வாழ்க்கை நிகழ்வுகள்

பெரியாழ்வார் மனதில்

பகவானை ஒரே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்ததால், பெரியாழ்வார் மனதில் ஓர் அச்சம் தோன்றியது. எங்கே பெருமாளுக்கு திருஷ்டி பட்டுவிடுமோ என்ற எண்ணத்தில் "பல்லாண்டு பல்லாண்டு' எனத்துவங்கும், "திருப்பல்லாண்டு' பாடினார். அவரது பக்தியை மெச்சிய பெருமாள், அனைவரிலும் உயர்ந்தவர் என்ற பொருளில் "பெரியாழ்வார்' என்று பெயர் சூட்டினார்.அனைத்து பெருமாள் கோயிலிலும் அதிகாலையில் நடை திறப்பின்போது, திருப்பல்லாண்டும், திருப்பாவையும் பாடப்படுகிறது. இவ்விரண்டு பிரபந்தங்களையும் பாடிய தந்தை, மகள் இருவரும் பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆகும்."கோதை பிறந்த ஊர்', "கோவிந்தன் வாழும் ஊர்'.

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழா

ஸ்ரீவில்லிப்புத்தூர் கோயில் ஆடித்திருவிழாவின் 7ம் நாளில் ரங்கமன்னார் சுவாமி, ஆண்டாளின் மடியில் சயனித்த கோலத்தில் அருளுவதைக் காணலாம். இவ்வூர் கிருஷ்ணன் கோயிலில் இந்த நிகழ்ச்சி நடக்கும். இந்த தரிசனம் மிகவும் விசேஷமானது. தம்பதியரிடையே ஒற்றுமையை வலுப்படுத்தக் கூடியது. ரெங்கமன்னாருக்கு திருமணம் செய்து கொடுத்த "பெரியாழ்வார்' தன் மகளை பிரிந்த ஆற்றாமை மிகுதியால், ""ஒருமகள் தன்னையுடையேன் உலகம்நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனான்'' என்று பாடினார்.தனது இல்லத்தில் மகாராணியாக வாழ்ந்தவள், தற்போது பெருமாளை மணம் முடிக்கின்றாளே! அவள் இங்கே இருந்தது போல சிறப்புடன் அங்கே வாழ்வாளா! என்று தந்தையின் மன பதைபதைப்புடன் இப்பாடலை பாடினார். ஆண்கள், இப்பாடலை பாடினால் தங்களது குழந்தைகள் மீது பாசம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கை