல் அடிகள்*

    மத்து உறு கடை வெண்ணெய்*  களவினில் உரவிடை யாப்புண்டு* 
    எத்திறம், உரலினோடு*  இணைந்திருந்து ஏங்கிய எளியவே! (2)   


    எளிவரும் இயல்வினன்*  நிலை வரம்பு இல பல பிறப்பாய்* 
    ஒளிவரும் முழு நலம்*  முதல் இல கேடு இல வீடு ஆம்*

    தெளிதரும் நிலைமையது ஒழிவு இலன்*  முழுவதும்; இறையோன்* 
    அளிவரும் அருளினோடு*  அகத்தனன் புறத்தனன் அமைந்தே. 


    அமைவு உடை அறநெறி*  முழுவதும் உயர்வு அற உயர்ந்து* 
    அமைவு உடை முதல் கெடல்*  ஒடிவு இடை அற நிலம் அது ஆம்*

    அமைவு உடை அமரரும்*  யாவையும் யாவரும் தான் ஆம்* 
    அமைவு உடை நாரணன்*  மாயையை அறிபவர் யாரே?    


    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு அரிய எம் பெருமான்* 
    யாரும் ஓர் நிலைமையன் என*  அறிவு எளிய எம் பெருமான்*

    பேரும் ஓர் ஆயிரம்*  பிறபல உடைய எம் பெருமான்* 
    பேரும் ஓர் உருவமும்*  உளது இல்லை இலது இல்லை பிணக்கே.  


    வள ஏழ் உலகின் முதலாய* வானோர் இறையை*  அருவினையேன்- 
    களவேழ் வெண்ணெய் தொடு உண்ட*  கள்வா! என்பன்; பின்னையும்* 

    தளவு ஏழ் முறுவல் பின்னைக்கு ஆய்*  வல் ஆன் ஆயர் தலைவனாய்* 
    இள ஏறு ஏழும் தழுவிய*  எந்தாய்! என்பன் நினைந்து நைந்தே.


    நினைந்து நைந்து உள் கரைந்து உருகி*  இமையோர் பலரும் முனிவரும்* 
    புனைந்த கண்ணி நீர் சாந்தம்*  புகையோடு ஏந்தி வணங்கினால்*

    நினைந்த எல்லாப் பொருள்கட்கும்*  வித்துஆய் முதலில் சிதையாமே* 
    மனம் செய் ஞானத்து உன் பெருமை*  மாசூணாதோ? மாயோனே!


    மா யோனிகளாய் நடை கற்ற*  வானோர் பலரும் முனிவரும்* 
    நீ யோனிகளைப் படை என்று*  நிறை நான்முகனைப் படைத்தவன்*

    சேயோன் எல்லா அறிவுக்கும்;*  திசைகள் எல்லாம் திருவடியால் 
    தாயோன்*  எல்லா எவ் உயிர்க்கும் தாயோன்*  தான் ஓர் உருவனே.


    தான் ஓர் உருவே தனிவித்தாய்*  தன்னின் மூவர் முதலாய* 
    வானோர் பலரும் முனிவரும்*  மற்றும் மற்றும் முற்றும் ஆய்*

    தான் ஓர் பெருநீர் தன்னுள்ளே தோற்றி*  அதனுள் கண்வளரும்* 
    வானோர் பெருமான் மா மாயன்*  வைகுந்தன் எம் பெருமானே.


    மானேய் நோக்கி மடவாளை*  மார்பில் கொண்டாய்! மாதவா!* 
    கூனே சிதைய உண்டை வில்*  நிறத்தில் தெறித்தாய்! கோவிந்தா!*

    வான் ஆர் சோதி மணிவண்ணா!*  மதுசூதா! நீ அருளாய்*  உன்- 
    தேனே மலரும் திருப்பாதம்*  சேருமாறு வினையேனே.


    வினையேன் வினை தீர் மருந்து ஆனாய்!*  விண்ணோர் தலைவா! கேசவா!* 
    மனை சேர் ஆயர் குல முதலே!*  மா மாயனே! மாதவா!*

    சினை ஏய் தழைய மராமரங்கள்*  ஏழும் எய்தாய்! சிரீதரா!* 
    இனையாய் இனைய பெயரினாய்!*  என்று நைவன் அடியேனே.  


    அடியேன் சிறிய ஞானத்தன்;*  அறிதல் ஆர்க்கும் அரியானை* 
    கடி சேர் தண் அம் துழாய்க்*  கண்ணி புனைந்தான் தன்னை கண்ணனை*

    செடி ஆர் ஆக்கை அடியாரைச்*  சேர்தல் தீர்க்கும் திருமாலை* 
    அடியேன் காண்பான் அலற்றுவன்;*  இதனின் மிக்கு ஓர் அயர்வு உண்டே? 


    உண்டாய் உலகு ஏழ் முன்னமே;*  உமிழ்ந்து மாயையால் புக்கு* 
    உண்டாய் வெண்ணெய் சிறு மனிசர்*  உவலை ஆக்கை நிலை எய்தி*

    மண் தான் சோர்ந்தது உண்டேலும்*  மனிசர்க்கு ஆகும் பீர்*  சிறிதும்- 
    அண்டாவண்ணம் மண் கரைய*  நெய் ஊண் மருந்தோ? மாயோனே!  


    மாயோம் தீய அலவலைப்*  பெரு மா வஞ்சப் பேய் வீயத்* 
    தூய குழவியாய் விடப் பால் அமுதா*  அமுது செய்திட்ட-

    மாயன் வானோர் தனித் தலைவன்*  மலராள் மைந்தன் எவ் உயிர்க்கும்- 
    தாயோன் தம்மான் என் அம்மான்*  அம்மா மூர்த்தியைச் சார்ந்தே.


    சார்ந்த இரு வல் வினைகளும் சரித்து*  மாயப் பற்று அறுத்து* 
    தீர்ந்து தன்பால் மனம் வைக்கத்*  திருத்தி வீடு திருத்துவான்*

    ஆர்ந்த ஞானச் சுடர் ஆகி*  அகலம் கீழ் மேல் அளவு இறந்து* 
    நேர்ந்த உருவாய் அருவாகும்*  இவற்றின் உயிராம் நெடுமாலே!


    மாலே மாயப் பெருமானே!*  மா மாயவனே! என்று என்று* 
    மாலே ஏறி மால் அருளால்*  மன்னு குருகூர்ச் சடகோபன்*

    பால் ஏய் தமிழர் இசைகாரர்*  பத்தர் பரவும் ஆயிரத்தின்- 
    பாலே பட்ட இவை பத்தும்*  வல்லார்க்கு இல்லை பரிவதே.


    பரிவது இல் ஈசனைப் பாடி* விரிவது மேவல் உறுவீர்!*

    பிரிவகை இன்றி நல் நீர் தூய்* புரிவதுவும் புகை பூவே. (2)


    மதுவார் தண் அம் துழாயான்*  முது வேத முதலவனுக்கு*

    எதுவே? என்பணி? என்னாது*  அதுவே ஆள் செய்யும் ஈடே


    ஈடும் எடுப்பும் இல் ஈசன்* மாடு விடாது என் மனனே*

    பாடும் என் நா அவன் பாடல்*  ஆடும் என் அங்கம் அணங்கே.


    அணங்கு என ஆடும் என் அங்கம்*  வணங்கி வழிபடும் ஈசன்*

    பிணங்கி அமரர் பிதற்றும்*  குணங்கெழு கொள்கையினானே*


    கொள்கை கொளாமை இலாதான்*  எள்கல் இராகம் இலாதான்*

    விள்கை விள்ளாமை விரும்பி*   உள் கலந்தார்க்கு ஓர் அமுதே.


    அமுதம் அமரர்கட்கு ஈந்த*  நிமிர் சுடர் ஆழி நெடுமால்*

    அமுதிலும் ஆற்ற இனியன்*  நிமிர் திரை நீள் கடலானே.


    நீள் கடல் சூழ் இலங்கைக் கோன்*  தோள்கள் தலை துணிசெய்தான்*

    தாள்கள் தலையில் வணங்கி*  நாள்கள் தலைக்கழிமின்னே.


    கழிமின் தொண்டீர்கள் கழித்துத்*  தொழுமின் அவனை தொழுதால்*

    வழி நின்ற வல்வினை மாள்வித்து*  அழிவின்றி ஆக்கம் தருமே.


    தரும அரும் பயன் ஆய*  திருமகளார் தனிக் கேள்வன்*

    பெருமை உடைய பிரானார்*  இருமை வினை கடிவாரே. 


    கடிவார் தீய வினைகள்*  நொடியாரும் அளவைக்கண்*

    கொடியா அடு புள் உயர்த்த*  வடிவு ஆர் மாதவனாரே.


    மாதவன்பால் சடகோபன்*   தீது அவம் இன்றி உரைத்த*

    ஏதம் இல் ஆயிரத்து இப் பத்து*  ஓத வல்லார் பிறவாரே.  


    பிறவித்துயர் அற*  ஞானத்துள் நின்று.* 
    துறவிச் சுடர் விளக்கம்*  தலைப்பெய்வார்,*

    அறவனை*  ஆழிப்படை அந்தணனை,* 
    மறவியை இன்றி*  மனத்து வைப்பாரே.


    வைப்பாம் மருந்து ஆம்*  அடியரை வல்வினைத்* 
    துப்பாம் புலன் ஐந்தும்*  துஞ்சக்கொடான் அவன்,*

    எப்பால் எவர்க்கும்*  நலத்தால் உயர்ந்து உயர்ந்து,* 
    அப்பாலவன் எங்கள்*  ஆயர் கொழுந்தே.


    ஆயர் கொழுந்தாய்*  அவரால் புடையுண்ணும்,* 
    மாயப் பிரானை*  என் மாணிக்கச் சோதியை,*

    தூய அமுதைப்*  பருகிப் பருகி,*  என்- 
    மாயப் பிறவி*  மயர்வு அறுத்தேனே.


    மயர்வு அற என் மனத்தே*  மன்னினான் தன்னை,* 
    உயர்வினையே தரும்*  ஒண் சுடர்க் கற்றையை,*

    அயர்வு இல் அமரர்கள்,*  ஆதிக் கொழுந்தை,*  என் 
    இசைவினை*  என் சொல்லி யான் விடுவேனோ?  


    விடுவேனோ? என் விளக்கை என் ஆவியை,* 
    நடுவே வந்து*  உய்யக் கொள்கின்ற நாதனை,*

    தொடுவே செய்து*  இள ஆய்ச்சியர் கண்ணினுள்,* 
    விடவே செய்து*  விழிக்கும் பிரானையே.


    பிரான்*  பெரு நிலம் கீண்டவன்,*  பின்னும் 
    விராய்*  மலர்த் துழாய் வேய்ந்த முடியன்,*

    மராமரம் எய்த மாயவன்,*  என்னுள் 
    இரான் எனில்*  பின்னை யான் ஒட்டுவேனோ?   


    யான் ஒட்டி என்னுள்*  இருத்துவன் என்றிலன்,* 
    தான் ஒட்டி வந்து*  என் தனி நெஞ்சை வஞ்சித்து,*

    ஊன் ஒட்டி நின்று*  என் உயிரில் கலந்து,*  இயல் 
    வான் ஒட்டுமோ?*  இனி என்னை நெகிழ்க்கவே.


    என்னை நெகிழ்க்கிலும்*  என்னுடை நன் நெஞ்சம்- 
    தன்னை,*  அகல்விக்கத் தானும்*  கில்லான் இனி,*

    பின்னை நெடும் பணைத் தோள்*  மகிழ் பீடு உடை,* 
    முன்னை அமரர்*  முழுமுதல் தானே. 


    அமரர் முழுமுதல்*  ஆகிய ஆதியை,* 
    அமரர்க்கு அமுது ஈந்த*  ஆயர் கொழுந்தை,*

    அமர அழும்பத்*  துழாவி என் ஆவி,* 
    அமரத் தழுவிற்று*  இனி அகலும்மோ.


    அகலில் அகலும்*  அணுகில் அணுகும்,* 
    புகலும் அரியன்*  பொரு அல்லன் எம்மான்,*

    நிகர் இல் அவன் புகழ்*  பாடி இளைப்பு இலம்,* 
    பகலும் இரவும்*  படிந்து குடைந்தே.


    குடைந்து வண்டு உண்ணும்*  துழாய் முடியானை,* 
    அடைந்த தென் குருகூர்ச்*  சடகோபன்,*

    மிடைந்த சொல் தொடை*  ஆயிரத்து இப்பத்து,* 
    உடைந்து நோய்களை*  ஓடுவிக்குமே.


    ஓடும் புள் ஏறி,*  சூடும் தண் துழாய்,*

    நீடு நின்றவை,*  ஆடும் அம்மானே.


    அம்மானாய்ப் பின்னும்,*  எம்மாண்பும் ஆனான்,*

    வெம் மா வாய் கீண்ட,*  செம்மா கண்ணனே.


    கண் ஆவான் என்றும்,*  மண்ணோர் விண்ணோர்க்கு,*

    தண் ஆர் வேங்கட,*  விண்ணோர் வெற்பனே.


    வெற்பை ஒன்று எடுத்து,*  ஒற்கம் இன்றியே,*

    நிற்கும் அம்மான் சீர்,*  கற்பன் வைகலே.


    வைகலும் வெண்ணெய்,*  கைகலந்து உண்டான்,* 

    பொய் கலவாது,*  என்  மெய்கலந்தானே.


    கலந்து என் ஆவி,*  நலம்கொள்நாதன்,* 

    புலன் கொள் மாணாய்,*  நிலம்கொண்டானே.


    கொண்டான் ஏழ் விடை,*   உண்டான் ஏழ்வையம்,*

    தண் தாமம் செய்து,*  என் எண்தானானானே.


    ஆனான் ஆன் ஆயன்,*  மீனோடேனமும்;* 

    தான் ஆனான் என்னில்,*  தானாயசங்கே.


    சங்கு சக்கரம்,*  அங்கையில் கொண்டான்,*

    எங்கும் தானாய,*  நங்கள் நாதனே.


    நாதன்ஞாலம்கொள்*  பாதன், என்ம்மான்,*

    ஓதம்போல்கிளர்,*   வேதநீரனே.


    நீர்புரைவண்ணன்,*  சீர்சடகோபன்,*

    நேர்தல் ஆயிரத்து,*  ஓர்தல்இவையே.


    உடன் அமர் காதல் மகளிர்*  திருமகள் மண்மகள் ஆயர்- 
    மட மகள் என்று இவர் மூவர் ஆளும்*  உலகமும் மூன்றே,*

    உடன் அவை ஒக்க விழுங்கி*  ஆல் இலைச் சேர்ந்தவன் எம்மான்,* 
    கடல் மலி மாயப் பெருமான்*  கண்ணன் என் ஒக்கலையானே.  


    ஒக்கலை வைத்து முலைப் பால் உண் என்று* தந்திட வாங்கிச், 
    செக்கம் செக அன்று அவள்பால்*  உயிர் செக உண்ட பெருமான்,*

    நக்க பிரானோடு அயனும்*  இந்திரனும் முதலாக,* 
    ஒக்கவும் தோற்றிய ஈசன்*  மாயன் என் நெஞ்சின் உளானே.


    மாயன் என் நெஞ்சின் உள்ளான்*  மற்றும் எவர்க்கும் அதுவே,* 
    காயமும் சீவனும் தானே*  காலும் எரியும் அவனே,*

    சேயன் அணியன் எவர்க்கும்*  சிந்தைக்கும் கோசரம் அல்லன்,* 
    தூயன் துயக்கன் மயக்கன்*  என்னுடைத் தோளிணையானே.  


    தோள் இணை மேலும் நன் மார்பின் மேலும்*  சுடர் முடி மேலும்,* 
    தாள் இணை மேலும் புனைந்த*  தண் அம் துழாய் உடை அம்மான்*

    கேள் இணை ஒன்றும் இலாதான்*  கிளரும் சுடர் ஒளி மூர்த்தி,* 
    நாள் அணைந்து ஒன்றும் அகலான்*  என்னுடை நாவின் உளானே.


    பொருமா நீள் படை*  ஆழி சங்கத்தொடு,* 
    திருமா நீள் கழல்*  ஏழ் உலகும் தொழ,*

    ஒரு மாணிக் குறள் ஆகி,*  நிமிர்ந்த,*  அக் 
    கரு மாணிக்கம்*  என் கண்ணுளது ஆகுமே.


    கண்ணுள்ளே நிற்கும்*  காதன்மையால் தொழில்,* 
    எண்ணிலும் வரும்*  என் இனி வேண்டுவம்?*

    மண்ணும் நீரும்*  எரியும் நல் வாயுவும்* 
    விண்ணும் ஆய் விரியும்*  எம் பிரானையே.


    எம்பிரானை*  எந்தை தந்தை தந்தைக்கும்- 
    தம்பிரானை,*  தண் தாமரைக் கண்ணனை,*

    கொம்பு அராவு*  நுண் நேர் இடை மார்பனை,* 
    எம்பிரானைத் தொழாய்*  மட நெஞ்சமே.


    நெஞ்சமே நல்லை நல்லை*  உன்னைப் பெற்றால்- 
    என் செய்யோம்?*  இனி என்ன குறைவினம்?*

    மைந்தனை மலராள்*  மணவாளனைத்,* 
    துஞ்சும்போதும்*  விடாது தொடர்கண்டாய்.


    கண்டாயே நெஞ்சே*  கருமங்கள் வாய்க்கின்று,*  ஓர் 
    எண் தானும் இன்றியே*  வந்து இயலுமாறு,*

    உண்டானை*  உலகு ஏழும் ஓர் மூவடி 
    கொண்டானைக்,*  கண்டுகொண்டனை நீயுமே.   


    நீயும் நானும்*  இந் நேர்நிற்கில்,*  மேல்மற்றோர். 
    நோயும் சார்கொடான்*  நெஞ்சமே சொன்னேன்,* 

    தாயும் தந்தையும் ஆய்*  இவ் உலகினில்,* 
    வாயும் ஈசன்*  மணிவண்ணன் எந்தையே.  


    எந்தையே என்றும்*  எம் பெருமான் என்றும்,* 
    சிந்தையுள் வைப்பன்*  சொல்லுவன் பாவியேன்,*

    எந்தை எம் பெருமான் என்று*  வானவர்,* 
    சிந்தையுள் வைத்துச்*  சொல்லும் செல்வனையே.


    செல்வ நாரணன் என்ற*  சொல் கேட்டலும்,* 
    மல்கும் கண்பனி*  நாடுவன் மாயமே,*

    அல்லும் நன்பகலும்*  இடைவீடு இன்றி,* 
    நல்கி என்னை விடான்*  நம்பி நம்பியே.


    நம்பியை*  தென் குறுங்குடி நின்ற,*  அச் 
    செம்பொனே திகழும்*  திரு மூர்த்தியை,*

    உம்பர் வானவர்*  ஆதி அம் சோதியை,* 
    எம் பிரானை*  என் சொல்லி மறப்பனோ?


    மறப்பும் ஞானமும்*  நான் ஒன்று உணர்ந்திலன்,* 
    மறக்கும் என்று*  செந்தாமரைக் கண்ணொடு,*

    மறப்பு அற என் உள்ளே*  மன்னினான் தன்னை,* 
    மறப்பனோ? இனி*  யான் என் மணியையே.   


    மணியை வானவர் கண்ணனை*  தன்னது ஓர்- 
    அணியை,*  தென் குருகூர்ச் சடகோபன்,*  சொல்

    பணிசெய் ஆயிரத்துள்*  இவை பத்துடன்,* 
    தணிவிலர் கற்பரேல்,*  கல்வி வாயுமே.